Wednesday, January 28, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 29

பொதுவாக ஒரு நூலோ அல்லது ஒரு ஸ்தோத்திரமோ செய்பவர்கள் எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசிப் பகுதியில் அந்த நூலை, சுலோகத்தைப் படிப்பதன் பலன், அவசியம், செய்தவரின் நோக்கம் என்று பொதுவாகச் சொல்லி முடிப்பார்கள். ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் இந்தக் கடைசி சுலோகத்தில் மிகச் சிறந்த செய்தியையே நமக்குத் தருகிறார். ஆத்ம சாதகர்களுக்கான மிக முக்கியமான குறிப்பையும், மக்களுக்கு மிகவும் அத்யாவசியமான தெளிவையும், பொதுவாக ஹிந்துமதம் என்பதன் உயிர்நாடியையும் ஒருங்கே அளிக்கும் வண்ணம் பகவத் பாதர் எழுதியிருப்பது மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்கதாகும். 

உலகில் இருட்டு என்பது கொடியது. ஒளியின் இல்லாமை இருட்டு. ஒளியின் விளக்கத்தில்தான் வாழ்வு துலங்குகிறது. பொருள் இருந்தாலும், காணும் கருவி இருந்தாலும், காட்டும் ஒளி இல்லையேல் காட்சி இல்லை. 

பலவித இருட்டுகள் இருக்கின்றன. புற இருட்டு என்பதே மிகவும் தொந்தரவானது. அதிலும் அக இருட்டு என்றால் கேட்கவே வேண்டாம். தெளிவும், ஊக்கமும் இல்லாத குழப்பம் அக இருட்டு. உள்ளத்தில் தன்னம்பிக்கையும், பெருமை உணர்வும் தான் ஒருவர்க்கு உண்மையில் அகத்தின் ஒளி என்கிறார் திருவள்ளுவர். ‘ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை’. 

உள்ளத்தின் ஒளியைப் பெருக்க உன்னதமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். Be a light unto yourself என்றார் பகவான் புத்தர். அவ்வாறு உள் ஒளியாய் ஒவ்வொருவரும் இலக வழி சொல்கிறார் சங்கரர். ஒவ்வொரு ஒளியும் அணைந்து விட்டால் பின் எது ஒளியாய் இருக்கும் என்று கேட்டுப் பல ஒளிகளைச் சொல்லிக் கடைசியில் எல்லா ஒளிகளும் இல்லாமல் போன பின்பும் நிலைத்து என்றும் மறையாது உயிர்க்கு உற்ற ஒளியாய் இருப்பது ஆத்ம ஒளி என்று உபநிஷதம் சொல்கிறது. அதை நினைவு படுத்துகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

உள்ள வெறுக்கை என்கிறார் திருவள்ளுவர். வெறுக்கை என்றால் பெருமை உணர்வு. ஓர் உன்னத இலட்சியத்தின்பால் மனிதர் ஈர்க்கப்படும் பொழுது அவர்களுடைய முழு சிந்தனையும், உள்ளமும், ஆர்வமும் எல்லாம் அந்த இலட்சியத்தில் குவிவதை இந்த உள்ள வெறுக்கை என்பது குறிக்கிறது. அப்பொழுது மனிதர் தம் அகத்துள் சிதறுண்டு நிற்காமல் ஒரே உணர்வாகத் திரண்டு இயங்குவதை யோகிகள் இதயம் என்று குறியீட்டு மொழியில் உணர்த்துகின்றனர். இது உடலில் இடப்பக்கம் இருக்கும் உறுப்பான இதயம் என்பதைக் குறிப்பது அன்று. 

உள்ளம் ஒன்றித்துத் திரண்ட உயிர்கெழு ஆர்வம் என்பதை உருவகப்படுத்த உற்ற சித்திரம் கமலம். எனவே இதய கமலம் என்று உரைக்கின்றனர் யோகிகள். புற உலகில் மொட்டாக இருக்கும் தாமரையை மலரச் செய்ய சூரியனின் கதிர்கள் அந்தக் கமலத்தின் மீது படுவது போன்று, அக உலகில் இதய கமலத்தை மலர்த்தும் கதிர், ஆத்ம ஒளி ஆகும். இந்த ஆத்ம ஒளிதான், கற்று அறிந்து பயின்ற கலைகள் அனைத்தின் சாரமும், முடிவுமாக இருப்பது. எனவே ஆத்ம ஞானம் என்பதை வேத ஸாரம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

அத்வைதத்தின் உயிரான கருத்து ‘பிரம்மம் ஒன்றே உண்மை. உலகம் வெறும் மித்யையே. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே. வேறன்று’ என்னும் இதுதான். இதைத்தான் ‘ப்ரஹ்ம சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ என்னும் வாக்கியம் உணர்த்துகிறது. 

இந்தக் கருத்தின் நுணுகிய திரண்ட வடிவாக இருப்பது பிரணவம் என்னும் ஓம். பிரணவம் மூன்று எழுத்துகளைக் கொண்டு உருவானது. அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துகள் அவை. அ, உ இரண்டும் சேர்ந்து ஓ என்று ஆகி, ம் என்பதுடன் சேர்ந்து ஓம் என்று ஆகிறது. இந்த எழுத்துகளின் அமைப்பு ரீதியான உட்பொருளில் அத்வைதத்தின் ஆன்ற மறைமுடிவான கருத்து அடங்கியிருக்கிறது. இலக்கண ரீதியாகப் பார்த்தால் இந்த எழுத்துகள் தம்மளவிலேயே அர்த்தங்கள் உடையன. ‘அ’ என்பது பிரம்மத்தைக் குறிக்கும் எழுத்து ஆகும். ‘ம்’ என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகும். ‘உ’ என்பது ’அதுவே’ என்னும் பொருள்தரும் ஏவகாரம் என்பதை உணர்த்தும் குறிப்பு எழுத்து. ஏவகாரம் என்பது ஒன்று அதுவேதான் என்று வலியுறுத்திச் சொல்வது. ஏன் ம் என்பது ஜீவனைக் குறிக்கும் எழுத்து என்று சொல்கிறோம்? அதற்குக் காரணம் இருக்கிறது. வேதாந்தத்தில் உலக தத்துவங்கள் ஆன 24 தத்துவங்களை (அதாவது ஞான இந்ந்திரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, இந்திரிய உணர்ச்சிகள் 5, பூதங்கள் 5, அந்தக்கரணம் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் நான்கு - மொத்தம் 24) வடமொழி அரிச்சுவடி ரீதியாக க, க2, க3, க4, ஞ, ச, ச2, ஜ, ஜ2 என்ற வரிசையில் நிரல்படுத்திக் கொண்டே வருவார்கள். அப்படியே ப4 வரை 24 தத்துவங்கள் வரிசைபடுத்தப் படும். 25 ஆவதாக வரும் எழுத்து ‘ம’ என்பதாகும். அதை 25 ஆவது தத்துவமான ஜீவன் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். எனவேதான் ஜீவனுக்கே மகார வாச்யன் (ம என்னும் எழுத்தின் பொருளாக இருப்பவன்) அல்லது பஞ்சவிம்சதியான தத்துவம் (பஞ்சவிமசதி - 25, 25 ஆம் தத்துவம்) என்று பெயர் சொல்வார்கள். இப்பொழுது அ, உ, ம் என்னும் எழுத்துகளை வரிசையாக வைத்து அந்த எழுத்து உணர்த்தும் தத்துவத்தை நினைத்துப் பாருங்கள். அ + உ+ ம் = பிரம்மம் + அதுவே + ஜீவன். அதாவது ‘பிரம்மம் ஒன்றே சத்யம். இந்த உலகம் உண்மையில் சத்யமன்று. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே’ என்னும் அத்வைத சாரமான, வேத ஸாரமான கருத்தையே அ, உ, ம் என்னும் எழுத்துகள் தம்மளவிலேயே உணர்த்துவதைக் காணலாம். எனவேதான் இதய கமலத்தில் ஒளிரும் ஆத்ம தீபத்தையே பிரணவமயம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

ஓம் என்பதை விரித்தால் அ + உ + ம். இந்த மூன்று எழுத்துகளை விளக்கினால் அதுவே அத்வைத ஸாராம்சம். 

அறிவுகள் அனைத்தும் உணர்வை அடிப்படையாக கொண்டன. உணர்வோ நம்முள் இருப்பது. நாம் உணர்வுமயமாக இருக்கிறோம். சித்கனம் ஆக இருப்பது ஆத்மா. உணர்வு இருக்கப் போய்த்தான் உலகமே நம்க்கு இருப்பு உடையதாக ஆகிறது. அப்படி இருக்கும் போது இந்த உணர்வை நமக்குப் புறத்தில் இட்டு அறிய முயல முடியாது. ஏனெனில் உணர்வை புறத்தில் இட்டால் அப்பொழுது நாம் உணர்வு இல்லாத ஒன்றாக ஆகவேண்டும். அப்பொழுது அறிவோ உலகமோ என்ற பேச்சே இல்லை. எனவேதான் சித் மயமாக் இருக்கும் ஆத்மாவை, உணர்வுமயனை ஒருநாளும் தர்க்கம் கொண்டு, அல்லது அனுமானம், ஊஹம் முதலியன் கொண்டு அணுகவே முடியாது. பின் நாம் எப்படி ஆத்மாவை உணர்கிறோம் என்ற கேள்வியே பொருளற்றது. ஏனெனில் நாம் உணர்வதே ஆத்மா அடிப்படையாகத்தான். ‘விஞ்ஜாதாரம் கேன விஜானீயாத்?’ என்று கேட்கிறது உபநிஷதம். உணர்பவனை எதைக் கொண்டு உணர்வது? எனவேதான் பிரணவமயமான் ஆத்ம தீபம்தான் அனைத்தையும் நமக்குப் புலப்படுத்துகிறது. ஆனால் அதுவோ தர்க்கத்துக்கு எட்டாதது. ‘அதர்க்யம்’ என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

தர்க்கத்துக்கு எட்டாதது. புறத்தில் இட்டு ஒரு பொருள் போல் அறிய முடியாதது. என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? கையில் ஒரு டார்ச் இருக்கிறது. இருட்டில் இருக்கும் பொருளைப் பார்க்க அந்த டார்ச்சைப் பயன்படுத்துகிறோம். அது ஒளி பாய்ச்சி அந்தப் பொருளைக் காட்டுகிறது. அந்தப் பொருளில் இருக்கும் பிரச்சனையை இந்த டார்ச் ஒளிகொண்டு சரி செய்கிறோம். டார்ச்சுக்குள்ளேயே ஒரு பிரச்சனை. உடனே ஒடித்து வளைத்து டார்ச்சுக்குள் அந்த டார்ச் ஒளியை அடித்துப் பார்க்கவா முயற்சி செய்கிறோம்? உடனே டார்ச்சைத் தனித்தனியாக கழட்டி உள்ளே முதலில் அடிப்படையாக இருக்கும் கருவியின் உப பொருளில் என்ன ஆயிற்று என்று நோக்குகிறோம். 

டார்ச்சின் ஒளியைக் கொண்டு நாம் புறப்பொருளில் இருக்கும் பிரச்சனையைப் பார்ப்பது தர்க்கம். டார்ச்சினுள் இருக்கும் பிரச்சனையைப் பார்க்க டார்ச்சையே தனித்தனியாக அலசிப் பார்க்கிறோமே அதை எதற்கு உவமையாகச் சொல்லலாம்.? அதைத்தான் யோகிகள் தியானத்தில் ஆழ்ந்து புரிந்துகொள்ள முயலும் பிரச்சனைக்கு உவமையாகச் சொல்லலாம். உணர்வின் மயமாக அகத்துள் அமைந்துள்ள ஆத்மாவைப் பார்க்க உற்ற வழியாக யோகத்தில் ஆழ்ந்த தியானம் உதவுகிறது. தியானம் என்பது புறத்தைத் தள்ளி அகத்தை அலசி உற்று உணர்ந்து நோக்குதல். 

Atman is not understood inductively or deductively but you become aware of it by intuition

அதனால்தான் அரிஸ்டாடில் Contemplation is the activity of Gods என்றார். 

எனவேதான் ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், இந்த ஆத்மா யோகிகளால் தியானத்தில் அடையப்படுகிறது. 

சிலர் நினைக்கலாம். நாங்கள் எல்லாம் விஷ்ணுவை வணங்குபவர்கள். நாங்கள் சிவனை வணங்குபவர்கள். எங்கள் குருமார் வேறு. அவர்கள் சொன்ன மார்க்கங்கள் வேறு. எங்களுக்கும் அத்வைதம் சொல்லும் இந்தக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? சிவன், விஷ்ணு என்பதால் இரண்டு வழி என்றில்லை. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களையும் குறிக்கின்றதுதான். இப்படி அந்த அந்தத் தெய்வ வழிபாட்டைச் சொல்லக் கூடியது அந்த அந்த நெறிக்கான ஆகம சாத்திரம். எந்த ஆகம சாத்திரம் ஆகட்டும், அது சைவ ஆகமமோ, வைஷ்ணவ ஆகமமோ, சாக்தமோ, காணாபத்யமோ, கௌமாரமோ, அல்லது சூரியனை வழிபடும் சௌரமோ எதுவானாலும் அந்தத் தெய்வத்தைப் பற்றிச் சொல்லும் போது, அந்தத் தெய்வம் எதுவே வடிவானது என்று சொல்கிறார்கள்? ஏதாவது பொருளால் ஆனது என்றா சொல்கிறார்கள்? இல்லை. எந்தத் தெய்வ வடிவாயினும் அது சித் வடிவே ஆனது என்றுதான் எந்த ஆகமமும் சொல்லக்கூடிய வார்த்தை. 

சித ஆத்மகம், சின்மயம், சித்கன ரூபம் என்று சொல்லாமல் எந்தத் தெய்வத்தையும் யாரும் விவரிப்பதில்லை. ஸ்ரீஆதிசங்கரர் சொல்வதோ அந்தச் சித் கனம், சித் மயம் என்பதைத்தான் பிரம்மம் என்கிறார். அதுமட்டுமன்று. விஷ்ணு என்றால் எங்கும் விரிந்தது என்ற பொருள். பிரம்மத்தைக் குறிக்கும் பெயர். சிவம் என்றால் மங்களம், நன்மையே வடிவானது என்று பொருள். பிரம்மத்தைத் தவிர மங்களமானதும், நன்மையே வடிவானதும் வேறு எது? 

குரு என்னும் பதமே அர்த்தம் நிறைந்தது. அஞ்ஞானம் என்னும் இருட்டை நீக்கி விளக்கம் பெய்யும் ஒளியாய் இருப்பது குரு என்னும் தத்துவம். பிரம்மம் தன்னளவில் ஒற்றை ஒரே சத்யமாய் இருக்கலாம். சத்யம், ஞானம், அநந்தம், ஆநந்தம் என்று பிரம்மத்தின் இயல்பை எடுத்துக் கூறுகிறது உபநிஷதம். உலகமோ, நாமோ உண்மையில் இருக்கும் சத்யம் இல்லை என்றும் இருக்கலாம். அஞ்ஞானத்தில் பந்தப்பட்ட நிலையும், அதனால் நாம் கொள்ளும் ஓராயிரம் பிரமைகளும் சிறிதும் அடிப்படை அற்ற நிலைமாற்றத் தோற்றங்களேயாக இருக்கலாம். ஆனால் அஞ்ஞானம் விலகி நம் உண்மை இயல்பை உணரும் பொழுதுதான் அந்த ஞானம் நம் தாகத்தைத் தணிக்கும். அதுவரை தொடரும் அவஸ்தையினின்றும் விடுதலையை மித்யையோடு கலந்து வந்து நமக்களிக்கும் அருள் அதே பிரம்மத்தின் இயல்பில் இருக்கப் போய்த்தான் நமக்கு அத்வைதமே கிடைக்கிறது. அந்த அருள்முகம் பிரம்மத்தின் குரு தத்துவம். 

குரு எந்த வடிவத்திலும் வரலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் யதுமகாராஜனுக்கும் ஒரு பிரம்ம ஞானிக்கும் நட்ந்த உரையாடலாக எழுதும் போது அந்தப் பிரம்ம ஞானி தமக்குக் குருவாக 24 பேர்கள் அமைந்தனர் என்று கூறுகிறார். அந்த 24 ஒரு வினோதமான வரிசை.’பூமி, காற்று, ஆகாயம், ஜலம், அக்கினி, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேனெடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரரப்பக்ஷி, குழந்தை, குமரி, அம்புதொடுப்பவன், பாம்பு, சிலந்திப் பூச்சி, குளவி என்று 24 பேர்கள் தமக்குக் குருவாக இருந்தனர் என்கிறார் பிரம்ம ஞானி. அதாவது அதன் பொருள் ஒருவருக்கு அவருடைய ஆத்மாவே குருவாக உள்ளிருந்து நடத்துகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணன் அப்பொழுது விளக்குகிறார் உத்தவரிடம். 

‘ஒரு மனிதருடைய ஆத்மாவுக்குச் சிறப்பாக அவருடைய ஆத்மாவேதான் குருவாக அமைகிறது. ஏனெனில் ஆத்மாவின் உந்துதலால் ஒரு மனிதர் தம் பிரத்யக்ஷத்தாலும், அனுமானத்தாலும் கூட உயர்நலனை அடைகிறார்கள்.’ (ஆத்மனோ குருர் ஆத்மைவ புருஷஸ்ய விசேஷத:| யத் ப்ரத்யக்ஷானுமானாப்யாம் ச்ரேயோSஸாவநுவிந்ததே || ) (11.7.20) 

எதேச்சையாக நம் கையில் கிடைக்கும் நூல், நாம் சந்திக்கும் மனிதர், நமக்கு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, நம் கண்முன் நடக்கும் ஒரு காட்சி, ஏன் ஏதோ ஒரு பறவை, ஏதொ ஒரு விலங்கு என்று எந்த ரூபத்திலும் பிரம்மத்தின் குரு முகம், அருள் பாய்வு நடந்தாலன்றி மாயைத் திரையும் கிழிவதில்லை. அப்பால் நிற்பது போல் நின்று குமிணகைக்கும் பரமசிவமோ, அறிதுயில் அமர்ந்து அனைத்தும் அறிந்த குறும்பில் புன்னகைக்கும் ஆதிநாராயணமோ அப்பொழுதுதான் நம் கனவு இரிந்த நிதர்சனமாய் நமக்கும் அர்த்தப் படுகிறது. 

இதையே தேஜோபிந்து உபநிஷத் கூறுகிறது. ‘பகுதியாக்கப் படாமல் ஒரே முழுமையான சைதன்ய ரஸம்தான் பிரம்மா, அதே சைதன்ய ரஸமே ஹரி, அதே சைதன்ய ரஸமே ருத்ரர், அதே சைதன்ய ரஸமே நான், அதே சைத்ன்ய ரஸமே ஆத்மா, அதே சைதன்ய ரஸமே குரு’ (அகண்டைக ரஸோ ப்ரஹ்ம, அகண்டைக ரஸோ ஹரி:, அகண்டைக ரஸோ ருத்ர, அகண்டைக ரஸோSஸ்மி அஹம், அகண்டைக ரஸோஹி ஆத்மா ஹி அகண்டைக ரஸோ குரு:) (2.5-6). 

வேத ஸாரத்தைச் சொல்ல வந்த ஸ்ரீஆதிசங்கரரும் அதையே சொல்கிறார். விஷ்ணு, சிவம், குரு அனைத்தும் ஒன்று கலந்தது பிரம்மம். அதுவே உன் இதய கமலத்தில் இருள் கடியும் ஆத்ம தீபமாக இருப்பது. அவ்வாறு அதை நீ தியானம் செய்வாயாக. 

அனைத்து உயிர்களிலும் அந்த ஒளி, ஆத்மா என்ற பிரம்மம் திகழ்கிறது. என்றால் பலப்பல ஜீவர்கள் போல் தோன்றினாலும் ஒரே ஆத்மாவாகத் திகழ்கிறது. ஒளிரும் சூரியன் ஒன்றுதான். ஆனால் பல நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கும் சூரியன்கள் பல போன்று தோன்றினாலும் உள்ள சூரியன் ஒன்றேதான். 

ஒருமுறை விலகிய இருள் மீண்டும் வந்து ஒட்டுவதில்லை. ஒரு முறை கலைந்த கனவு மீண்டும் வந்து தொடர்வதில்லை. ’பயப்படும் குழந்தை முகமூடி போட்டு ஆடும் நபர் தன் தந்தை என்று உணர்ந்ததும் பின்னர்ப் பயப்படுவதில்லை’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதுபோல் ஒரே ஒரு முறை நன்கு சிந்தித்து இந்தப் பிரம்மத்தைப் புரிந்துகொண்டு விட்டால் பின்னர் அந்த மனிதர் முக்தர்தான் என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

’இதய கமலத்தின் உள்ளே 

இலகும் தீபமாய் வேத சாரம் 

பிரணவமயமாய், தர்க்கம் கடந்து, 

தியானத்தில் யோகிகளால் அடையப்படும். 

ஹரி, குரு, சிவம் கலந்த யோகம் 

அனைத்து உயிரிலும் திகழும் ஏகம் 

ஒருமுறை மனத்தால் சிந்தித்து உணர்ந்தால் 

போதும் அவர் முக்தரே ஆவார்.’ 

(ஹ்ருதயகமல மத்யே தீபவத் வேதஸாரம் 

ப்ரணவமயம் அதர்க்யம் யோகிபிர் த்யானகம்யம் | 

ஹரிகுருசிவ யோகம் ஸர்வபூதஸ்தம் ஏகம் 

ஸக்ருதபி மநஸா வை சிந்தயேத் ய: ஸ முக்த: || ) 

முற்றும். 

சுபம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, January 26, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 28

பன்மைதான் நமக்குப் பழக்கப்பட்ட ஒன்று. வேறு, வேறு, வேறு விஷயங்களில் போய்க் கொண்டிருக்கும் மனம் உடைய பிராணிகள் நாம். இந்தப் பன்மையை ஆராய உட்கார்ந்தோமானால் எந்த ஒரு பொருளும் தன்னளவில் முடிந்த பொருளாக இல்லாமல் தான் ஏதோ ஒரு மூலப் பொருளின் தற்காலிக நிலையாகத்தான் நம் அனுபவத்திற்கு வருகிறது. உண்மையில் நிலைமாற்றங்களைத்தான் நாம் அனுபவிக்கும் பன்மையில் சந்திக்கிறோம். வெவ்வேறு பொருட்கள் என்று கருதி நடந்துகொள்வது நடைமுறைக்கும், நம் அனுபவத்திற்கும் பொருந்தி வருகிறது. இவ்வாறு பல பொருட்கள் என்று கருதி நடந்து கொள்வது பொய் என்று எந்தக் கணத்திலும் நம் அனுபவம் உடைப்பு விட்டுக் கொள்வதில்லை. ஒருவேளை நீண்ட அனுபவத்தினாலும், ஆழ்ந்த ஆராய்ச்சி உணர்வினாலும், தீவிரமான நுணுகி அவதானிக்கும் உண்மைத் தேட்டத்தினாலும் ஒரு சிலர்க்கு இந்த அனுபவச் சங்கிலி அறுபடும் கணங்கள் சாத்தியப்படலாம். அத்தகைய ஆத்ம சாதகர்களோ, அல்லது ஞானிகளோ தாங்கள் புரிந்துகொண்டதைப் பிறரும் அறியும்படியாகச் சொன்னதுதான் நமக்குப் படிக்கக் கிடைக்கும் அரிய அத்வைத வேதாந்த ஞான நூல்கள். இந்த விதத்தில் ஒரு தொடர்ச்சியான நூலகமே நமக்கு ஸ்ரீஆதிசங்கரரால் தரப்பட்டிருப்பது நாம் செய்த நல்வினையோ அல்லது அவருடைய காரணமற்ற கருணையோ! 

அவர் நமக்கு ஈறுநிற்கும் உண்மையை, அறுதியான தத்துவத்தை எப்பொழுதும் தொடர்ந்து சிந்திக்கும் வழியைச் சொல்லித்தர வேண்டிப் பாடியதுதான் இந்தப் பிரம்ம அனுசிந்தனம். இப்படிச் சிந்திப்பதால் என்ன பயன்? என்றுதான் நம்முடைய வரவு செலவு மனம் எண்ணுகிறது. ஆனால் நம்முடைய உண்மையான இயல்பு இதுதான் என்பதால் வியாபாரம், வியவகாரம் எல்லாம் கடந்த பரம அர்த்தம் என்று இதைப் போதிக்கிறார் பகவத் பாதர். 

நம்முடைய சாதாரண உலக அனுபவத்திலேயே எதற்காக அதைச் சேமித்து வைத்தோம் என்றே ஆரம்பத்தில் புரியாமல் எதற்கும் இருக்கட்டும் என்று போட்டு வைத்த பொருள் ஒன்று பின்னால் மிக முக்கியமான தருணத்தில் நம் உயிரையே காக்கும் பொருளாக அமைந்தது என்பதும் சிலருக்கு நடந்த அனுபவமாக இருக்கக் கூடுமே! அதுபோல் இருக்கட்டும் என்று மனத்தில் போட்டு வைப்போம். வேறு எவரும் மெனக்கெட்டு நமக்கென்று இதைச் சொல்லப் போவதில்லை. 

ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், ‘இருப்பது ஒரே பொருள்தான். அதுதான் ஒரே சத்யம். ஒரு பொருள்தான் இருக்கிறது. இரண்டாவதாக ஒன்று இல்லை. அதாவது ஜீவன் என்றோ, உலகம் என்றோ பிரம்மத்துக்கு அந்நியமாக ஒன்று கிடையாது. சரி அந்நியமாக இருக்க வேண்டாம். பிரம்மத்திற்குள்ளேயே ஓர் ஓரத்தில் ஜீவனும் இருக்கட்டும், ஜகத்தும் இருக்கட்டுமே என்றாலும் அப்படியும் இல்லை. தனக்கு உள்ளேயும் பிரம்மம் மட்டுமே இருக்கிறது. தனக்கு வெளியே என்று சொல்வதற்கே வழியில்லை. 

அதாவது ஒன்றை விட்டு ஒன்று வேறு என்று சொல்வது மூன்று விதங்களில் இருக்கலாம். தன்னைப் போல் ஒன்று, தன்னை விட வேறான ஒன்று, தனக்குள்ளேயே வேறாக இருக்கும் ஒன்று - இப்படி மூன்று விதங்கள். இவற்றுக்கு ஸஜாதீயம், விஜாதீயம், ஸ்வகதம் என்று பெயர். தன்னைப் போல் ஒன்று - ஸஜாதீயம், தன்னை விட வேறான ஒன்று - விஜாதீயம், தனக்குள்ளேயே வேறான ஒன்று - ஸ்வகதம். 

நீங்கள் ஒரு மனிதனைப் பார்க்கிறீர்கள். நீங்களும் மனிதர். அவரும் மனிதர். இருவருமே மனிதர் என்ற வகையைச் சேர்ந்தவர்கள். ஆனால் வேறு வேறான நபர்கள். இது ஸஜாதீய பேதம். அங்கு ஒரு மரத்தை அல்லது விலங்கைப் பார்க்கிறீர்கள். நீங்கள் மனிதர், அது ஒரு மரம் அல்லது விலங்கு. ஆனால் வேறு. நீங்கள் மனித வகை. அதுவோ மரம் அல்லது விலங்கு வகை. எனவே விஜாதீய பேதம். உங்கள் உடம்பிலேயே பார்க்கிறீர்கள். கை, கால், தலை, தலைக்குள் கண், காது, மூக்கு என்று வேறு வேறு அவயவங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒருவருக்குள்ளேயே இவ்வளவு அவயவ பேதங்கள். இது ஸ்வகத பேதம். இந்த மூன்று விதமான வேறுபாடுகளும் இல்லாத, இருக்கின்ற ஒற்றை உண்மைப் பொருள் பிரம்மமே என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். வேறு எதுவும் இங்கு இல்லை என்று எதிர்மறையாகவும் சொல்லி ஃபைலைக் குளோஸ் செய்துவிடுகிறார். 

‘ஒன்றே இருக்கிறது; 

இரண்டாவதாக எதுவும் இல்லை; 

பிரம்மத்தைத் தவிர இங்கு வேறெதுவும் இல்லை.’ 

(ஏகமேவ அத்விதீயம் வை ப்ரஹ்மணோ நேஹ கிஞ்சந | ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, January 23, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 27

உலகத்தில் கடவுள், பக்தி, மறுமை அல்லது தீர்ப்பு நாள் என்று மனிதர்கள் கதியைப் பற்றிப் போதிக்கும் நூல்கள் பல உண்டு. ஆனால் மனிதர் உண்மையில் இந்தமாதிரித் தோன்றி வளர்ந்து அலைந்து முதுமை எய்திப் பின் மாயும் ஸம்ஸாரியான பிராணி இல்லை. அறிவே வடிவானதும், என்றும் உளதன்மையும், உணர்வே ஆனந்த வடிவமான அந்த ஒரே உன்னதமான பிரம்மமேதான். இப்படி ஸம்ஸாரிகள் போல் வியவாகாரிக (நடைமுறை நடவடிக்கைச் செயல் நிலை) நிலையில் ஏற்படும் அனுபவமும், காட்சியும் தன் சொந்த இயல்பைப் பற்றிய ஆத்ம ஞானம் உதயம் ஆகும் போது வெறும் மித்யை என்று தெரியும். தான் என்றுமே அந்த சத் சித் ஆனந்த பிரம்மமாகவே இருக்கின்றோம் என்பது நிதர்சனமான சத்யமான, மறையாத அனுபவமாகக் கிடைக்கும் என்ற சிறந்த கருத்து எந்த நூலிலும் எந்தக் காலத்தும் வேறு எங்கும் இல்லை. 

உலகத்தின் நல்ல காலம், நம் பாரதத்தில் வேதாந்தம் என்று சேமிக்கப்பட்டு இன்றுவரை பெரும் வாய்ப்பை நல்கும் அன்னபூரணியாக இருக்கிறது. நினைத்துப் பாருங்கள். இதே வேதாந்தம் உலகில் வேறு எங்குத் தோன்றியிருந்தாலும் என்றோ மறைந்து போயிருக்கும். இது ஒரு கருத்தா என்று அன்றைய உலகம் ஒதுக்கிவிட்டுப் போயிருக்கும். இங்கோ அதற்கே வாழ்க்கையை மாறி மாறி அர்ப்பணித்த ரிஷிகள், மகான்கள், யோகிகள், ஆண்களில், பெண்களில், இளையோரில், முதியவர்களில் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம், கிராமப்புறப் பாடல்களில், யாத்ரா நாடகங்களில், பலவேறு ரூபங்களில் இந்தியாவே காதலித்த ஒற்றைக் கருத்தாக இந்த அத்வைத வேதாந்தம் பரவி தழைத்து வந்திருக்கிறதே... இதை நினைத்தால் நமக்கே பெரும் வியப்பும், ஆயாசமும் ஒருங்கே தோன்றுகிறது. 

இந்த அரும்பெரும் உலகளாவிய மூலதனத்தின் சுரங்கமாக நம் பண்பாடு திகழ்வதற்குப் பெரும் காரணம் அந்த ஒற்றை இளைஞர், நாற்பது வயது எட்டவில்லை, அதற்குள் அளப்பரிய பணிகள் - ஆம் ஆதிசங்கரர்தான். சங்கரர் லோக சங்கரர் என்பது எவ்வளவு சத்ய வாக்கு! 

அவர் போட்ட விதை என்ன விளைவு! சங்கராநந்தர் என்று ஒரு மகான். பஞ்சதசி அருளிய வித்யாரண்யரின் குரு. சங்கராநந்தர் அருளியது ஆத்ம புராணம் என்னும் நூல். 13 - 14 நூற். பெரும்யோகி. லம்பிகாயோகம் என்னும் முறையால் நெடுநாள் பூமிக்குள் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புராணங்கள் அனைத்தின் நோக்கமும் ஆத்மஞானம் என்னும் போது ஆத்மபுராணம் என்றே ஒரு கிரந்தம் எழுதியது சாலவும் சிறந்தது. நாமெல்லாம் ‘நான்புராணம்’ எழுதுவதில் வல்லவர்கள். எப்பொழுது பார்த்தாலும், எதைத் தொட்டாலும் ‘நான் அப்படி, நான் இப்படி’ என்று ஒரு கணமும் ஓய்வின்றி நாம் பாராயணம் செய்வது ‘நான் புராணமே’ அல்லவா! அதை மாற்றி ஆத்ம புராணம் என்று யோசிக்கக் கற்றால் அடையவேண்டியது அடையப்பட்டதாகும் என்று நினைத்தாரோ என்னவோ!

இந்த ஆத்ம புராணத்தை ஒருவர் ஹிந்தியில் மொழிபெயர்த்தார் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர். அவர் எங்குப் பிறந்தார் எப்பொழுது என்ற விவரங்கள் அகப்படவில்லை. அவர் பெயர் சுவாமி சித்கனானந்தகிரி என்பதாகும். சிந்துதேசத்தில் பிறந்தவர் என்று அத்தேசத்தவர்கள் சொல்லுகின்றனர். இவருடைய ப்ரஹ்மச்சர்ய ஆஸ்ரமத்தின் போது ஹரித்வாரில் இருக்கும் கனகல் என்னும் தீரத்தில் இருந்து நியாய வியாகரணங்கள் வாசித்துப் பின்னர் வேதாந்தம் பயிலக் காசிக்ஷேத்ரம் சென்றடைந்தார் என்று தெரிகிறது. அங்கு ஸ்ரீபரமஹம்ஸ பரிவ்ராஜகாசாரியரான சுவாமி உத்தவாநந்தகிரி என்பவரிடம் சந்நியாச தீக்ஷை பெற்றார். பிறகு சிலகாலம் மனம் முற்றிலும் ஒடுங்கி நிர்விகற்பசமாதியில் ஆழ்ந்திருந்தார். பின்னர்த் தம் பணி ஏதோ இருப்பது போன்று தெய்வசங்கல்பத்தினால் தீர்த்த யாத்திரை என்று புறப்பட்டுப் பலகோவில்களைத் தரிசித்து, கத்தியவாட்டில் இருக்கும் பவநகர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்குத் திவான்களாக இருந்த ஸ்ரீகௌரிசங்கர், விஜயசங்கர் என்னும் அதிபக்குவிகளான சாதகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அங்கேயே பதின்மூன்று ஆண்டுகாலம் இருந்து பலநூல்களை அருளினார். திவான்கள் வேண்டிக்கொண்டதற்கேற்ப ஹிந்திபாஷையில் நான்கு முக்கியமான பெட்டகம் அனைய நூல்களைத் தந்தார். சங்கராநந்தரின் ஆத்மபுராணம், ஸ்ரீபகவத்கீதைக்குக் கூடார்த்ததீபிகை, ப்ரஹ்ம ஸூத்ரங்களின் அர்த்தங்கள் நிரம்பியதான தத்வாநுஸந்தானம், பல நியாயநூல்களின் கருத்துகளை ஒருங்குறத் தொகுத்துத் தந்ததான நியாயப்பிரகாசம் என்பவையே அந்நான்கு. கணாத தர்க்கம், கௌதம தர்க்கம் இரண்டையும் பயன்பாடு கருதி விளக்கம் சுருக்கமாகக் கூறிய நூல் நியாயப் பிரகாசம். நியாயம், வைசேஷிகம் என்னும் இரண்டு தர்சனங்களின் சாரம் எனலாம்.

இந்தநான்கு நூல்களையுமே தமிழில் கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகவும் அதிர்ச்சி அடையமாட்டீர்களே ! ஆம். ஆத்மபுராணம் கோவிலூர் மடாலயத்து ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளால் நல்ல தமிழ்நடையில் ஆக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சித்கனானந்த கிரி அவர்கள் அருளிய ஸ்ரீ பகவத் கீதையின் கூடார்த்ததீபிகை என்னும் நூலையும் ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளே தமிழில் கொண்டு வந்துள்ளார். ப்ரஹ்ம ஸூத்ர அர்த்தங்களை ஒருங்குறத் தெளிவிக்கும் நூலான தத்வாநுஸந்தானம் என்னும் நூலை ஸ்ரீ கா. அரங்கநாதம் பிள்ளை என்பவர் மொழி பெயர்த்துள்ளார். நியாயப்பிரகாசம் என்னும் பென்னம் பெரிய நூலினை ஸ்ரீ சாது இரத்தின வேதாந்த விசாரணை சபையினருள் ஒருவராகிய ஸ்ரீ நாகரத்தின நாயகர் மொழிபெயர்த்துள்ளார். அதனை வேதாந்த விசாரணைச் சபையில் ஒருவரும், தர்க்க வேதாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும் ஆகிய ஸ்ரீ முருகேச முதலியார் அவர்கள் நன்கு பரிசோதித்து வெளியிட்டுள்ளார். 1907 தொடங்கி இந்நான்கு நூல்களும் 1917க்குள் வந்து நிறைவேறியிருக்கின்றன. மொத்தம் 3500 சொச்சம் பக்கங்கள், மூன்று ஆயிரத்து ஐந்துநூறு, நுணுகிய பிரிண்டு. என்ன  சாதனை இது! இதை உணரும் போது உங்களுக்கு மயிர்க்கூச்செறியவில்லையா? இதுவோ நடந்த சாதனைகளில் ஒரு பத்துச் சதவிகிதம் அவ்வளவே.

நம்முன்னோர்கள் அவர்கள் ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளோ, ஸ்ரீ கரபாத்திர சுவாமிகளோ, ஸ்ரீ வடிவேலு செட்டியாரோ, ஸ்ரீ முருகேச முதலியாரோ, ஸ்ரீ நாகரத்தின நாயகரோ, ஸ்ரீ ராமசந்திர ஐயரோ, ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஐயரோ, ஸ்ரீ ராமசாமிப் பிள்ளையோ இன்னும் கணக்கில் அடங்காத பெரியோர்கள் அவர்கள் காலத்தில் ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்குற இயங்கி அளப்பரிய சாதனைகள் இயற்ற இயலும், ஆன்மிகச் செல்வத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதை நமக்கு ஒளிமிகுந்த வழிகாட்டிகளாக நின்று செய்து காட்டவில்லையா? இத்தனைக்கும் வித்திட்டது அந்த ஒற்றை இளைஞர் அல்லவா? 

ஸ்ரீ ஆதிசங்கரர் பாடுவது சரிதானே? என்ன ஆதாரம் என்றால் வேதாந்தம், ஞானிகள், உன்னுடைய, என்னுடைய, அவரவருடைய சொந்த அனுபவமே சாட்சி சான்று. மேலும் பாடுகிறார்: 

‘பிரம்மமே தான் நான். (பிறந்து வளர்ந்து மறையும்) ஸம்ஸாரி அன்று; 

பிரம்மத்தைக் காட்டிலும் பிறிது எதுவும் இல்லை நான்; 

நான் இந்தத் தேகம் இல்லை; 

இந்தத் தேஹம் என்னுடையதும் இல்லை; 

நான் என்றும் உளனான ஸநாதனமேதான்’ 

(ப்ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரி ந சாஹம் ப்ரஹ்மண: ப்ருதக் | 

நாஹம் தேஹோ ந மே தேஹ: கேவலோSஹம் ஸநாதந: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

 

Wednesday, January 21, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 26

நாம் அன்றாடம் நம்மை எப்படி உணர்கிறோம்? எவ்வளவு பலவீனங்கள்! உடல் உபாதை. மனப் பயங்கள். இருக்கின்ற சிறு அறிவையும் சரிவரப் பயன்படுத்த முடியாமல் எல்லாம் சொதப்பும் நிலை. அகங்காரமோ இத்தனைக்கும் சொல்ல வேண்டாம். நம்முடைய கணக்கில் என்றும் குறையாமல் இருப்பது அதுதான். ஒரு விதத்தில் பார்த்தால் மிகவும் ’காமிக்’ ஆளுதான் நாம். நம்மைப் பார்த்து ஸ்ரீஆதிசங்கரர் இப்படிச் சொல்லுவதைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புதான் வரும். ‘பாவம். நல்ல மனுஷன்’.  

ஆனால் உண்மை உணர்ந்த அவர் தாம் உணர்ந்த உண்மையை உலகுக்கு உரைக்கும் போது எவ்வளவு தனிமையாக உணர்ந்திருப்பார்! பலரும் தாம் சொல்வதைக் கேலியாகத்தான் பார்ப்பார்கள் என்று உணர்ந்துதான் மிகவும் கருணையோடு, ஒரு தாயின் அக்கறையோடு இந்த உபதேசங்களைச் சுலோகங்களாகவாவது இட்டு வைத்துப் போவோம் என்று பாடுகிறார். 

மற்ற பக்திவழியைச் சார்ந்தவர்களுக்கு இந்த அளவு தனிமை இல்லை. ஏனெனில் மனிதர்கள் புன்மை நிறைந்தவர்கள், கர்ம மூட்டையைச் சுமந்து திரியும் ஐயோ பாவம் ஜீவன்கள் என்பதுதான் பக்தி மதங்கள் எதுவானாலும் அடிப்படை. அதைச் சொல்லும் முன்னரே மக்கள் ‘ஆமாம்.. ஆமாம்..’ என்று கூடவே பாட வருவார்கள். அவர்களுக்கும் அதுதான் வேண்டும். தங்கள் அன்றாடத்தில் கூட இருந்து பச்சாதாபப் பட ஒருவர் வந்தாரே என்று நன்றியோடு வருவார்கள். எல்லாம் சூனியம், ஆத்மாவும் இல்லை, உலகமும் இல்லை, எல்லாம் துக்கம் என்று சொன்னால் கேட்கவே வேண்டாம், அதைத்தான் நானும் நினைத்தேன் என்று உடன்படுவதற்கு நான் உளபட நாம் பலரும் முன்வருவோம். ஆனால் ஆதிசங்கரர் சொல்லவந்த விஷயம் அதுபோல் இல்லை. எனவேதான் எந்த உள்நோக்கமும் இன்றி வெறும் கருணையின் அடிப்படையில் சொல்பவர் ஸ்ரீஆதிசங்கரர் என்று சொல்கிறேன். உள்நோக்கம் இருப்பவர் மக்களைத் திரட்டுவதில் அக்கறை காட்டுவார். எதைச் சொன்னால் மக்கள் கூட்டம் விரும்பும் என்றுதான் பார்ப்பார். முற்றிலும் உண்மையின் பக்கம் நின்று பேசும் பேச்சு சங்கரரின் பேச்சு. 

ஆதிசங்கரர் ஆணித்தரமாக எதைப் பேசி, எழுதி, போதித்து நிறுவிவைத்துவிட்டுப் போனாரோ அந்த அத்வைத ரீதியான கருத்துகளை உலகெங்கணும் ஞானிகள் சிலர் பலர் சொல்ல முயன்று விட்டுவிட்டார்கள். காரணம் அங்கெல்லாம் இருக்கும் பண்பாடுகள், மதங்கள், மக்கள் பொது அபிப்ராயச் சூழல் அதையெல்லாம் சகிக்கவில்லை. இங்கோ ஆதிசங்கரருக்கும் முன்னாலிருந்தே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கருத்துகள் தீவிரமாகத் தியானம், உபதேசம், அனுஷ்டானம் என்று ஞானிகள் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் இங்குக் கடவுளைப் பற்றிய சொல்லாடலே அத்வைதம்தான் என்று ஆகிவிட்டது. ஆம். சங்கரர் சொல்வதுபோல் நேரடியான அத்வைதம், இல்லையேல் விசிஷ்ட அத்வைதம், இல்லையேல் சுத்த அத்வைதம் என்று, எந்தவிதமான அத்வைதம் என்பதுதான் வேறுபாடாகக் கொள்ளப்பட்டதே அன்றி, ஔவைப் பாட்டி சொல்வது போல் ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்று ஆகிவிட்டது. 

இல்லையேல் கிரேக்க ப்ளாட்டோவிற்குப் பின்தொடர்ச்சியாக வந்த (Plotinus) ப்ளோடினஸ் என்பார் அத்வைத ரீதியாகவே பேசுகிறார். ஆனால் அதற்குத் தொடர்ச்சி இல்லை. அரேபியா, பர்ஸியா போன்ற பண்பாடுகளில் ஸூஃபிக்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்களை அங்குத்தைய மக்களும் பண்பாடுகளும் ஏற்கவில்லை. அதாவது திருமூலர் சொல்வது போல் ‘பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’ என்று பரம் சார்ந்த பார்வைகள் மனித குலத்தில் அங்கங்கே ஏற்பட்டாலும் அந்தப் பார்வை நிலைத்த தரிசனமாக நின்று நிறுவப்பட்டது நம் பாரதத்தில்தான். அந்தப் பார்வை பக்திமயமான உணர்ச்சி வழக்கங்களில் மறைந்து போகாமல் மனித சிந்தனைக்கும், முனைந்த ஆழ்ந்த விசாரத்திற்கும் கிட்டும்படி இன்றும் நூல்களாக உருப்பெற்றதற்கு முக்கியமான காரணமே ஸ்ரீஆதிசங்கரர்தான். எனவேதான் அவரை நாம் நம் நிலையில்  இருந்து கேட்கும் போது, ‘உண்மையாகவா? என்ன ஆதாரம்?’ என்றெல்லாம் புரியாமல் நாம் முழிக்கும் போது திண்ணமாகக் கூறுகிறார். 

‘இந்தப் பிரபஞ்சம் வெறும் மித்யைதான். 

ஒரே சத்யமான, அழிவற்ற பிரம்மமே நான்; 

அதற்குச் சான்று வேதாந்தமும், ஞானிகளும் 

நம் சொந்த அனுபவமுமே ஆகும்’ 

(அயம் ப்ரபஞ்சோ மித்யைவ ஸத்யம் ப்ரஹ்மாஹம் அவ்யயம் | 

அத்ர ப்ரமாணம் வேதாந்தா குரவோSநுபவஸ்ததா ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, January 19, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 24,25

நான் இதுதான், இவை இவைதான் சேர்ந்து நான் என்றெல்லாம் நினைத்த அனைத்தையும் நான் இல்லை என்று உணர்ந்து, நான் இவைக்கு உட்படாத, ஆனால் இவற்றால் உட்படுத்தப்பட்டது போல் தோற்றம் அளிக்கும் அந்த ஆத்மாவே நான் என்று தொடர்ந்து நினைப்பது வலிமையை நோக்கிய ஒரு பயிற்சி. அதைச் செய்வதற்கு நமக்கு ஊக்கம் அளிக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

அவ்வாறு ஆத்ம சிந்தனையிலேயே ஊன்றி நிற்கும் போது தோற்றம் அளிக்கும் உலகம், அதுவரை தான் பழகிவந்த இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் எப்படிக் காட்சி அளிக்கும்? ஆத்மா, சைதன்யம், உணர்வு என்று இருக்கப் போய்த்தான் இந்த உலகமே புலனாகிறது. எனவே இந்த உலகமே என்னிலிருந்துதான் தோற்றம் கொள்கிறது. என்னில்தான் நிலை பெற்றிருக்கிறது. என்னில்தான் லயம் அடைகிறது என்று சொல்லும்வண்ணம் இருக்கிறது ஆத்ம அனுபவ நிலை. 

‘பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாய்க் கருதிக் கொள்ளும்’ என்று ஒரு வசனம் சொல்வார்கள். நாம் பொதுவான நிலையில் இருந்து பார்க்கும் போது இந்த வசனம் போல்தானோ என்று என்ணுவோம். அகங்காரத்தால் இப்படித்தானே பலபேர் நினைத்துக்கொண்டு திரிகிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன வித்யாசம் என்றும் கருதலாம். ஆனால் அகங்காரம் உள்பட அனைத்தும் நான் இல்லை என்று கழித்த பின்னர் ஏற்படும் ஆத்ம சிந்தனையில் இந்த நிலை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நடைமுறை நிலையில் ஒரு மனித ஜீவனாக இருக்கும் அனுபவத்தில் சொல்லும் கருத்து அன்று இது. விசாரத்தில் நான் என்பது எது எது இல்லை என்று விலக்கி, தான் ஆத்மா என்ற நிலையில் ஊன்றி நிற்கும் நிலை. நாம் முன்னரே பார்த்த மூன்று சுலோகங்களுக்குப் பின்னர் வரும் நிலை இஃது. 

‘என்னிலிருந்து அனைத்தும் தோன்றியது; 

என்னில் அனைத்தும் நிலைபெற்று இருக்கின்றது; 

என்னில் அனைத்தும் இலயம் அடைகின்றது; 

அந்தத் தனக்கு அந்நியமாய் இரண்டாவது அற்றதான 

பிரம்மமே நான்’ 

(மய்யேவ ஸகலம் ஜாதம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் | 

மயி ஸர்வம் லயம் யாதி தத்ப்ரஹ்மாஸ்மி அஹம் அத்வயம் ||) 

இதில் மிக முக்கியமான பகுதி ‘தனக்கு அந்நியமாய் இரண்டாவது அற்றதான பிரம்மமே நான்’ என்பதாகும். பிரம்மம் ஒன்றே இருக்கிறது. இந்த ஜீவனும் உண்மையில் இல்லை என்ற நிலையில் பேசும் பேச்சு. அந்தப் பேச்சை மனத்தால், சிந்தனையில் தீவிரமாக உணர்ந்து நினைக்கும் பயிற்சியைச் சொல்கிறார் சங்கரர். ஜீவனையோ, மனிதனையோ இப்படி உன்னையே கற்பனை செய்து கொள் என்று சொல்லவில்லை. 

லாபரட்டரியில் சோதனை செய்யும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் தகவல்களை உள்ளபடி அறியப்படுவது அவரவர்தம் உள்ளில் இருக்கும் இதே ஆத்மாவால்தான். உலகனைத்தும் உயிர்களின் உள்ளே இருந்து அறிவு, அனுபவம், செயல்கள் என்று அனைத்தும் ஆத்மா அடிப்படையாகத்தான் நடைபெறுகின்றன. எனவேதான் இந்த ஆத்மா, சைதன்யம், உணர்வு என்பதையே பற்றிப் பேசாதே, அது கடக்க இயலா கடினப் பிரச்சனை, அதை ஒதுக்கிவிட்டு கணக்கைப் போடு, பரிசோதனை செய் என்பதை எழுதாக் கோட்பாடாக விஞ்ஞானிகள் பின்பற்றுகிறார்கள். அந்தச் சைதன்யம், ஆத்மா, உணர்வு என்ற மயமாகி நின்று உணரும் பயிற்சியைக் கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘அனைத்து அறிவும் அறிவோன் நான்; 

எல்லைகள் எதுவும் அற்றோன் நான்; 

அனைத்தையும் நியமிக்கும் ஈசன் நான்; 

அனைத்து ஆற்றலும் வாய்ந்தோன் நான்; 

ஆனந்தமாகி நிற்போன் நான்; 

உண்மையே ஆகி உணர் அறிவே வடிவானோன் நான்; 

என்றிவ்வாறு பிரம்மத்தைத் தொடர்ந்து சிந்திப்பாய்.’ 

(ஸார்வக்ஞோஹம் அநந்தோஹம் ஸர்வேச: ஸர்வசக்திமான் | 

ஆனந்த: ஸத்யபோதோஹம் இதி ப்ரஹ்மானுசிந்தனம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Friday, January 16, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 21,22,23

நயமான விதத்திலும், பயமான விதத்திலும் சொல்லித் தத்துவக் கருத்துகளை மக்களிடம் புரியவைத்தல் என்பது பெரியோர்கள் பலகாலமாகச் செய்யும் வழிதான். பக்தி நெறிகள், புராண வழிகள் எல்லாம் இந்த மாதிரி நயம், பயம் என்பதைப் பயன்படுத்தித்தான் பல சித்திரங்கள், கதைகள், நடந்த நிகழ்ச்சிகளைக் கூட்டிக் குறைத்துத் தகவமைத்தல் என்னும் முறையில் சொல்வதற்காக வந்தன. ஆனால் நடைமுறை என்னவோ தத்துவம் மக்களிடம் போய்ச் சேருவதற்குப் பதிலாக, கதைகளும், நயம் பயங்களும் பெரிதும் ஓங்கிவிட்டன. சரக்கை ஏற்றப் போனவர் சரக்கின் மூடி, கட்டுமானப் பெட்டி முதலியவைகளை அக்கறையாக ஏற்றி, சரக்கை மட்டும் ஏற்றாமல் விட்டது போல் ஆகிவிட்டது கதை. அல்லது கதைகளில் உள்பொதிந்த தத்துவத்தைப் பிரித்து வாங்காமல் மக்கள் கதைகளிலேயே சௌக்கியம் என்று இருந்துவிட்டனர் எனலாம். 

எனவே ஸ்ரீஆதிசங்கரரும் நயம், பயம் என்னும் விதத்தில் சொன்னாலும் மிகக் குறைந்த அளவே அதைப் பயன்படுத்துகிறார், தத்துவம் மறைக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று. இவரையாவது ஜயிக்க விடுவோமா அல்லது இவரையும் தோற்க்கடிப்போமா என்பது நம்மைப் பொறுத்து இருக்கிறது. 

முன்னரே சொல்லியிருந்தார் ஐந்து உடல்கள், பஞ்ச கோசங்கள் என்பது பற்றி. அந்த ஐந்து உடல்களைச் சற்று விரிவாகச் சொல்லி ஏன் அவை நாம் இல்லை என்று புரியவைக்கிறார். ஓர் உடலை வைத்துக் கொண்டே நாம் படுத்தும் பாடு அதிகம். ஐந்து உடலகள் இருக்கிறதாமே? சொல்லவே இல்லையே என்றுதான் முழிக்கிறோம். 

உணவால் ஆன பரு உடல், பிராண உடல், மனம் வடிவான உடல், புத்தி வடிவான உடல், ஆனந்தவடிவான உடல் என்று ஐந்து. இவற்றை அன்னமய சரீரம், பிராணமய சரீரம், மனோமய சரீரம், விஞ்ஞானமய சரீரம், ஆனந்தமய சரீரம் என்பார்கள். உடலில் இந்திரியங்கள் இருக்கின்றன. சில இந்திரியங்கள் வெளி உலகைப் பற்றிய தகவலை நமக்குத் தருகின்றன. சில இந்திரியங்கள் உலகில் நாம் செயல்புரிய உதவுகின்றன. கண், காது, மூக்கு, நாவு, தோல் இவை உலகை அறியப் பயன்படும் இந்திரியங்கள் என்பதால் ஞான இந்திரியங்கள் எனப்படுகின்றன. கை, கால், வாக்கு, குறி, குய்யம் என்பன செயல்பட உதவும் எனவே கர்ம இந்திரியங்கள். தொடு உணர்ச்சி என்னும் ஸ்பர்சம், கண்ணால் கிடைக்கும் காட்சி அல்லது ரூபம், காதால் கிட்டும் கேள்வி, நாவால் அடையும் சுவை அல்லது ரஸம், மூக்கால் முகரும் வாசனை இவையும் இருக்கின்றன. இவை எல்லாமே எந்த அடித்தளத்தில் எதைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன? 

ஐம்பூதங்கள் என்னும் மண் அல்லது ப்ருத்வீ, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், இந்த ஐந்துதான் உடலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இந்த ஐந்து பூதங்களின் தன்மைகளோ மண் அல்லது பூமியின் தன்மை கந்தம், காற்றின் தன்மை ஸ்பர்சம், நீரின் தன்மை ரஸம், நெருப்பின் தன்மை ரூபம், ஆகாயத்தின் தன்மை சபதம். 

இப்பொழுது ஐந்து ஐந்தாகச் சொன்ன இவற்றைக் கொண்டுதான் ஐந்துவித உடல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றோடு மேலும் ஒரு ஐந்து ஆற்றல்கள் அல்லது பிராணன்கள் உண்டு. பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் என்பன ஐந்து பிராணன்கள். மேல்நோக்கிய ஆற்றல் பிராணன், கீழ்நோக்கிய ஆற்றல் அபானன், உள்ளே பரந்து விரிந்து இயக்கும் ஆற்றல் வியானன், புசிப்பதில் உணவை கழுத்திலிருந்து வயிற்றுக்குச் செலுத்தும் ஆற்றல் உதானன், உண்டு செரித்த உணவை உடல் திசுக்களுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல் சமானன் என்றும் சொல்லலாம். இந்த ஐந்தில் உள்ளடக்கமான துணை ஆற்றல்களும் உண்டு. அவை நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பன. விக்கல், கண் இமைத்து விழித்தல், தும்மல், கொட்டாவி விடுதல், உடலைப் படுக்கச் செய்தல் ஆகியவை முறையே இவற்றின் தொழில்கள். 

இவை அந்தக் காலத்து ஃபிஸியாலஜி, அநாடமிக் கருத்துகள். நாம் இன்றைய விஞ்ஞான ரீதியான உடலியல் கூறுகளை நினைத்துப் பார்க்கலாம். விஷயம் என்னவென்றால் ஒரு டாக்டர் இவற்றைக் குறித்து நம் உடலில் இருப்பன என்று விவரித்தால் நாமும் அவரோடு சேர்ந்து பார்வையாளராக இவற்றைப் பார்க்கவும் படிக்கவும் செய்கிறோம். நமக்குப் புறம் ஆகவும், அதாவது நாம் அல்லாதவற்றில் புறம் வைத்து நம்மால் பார்த்துப் படித்து உணரப் படும் விஷயங்களாகத்தான் நம் உடலோ, மனமோ இருக்கிறது. வயிற்றில் உபாதை என் வயிற்றில் உபாதை என்று அறிகிறோம். தலையில் வலி என்றால் என் தலையில் வலி என்று உணர்கிறோம். நடக்கின்ற வலிகள் எல்லாவற்றையும் நம்முடைய உடல் உறுப்புகள் ஒன்றிற்கு நேரும் ஒன்றாக அயல்வைத்து எண்ணும் நாம், ஏதாவது இன்பம் என்றால் நமக்கே நேர்ந்தது போல் ஒட்டிவைத்து உணர்கிறோம் என்றாலும் நமக்குப் புறம் என்பதும் நம் அனுபவத்தில் தெரிகிறது. இல்லாவிட்டால் இப்பொழுது அந்த இனிப்பு வேண்டாம் உடலுக்கு நல்லதல்ல என்று நம்மால் கொள்ளவோ விடவோ தேர்ந்தெடுக்க முடியாமல் போகும். 

ஆக உடல் என்றால் அதற்குள் இவ்வளவு இருக்கின்றன. இது ஏதாவது ஒன்றுதான் நாம் என்று ஆகியிருந்தால் இத்தனையையும் தொகுத்துக் கூட்டி வகை பிரித்துப் படிக்க முடியுமா? நாம் நம் உடலை இவ்வளவு தள்ளி வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதே நாம் இந்த உடல் அன்று என்பதைக் காட்டவில்லையா? இதை நமக்கு உணர்த்தத்தான் ஸ்ரீஆதிசங்கரர் உடலின் தத்துவங்களைப் பற்றிய கருத்துகளை நமக்குக் கூறுகிறார். 

மேலும் உடலையே ஸ்தூல உடல், புற உடல் என்றும், சூக்ஷ்ம உடல், நுண் உடல் என்றும் வகைபடுத்திப் பார்க்கவும் முடியும். ஐந்து கோசங்களை இந்தவிதமான ஸ்தூல சூக்ஷ்ம உடல்கள் என்று இருவகையில் பிரித்துப் பார்க்கவும் முடியும். மேலும் மனம் என்பதின் உட்புரிவுகளாக நான்கு உண்டு. மனம். சித்தம், புத்தி, அகங்காரம். ஐயம், வாசனைகள், நிச்சயம், அபிமானம் என்பன இந்த நான்கின் செயல்கள்.

அன்னத்திலிருந்து ரத்தம், தசை, எலும்பு, தோல் என்பன உண்டாகின்றன. இவை சேர்ந்து அன்னமய கோசம் எனப்படுகின்றன. கை, கால், வாக்கு, குறி, குய்யம் என்னும் கர்ம இந்திரியங்கள் ஐந்தும், பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்னும் பிராணன்கள் ஐந்தும் சேர்ந்து பிராணமய கோசம் ஆகும். கண், காது, மூக்கு, நாவு, தோல் என்னும் ஐந்து ஞான இந்திரியங்களும், மனமும் சேர்ந்து மனோமய கோசம் ஆகும். இந்த ஞான இந்திரியங்களுடன் புத்தி சேர்ந்து அது விஞ்ஞானமய கோசம் ஆகும். 

அன்னமய கோசம் என்பதுதான் ஸ்தூல உடல் அல்லது ஸ்தூல சரீரம். பிராணமய உடல், மனோமய உடல், விஞ்ஞானமய உடல் இந்த மூன்றும் சேர்ந்து சூக்ஷ்ம சரீரம் ஆகும். இந்த ஸ்தூல, சூக்ஷ்ம ஆகிய இரண்டு உடல்களிலும் பஞ்சபூதங்களின் ஸ்தூல, சூக்ஷ்ம அம்சங்கள் கலந்திருக்கின்றன. 

ஐந்து கோசங்களில் நான்கு இப்படி வகைபடுவதைப் பார்த்தோம். ஐந்தாவதான ஆனந்தமய கோசம் என்பது அவித்தை ஆகும். அதுவே காரண சரீரம் ஆகும். ஆக ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள் என்று மூன்றாகப் பாப்பது ஒரு வகைபாடு. ஐந்துகோசங்கள் என்று பார்ப்பது ஒரு வகைபாடு. ஐந்து கோசங்களை மூன்று சரீரங்கள் கணக்கிலே இட்டுப் பார்ப்பதையும் பார்த்தோம். 

இவை இத்தனையும் கச்சிதமாக இருந்தாலும் எந்த நுகர்ச்சியும், உணர்ச்சியும், கருத்தும், காட்சியும் நமக்கு உண்டாகாது. இவை இத்தனைக்கும் உள்ளே அடிப்படையாகவும் இவை எல்லாவற்றையும் சாட்சியாக இருந்து பார்க்கிற சைதன்யம் ஆகிய நான் என்னும் ஆத்மா இல்லையேல் இந்த உலகமே நமக்கு இல்லை. இந்த ஆத்மாவே நாம். இதை யாரும் புறத்தில் இவ்வண்ணம் என்று காட்டி இப்படி இருக்கிறது என்று விளக்க முடியாது. ஆத்மாவாகிய நாம் நமக்கே உள் அனுபவமாக நிகழும் சாக்ஷி. ஆத்மாவாகிய நாம் இருக்கப் போய்தான் இத்தனையும் நமக்கு அர்த்தம் ஆகின்றன. நாம் இல்லையேல், ஆத்மா இல்லையேல், இந்தப் பெரும் கட்டுமானம் அனைத்தும், சுருக்கமாக ஒற்றை வார்த்தையில் - ‘இல்லை’ -. 

இதைத்தான் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர் : 

‘நான் உடலன்று, பிராணன்று, இந்திரியங்கள் அவை அன்று 

நான் மனம் அன்று புத்தியன்று சித்தமன்று அகங்காரம் அதுவும் அன்று 

நான் பூமியன்று, நீரன்று நெருப்பன்று காற்றுமன்று 

நான் ஆகாயமன்று சப்தம் அன்று ஸ்பர்சமன்று ரஸமன்று 

நான் கந்தம் அன்று ரூபம் அன்று மாயை அன்று சுழலும் சம்சாரம் அன்று 

என்றென்றும் சாக்ஷி ஸ்வரூபமாக நின்ற சிவம் மட்டுமே நான்’ 

(நாஹம் தேஹோ ந ச ப்ராணோ நேந்த்ரியாணி ததைவ ச | 

ந மனோSஹம் ந புத்திஸ்ச நைவ சித்தமஹங்க்ருதி: || 

நாஹம் ப்ருத்வீ  ந ஸலிலம் ந ச வஹ்நிஸ்ததாSநில: | 

ந சாகாசோ ந சப்தஸ்ச ந ச ஸ்பர்சஸ்ததா ரஸ: || 

நாஹம் கந்தோ ந ரூபம் ச ந மாயாSஹம் ந ஸம்ஸ்ருதி: | 

ஸதா சாக்ஷிஸ்வரூபத்வாத் சிவ ஏவாஸ்மி கேவல: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, January 15, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 20

ஒரு தந்தை தம் மக்களை சொந்த வயலில் உழைத்து நல்ல விளைச்சல் கண்டு வாழ்வு சிறக்க வழிதேட வேண்டும் என்று யோசித்தார். என்ன சொல்லியும் மக்கள் உழைப்புக்கு இணங்கவில்லை. ஏதாவது மாயமந்திரம், குறுக்கு வழி இவற்றில் பொருள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அந்தத் தந்தை ஓர் உபாயம் செய்தார். வயலில் ஏதோ தெய்வம் தந்த பெரும் செல்வம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை அனைவரும் ஒற்றுமையாகக் கூடி நின்று சுத்தமாகப் பூஜை வழிபாடு என்று செய்து விடாமல் தோண்டினால் அந்தத் தெய்வம் கண்ணில் காட்டும் என்று தம் மக்களை நம்பச் செய்தார். 

பிறகு அவருடைய மக்கள் ஒற்றுமையாக இணைந்து பூஜை வழிபாடு என்று வயலைத் தோண்டத் தொடங்கினர். அதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஊர்மக்கள் ஏன் தோண்டுகிறார்கள் என்று ஆராயத் தொடங்கினால் கிடைக்கும் செல்வம் அனைவருக்கும் தெரிந்து போய்த் தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே செல்வத்துக்காகத் தோண்டும் ஓரிடத்தைக் குறியிட்டுவிட்டு, மற்ற இடங்களில் மும்முரமாக உழுது, பயிரிட்டுத் தண்ணீர் பாய்ச்சி விளைச்சலுக்கு உழைப்பது போல் முயன்று வந்தனர். நாள் ஆக ஆக நல்ல விளைச்சல். விற்று வந்த செல்வம் அமோகமாகச் சேரத் தொடங்கியது. ஒற்றுமையாகவும் இருந்ததனால் அனைவரது வாழ்வும் சீரும் சிறப்புமாக ஆகியது. நெடு நாள் கழித்து அவர்களுக்குள் தெய்வம் தந்த செல்வத்தைப் பற்றிய ஆத்திரமும் அடங்கிப் போய் மனநிலைகளும் சீரடைந்த காரணத்தால் யோசித்துப் பார்த்தனர். தங்களுடைய தந்தை செய்த உபாயத்தைப் புரிந்துகொண்டு நன்றிக் கண்ணீர் பெருக்கினர். 

அதைப் போல் ஸ்ரீஆதிசங்கரரும் எப்படியாவது நம்மை நம் உண்மை இயல்பான ஆத்ம சொரூபத்தை உணரவைக்க உபாயம் செய்கிறார். சொந்த வயலில் தம் மக்களை உழைக்க வைக்க உபாயம் செய்த தந்தையின் மனநிலையை நாம் புரிந்துகொண்டால் இந்தச் சுலோகமும் நமக்கு நன்கு புரியும். எது உண்மையான அஷ்டமா சித்தி என்பதும் புரியும். ஆத்ம ஞானத்தை இழந்து இருக்கும் நிலையை விட ஒரு பாபமும் கிடையாது என்பதும் புரியும். 

‘ஒரு மாதகாலம் இவ்வண்ணம் ஆத்மத் தியானம் அப்யாஸம் செய்தால் 

பெரும் பெரும் பாபங்களிலிருந்தும் விடுதலை அடைவார். 

ஒரு வருஷம் தொடர்ந்து இவ்வாறு அப்யாஸம் செய்தால் 

அஷ்டமா சித்திகளும் பெறுவார்; 

ஆத்ம சிந்தனைக்கே உண்மையாக முயல்வோர் 

வாழ்வு முழுவதும் இதே அப்யாஸம் செய்தால் 

ஜீவன் முக்தராய் ஆவார்.’ 

(த்யாநயோகேந மாஸைகாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹ்யதி | 

ஸம்வத்ஸரம் ஸதாSப்யாஸாத் ஸித்யஷ்டகம் அவாப்னுயாத் | 

யாவஜ்ஜீவம் ஸதாSப்யாஸாத் ஜீவன்முக்தோ பவேத்யதி: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, January 14, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 18,19

நாமோ தோன்றிச் சிலநாள் இருந்து மறையும் ஒரு மனித ஜீவன். நம்மைப் பார்த்து ஒருவர் நீ உண்மையில் உலகத் தோற்றத்தையெல்லாம் கடந்த என்றும் நிலைத்த, எங்கும் பரந்து அறிவுருவான பிரம்மமே ஆக இருக்கிறாய்! அவ்வாறே மனனம், சிந்திப்பாயாக என்று சொன்னால் அது துணிச்சலான வார்த்தைதானே? அதை எப்படிக் கருணையின் உச்சம் என்று சொல்ல முடியும்? அப்படிப் பார்த்தால் யாரைப் பற்றியும் யாரும் வாய்க்கு வந்தபடியெல்லாம் புகழ்ந்துவிட்டு அதைக் கருணை, தயை என்று சொல்லலாமே? என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால் சங்கரருக்கு நம்மை இப்படியெல்லாம் புகழ்வதற்கு ஒரு காரணமும் இல்லை. அவர் சொல்ல வருவது அருளியல் வரலாற்றிலேயே அதுவரை யாரும் சொல்லத் துணியாத மிகவும் ரகசியமான ஒன்று. 

பகவான் புத்தர் கூட மனிதரைப் பார்த்து ஆத்மா என்றெல்லாம் எதுவும் இல்லை. எனவே பார்க்கின்ற ஆள் என்பவர் ஒரு பரஸ்பரச் சார்புத் தோற்றமே; அடிப்படையான சத்யம் என்று ஆத்மா எதுவும் கிடையாது. அதைப் போல் வெளியில் பார்க்கப்படும் உலகில் மாற்றங்களுக்கிடையில் மாறாத அடிப்படைப் பொருள் என்று ஸத்யம் எதுவும் இல்லை. பார்க்கும்  முனையிலும் எதுவும் இல்லை. பார்க்கப்படும் முனையிலும் எதுவும் இல்லை. இருப்பதாக நடைமுறையில் வியாவகார நிலையில் தோன்றுவதெல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதாகத் தோன்றும் தோற்றம் மட்டுமே. இந்த உண்மையை நன்கு உணர்ந்துவிட்டால் ‘பட்’ என்று தீபத்தின் பிழம்பு அணைந்தால் எல்லாம் ஒன்றும் இல்லாது போய்விடுவதைப் போல முடிவு அதுதான் நிர்வாணம் என்று சொல்லிப் போனார். 

அதாவது அடிப்படையான சத்யம் என்று எதுவும் உள்ளேயும் வெளியேயும் இல்லாத நிலையைச் சொன்ன அவருடைய உபதேசத்தைத்தான் மாயாவாதம் என்று சொல்ல வேண்டும். மாறாத சத்யமான பிரம்மமே இருக்கிறது. ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கிறது. இந்த உலகம் இருப்பது போன்ற தோற்றம் மித்யை. என்று சொன்ன ஸ்ரீஆதிசங்கரர் ஒருநாளும் மாயாவாதி என்று எப்படிச் சொல்ல முடியும்? சத்யைக வாதி (சத்யம் ஒன்றே உள்ளது) அல்லது சத்யைவ வாதி (சத்யம் ஒன்றே இருப்பது) என்றெல்லாம் சொல்லப்பட வேண்டியவர் சங்கரர். அவர் நம்மைப் பார்த்துச் சொன்னது ஏன் கருணையின் வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள ஒரு விஷயத்தை நாம் முதலில் தெரிந்துகொள்வோம். 

ஒருவர். மனநிலை பாதிக்கப்பட்டுத் தம்மையே ஒரு குட்டி எலியாகக் கருதத் தொடங்கிவிட்டார். அவருடைய வீட்டில் நடுக்கூடத்தில் கூட வரமாட்டார். ஓர் அறையில் இரண்டு மூன்று சேர்களுக்குப் பின்னர் ஒரு ஒண்டும் பொந்து போன்று அமைத்து அங்குதான் புகுந்துகொள்வார். சத்தமும் எலியைப் போலவே போடுவார். அவரிடம் போய் நீங்கள் மனிதர் என்றால் போதும் கடுமையாக எதிர்ப்பார். பார்த்தார்கள். பலரிடமும் அதற்குப் பரிகாரம் பெறப் பார்த்தார்கள். சிலர் வந்தனர். அவருக்கு இருந்த இடத்தைச் சற்று அகலப்படுத்தி, அங்கேயே சௌகரியம் சில செய்துகொடுத்து, அவருடைய எண்ணத்தைத் திடீரென்று மாற்றக் கூடாது. பல வருஷங்கள் அப்படியே கருதி வந்திருக்கிறார். படிப்படியாகத்தான் அவர் வழியிலேயே போய், அதை வெளிப்படையாக மறுக்காமல் சிறிது சிறிதாகக் கொண்டு வர முடியும் என்று ஒருவர் சொன்னார். இன்னொருவர் சொன்னார், ‘அப்படி இல்லை. நாம் யார் என்று மனிதர் நாம்தான் கற்பனை செய்து கொள்கிறோம். அவருக்கு அது பிடித்திருக்கிறது என்றால் அவருடைய உரிமை அது. அதில் ஏன் தலையிட வேண்டும்? இதைப் போல் கருதுகிறவர்களை ஒன்று கூட்டி ‘எலியார் சங்கம்’ என்பது போல் அமைத்துக் கொடுத்தால், இவருக்குத் தான் மட்டும் தனிமைப் படுத்தப் பட்டோம் என்ற எண்ணம் ஒழிந்து இயல்பான நிலை வரும். அப்படி இயல்பாகவே அவர் தாம் ஓர் எலி என்று கருதி வாழ்ந்து போனாலே போதும். அவருக்குத் திருப்தியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று ஆலோசனை சொன்னார். 

இப்படிப் பல யோசனைகள். ஒரு மன இயல் நிபுணர் வந்தார். நபரிடம் பொறுமையாகப் பல முறை பேசி அவருக்கு விஷயங்களைப் புரிய வைத்து, மனித உயிர் என்பது என்ன, ஏன் அவர் தம்மை ஒரு மனிதர் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் விளக்கி, அவரையும் உணரச் செய்து, அவரை மீட்டுத் தாம் ஒரு மனிதர், இன்னார் என்று உணரக் கூடிய நிலைக்குக் கொண்டு வந்தார். இதில் அந்த நபரிடம் கருணையோடு நடந்து கொண்டவர் யார்? ‘எலியார் சங்கம்’ அமைத்து அதில் சேர்க்கலாம் என்று சொன்னவரைப் போன்ற மற்றவர்களா அல்லது நீ உண்மையில் இன்னவாக இருக்கிறாய் என்று உணர்த்தி உணர வைத்த மன இயல் நிபுணரா? அந்த நபரே உணர்ந்த பின்னர் ‘ஆஹா நாம் எலி நிலையிலிருந்து உயர்ந்து ஒரு மனித ஜீவனாக ஆகிவிட்டேன்’ என்றா நினைப்பார்? இல்லையே. இதுதான் தம் இயல்பு நிலை. இப்படித்தான் தாம் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறோம். ஏனோ பின்னர்த் தாம் முன்னர் இடைப்பட்ட காலத்தில் அப்படி நினைத்துப் பிரமித்தோம்? என்றுதானே சிரிப்பார். அவரை அந்த இயல்பான சகஜ  நிலைக்குக் கொண்டு வருவதுதானே உண்மையான கருணை? 

அந்த மன இயல் நிபுணரின் வேலையைத்தான் ஸ்ரீசங்கரர் நமக்குச் செய்கிறார். ‘இல்லை. நான் இப்படித்தான் அன்றாடம் இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறேன். அதை டிஸ்டர்பு செய்துகொள்ள நான் விரும்பவில்லை. மற்றவர்கள் பரவாயில்லை. என் மனத்திற்கு ஷாக் எதுவும் தராமல் நான் சொல்வதைப் பெரிதும் மறுக்காமல் இணக்கமாகப் பேசுகிறார்கள்’ என்று முரண்டு பிடித்து அடம் பிடிக்காமல் இருந்தால் அதுவன்றோ நம் நல்ல காலம்? 

இருந்தாலும் திடீரென்று எப்படி இப்படி நினைக்க முடியும்? ஆரம்ப நிலையில் ஒரு படிப்படி என்று வேண்டாமா? அதற்கும் தமக்கே உரிய முறையில் வழியைக் காட்டுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

பிரம்மமாகவே நான் இருக்கிறேன். மாறி மாறித் தோற்றச் சுழலாகச் சுழலும் ஸம்ஸாரி அன்று நான். (ஸம்ஸாரம் என்றால் தோற்ற மயக்குகளால் ஆன சுழல், அதனோடு ஐக்கியப்படுத்திக் கருதிக்கொள்ளும் நிலை என்று புரிந்ந்துகொள்க.) முக்தனாகவே, தோற்றங்களில் தோய்ந்து என்னை மறந்த பந்தமுற்றவனாக நான் இல்லை. என்று எப்போதும் தியானம் செய்க. அவ்வாறு தியானம் செய்ய ஆரம்பத்தில் முடியவில்லையெனில் இந்த வாக்கியங்களை, இந்தச் சுலோகத்தை எப்பொழுதும் மனத்தில் சொல்லியவண்ணம் இருப்பாயாக. அப்படிச் சொன்னால் என்ன ஆகும்? எதை மீண்டும் மீண்டும் அப்யாசம் செய்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் அன்றோ? குளவியால் கொட்டப்பட்டுக் கூட்டில் வைக்கப்படும் புழு ஒன்று அதையே நினைத்திருந்து அந்தக் குளவி போலவே ஆகிவிடுகிறது என்று கேட்டிருக்கிறாய்தானே? எனவே ஆரம்பத்தில் முடியவில்லை என்பதால், சௌகரியமாக இருக்கும் நொய்ந்த, அன்னியமான நிலையைக் கற்பனை செய்துகொண்டு வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக உன் இயல்பான உண்மைநிலையையே மீண்டும் மீண்டும் மனத்தில் சந்தேகத்தை ஒழித்துத் திடமாக அப்யாசம் செய். 

இதைக் கருணை என்னாமல் வேறு என்னவென்று சொல்வது? 

சுவாமி விவேகானந்தரின் இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை: 

“Sometimes I agree that there is some good in the dualistic method: it helps many who are weak. If a man wants you to show him the polar star, you first point out to him a bright star near it, then a less bright star, then a dim star, and then the polar star. This process makes it easy for him to see it. All the
various practices and trainings, Bibles and Gods, are but the rudiments of religion, the kindergartens of religion. But then I think of the other side. How long will the world have to wait to reach the truth if it follows this slow, gradual process? How long? And where is the surety that it will ever succeed to any appreciable degree? It has not so far. After all, gradual or not gradual, easy or not easy to the weak, Is not the dualistic method based on falsehood? Are not all the prevalent religious practices often weakening and therefore wrong? They are based on a wrong idea, a wrong view of man. Would two wrong make one right? Would the lie become truth? Would darkness become light?" 

(Is Vedanta the Future Religion? Full lecture is here -- https://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_8/lectures_and_discourses/is_vedanta_the_future.htm ) 

'பிரம்மமே நான் ஸம்ஸாரி அன்று; 

முக்தனாகவே இருக்கின்றேன் என்று எப்பொழுதும் தியானம் செய்; 

தியானம் செய்ய இயலும்வரை 

இந்த வாக்கியத்தை எப்பொழுதும் அப்யாஸம் செய் 

அப்யாஸத்தால் எதைப் பாவிக்கிறோமோ 

அதுவாகவே ஆகிறோம் குளவியின் புழுவைப் போல்; 

அதில் சந்தேகம் நீக்கித் திடமான முடிவுடன் 

அப்யாஸம் செய்வாய்’ 

(ப்ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரீ முக்தோஹம் இதி பாவயேத் | 

அசக்நுவந் பாவயிதும் வாக்யமேதத் ஸதாப்யஸேத் || 

யதப்யாஸேந தத்பாவோ பவேத் ப்ரமரகீடவத் | 

அத்ராபஹாய ஸந்தேஹம் அப்யஸேத் க்ருதநிச்சய: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, January 13, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 17

குழந்தை ஒன்று திண்ணைக் குறட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தெருவை ஒட்டிய அடைப்புக் கதவில் இரும்புக் கிராதிகளை மறைத்து ஒரு திரை தொங்குகிறது. அதில் மூன்று ஓட்டைகள். காலையில் கிழக்குப் பார்த்த வீட்டில் சூரிய உதயம் அந்த மூன்று ஓட்டைகள் வழியே திண்ணையின் இப்பக்கச் சுவரில் விழுகிறது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்குத் திடீரென்று கவனம் இந்த மூன்று ஒளிவட்டங்கள் மேல் விழுந்தது. அதற்கு என்ன ஆச்சரியம் என்றால் அந்த மூன்று ஓட்டைகள் வழியே தெரிவதும் அதே சூரியன்தானா? ‘இது ஒரு சூரியன், இது ஒரு சூரியன், இது சூரியன்’ என்று எண்ணித் தந்தையிடம் ‘அப்பா! மொத்தம் மூன்று சூரியன் இருக்குப்பா.’ என்றது. தந்தை கூறினார்: ‘இல்லை குழந்தாய். ஒரே சூரியன் தான் மூன்று ஓட்டைகளிலும் தெரிகிறது’ என்றார். அதற்கு வியப்பு தாங்கவில்லை. ஒவ்வொரு ஓட்டையின் வழியேயும் பார்த்து ‘ஆம் அதே சூரியன் தான்’ என்று வியந்தது. அப்படித்தான் நமக்குச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

குழந்தைகள் நிலையில் இருக்கும் நாம் என்ன நினைக்கிறோம்? ‘பழைய காலத்தில் பந்தத்தில், இந்த ஸம்ஸாரத்தில் கட்டுண்டேன்’ இப்பொழுது அரும்பாடு பட்டு முயல்கிறேன். கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் அருள் புரிவார். எதிர்காலத்தில் நான் முக்தனாக ஆவேன்’ இதுதான் உலகில் அனைத்து ஆத்ம சாதகர்களும் சொல்லும் வார்த்தை. இந்தக் கருத்து மக்கள் சமுதாயத்தில் வலுவாக இருப்பதால்தான் மதங்கள், மடாலயங்கள், உபதேசம், குருமார் பீடங்கள், சீடர்கள் என்று பெரும் நிறுவனங்கள் நடைபெறுகின்றன. ‘இன்ன இன்ன செய்யுங்கள். கடவுள் அருள் அப்பொழுதுதான் கிடைக்கும்’ என்று வழிமுறை, குறிப்புகள் ஆணைகள் என்று பல நூலகங்கள் இருக்கின்றன. நெடுநாள் கழித்தும் ஒன்றும் முன்னேற்றம் இல்லையே, அருள் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கேட்கும் சீடர்களுக்குத் தரப்படும் பதில், ‘உங்களுடைய கடந்தகால கர்மம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது. எவ்வளவு ஜன்மத்து மூட்டைகளோ? அவ்வளவு லேசில் விடுமா? அசராமல் பொறுமையாகத் தொடர்ந்து செய்யுங்கள்’. பல தலைமுறைகள் தாண்டியும் மனிதர்கள்தாம் வேறு வேறு. வார்த்தை அதே சொல்லாடல்தான். 

அந்த எதிர்பார்ப்புடன் தான் நாம் ஸ்ரீஆதிசங்கரரிடமும் கேட்கிறோம். ஆதியில் பந்தம், நடுவில் அவஸ்தை. இனியாவது விடியுமா? அவர் சொல்லும் பதில்தான் நமக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. அப்பா! நீ உண்மையில் ஆத்மாவாக, பிரம்மமாக இருக்கிறாய். கடந்தகாலத்தும் நீ பந்தத்தில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டவன் இல்லை. நடுவில் காலத்தும் இப்பொழுதும் பந்தப்பட்டவன் அன்று. இனிவரும்காலத்தும் ஒரு போதும் பந்தத்தில் விழப்போவதும் இல்லை. முக்காலத்தும், எப்பொழுதும் நீ முக்தனே ஆக இருக்கிறாய். அப்படியே நீ பிரமத்தைக் குறித்துச் சிந்தனை செய்வாயாக. நான் எக்காலத்தும், கடந்த காலத்தும், இப்பொழுதும், இனியும் முக்தனாகவே இருக்கிறேன் என்று. ஆத்மாவாகிய நீ உன் இயல்பிலேயே எப்பொழுதும் சிறிதும் களங்கம் அற்றவனாக, நிர்மலனாக இருக்கிறாய். அகங்காரம் என்ற மலம் சிறிதும் உன்னைத் தீண்டுவதில்லை. உபாதிகள் உன்னை ஒருகாலும் சிறை பிடிப்பதில்லை. அவித்யை என்பதன் லவலேசமும் ஒட்டாத சுத்தமான உணர்வாக, சித்தாகவே நீ இருக்கிறாய். அவ்வண்ணமே இருக்கும் அந்தப் பரமாத்மாவே நான் என்று எப்பொழுதும் ஆத்ம சிந்தனை செய்வாயாக!. 

என்ன துணிச்சலான வார்த்தைகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் என்ன கருணைமயமான வார்த்தைகள் என்பது நமக்குப் போகப் போகத்தான் புரியும். 

‘ஆதியிலும், நடுவிலும், முடிவிலும் நான் முக்தனே. 

ஒருபோதும் பந்தப்பட்டவன் அன்று. 

இயல்பிலேயே நிர்மலனும், சுத்தனும் ஆன 

அந்தப் பரமாத்மாவே நான் என்றும். 

ஐயமில்லை’ 

(ஆதிமத்யாந்த முக்தோஹம் ந பத்தோஹம் கதாசந | 

ஸ்வபாவ நிர்மல: சுத்த: ஸ ஏவாஹம் ந ஸம்சய: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, January 12, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 16

ஒருவர் மற்றவர்களை நியமிக்கிறார். தந்தை குழந்தைகளை நியமிக்கிறார். ராஜா மக்களை நியமிக்கிறார். ஆசிரியர் மாணவர்களை நியமிக்கிறார். ஒரு கம்பெனியின் முதலாளி தொழிலாளிகளை நியமிக்கிறார். நியமித்தல் என்றால் என்ன? ஓர் ஒழுங்கையும், நெறிமுறையையும் நடைமுறைப்படுத்தி, நல்ல நிலைமைக்குத் தூண்டி நடத்துதல். வழிமாறிப் போகும் போது தடுத்து நல்வழியில் செலுத்துவது. 

யார் நல்ல நியமன சாமர்த்தியம் உடையவர்? யார் தாம் இருப்பதாலேயே தம்மைச் சுற்றிலும் ஓர் ஒழுங்கில் நடைபெறுமாறு செய்கிறாரோ அவரே மிகச் சாமர்த்தியமான நியமனம் செய்பவர். அப்படிப் பார்த்தால் பிறந்த குழந்தை ஒன்றுதான் மிகத் திறமையான நியமனம் செய்வது. அந்தக் குழந்தைக்குத் தேவையானதைத் தாய் செய்கிறாள். தந்தை கூடவே பார்த்துக் கொள்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் அந்தக் குழந்தை மீது கண் வைத்தபடியே இருக்கின்றனர். அது சிறிது சிணுங்கினாலும் மற்ற காரியங்கள் நின்று அது என்ன என்று பார்க்கப் படுகிறது. இத்தனைக்கும் அந்தக் குழந்தை இவ்வளவு பேர்களைத் தான் கட்டி ஆள்கிறோம் என்றே தனக்குத் தெரியாது. மேலும் அவ்வாறு அந்தக் குழந்தையை சூழ்நிலையின் யஜமானராக ஏற்ற அனைவரும் அந்த யஜமானரைக் கண்டு சலித்துக் கொள்வதில்லை. அவர் ஆள்வதைக் குறித்துக் கோபம் அடைவதில்லை. அந்தக் குழந்தை தங்களை ஆட்டிப் படைப்பதில் மிகுந்த ஆனந்தம் அடைகின்றனர். அப்படி ஆட்டி படைக்க ஒருவர் வேண்டும் என்றுதானே கோயில் கோயிலாக ஆண்டவனை வரமாக வேண்டி வந்தனர்? உச்சபட்சமாக நியமிப்பவர் எவரோ அவரே ஈசன். ஈசத்தன்மை முற்றிலும் உடையவரே ஈச்வரன். நம் நடைமுறை வாழ்க்கையில் ஈசத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தும் உதாரணம் ஒரு குழந்தை. 

அந்தக் குழந்தையும் புறத்தில் நின்றுதான் ஆளமுடியும். நம் அகவாழ்க்கையை ஆள்வது என்பது முடியாது. நம்முடைய புறச்செய்கை, அகநிகழ்வுகள், உணர்ச்சிகள், சிந்தனைகள், நனவில், கனவில், ஆழ்துயிலில் என்று எப்பொழுதும், எல்லாவிதத்திலும் நம்மை நியமித்து, செலுத்தி, ஆண்டு இருக்கும் ஒருவர் உண்டு என்றால் அதுவே நமக்குள் இருக்கும் நம்முடைய ஆத்மா. இத்தனைக்கும் அந்த ஆத்மா ஒரு செயலும் செய்வதில்லை. ஒரு போகத்தையும் அது துய்ப்பதில்லை. நம்முள் உடல் மனம் சொல் உணர்ச்சி என்று எதனோடும் ஒட்டிக்கொள்ளாமல் தான் தானாகவே இருக்கிறது. ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதும் கணம்தோறும் அந்த ஆத்மாவிற்காகவே தான், அந்த ஆத்மாவினாலேதான் நடக்கிறது. பரம ஈசுவரன் என்றால் ஆத்மாவைத்தான் சொல்ல வேண்டும். அந்த ஆத்மா வேறுமனே இருப்பதாலேயே, அதனுடைய சாந்நித்யத்தின் மகிமையாலேயே அனைத்தும் நடைபெறுகின்றன. நம் அனுபவங்களே அதனால்தான் நமக்குக் கிடைக்கின்றன. நம் உலகம், அதனுடைய காட்சி என்று அனைத்தும் ஆத்மாவினால் அல்லவோ! 

அந்த ஆத்மாதான் நான் உண்மையில் என்றே ஒவ்வொருவரும் பிரம்மத்தைத் தம்முள் சிந்தனை செய்ய வேண்டும். பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்: 

‘நான் செய்பவன் அன்று; போகம் துய்ப்போன் அன்று; 

எதனோடும் தொடர்பு அற்றவன்; பரம ஈசுவரன்; 

எப்பொழுதும் என் சந்நிதியாலேயே இந்திரியங்கள் 

அனைத்தும் செயல்புரிந்து இயங்குகின்றன.’ 

(அகர்தா அஹம் அபோக்தா அஹம் அஸங்க: பரமேச்வர: | 

ஸதா மத்ஸந்நிதாநேந சேஷ்டதே ஸர்வம் இந்த்ரியம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, January 11, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 15

ஒருவர் முடிவே அற்ற வாழ்நாள் வேண்டும் என்று நினைத்தாராம். கடவுளை வேண்டினார். தீவிரமாகத் தவம் செய்யவும் கடவுள் அவருக்கு அவர் கேட்டபடியே வாழ்நாள் தந்தார். கேட்டது கிடைத்தது. கொண்டாடினார். மற்றவர்கள் வியந்தார்கள். அவருக்குத் தெரிந்தோரெல்லாம் மறைந்தார்கள். அடுத்து அவரைக் கேள்விப்பட்டோரெல்லாம் மறைந்தார்கள். அடுத்து அவர் வயது என்னவாக இருக்கும் என்று சந்தேகப் படுபவர்கள்தான் இருந்தார்கள். அடுத்து வந்தவர்கள் அவர் பொய் சொல்கிறவர் என்று கருதுவோராக ஆனார்கள். அவருக்கு அலுக்கத் தொடங்கியது. உலகமே புதியது. அந்நியமானது என்று அனுபவம் ஆகியது. ஆனால் அவர் எவ்வளவு விரும்பினாலும் வாழ்நாள் முடிவுக்கு வராது. கேட்டு வாங்கிய வரம் அப்படி. அவர் நிலைமை அப்படி. அதாவது தம் நிலைமை தமக்கு உகந்ததாக இல்லை என்றாலும் தாம் வேறு ஒரு மாற்றத்தைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை. 

இவ்வாறு மாற்றத்திற்கான வாய்ப்பு என்பதற்குப் பெயர்தான் விகல்பம் என்பது. ஆதிசங்கரர் பாடுகிறார். உணர்வு மயமாக, சித்கனமாக இருக்கும் பிரம்மம், ஆத்மா என்பது தன் இயல்பில் வேறு ஒன்றாக ஒருபோதும் மாறும் வாய்ப்பே இல்லாதது. நிர்விகல்பம் என்கிறார். சரி நீண்ட காலம் இருந்துவிட்டு ஒரு முடிவுக்கு வருமோ என்றால் இல்லை என்றும் அவ்வண்ணமே இருப்பது. நித்யம் என்கிறார். ஓர் இடத்தில், ஒரு காலத்தில் ஆக்கிரமித்து இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும் ஒரு பொருள் அன்று பிரம்மம். இடத்தை, காலத்தை ஆக்கிரமிக்கும் வடிவு எதுவும் அற்றது. நிராகாரம். ஆகாரம் என்றால் வடிவு. நிர் ஆகாரம் என்றால் வடிவற்றது. அதாவது இந்த இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் இல்லை. இந்தக் காலத்தில் இருக்கிறது. அந்தக் காலத்தில் இல்லை என்று அதைப் பற்றிச் சொல்ல முடியாது. எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் இருப்பது பிரம்மம் அதாவது ஆத்மா. 

பிரம்மம் அதாவது ஆத்மா என்று எழுதுவதைப் பார்த்து உங்களுக்குத் தோன்றலாம். என்னய்யா இது.. பிரம்மம் சரி. ஆத்மா என்றால் எவ்வளவோ ஜீவாத்மாக்கள் இருக்கின்றன. நீ பாட்டுக்கு சிங்குலரில் ஆத்மா என்கிறாய் என்று?. ஆம் அத்வைதத்தில் ஆத்மா என்றாலும் பிரம்மம் என்றாலும் ஒன்றுதான். ஒன்றேதான். பல ஜீவாத்மாக்கள் என்பதெல்லாம் உபாதிகளின் பேதத்தால் வேறு வேறான தோற்றம் மட்டுமே. 

சரி. நித்யமாய் இருக்கட்டும். நிர்விகல்பமாய் இருக்கட்டும். நிராகாரமாய் இருக்கட்டும். என்னதான் இருந்தாலும் மிகநீண்ட காலம் என்றால் Wear and Tear, குறைவு என்பது ஏற்படுமே? அதுதான் கிடையாது. ஒரு சிறிதும் குறையவே குறையாதது. வ்யயம் என்றால் குறைவு. பிரம்மமோ அவ்யயம். 

இதுவாக இல்லை. அதுவாக இல்லை என்றால் எதுவாக இருக்கிறது? அதைச் சொல்ல வேண்டாமா? அது இருப்பு வடிவாகவே இருக்கிறது. ஸத். It is Existence. அறிவு, உணர்வு மயமாக இருக்கிறது. சித். It is Consciousness. ஆனந்தமே முழுதுமாக இருக்கிறது. It is Ananda. ஸத் சித் ஆனந்தமாக இருக்கிறது. எது ?பிரம்மம் அதாவது ஆத்மா. 

சச்சிதானந்தமா? நாம் உடலாக இருக்கிறோம். நமக்கு மனம் இருக்கிறது. மூச்சு, பிராணன் போய்வரும் வரைதான் நாம். புத்தி என்பது நமக்குள் இருந்து முடிவெடுக்கிறது. சில சமயம் பரவச நிலையில் ஆனந்தமாக இருக்கிறோம். வெறுமனே இருப்பதே உன்னத மகிழ்வாக இருக்கிறது. அது எப்பொழுதாவதுதான். இவ்வளவுதான் நமது அனுபவம். ஆம். நாம் ஓர் உடலில் அல்ல. ஐந்து உடல்களுக்குள் இருக்கிறோம் என்கிறது தத்துவம். புற உடல் உணவால் ஆனது. அதனுள் பிராண மயமான உடல். அதனுள் மனோமயமான உடல். அதனுள் விஞ்ஞானமயமான உடல். அதனுள் ஆனந்தமயமான உடல். இவற்றுக்கு ஐந்து கோசங்கள் என்று பெயர். கோசம் என்றால் உறை என்று பொருள். பஞ்ச கோசங்கள் இவை. ஆத்மா ஆகிய நாம் பஞ்ச கோசங்களுக்கும் அதிகமாக இருக்கிறோம் என்கிறது தத்துவம். அதாவது இந்த ஐந்தும் உபாதிகள்தாம் இவை நாமாகத் தோற்றம் அளிக்கின்றன. ஆனால் நம்மை உள்ளே அடக்கிக் கட்டுப்படுத்திவிடுவதில்லை. இவற்றுக்கு அதிகம் ஆக இருப்பது ஆத்மா. 

‘நான் நித்யனாய் இருக்கிறேன்; நிர்விகல்பனாக இருக்கிறேன்; 

நிராகாரமாய் இருக்கிறேன்; அவ்யயனாக இருக்கிறேன்; 

சச்சிதானந்தமே உருக்கொண்டு இருக்கிறேன்; 

ஐந்துகோசங்களுக்கும் அதிகமாக இருக்கிறேன்.’ 

(நித்யோஹம் நிர்விகல்போஹம் நிராகாரோஹம் அவ்யய: | 

ஸச்சிதானந்த ரூபோஹம் பஞ்சகோசாதிகோSஸ்மி அஹம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, January 10, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 14

உபாதி என்ற கருத்தைக் கொஞ்சம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பால்கனியில் உட்கார்ந்திருக்கிறோம். நீல ஆகாயம் விரிந்து தெரிகிறது. ஆனால் இரும்புச் சன்னல் வழியாகப் பார்க்கும் போது சதுர ஆகாயம், பக்கத்தில் ஒரு சின்ன மலர் வடிவிற்கு ஓர் ஆகாயம், பக்கத்திலேயே ஒரு பறவை டிசைனில் ஓர் ஆகாயம் என்றும் நம்மால் பார்க்க முடிகிறது. உடனே நாம் யாரும் ஆகாயங்கள் பல இருக்கின்றன. ஓர் ஆகாயம் சதுரமானது. இன்னொரு ஆகாயம் வட்டமானது. இன்னொன்று பறவை போன்றது என்று நினைப்பதோ, வாதம் செய்வதோ இல்லை. இருப்பது ஓர் ஆகாயமேதான். அந்த ஆகாயம் இரும்பு ஜன்னல் என்ற உபாதியின் வழியே தெரியும் போது பலவாகத் தெரிகிறது. பேதம் உபாதிகளிலேயே அன்றி ஆகாயத்தில் அன்று. இதில் நமக்குக் குழப்பம் வருவதில்லை. இதைத்தான் பரம சத்யமான பிரம்ம விஷயத்தில் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். உபாதிகளின் பேதத்தால் பல பொருள்களாகக் காட்சியளிக்கிற அந்த ஒரே இருப்பு, ஸத் பொருள், பரம் பொருள் என்று கூறுகிறார். பொறுமையாகப் பலமுறை யோசித்தால் நமக்கு இது புரியவரும். உபாதிகளின் பன்மையால் இந்த உலகமாகக் காட்சியளிப்பது போல் அந்தப் பிரம்மம், பக்தி அனுபவங்களின் பன்மையால் பல தெய்வ வடிவுகள் தாங்கிக் காட்சியளிக்கிறது என்று சொல்கிறார். 

மிகப்பழைய காலத்திலேயே இந்தக் கருத்தை ரிக்வேத ரிஷிகள் நன்கு வலியுறுத்திச் சொல்கிறார்கள். ஆதி வேதக் கருத்தையே ஸ்ரீஆதிசங்கரர் அகலமும், ஆழமுமாக நன்கு நிறுவுகிறார்.

மிகப் பழமையானவை வேதங்கள். அதிலும் ரிக்வேதம் முக்கியமானதும், முந்தியதும் ஆகும். அதில் வரும் ஒரு ஸூக்தம் (திருமொழி) சொல்கிறது. 

“இந்திரன், மித்திரன், வருணன், அக்நி, திவ்யமான சிறகுடைய கருத்மான், அக்நி, யமன், மாதரிச்வான் எனக் கூறுவர். உள்ள்து ஒரே சத்யம். தெயவ தத்துவம் அறிந்தோர் அதைப் பலவிதமாய் விவரிப்பார்கள்” 

( இந்த்ரம் மித்ரம் வருணம் அக்நிம் ஆஹு: 

அதோ திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மாந் | 

 ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி 

அக்நிம் யமம் மாதரிச்வானம் ஆஹு: ||) 

(ரிக்வேதம், மண்டலம் 1, ஸூக்தம் 164, மந்திரம் 46) 

இதற்கு உரையெழுதும் ஸ்ரீசாயனர் விப்ரா என்பதற்கு ‘மேதாவிகள், தேவதா தத்வம் அறிந்தோர்’ என்று விளக்கம் தருகிறார். அதாவது Theologians. ஒன்றுதானே இருக்கும் பரம் பொருள் (ஸத் வஸ்து). அதில் பன்மையாகச் சொல்வது யாங்ஙனம்? என்று சாயனர் கேட்டுக் கொண்டே தம் உரையைத் தொடங்குகிறார். ‘கதம் ஏகஸ்ய நாநாத்வம் இதி உச்யதே’. 

ஒன்றையே பலவிதங்களில் அதன் பயன்கள் சூழ்நிலைகளைப் பொறுத்துப் பார்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக இரண்டு விஷயங்களை எடுக்கிறார் சாயனர். ஒன்று விண்ணில் ஒளிரும் சூரியன். மற்றொன்று மண்ணில் தழல்விடும் நெருப்பு. பரமாத்மா ஆகிய பிரம்மத்திற்குக் குறியீடுகளாக நாம் புரிந்துகொள்ளும் வகையில் நம் வாழ்வில் நிலைத்த உதாரணம் இவை. 

’ஸூர்யஸ்ய ப்ரஹ்மணோSநந்யத்வேந ஸர்வாத்ம்யம் உக்தம் பவதி’ 

‘ஜ்யோதிஷீ இதி மத்வாக்நேர் ஏவ ஸர்வாத்ம்ய ப்ரதிபாதக:’ 

கல்விக் கடலாக விளங்கும் ஸ்ரீஆதிசங்கரர் ஆதி வேதக் கருத்தை எவ்வண்ணம் அசைக்க முடியாமல் நிலைநாட்டுகிறார் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காக இவையெல்லாம் எழுதுகிறேன். அன்று ஸ்ரீஆதிசங்கரர் போட்ட அடிப்படைதான் பின்வந்த ஆசாரியர்கள் அனைவரும் பயன்பெற்றது சரித்திரம். இன்று நாம் நம் நாடு அனைத்து நெறிகளையும் மதித்துப் போற்றி நடக்கும் நாடு என்று அடையும் பெருமிதத்திற்கு முதல்கண் நன்றி ஆதிசங்கரருக்கே உரித்தானது. இந்த இடத்தில், சங்கரரைப் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தர் ‘சங்கரரின் இதயம் விசாலமில்லை’ என்பதுபோல் கூறிய கருத்து எனக்கு உடன்படாத கருத்தாகும் என்பதைச் சொல்லத் தோன்றுகிறது. உலகுக்கு நன்மை செய்தவர் என்று கணக்கெடுத்தால் நிச்சயம் அதில் முன்னணியில் இருப்பவர் சங்கரர். ’சங்கரம் லோகசங்கரம்’ என்று அவரைப் பற்றிய போற்றி உரை மிகவும் உண்மையானது. ரிஷிகளின் தத்துவப் பார்வையை என்றுமே நாம் இழக்க முடியாத அளவிற்கு நிறுவியவர் ஸ்ரீஆதிசங்கரர். 

மீண்டும் நாம் ஆகாயத்தைப் பற்றிச் சிந்திப்போம். ஏனெனில் ஆகாயம்தான் உணர்வுமயமான ஆத்மநிலையை நாம் புரிந்துகொள்ள நமக்கு வாய்த்த இயற்கையின் உதாரணம். காலையில் ஆகாயம் தெளிவாக ஒளிர்கிறது. இரவு கருமை பூசி, அங்கங்கே விண்மீன்கள் அந்த இருட்டை அதிகமாகக் காட்டியபடி இருக்கிறது அதே ஆகாயம். மேகங்கள் அலைந்தால் தெளிவில்லாமல் தெரிகிறது. மழை பொழியுமுன்னர்க் கார்மேகம் திரண்டு இருண்டு மின்னல் வெட்டுகிறது. இவ்வளவு நிலைமாற்றங்கள் ஆகாயத்திலா நடக்கின்றன? ஆகாயமா இவ்வளவு மாற்றங்களையும் அடைகிறது “ ஆனால் அவ்வண்ணம் சொல்கிறோம். 

கண்ணுக்குத் தெரிந்த பிரத்யக்ஷம்தானே? ஆனல் உண்மையா? தீரத் தத்வார்த்தமாக விசாரிப்பதில்தானே உண்மை தெரிகிறது? ‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்’ என்ற சொலவடை அத்வைதத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. என்ன நிலைமாற்றங்கள் தன்னில் நிகழ்ந்தாலும் தான் ஒரு விதத்திலும் மாறாமல் இருக்கிறது ஆகாயம் என்பதைப் போல் தான் தன்நிலையில் இருந்து மாறாதது என்பதால் ஆத்மா, பிரம்மம் என்பதை அச்யுதன் (தன் நிலையினின்றும் மாறாதது அச்யுதம்) என்று அறியப்படும். 

மாறாத நிலை என்றால் நெடுங்காலம் அப்படியே இருக்கலாம். ஆனால் என்றோ ஒருநாள் அதுவும் மாறித்தானே ஆகவேண்டும்? நாம் வாழும் பகுதியில் எல்லாம் மாறிவிடுகிறது. சாலைகள், வீடுகள் எல்லாம் மாறிவிட்டன. அன்று கண்ட இடமா என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றம். ஆனால் அந்த மரம் இருக்கிறதே அது மாறவில்லை. சின்ன வயசில் விட்ட பட்டத்தின் கலர்கயிறு மாட்டிக் கொண்ட கிளையில் இன்னும் கொஞ்சம் பகுதி கயிறு அப்படியே இருக்கிறது. மாறும் சூழ்நிலையில் அதுமட்டும் மாறாமல்.. ஆச்சரியப் படுகிறோம். அடுத்த வாரம் அங்கே செல்கிறோம். மரம் இருந்த இடத்தில் பெரிய குழி. மரம் என்ன ஆயிற்று? அத்தனை ஆண்டு அசையாமல் நின்ற மரம். போனவாரம் அடித்த பெருங்காற்று, மழையில் விழுந்துவிட்டது. இப்படிப் பட்ட மாறாத நிலை அன்று அச்யுதம் என்பது. பெரும் ஊழிகள் நடந்தாலும் தான் மாறாதது. எனவே அச்யுதம். 

காலத்தால் ஓர் எல்லைபடுத்தப் பட்டது. இந்தக் காலத்தில் இருந்தது. இன்னொரு காலத்தில் இல்லை. நெடுநாள் இருந்தது பின் ஒரு காலத்தில் போய்விட்டது. என்று கால எல்லை இடமுடியாது. அதேபோல் இந்த இடத்தில் இருந்தது. அந்த இடத்தில் இல்லை என்பது போல் இடத்தின் எல்லை இடமுடியாது. இந்தப் பொருளில் இருக்கிறது. அந்தப் பொருளில் இல்லை என்று பொருளால் எல்லைபடுத்தப் படாதது. காலத்தால், இடத்தால், பொருளால் எல்லை இல்லாதது எதுவோ அது அநந்தம். ஆத்மா, பிரம்மம் அனந்தம் ஆனது. 

ஒளிகளுக்கெல்லாம் தலையாய ஒளி. ஒளி என்றால் கோ என்று பெயர். கோ என்னும் கதிர்களுக்கெல்லாம் இந்திரன் எனவே கோவிந்தன். அனைத்தையும் உள்ளடக்கியதால் ஹரி. நந்தம் என்றால் இன்பம். முடிவே அற்ற பேரின்பம் ஆநந்தம். ஒரு பொருளும் மிச்சமின்றித் தான் நிறைந்தது. அசேஷம். என்றும் பிறவாதது. அஜம். என்றும் மிருத்யு என்பது  இல்லாதது. அம்ருதம். 

பாடுகிறார் ஸ்ரீசங்கரர்: 

‘அச்யுதன் நான்; அநந்தன் நான்; கோவிந்தன் நான்; ஹரியே நான்; 

ஆநந்தம் நான், அசேஷம் நான்; அஜன் நான்; அம்ருதமே நானாய் இருக்கிறேன்.’ 

(அச்யுதோஹம் அநந்தோஹம் கோவிந்தோஹம் அஹம் ஹரி| 

ஆநந்தோஹம் அசேஷோஹம் அஜோஹம் அம்ருதோஸ்ம்யஹம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Friday, January 9, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 13

இந்த உலகில் எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன! எவ்வளவு உயிரினங்கள், மனிதர், எவ்வளவு பன்மை! ஆனாலும் எல்லாம் இருக்கிறது என்பது சைதன்யம் என்னும் உணார்வு, அறிவு இதற்குப் புலனாகித்தான் இத்தனையும் காட்சியாக வடிவெடுக்கிறது. அந்தச் சைதன்யம் என்பதை மொத்த கணக்கிலிருந்து நீக்கிவிட்டுப் பாருங்கள். அதாவது மனிதர் என்போர் இல்லாத சூழலிலும் பொருட்கள் இருக்கின்றன. பொருள் ஒன்று இல்லை என்றாலும் மற்றவை இருக்கின்றன. எனவே இந்த மொத்தக் காட்சியில் ஏதொன்று இல்லாது போனாலும் மற்றவை இருக்கும். ஆனால் அடிப்படையான சைதன்யம் இருந்து இவ்வளவையும் அர்த்தப் படுத்திப் பார்க்கவில்லையேல் இந்தக் காட்சியே இருக்காது. உலகம் என்ற இந்தப் பெரும் மேளாவே கிடையாது. ஏனெனில் அந்தச் சைதன்யம் அதுதான் ஒற்றைப் புள்ளியாகக் கடைசியில் நின்று அர்த்தங்களை உரு ஆக்குகிறது. உரு ஆன அர்த்தங்களைக் கோவைப் படுத்திச் சேமித்துக் கேட்கும் போது எடுத்துப் போடும் ஸ்டோர் கீப்பராக மூளை இருக்கிறது எனலாம். 

இந்த இடத்தில் ஸ்ரீஆதிசங்கரர் சொல்லும் கருத்தை நாம் சற்றுப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பன்மை இருக்கிறது. கூடவே அந்தப் பன்மையைக் காணும் தத்துவமாக, அர்த்தப்படுத்தும் தத்துவமாக சைதன்யம், ஆத்மா இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் சங்கரர் சொல்வதோ ஆத்மா இருக்கிறது. ஆத்மா மட்டுமே  இருக்கிறது. பன்மையும், இரண்டும் இருப்பதுபோல் நினைக்கும் நாமும் எல்லாம் உண்மையில் இல்லாதவை. ஆனால் இருப்பது போன்ற தோற்றம் இதுதான் மாயை. 

தோற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தொடமுடிகிறது. தொட்டால் சுடுகிறது. ஜில் என்று இருக்கிறது. கையில் முள் குத்தினால் வலி கடும் துன்பம். ரத்தம். வாய்கூசாமல் தோற்றம் என்றால் என்ன அர்த்தம்? என்று நாம் நினைக்கிறோம். பொதுவாக மனமே இந்த மாயை என்ற கருத்தை எதிர்க்கிறது. ஆனால் நாம் ஒரு தவறு செய்கிறோம். என்ன? நாம் மாயை என்று நினைப்பது எதை? நடைமுறையில் ஏதோ ஒன்று இருப்பது போல் நிழலாடுகிறது. கிட்டே போனால் இல்லை. யாரோ ஒருவர் காம்பௌண்ட் சுவரில் ஏறிக் குதிப்பது போல் நிழலாகத் தெரிகிறது. ஏறிக் குதிக்கத் தொடங்கிப் பாதி கவிழ்ந்து கீழே ஏதோ பார்த்தபடி இருக்கும் உருவம். நாம் பதுங்கிக் கிட்டே போய் பார்த்தால் எங்கோ எதனுடைய நிழலோ ஒரு மாறிக் கலந்து அங்கு விழுகிறது. அந்தப் பொருள் எங்கோ காற்றில் அசைய இங்கு இந்த நிழல் மனித அசைவு போல் நம்மை மருளச் செய்துவிட்டது. இது ஒரு மாயத் தோற்றம் என்றால் புரிகிறது. ஆனால் சங்கரர் சொல்வது இந்தப் பொருளில் அன்று. நாம் எதைக் கெட்டியான சத்யம், உண்மை, அனுபவம் என்று சொல்கிறோமோ அதைத்தான் அவர் சொல்கிறார். 

சைதன்யம் அல்லது ஆத்மா என்பதற்குப் புலனாகி அதற்குப் பின்னர் கிடைக்கும் ரிப்போர்ட்தான் நம் உலகம். சைதன்யம் என்பதை நம்பியிராமல் தனிப்பட ஒரு நாளும் உலகம் ‘உள்ளேன் ஐயா’ என்ற ரிப்போர்ட்டைத் தராது. ஆனால் சைதன்யம் என்பது, பொருள் எதையும் நம்பி இல்லை, தான் இருப்பதற்கும், தான் இருக்கிறேன் என்று நமக்குத் தெரிவிப்பதற்கும். அது சுதந்திரமாகத் தன்னில் தானே தன்னை இருந்து காட்டும் ஒன்று. அதனால்தான் ஸ்ரீதாயுமானவர் சொன்னார் : ‘அது ஆனால் அது ஆவர். அதுவே சொல்லும்”. தனிப்படத் தன்னளவில் உண்மை என்று தன்னைக் காட்டாத உலகை மாயையின் விளைவு என்கிறார் சங்கரர். 

யா - எது, மா - இல்லையோ, எது உண்மையில் இல்லையோ அது மாயை என்ற பொருளிலும், மாயை என்றால் விசித்திரமானது என்ற பொருளிலும் பொருத்தமாக வருவது. இதைத் தெளிவுபடச் சுவாமி விவேகானந்தர் சொன்னார்: "Maya is a statement of facts" என்று. ‘வாஸ்தவங்களை நிரல்பட வைத்த வாக்கியம் மாயை’ என்றார். 

ஆத்மா மட்டுமே இருக்கிறது. அது பிரம்மமாகவே இருக்கிறது. ஜகத் என்பது மித்யையே. ஜீவன் பிரம்மத்தைத் தவிர பிறிதொன்றாகவும் இல்லை - என்று சொல்லும் ஸ்ரீஆதிசங்கரர் தெய்வங்களைக் குறித்தும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். உபாதிகளால் ஆன நடைமுறை உலகான வியாவகாரிகத்தில் (அதாவது வியவகாரம் நடைபெறும் உலகில்) எப்படி உபாதிகளால் கட்டமைத்தது போல் காட்டப்பட்டுப் பல பொருட்கள், பல உயிர்கள் என்று காட்சி தெரிகிறதோ, எப்படி பிரம்மம் அல்லது ஆத்மா ஒன்றே இருக்கிறதோ அதுபோல் சகுணமாகப் பல தெய்வ வடிவங்கள் நம் பக்திக்குப் புலப்பட்டாலும் அவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள் சத்தியமாக என்றும் இருப்பது அதே பிரம்மம் அல்லது ஆத்மாவே என்பது அவர் கருத்து. எனவே விஷ்ணு என்றாலும், சிவன் என்றாலும், நான்முகன் என்றாலும், சக்தி என்றாலும், பிள்ளையார் என்றாலும், சுப்ரமணியன் என்றாலும் அல்லது எந்தத் தெய்வ உருவை ஒருவர் வணங்கினாலும் உண்மையில் பிரம்மத்தைத்தான் பல வடிவுகளும், பல பெயர்களும் தந்து பக்திக்கு இலக்காக ஆக்குகிறார்கள். கடைசியில் நிலைநின்ற ஒரே சத்யமான பிரம்மத்திடம் அழைத்துச் செல்வதால் அவையெல்லாம் ஒரே இலக்கை நோக்கிப் போகும் பலவித பக்தி மார்க்கங்கள் என்பது ஸ்ரீஆதிசங்கரர் காட்டும் ஒருங்கிணைந்த பார்வை. எனவே தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அவர் பாடும் போதும் அவர் உணர்த்தவரும் உள்ளுறைக் கருத்து என்னவோ அதே ஏக சத்யமான பிரம்மமே. இதைப் புரிந்துகொண்டால் இந்தச் சுலோகத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும். 

“அந்த விஷ்ணுவே நான் அந்த விஷ்ணுவே நான் 

அந்த விஷ்ணுவே நான் ஹரியேதான்; 

நான் கர்த்தா நான் போக்தா என்பதெல்லாம் 

அந்த அவித்தையில் எழுந்து நிற்பவைதாம்.” 

(அஹம் விஷ்ணுர் அஹம் விஷ்ணுர் அஹம் விஷ்ணுர் அஹம் ஹரி: | 

கர்த்ரு போக்த்ரு ஆதிகம் ஸர்வம் தத் அவித்யோத்தம் ஏவ ச || ) 

விஷ்ணு - அனைத்தினுள்ளும் நுழைந்து இருப்பதால் பிரம்மம் விஷ்ணு என்று அறியப்படுகிறது. அனைத்தையும் தன்னுள் அடங்க இருப்பதால் ஹரி என்று அறியவேண்டும். கர்த்ரு - நான் செயல் புரிபவன்; போக்த்ரு - நான் போகம் அனுபவிப்பவன். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***