Monday, January 19, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 24,25

நான் இதுதான், இவை இவைதான் சேர்ந்து நான் என்றெல்லாம் நினைத்த அனைத்தையும் நான் இல்லை என்று உணர்ந்து, நான் இவைக்கு உட்படாத, ஆனால் இவற்றால் உட்படுத்தப்பட்டது போல் தோற்றம் அளிக்கும் அந்த ஆத்மாவே நான் என்று தொடர்ந்து நினைப்பது வலிமையை நோக்கிய ஒரு பயிற்சி. அதைச் செய்வதற்கு நமக்கு ஊக்கம் அளிக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

அவ்வாறு ஆத்ம சிந்தனையிலேயே ஊன்றி நிற்கும் போது தோற்றம் அளிக்கும் உலகம், அதுவரை தான் பழகிவந்த இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் எப்படிக் காட்சி அளிக்கும்? ஆத்மா, சைதன்யம், உணர்வு என்று இருக்கப் போய்த்தான் இந்த உலகமே புலனாகிறது. எனவே இந்த உலகமே என்னிலிருந்துதான் தோற்றம் கொள்கிறது. என்னில்தான் நிலை பெற்றிருக்கிறது. என்னில்தான் லயம் அடைகிறது என்று சொல்லும்வண்ணம் இருக்கிறது ஆத்ம அனுபவ நிலை. 

‘பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாய்க் கருதிக் கொள்ளும்’ என்று ஒரு வசனம் சொல்வார்கள். நாம் பொதுவான நிலையில் இருந்து பார்க்கும் போது இந்த வசனம் போல்தானோ என்று என்ணுவோம். அகங்காரத்தால் இப்படித்தானே பலபேர் நினைத்துக்கொண்டு திரிகிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன வித்யாசம் என்றும் கருதலாம். ஆனால் அகங்காரம் உள்பட அனைத்தும் நான் இல்லை என்று கழித்த பின்னர் ஏற்படும் ஆத்ம சிந்தனையில் இந்த நிலை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நடைமுறை நிலையில் ஒரு மனித ஜீவனாக இருக்கும் அனுபவத்தில் சொல்லும் கருத்து அன்று இது. விசாரத்தில் நான் என்பது எது எது இல்லை என்று விலக்கி, தான் ஆத்மா என்ற நிலையில் ஊன்றி நிற்கும் நிலை. நாம் முன்னரே பார்த்த மூன்று சுலோகங்களுக்குப் பின்னர் வரும் நிலை இஃது. 

‘என்னிலிருந்து அனைத்தும் தோன்றியது; 

என்னில் அனைத்தும் நிலைபெற்று இருக்கின்றது; 

என்னில் அனைத்தும் இலயம் அடைகின்றது; 

அந்தத் தனக்கு அந்நியமாய் இரண்டாவது அற்றதான 

பிரம்மமே நான்’ 

(மய்யேவ ஸகலம் ஜாதம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் | 

மயி ஸர்வம் லயம் யாதி தத்ப்ரஹ்மாஸ்மி அஹம் அத்வயம் ||) 

இதில் மிக முக்கியமான பகுதி ‘தனக்கு அந்நியமாய் இரண்டாவது அற்றதான பிரம்மமே நான்’ என்பதாகும். பிரம்மம் ஒன்றே இருக்கிறது. இந்த ஜீவனும் உண்மையில் இல்லை என்ற நிலையில் பேசும் பேச்சு. அந்தப் பேச்சை மனத்தால், சிந்தனையில் தீவிரமாக உணர்ந்து நினைக்கும் பயிற்சியைச் சொல்கிறார் சங்கரர். ஜீவனையோ, மனிதனையோ இப்படி உன்னையே கற்பனை செய்து கொள் என்று சொல்லவில்லை. 

லாபரட்டரியில் சோதனை செய்யும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் தகவல்களை உள்ளபடி அறியப்படுவது அவரவர்தம் உள்ளில் இருக்கும் இதே ஆத்மாவால்தான். உலகனைத்தும் உயிர்களின் உள்ளே இருந்து அறிவு, அனுபவம், செயல்கள் என்று அனைத்தும் ஆத்மா அடிப்படையாகத்தான் நடைபெறுகின்றன. எனவேதான் இந்த ஆத்மா, சைதன்யம், உணர்வு என்பதையே பற்றிப் பேசாதே, அது கடக்க இயலா கடினப் பிரச்சனை, அதை ஒதுக்கிவிட்டு கணக்கைப் போடு, பரிசோதனை செய் என்பதை எழுதாக் கோட்பாடாக விஞ்ஞானிகள் பின்பற்றுகிறார்கள். அந்தச் சைதன்யம், ஆத்மா, உணர்வு என்ற மயமாகி நின்று உணரும் பயிற்சியைக் கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘அனைத்து அறிவும் அறிவோன் நான்; 

எல்லைகள் எதுவும் அற்றோன் நான்; 

அனைத்தையும் நியமிக்கும் ஈசன் நான்; 

அனைத்து ஆற்றலும் வாய்ந்தோன் நான்; 

ஆனந்தமாகி நிற்போன் நான்; 

உண்மையே ஆகி உணர் அறிவே வடிவானோன் நான்; 

என்றிவ்வாறு பிரம்மத்தைத் தொடர்ந்து சிந்திப்பாய்.’ 

(ஸார்வக்ஞோஹம் அநந்தோஹம் ஸர்வேச: ஸர்வசக்திமான் | 

ஆனந்த: ஸத்யபோதோஹம் இதி ப்ரஹ்மானுசிந்தனம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment