Wednesday, January 11, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 26

மாலாய் மனவண்ணம் மாதவற்கே ஆகிடுமால்
வாலறிவர் தாம்விரித்த வானுரைக்கே ஏங்கிடுமால்
பாலாழி விட்டிங்குப் பார்வண்ணம் தாங்கிடுமால்
நூலாழி நுட்பம் நுவன்றநம் கோதைக்கே
மாலாகி நெஞ்சழிய மன்னுபெரு வாழ்வுக்காம்
சாலப் பெரும்பறையும் சங்கமுடன் நீள்கொடியும்
ஞாலமெலாம் உள்ளடக்கும் ஞான விதானமும்
ஆலின் இலைகிடந்தே ஆள்வானை ஆண்டாளைக்
கோல விளக்காகக் கொள்வோம்நாம் எம்பாவாய்.

மனம் எதில் தோய்கிறதோ அதன் வண்ணமாக ஆகிவிடுகிறது. மயக்கம் என்பது மனத்தின் இயல்பாய் இருக்கிறது. இந்த மயக்கம், தோய்வு என்பதைக் கடவுள் விஷயத்தில் திருப்பிவிடும் போது அதுவே ஞானத்தின் விரிவிற்கும், உயிரின் விடுதலைக்கும் வழியாகி விடுகிறது. ஸ்ரீஆண்டாள் செய்த கருணையால் நம் மனம் இவ்வாறே மாதவற்கே மாலாகி, அவன் புகழையும், சிறப்புகளையும் விரித்துரைக்கும் பெரும் ஞானிகளின் உயர்ந்த உரைகளுக்கே ஏக்கம் கொண்டு தோயத் தொடங்கிவிட்டது. ஸ்ரீஆண்டாள் புவியின் அவதாரம். அவள் நம்மைத் திருமாலை நோக்கி உயர்த்தும் அதே நேரத்தில் திருமாலையே நம் காரியங்களை ஆராய்ந்து அருள வேண்டிப் பாருக்குக் கொண்டு வந்துவிடுகிறாள். பாலாழி என்னும் பாற்கடலை விட்டுப் பார்வண்ணம் தாங்கும் திருமாலின் நூல் ஆழி என்பது கீதை. அதன் நுட்பம் என்பது பிரபத்தி நெறி. பிரபத்தியின் நுட்பம் கைங்கரியம். அதையே பறை என்ற குறிச்சொல்லாக்கிக் கேட்டுப் பெற்றுத் தருகிறாள் கோதை. அந்தக் கோதையின் பேரருளை நினைக்கும் தோறும் நம் நெஞ்சழிவது அல்லால் என்ன செய்ய முடியும்? நிலைத்த வாழ்வு என்னும் கைங்கரியத்தையும், அதை அனைவருக்கும் என்று பறைசாற்றும் சங்கத்தையும், அனைவரும் வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்று அனைவரையும் அழைக்கும் கொடியையும், எத்தனை பேர் வந்தாலும் மனுக்குலம் அனைத்தும் வந்தாலும் நிழல் தரும் ஞான விதானத்தையும் நமக்குத் தரும் ஸ்ரீஆண்டாளை, ஆலின் இலைகிடந்து ஆளும் ஒருவனையே ஆளும் ஆண்டாள் அவளையே நாம் நம் கூட்டத்திற்கும், கொள்கையின் முனைப்பிற்கும் ஆன கோல விளக்காகக் கொண்டு நடக்கின்றோம். பின்னர் என்ன? களி தொடங்கட்டும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment