Thursday, January 5, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 20

முப்பத்துப் பாட்டிற்குள் மாதவனைப் பூட்டியே
எப்போதும் நந்தமக்கே எய்ப்பில்வைப் பாக்கினாள்
செப்பன்ன மென்முலையாய்ச் சீருரைக்குள் ஆட்பட்டே
அப்பாஞ்ச சன்னியனும் ஆரா வமுதானான்
கப்பம் தவிர்த்திங்கு காதலாய்க் கண்ணனுக்கே
எப்போதும் ஏங்கி இயல்வதாம் வாழ்விதனில்
முப்பதும் முந்துரையும் உக்கமும் தட்டொளியாய்
இப்போதும் என்றும் இயம்பேலோ ரெம்பாவாய்.

முப்பது பாடல்களே உள்ள திருப்பாவையில் திருமாலைப் பூட்டி வைத்துவிட்டாள் ஸ்ரீஆண்டாள். முப்பது நாட்கள் மாதத்திற்கு. மாதந்தோறும் சொல்ல வைத்து பன்னிருமாதமும் பகவத் விஷயத்தைச் சிந்தை செய்ய வைக்கின்றாள். நாமோ மார்கழி மாதத்தில் மட்டும் போனால் போகிறதென்று திருப்பாவை சொல்கிறோம். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்பது வாழ்நாள் முழுவதையும் குறிக்கும். இருக்கின்ற காலமெல்லாம் இறைவனைச் சிந்திக்கும் ஜீவனுக்கு இறப்பு இறந்துபடுகிறது. பகவத் விஷயத்தில் ஆழாத நாள் எல்லாம் வறுமைக் காலம். வறுமையற்ற வாழ்நாளை நமக்குத் தருகிறாள் கோவிந்தனின் கோதை. அருள்நூல் குறிப்பில் முலை என்பது பக்தியின் பெருக்கத்தைக் குறிக்கும். பக்திக்கு ஆட்படும் பரமனோ பக்தி பொங்கி புறம்பொசிந்த பனுவல்களான பகவத் விஷய வியாக்கியானங்களில் ஆட்பட்டு நிற்கின்றான். தனக்கு யாரேனும் ஆட்படுவோர் உண்டோ என்று பாஞ்சன்னியம் முழக்கித் தேடுபவன் ஆண்டாளால் திருந்திய அடியார் கூட்டம் பகவத் விஷயத்தில் ஈடுபட, ஆரா அமுதம் ஆகிநிற்கின்றான். எனவே உலக விஷயம், உலக கதி குறித்தெல்லாம் நடுக்கம் எல்லாம் தீர்ந்து, கண்ணனுக்கே காதலாய், அந்த உன்னத ஏக்கத்தில் இசைந்து நிற்போம். (கப்பம் - நடுக்கம்) திருப்பாவை முப்பதும் நம் உலகியல் வெப்பத்தை நீக்கி அருளின் ஆதுரத்தைத் தருவதால் அதை ஆலவட்டம் அல்லது விசிறி என்று சொல்லலாம். உக்கம் என்றால் விசிறி அல்லது ஆலவட்டம். பகவத் விஷயத்தை, அருளிச்செயலில் உட்பொருளை உள்ளது உள்ளபடி காட்டும் தன்மையால் உரைகள் கண்ணாடி போல் செயல்படுகின்றன. தட்டொளி என்றால் கண்ணாடி. உரைகளை நாம் மட்டும் துய்க்காமல் அனைவருக்கும் உரைக்க வேண்டும் என்பதால் பறை. தட்டொளி என்றால் பறை என்றும் பொருள். எனவே இந்த உக்கமும் தட்டொளியும் என்றும் நாம் கைக்கொண்டு கண்ணன் புகழ் பாடுவோம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment