Tuesday, January 3, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 18

உந்து மதகளிறாய் உன்மத்த மாகிமனம்
தந்ததொல்லை தீரத் திருப்பாவை தான்தந்தாள்
அந்தமிலா வாழ்ச்சிக்கே அச்சாரம் தானானாள்
கந்தம் கமழும் குழலால் கிருட்டினனைப்
பந்தித்து வைத்தே பரமாகத் தந்தருளிச்
செந்தமிழ் வேதியர்க்கே செப்பும் மொழியானாள்
வந்தித் தவருரைத்த வானுரைகள் வாசித்தே
சிந்தித்து வாழ்பொருளே செப்பேலோ ரெம்பாவாய்.

மதம் பிடித்த களிறு அடக்க அரியது. ஐம்புலன்கள் மதம் பிடித்து அலையும் போது, மனம் வெறிகொண்டு சுழல்கிறது. உலகின் நிலையாமையைப் புரிந்துகொண்டு  மனம் அடங்கி ஆன்மிகத்தை நாடும் போது அமைதியே தவழ்கிறது. பக்தியில் ஆழ்ந்து கடவுள் காதலில் முதிர்ச்சி அடையும் போது அதே மனம் பரமாத்மாவை நோக்கி உன்மத்தம் ஆகிறது. அப்பொழுது அது பிரேமம் என்று அழைக்கப்படுகிறது. பிரேம நிலையில் இருப்போருக்குத் தம்மைச் சுற்றியுள்ளோரையெல்லாம் அந்தப் பக்தி நிலைக்கே அகப்படுத்தும் ஆர்வம் உண்டாகிறது. அவ்வாறு வெளிப்பட்டதுதான் திருப்பாவை. திருப்பாவையின் ஆழ்பொருளை உணர்ந்தவர்க்கு அந்தமில்லா வாழ்வின் அடிப்படை இடப்படுகிறது. அனைத்து கந்தங்களும் அந்தப் பிரம்மமே என்று உபநிஷதங்கள் சொல்லும் பரம்பொருளைத் தன் குழலின் கந்தத்தால் கிருஷ்ணனைப் பந்தப் படுத்தியவள் ஆண்டாள். அவள் அவ்வாறு கண்ணனைக் கட்டியது எதற்காக என்று பார்த்தால் வேறு கதியற்ற நம்போலிய மக்களுக்காக எனலாம். வடமொழி வேதம் உபாசனத்தைச் சொல்கிறது என்றால் செந்தமிழ் வேதம் ஆன திருவாய்மொழியோ பிரபத்தியைப் போதிக்கிறது. பிரபத்தி நிலையில் நிற்போர் செந்தமிழ் வேதியர் ஆகின்றனர். அன்னார் எல்லாம் எப்பொழுதும் வாய் நிறையச் சொல்லுவதோ ஆண்டாள் பெருமையும், திருப்பாவையுமே ஆகும். ஸ்ரீராமாநுஜர் என்றும் திருப்பாவையே மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தன்மையராய் இருந்தார் என்று நூல்கள் சொல்கின்றன. அவருடைய ஆணையால் திவ்யப் பிரபந்த உரைவளம் பெருகியது. அந்த உரைகளை வாசித்து, சிந்தித்து நம்மையும் பிறரையும் வாழ்விக்கும் பொருளைச் சொல்வோம். அதுவே ஆண்டாளின் ஆணை. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment