Friday, January 16, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 21,22,23

நயமான விதத்திலும், பயமான விதத்திலும் சொல்லித் தத்துவக் கருத்துகளை மக்களிடம் புரியவைத்தல் என்பது பெரியோர்கள் பலகாலமாகச் செய்யும் வழிதான். பக்தி நெறிகள், புராண வழிகள் எல்லாம் இந்த மாதிரி நயம், பயம் என்பதைப் பயன்படுத்தித்தான் பல சித்திரங்கள், கதைகள், நடந்த நிகழ்ச்சிகளைக் கூட்டிக் குறைத்துத் தகவமைத்தல் என்னும் முறையில் சொல்வதற்காக வந்தன. ஆனால் நடைமுறை என்னவோ தத்துவம் மக்களிடம் போய்ச் சேருவதற்குப் பதிலாக, கதைகளும், நயம் பயங்களும் பெரிதும் ஓங்கிவிட்டன. சரக்கை ஏற்றப் போனவர் சரக்கின் மூடி, கட்டுமானப் பெட்டி முதலியவைகளை அக்கறையாக ஏற்றி, சரக்கை மட்டும் ஏற்றாமல் விட்டது போல் ஆகிவிட்டது கதை. அல்லது கதைகளில் உள்பொதிந்த தத்துவத்தைப் பிரித்து வாங்காமல் மக்கள் கதைகளிலேயே சௌக்கியம் என்று இருந்துவிட்டனர் எனலாம். 

எனவே ஸ்ரீஆதிசங்கரரும் நயம், பயம் என்னும் விதத்தில் சொன்னாலும் மிகக் குறைந்த அளவே அதைப் பயன்படுத்துகிறார், தத்துவம் மறைக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று. இவரையாவது ஜயிக்க விடுவோமா அல்லது இவரையும் தோற்க்கடிப்போமா என்பது நம்மைப் பொறுத்து இருக்கிறது. 

முன்னரே சொல்லியிருந்தார் ஐந்து உடல்கள், பஞ்ச கோசங்கள் என்பது பற்றி. அந்த ஐந்து உடல்களைச் சற்று விரிவாகச் சொல்லி ஏன் அவை நாம் இல்லை என்று புரியவைக்கிறார். ஓர் உடலை வைத்துக் கொண்டே நாம் படுத்தும் பாடு அதிகம். ஐந்து உடலகள் இருக்கிறதாமே? சொல்லவே இல்லையே என்றுதான் முழிக்கிறோம். 

உணவால் ஆன பரு உடல், பிராண உடல், மனம் வடிவான உடல், புத்தி வடிவான உடல், ஆனந்தவடிவான உடல் என்று ஐந்து. இவற்றை அன்னமய சரீரம், பிராணமய சரீரம், மனோமய சரீரம், விஞ்ஞானமய சரீரம், ஆனந்தமய சரீரம் என்பார்கள். உடலில் இந்திரியங்கள் இருக்கின்றன. சில இந்திரியங்கள் வெளி உலகைப் பற்றிய தகவலை நமக்குத் தருகின்றன. சில இந்திரியங்கள் உலகில் நாம் செயல்புரிய உதவுகின்றன. கண், காது, மூக்கு, நாவு, தோல் இவை உலகை அறியப் பயன்படும் இந்திரியங்கள் என்பதால் ஞான இந்திரியங்கள் எனப்படுகின்றன. கை, கால், வாக்கு, குறி, குய்யம் என்பன செயல்பட உதவும் எனவே கர்ம இந்திரியங்கள். தொடு உணர்ச்சி என்னும் ஸ்பர்சம், கண்ணால் கிடைக்கும் காட்சி அல்லது ரூபம், காதால் கிட்டும் கேள்வி, நாவால் அடையும் சுவை அல்லது ரஸம், மூக்கால் முகரும் வாசனை இவையும் இருக்கின்றன. இவை எல்லாமே எந்த அடித்தளத்தில் எதைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன? 

ஐம்பூதங்கள் என்னும் மண் அல்லது ப்ருத்வீ, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், இந்த ஐந்துதான் உடலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இந்த ஐந்து பூதங்களின் தன்மைகளோ மண் அல்லது பூமியின் தன்மை கந்தம், காற்றின் தன்மை ஸ்பர்சம், நீரின் தன்மை ரஸம், நெருப்பின் தன்மை ரூபம், ஆகாயத்தின் தன்மை சபதம். 

இப்பொழுது ஐந்து ஐந்தாகச் சொன்ன இவற்றைக் கொண்டுதான் ஐந்துவித உடல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றோடு மேலும் ஒரு ஐந்து ஆற்றல்கள் அல்லது பிராணன்கள் உண்டு. பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் என்பன ஐந்து பிராணன்கள். மேல்நோக்கிய ஆற்றல் பிராணன், கீழ்நோக்கிய ஆற்றல் அபானன், உள்ளே பரந்து விரிந்து இயக்கும் ஆற்றல் வியானன், புசிப்பதில் உணவை கழுத்திலிருந்து வயிற்றுக்குச் செலுத்தும் ஆற்றல் உதானன், உண்டு செரித்த உணவை உடல் திசுக்களுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல் சமானன் என்றும் சொல்லலாம். இந்த ஐந்தில் உள்ளடக்கமான துணை ஆற்றல்களும் உண்டு. அவை நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பன. விக்கல், கண் இமைத்து விழித்தல், தும்மல், கொட்டாவி விடுதல், உடலைப் படுக்கச் செய்தல் ஆகியவை முறையே இவற்றின் தொழில்கள். 

இவை அந்தக் காலத்து ஃபிஸியாலஜி, அநாடமிக் கருத்துகள். நாம் இன்றைய விஞ்ஞான ரீதியான உடலியல் கூறுகளை நினைத்துப் பார்க்கலாம். விஷயம் என்னவென்றால் ஒரு டாக்டர் இவற்றைக் குறித்து நம் உடலில் இருப்பன என்று விவரித்தால் நாமும் அவரோடு சேர்ந்து பார்வையாளராக இவற்றைப் பார்க்கவும் படிக்கவும் செய்கிறோம். நமக்குப் புறம் ஆகவும், அதாவது நாம் அல்லாதவற்றில் புறம் வைத்து நம்மால் பார்த்துப் படித்து உணரப் படும் விஷயங்களாகத்தான் நம் உடலோ, மனமோ இருக்கிறது. வயிற்றில் உபாதை என் வயிற்றில் உபாதை என்று அறிகிறோம். தலையில் வலி என்றால் என் தலையில் வலி என்று உணர்கிறோம். நடக்கின்ற வலிகள் எல்லாவற்றையும் நம்முடைய உடல் உறுப்புகள் ஒன்றிற்கு நேரும் ஒன்றாக அயல்வைத்து எண்ணும் நாம், ஏதாவது இன்பம் என்றால் நமக்கே நேர்ந்தது போல் ஒட்டிவைத்து உணர்கிறோம் என்றாலும் நமக்குப் புறம் என்பதும் நம் அனுபவத்தில் தெரிகிறது. இல்லாவிட்டால் இப்பொழுது அந்த இனிப்பு வேண்டாம் உடலுக்கு நல்லதல்ல என்று நம்மால் கொள்ளவோ விடவோ தேர்ந்தெடுக்க முடியாமல் போகும். 

ஆக உடல் என்றால் அதற்குள் இவ்வளவு இருக்கின்றன. இது ஏதாவது ஒன்றுதான் நாம் என்று ஆகியிருந்தால் இத்தனையையும் தொகுத்துக் கூட்டி வகை பிரித்துப் படிக்க முடியுமா? நாம் நம் உடலை இவ்வளவு தள்ளி வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதே நாம் இந்த உடல் அன்று என்பதைக் காட்டவில்லையா? இதை நமக்கு உணர்த்தத்தான் ஸ்ரீஆதிசங்கரர் உடலின் தத்துவங்களைப் பற்றிய கருத்துகளை நமக்குக் கூறுகிறார். 

மேலும் உடலையே ஸ்தூல உடல், புற உடல் என்றும், சூக்ஷ்ம உடல், நுண் உடல் என்றும் வகைபடுத்திப் பார்க்கவும் முடியும். ஐந்து கோசங்களை இந்தவிதமான ஸ்தூல சூக்ஷ்ம உடல்கள் என்று இருவகையில் பிரித்துப் பார்க்கவும் முடியும். மேலும் மனம் என்பதின் உட்புரிவுகளாக நான்கு உண்டு. மனம். சித்தம், புத்தி, அகங்காரம். ஐயம், வாசனைகள், நிச்சயம், அபிமானம் என்பன இந்த நான்கின் செயல்கள்.

அன்னத்திலிருந்து ரத்தம், தசை, எலும்பு, தோல் என்பன உண்டாகின்றன. இவை சேர்ந்து அன்னமய கோசம் எனப்படுகின்றன. கை, கால், வாக்கு, குறி, குய்யம் என்னும் கர்ம இந்திரியங்கள் ஐந்தும், பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்னும் பிராணன்கள் ஐந்தும் சேர்ந்து பிராணமய கோசம் ஆகும். கண், காது, மூக்கு, நாவு, தோல் என்னும் ஐந்து ஞான இந்திரியங்களும், மனமும் சேர்ந்து மனோமய கோசம் ஆகும். இந்த ஞான இந்திரியங்களுடன் புத்தி சேர்ந்து அது விஞ்ஞானமய கோசம் ஆகும். 

அன்னமய கோசம் என்பதுதான் ஸ்தூல உடல் அல்லது ஸ்தூல சரீரம். பிராணமய உடல், மனோமய உடல், விஞ்ஞானமய உடல் இந்த மூன்றும் சேர்ந்து சூக்ஷ்ம சரீரம் ஆகும். இந்த ஸ்தூல, சூக்ஷ்ம ஆகிய இரண்டு உடல்களிலும் பஞ்சபூதங்களின் ஸ்தூல, சூக்ஷ்ம அம்சங்கள் கலந்திருக்கின்றன. 

ஐந்து கோசங்களில் நான்கு இப்படி வகைபடுவதைப் பார்த்தோம். ஐந்தாவதான ஆனந்தமய கோசம் என்பது அவித்தை ஆகும். அதுவே காரண சரீரம் ஆகும். ஆக ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள் என்று மூன்றாகப் பாப்பது ஒரு வகைபாடு. ஐந்துகோசங்கள் என்று பார்ப்பது ஒரு வகைபாடு. ஐந்து கோசங்களை மூன்று சரீரங்கள் கணக்கிலே இட்டுப் பார்ப்பதையும் பார்த்தோம். 

இவை இத்தனையும் கச்சிதமாக இருந்தாலும் எந்த நுகர்ச்சியும், உணர்ச்சியும், கருத்தும், காட்சியும் நமக்கு உண்டாகாது. இவை இத்தனைக்கும் உள்ளே அடிப்படையாகவும் இவை எல்லாவற்றையும் சாட்சியாக இருந்து பார்க்கிற சைதன்யம் ஆகிய நான் என்னும் ஆத்மா இல்லையேல் இந்த உலகமே நமக்கு இல்லை. இந்த ஆத்மாவே நாம். இதை யாரும் புறத்தில் இவ்வண்ணம் என்று காட்டி இப்படி இருக்கிறது என்று விளக்க முடியாது. ஆத்மாவாகிய நாம் நமக்கே உள் அனுபவமாக நிகழும் சாக்ஷி. ஆத்மாவாகிய நாம் இருக்கப் போய்தான் இத்தனையும் நமக்கு அர்த்தம் ஆகின்றன. நாம் இல்லையேல், ஆத்மா இல்லையேல், இந்தப் பெரும் கட்டுமானம் அனைத்தும், சுருக்கமாக ஒற்றை வார்த்தையில் - ‘இல்லை’ -. 

இதைத்தான் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர் : 

‘நான் உடலன்று, பிராணன்று, இந்திரியங்கள் அவை அன்று 

நான் மனம் அன்று புத்தியன்று சித்தமன்று அகங்காரம் அதுவும் அன்று 

நான் பூமியன்று, நீரன்று நெருப்பன்று காற்றுமன்று 

நான் ஆகாயமன்று சப்தம் அன்று ஸ்பர்சமன்று ரஸமன்று 

நான் கந்தம் அன்று ரூபம் அன்று மாயை அன்று சுழலும் சம்சாரம் அன்று 

என்றென்றும் சாக்ஷி ஸ்வரூபமாக நின்ற சிவம் மட்டுமே நான்’ 

(நாஹம் தேஹோ ந ச ப்ராணோ நேந்த்ரியாணி ததைவ ச | 

ந மனோSஹம் ந புத்திஸ்ச நைவ சித்தமஹங்க்ருதி: || 

நாஹம் ப்ருத்வீ  ந ஸலிலம் ந ச வஹ்நிஸ்ததாSநில: | 

ந சாகாசோ ந சப்தஸ்ச ந ச ஸ்பர்சஸ்ததா ரஸ: || 

நாஹம் கந்தோ ந ரூபம் ச ந மாயாSஹம் ந ஸம்ஸ்ருதி: | 

ஸதா சாக்ஷிஸ்வரூபத்வாத் சிவ ஏவாஸ்மி கேவல: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment:

  1. காட்சி யடங்கிக் கருத்தடங்கி செவி
    காணும் கவிதையும் தான் மடங்கி
    ஆட்சிக்கடங்கிய ஆகத்துணர்வுகள்
    அத்தனைக்கும் மேல் ஓர் ஆனந்தமே!

    ReplyDelete