சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
*
இயற்கையின் அடிமைப் பாவைகளாய்த் திரிந்த நம்மைத் தம் திருப்பாவையினால் ஆண்டார் ஸ்ரீஆண்டாள். வாழ்க்கை முழுதுமே நீண்ட மறதியும், உறக்கமுமாய்க் கிடந்த நாம் கதிரவனுக்கு முன்னமேயே எழுந்து ஒளி வருவதற்கு முன்னர் அதற்கு வரவேற்பு நல்கும் குழாமாய்க் கூடி நிற்கின்றோம். நம் வாழ்வுக்கு ஒளி என்றும் வந்து கொண்டிருக்கிறது. அதை வரவேற்க நாம் சித்தமாய்ச் சன்னத்தமாகி நிற்பதற்குப் பெயர்தான் விழிப்பு. உலகத்தில் விழிப்பு என்பது அகங்காரத்தின் ஆட்டத் தொடக்கமாக ஆகிவிடுகிறது. ஆனால் திருப்பாவையில் விழிப்பு என்பது நம்மைப் பிரபஞ்ச இதயத்தின் கீதமாகப் புலரச் செய்கிறது. நன்றியில் தோயும் நம் இதயமோ ஸ்ரீஆண்டாளின் திருமுன்னர்ப் போய் நிற்கிறது. ‘அம்மா! நின் திருப்பாவையினைக் கற்றுச் சிற்றஞ்சிறுகாலை வந்து நாம் உன் திருவடிக்கே குற்றேவலாய் வந்து நிற்கின்றோம். குறை மதியுடையோம். உரைகளைக் கற்றுப் பொருள் உணர்ந்து அதனால் உன் திருவடிக்கே தீர்ந்து வந்து நாம் நிற்கிறோம் என்று இல்லை. படிப்பால் வந்த பக்குவம் அன்று இது. நின் பேரருளால் விளைந்த வாய்மை இது. நின் திருப்பாவையினால் அனைவரும் உற்றாராய் ஆகி உனக்கே ஆட்செய்ய வந்து நிற்கின்றோம். பிரிவினைகள் அகன்று உலகெல்லாம் ஒன்றானோம். எங்கள் வேகங்களை நல்வழியில் செலுத்தி எம்மை ஆள்வாய் அன்னையே!’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment