Sunday, January 8, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 23

மாரி பெயல்நெஞ்சில் மாவுணர்த்தும் காலத்து
வேரி கமழ்சிந்தை வீடளிக்கும் வேராகிச்
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
பேரியல்வே பல்குநல் பாங்கான பேருரைகள்
மூரி நிமிர்ந்து முழங்கிடவே யாம்வந்த
காரியம் ஆராய்ந்து கண்ணன் கருணையினால்
சீரிய சிந்தையும் சிந்தாநல் பத்திமையும்
ஆராய்ந் தருளநாம் ஆர்த்திடுவோ மெம்பாவாய்.

கார்மேகம் பெய்வது இந்த நிலம், இன்னார், இனையார், மேடு, பள்ளம் என்றெல்லாம் நோக்காமல் பெய்வதே தன் இயல்வாகப் பெய்வது. அனைவருக்கும் பொதுவான அருள் என்பது திருமகளின் இயல்பு. கார்மேகம் திருமகளை நினைவு படுத்தக் கூடியது. பூக்களின் இனிமையைச் சேகரித்துத் தேனீக்கள் தேனைக் கூடுகட்டுகின்றன. அதுபோல் திவ்யப் பிரபந்தங்களின் பொருள் நுணுக்கங்களையெல்லாம் தேனீக்கள் போல் நமக்குச் சேகரித்துத் தரப்பட்டவையே பாங்கான பேருரைகள். வேரி எனில் தேன். தேன் போல் இனிய பகவத் விஷயம் வீடு என்னும் உயர்ந்த பேறு நமக்கு விளைவதற்கும் வேராக ஆகிறது. திவ்யப் பிரபந்தத்தில் சிங்காதனம் இட்டு அமர்ந்தது போல் இருப்பது திருப்பாவை. திருப்பாவையின் பெருமைமிக்க பாங்கை உள்ளவாறு உணர்த்துவன அதற்கமைந்த பேருரைகள். அந்தப் பேருரைகளில் ஆழ்ந்து செல்லச் செல்ல ஜீவன் விழித்துக் கொள்கிறது. பகவானுக்கே ஆட்பட்ட தன்னுடைய பேரியல்பு இதுகால் உலகியலில் அமிழ்ந்து தன்னை மறந்து கிடந்த நிலை மாறி மூரி நிமிர்ந்து முழங்குகிறது. இவ்வாறு தன்னை உணர்ந்து, தன் உரிமையை உரக்க முழங்கி இந்த ஜீவன் பெற வேண்டும் என்பதே கண்ணனின் எதிர்பார்ப்பு. அதை அவனுக்கே சாதித்துக் கொடுக்கிறாள் ஆண்டாள். திருப்பாவையினால் தன்னிலை உணர்ந்த ஜீவர்களாக, ஆண்டாள் கூட்டத்தினராக நாம் அவன் கோயில் வாசலில் கூடி நிற்கும் போது, அவனைப் பற்றியே சிந்திக்கும் சீரிய சிந்தையும், சிறிதும் சிதறாத நல் பக்தி நலத்தையும் நமக்கு மேலும் மேலும் எவ்வாறெல்லாம் தரலாம் என்று அவன் ஆராய்ந்து அருளவும், அதனால் நாம் ஆனந்தத்தில் ஆர்த்திடுவோமாக! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment