Friday, January 2, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 01

தத்துவம் என்பது எது? தீவிரமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது முடிவில் எது நிலைத்த உண்மையாக மிஞ்சுகிறதோ அதுவே தத்துவம். தொடக்கத்தில் பல விஷயங்களும் இருப்பது போலும், பல பொருட்களும் நிலைத்தவை போலும் தோன்றும். ஆனால் எல்லாம் ஒன்றைச் சார்ந்து ஒன்று இருப்பதாக ஆராய்ச்சியில் புரியவரும். பின்னர், தான் எதையும் சாராமல் தன்னில் தான் மாறாத மறையாத உண்மையாக நிலைத்து நிற்கும் உண்மை என்பது ஆத்மா மட்டுமே. அதைத்தான் பிரம்மம் என்றும் கூறுவது. 

அப்படியென்றால் இதையெல்லாம் தொடங்கி ஒருவர் தீவிரமாக ஆராய்ந்தாரே (அதாவது அவரவர் ஆராய்ச்சியில் அவரவர் உள்ளே) அவர் விஷயம் எப்படி? உண்மையில் இருப்பவரா அவர்? அவர்தான் ஜீவன். அவரும் உண்மையில், அதாவது தீவிர ஆராய்ச்சியின் முடிவில், இருப்பவராகத் தேருவதில்லை. அவரும் உண்மையில் இருப்பவர் இல்லை என்றால், பின்னர் மாங்கு மாங்கு என்று தேடுகின்றோமே, தீவிரமாக ஆராய்கின்றோமே, அதெல்லாம் பொய்யா? இந்த ஆராய்ச்சியில் உண்மை, பொய் என்பதை நாம் நடைமுறை உலகில் பயன்படுத்தும் உண்மை பொய் என்ற விதத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. ஏனெனில் நடைமுறை உலகில் நாம் நடைமுறை உலகையும், நம்மையும், பிறரையும், பொருட்களையும், செயல் மாற்றங்களையும் உண்மை என்று அடிப்படையாக ஏற்றுக்கொண்டு அதற்குள் சிலவற்றை உண்மையா, பொய்யா என்று பார்க்கிறோம். ஆனால் தத்துவ விசாரணையில் மொத்த உலகையும், நாம் உள்பட, அனைத்தையும் அடிப்படை நிஜமான இருப்பு எது என்னும் ஆய்வுக்கு உள்ளாக்கிப் பார்க்கும் பொழுது, அங்குப் போனால் போகிறதென்று நம்பிக்கை அடிப்படையில் சிலவற்றைக் கேள்வியே கேட்காமல் உண்மை என்று ஏற்றுக் கொள்ளும் நிலைமை கிடையாது. ஏனெனில் முழு இருப்புடைமை என்பதே கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. எனவேதான் முற்ற முழுக்க விசாரமயமாகக் காட்சியளிக்கிறது அத்வைதப் பெருவழி. 

ஏன் இதைப் பெருவழி என்று சொல்கிறேன் என்றால் இதற்கு உரியர் உரியரல்லாதார் என்ற வேறுபாடின்றி வாழ்க்கையை அனுபவித்த எவரும், வாழ்க்கையைப் புரிந்துகொண்ட எவரும் அல்லது வாழ்க்கை புரியவில்லை என்று சிந்திக்க முனைபவர் எவரும் இந்த வழியில் தாமாகவே தெரிந்தோ தெரியாமலோ பயணிப்பவராக இருக்கின்றனர். அதாவது ராஜபாட்டை அல்லது அரசாங்கப் பெருவழி ஒன்றின் வழியாக அனைத்து மக்களும், அனைத்து வண்டிகளும் பயணிப்பதைப் போல. இத்தகைய தத்துவப் பெருவழியான அத்வைதத்தின் மூலக்கருத்தை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். அது என்னவென்றால் ‘பிரம்மம் சத்யம். ஜகத் மித்யை. ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கிறது. வேறாக இல்லை’ என்பதுதான் அது. 

’இப்பொழுது எனக்கு அப்படித் தோன்றவில்லையே? நான் கைகால் உள்ள இன்ன இடத்தில் இருக்கும், இன்ன இடத்தில் பிறந்து வளர்ந்து, இந்த முகவரி உள்ள ஒரு மனித ஜீவன், அதைப் போல் பிறர், பிற ஜீவன்கள், பல பொருட்கள், இயக்கம் என்று இந்தக் காட்சிதானே இயல்பாகத் தெரிகிறது!’ என்று நினைத்தால் ஆம் நடைமுறை சௌகரியம், இயல்பான புலனுணர்வுகள் சார்ந்த சார்பு மனநிலைகள் நிறைந்த நிலையில், அன்றாட அவசரம் நிறைந்த தினசரி வேகத்தில் அப்படித்தான் நாம் நினைக்கிறோம், நினைக்க முடியும். ஆனால் இது தீவிர ஆராய்ச்சியின் முடிவு இல்லை. ஓர் உதாரணம் சொல்வோம். நமது உடலையே எடுத்துக் கொள்வோம். கை கால் அசைத்து நடந்து நாம்தான் செயல்படுகிறோம். நமக்குத் தெரியாதா நம் உடல் பற்றி? ஆனால் ஏதோ கோளாறு என்று ஆஸ்பத்திரியில் கிடத்தி நம்மைக் கருவிகள் கொண்டு ஆராய்ந்து இன்ன உறுப்பில் இன்ன பகுதியில் இன்ன திசுவில் இப்படி நடக்கிறது அதுதான் கோளாறு. இந்தக் கோளாறுக்கு இன்ன சரித்திரம் என்று டாக்டர் நீள ரிப்போர்ட் தரும் போது அது நம் அனுபவத்திற்கு, அன்றாட நிஜத்திற்குப் பொருந்தி வருகிறதா? அதனால் அதைப் புறக்கணிப்போமா? அதற்கு உரிய இயல், அதன் ரீதியாக ஆராய்ந்து கண்ட முடிவுதான் நிஜமாக நிஜம் என்றுதானே கருதுகிறோம்.! உடல் சமபந்தமான ஒரு சிறு பிரச்சனைக்கே இந்த நிலைமை என்றால், உலகம் முழுவதும், அதில் நாம் அடக்கம், நம் அனுபவம் அதன் தன்மை என்று நம்மை உள்ளடக்கிய முழுமையையும் குறித்து ஆராய்ச்சி என்று வரும்போது அன்றாடம், நடைமுறை என்று நாம் அடம்பிடிக்க முடியுமா? அத்தகைய தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இதுதான் முடிவு என்று சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். என்ன? 

‘பிரம்மம் மட்டுமே சத்யம். ஜகத் என்பது மித்யை. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கிறது. வேறாக இல்லை’ என்று. 

ப்ரஹ்ம சத்யம். 

ஜகத் மித்யா. 

ஜீவோ ப்ரஹ்ம ஏவ. 

ந அபர: 

சரி. ஒருவர் தீவிரமாக ஆராய்ந்து, விசாரம் என்று இறங்கி விடாமல் சிந்தித்துப் புரிந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் புரியலாம் ஓர் உள்ளுணர்வாக இவ்வாறு பிரம்மம் என்ற கடைசி நிலை உண்மையைப் பற்றி. பின்னர் அவரும் நடைமுறை வாழ்க்கை என்று வந்துவிடத்தானே வேண்டும்? அப்பொழுது மீண்டும் பழையபடி அதே பழைய கச்சேரிதானே? 

இதற்குத்தான் ஸ்ரீஆதிசங்கரர் இந்தப் பிரகரண நூலை (தத்துவ உதவி நூலை) பிரம்ம அனுசிந்தனம் என்று 29 செய்யுட்கள் கொண்டதாக எழுதியிருக்கிறார். அதாவது தத்துவ ஆராய்ச்சியின் தீவிரமான தருணத்தில் புரிந்துகொண்டதைப் பின்னர் நடைமுறை வாழ்க்கைக்கு வந்த பின்பும் நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்துப் பார்த்தல், தொடர்ந்து இந்தச் சிந்தனையை மனத்தில் ஓடவிட்டுக் கொண்டே இருத்தல் என்பது ஒரு நல்ல அப்யாசம் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதாவது மீண்டும் நமக்கு வாய்ப்பு ஏற்பட்டு அந்தத் தீவிர தத்துவ ஆராய்ச்சியில் மறுபடியும் ஆழும்வரை இந்த அனுசிந்தனம், தொடர்ந்து சிந்தித்தல் என்பது கைகொடுக்கும். எனவேதான் இதற்கு ’பிரம்ம அனுசிந்தனம்’ என்று பெயர். எனவே இந்தச் சுலோகத்தில் சொல்லியிருக்கும் படி நம்மைப் பற்றி நாமே இப்படிச் சிந்திக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது நம் நடைமுறைக்கு ஒத்துப் போகவில்லையே என்று குழம்பாமல் இதுதான் தத்துவ விசாரத்தின் ஆழத்தில் வரும் உணர்வு நிலை. அதை நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாக அமைந்திருப்பது இந்தச் சுலோகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

*** 

தமிழாக்கம்

1) தத்துவங்களை ஆராய்ந்துகொண்டே போனால் ‘இருப்பு’ Existence என்பதுதான் கடைசியில் வந்து நிற்கிறது. ‘இருப்பு’ என்பதில் பங்குகொள்பவையாகத்தான் அனைத்துப் பொருட்களும், அவை உயிர்களோ அன்றிச் சடப்பொருள்களோ அனைத்தும் ‘இருப்பு’ என்பதில் பங்குடையவை. எனவேதான் அவை ‘இருக்கின்றன’ என்றே சொல்லப்படுகின்றன. அவ்வாறு ‘இருப்பு’ என்பதில் எது பங்குபெறவில்லையோ அஃது இல்லாததாக ஆகிவிடுகிறது. ‘இருப்பு’ என்பதற்கு ஒரு விசேஷம் உண்டு. அது என்ன? ‘இருப்பு’ என்பதில் பங்குகொண்ட பொருள், அதாவது ‘இருக்கின்ற’ பொருள் ஒன்று என்றும் இல்லாததாக ஆகவே முடியாது. அதன் வடிவம் மாறலாம். நிலை மாறலாம். இடம் மாறலாம். காலம் மாறலாம். ஆனால் ‘இருப்பு’ என்பதில் பங்குகொண்ட எந்தப் பொருளும் முற்ற முழுக்க இல்லாமைக்குப் போவதேயில்லை. அதுபோல் இல்லாத பொருள் எதுவும் ‘இருப்பதாக’ ஆவதும் இல்லை. இப்பொழுது இல்லையே. ஆனால் பின்னர்ப் புதிதாக வந்ததே என்று நாம் ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமானால், நிச்சயம் அந்தப் பொருள் ஒரு நிலையிலிருந்து மாறி வேறோரு தோற்ற நிலைக்கு, ஒரு வடிவம் மாறி வேறொரு தோற்றத்திற்கு வந்ததாகத்தான் இருக்கும். உலகத்தில் நாம் உணரவரும் எல்லாம் ஒன்று இருந்தது, அந்தப் பொருள் அழிந்துவிட்டது, புதிதாக ஒன்று தோன்றுகிறது என்னும் எல்லாம் நுணுக்கமாகப் பார்த்தால் நம் புலனுக்குப் புலப்படாமல் நுண்ணிய நிலையில் இருந்து பின்னர்த் தோற்றம் கொள்ளும் நிலைக்கு வருகிறது என்றுதான் புரியவருகிறது. எனவே இறுதியான உண்மை, அறுதியான சத்யம் என்று தத்துவ விசாரம் செய்யும் பொழுது நமக்குக் கடைசியில் வந்து பெயராமல் நிற்பது ‘இருப்பு’ Existence, ஸத் என்பதுதான். இத்தகைய ஸத் என்பதன் மயமான ஒன்றிற்குத்தான் ஸத் + யம் ஸத்யம் என்று பெயர். எனவே அனைத்துக்கும் அடிப்படையான உண்மை ‘இருப்பு’ ஸத்யம் அல்லது Existence என்பதுவே. 

இந்த ’இருப்பு’ என்பதுதான் அனைத்துப் பொருட்களுக்கும் ‘இருக்கின்ற தன்மையை’ வழங்குகிறது. ‘இருப்பு’ என்பதில் பங்குகொள்ளாத பொருள் அதாவது ‘இருப்பு’ என்பது இருப்புடைமையை வழங்காத பொருள் இல்லாத பொருளாகவே ஆகிவிடுகிறது என்று பார்த்தோம். இந்த ‘இருப்பு’ என்பது வெறுமனே பொருட்களுக்கு இருப்புடைமையை வழங்குவது மட்டும் செய்யாமல் சில பொருட்களுக்கு, அறிவுள்ள உயிர்களுக்கு ‘இருப்பு’ ஆகிய தன்னைப் புரிந்துகொள்ளும் ஒளியையும் தருகிறது. அந்த ஒளியும் இருப்பில் பங்குகொண்ட ஒன்றாக இருந்து வழங்கப்படவில்லையேல் நாம் ஒருகாலும் இவவாறு பேசிப் புரிந்துகொள்ளும் நிலைக்கே வராமல் வெறும் சடப்பொருளாகவே இருந்திருப்போம், யாராலும் பார்க்கப்படாமல், உணரப்படாமல் அல்லவா? 

எனவே இந்தக் கடைசி உண்மையான ஸத்யம் என்பதற்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று, தன்னில் பங்குகொள்ளும் அனைத்திற்கும் ‘இருப்பு’ என்பதைத் தருவது. இரண்டு, தன்னைப் புரிந்துகொள்ள வேண்டிய ஒளியையும் தானே தருவது. ‘இருப்பைத்’ தரும்பொழுது அதற்குப் பெயர் ‘வாஸு’ என்பது. ஒளியைத் தரும்போது அதற்குப் பெயர் ‘தேவன்’ என்பது. எனவே இந்தச் சத்யம் ’வாஸுதேவன்’ என்று சொல்லப்படுகிறது. ‘வாஸுதேவன்’ என்று சொல்லப்படும் பிரம்மம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். பிரம்மம் என்றால் பெரிதினும் பெரிதான பெரும் சத்யம் என்று பொருள். ‘பெரிய கடவுள்’ என்று பாரதியார் தம் கவிதையில் குறிப்பிடுகிறார். எனவேதான் மகாத்மா காந்தி ‘சத்யம்’ என்பதைத் தாம் கைக்கொண்ட தத்துவம் ஆகவும், அஹிம்சை என்பதை அந்தத் தத்துவத்திற்கான அனுஷ்டிக்கும் நெறியாகவும் கைக்கொண்டார். நாம் ஸ்ரீஆதிசங்கரருக்கு வருவோம். ஸ்ரீஆதிசங்கரர் தாம் மிகச்சிறந்த கவி என்பதையும் இங்குக் காட்டுகிறார். அத்வைத உண்மையைத்தான் சொல்கிறார். ஆனால் வாஸுதேவன் என்று கடவுள் வணக்கம் செய்யும் தொனியையும் கூடவே தொடக்கத்தில் வைக்கின்ற நயம் மிக அழகு.

‘வாஸுதேவன்’ என்று குறிப்பிடப்படும் பிரம்மம் குறைவே அற்றது என்று கூறுகிறார். இப்பொழுது பிரம்மத்திற்கு மூன்று தன்மைகள் சங்கரரால் சொல்லப்படுகின்றன. தன்னுள் அடங்கும் பொருளுக்கு ‘இருப்பு’ என்பதை நல்குவதால், தானே முழு இருப்பாகவும் இருப்பதால் ‘வாஸு’ என்றும், தன்னை உணரத் தக்க ஒளியைத் தானே தருவதால், தானே ஒளியாகவும் இருப்பதால் ’தேவன்’ என்றும் இருக்கும் ‘வாஸுதேவன்’ என்று சொல்லப்படும் பிரம்மம் தன்னுள் அடங்கும் பொருளுக்குக் குறையே இல்லாமல் ஆக்குகிறது என்றும் சொல்கிறார். 

’வாஸுதேவ ஆக்யம் அவ்யயம்’ 

ஆக்யம் - என்று சொல்லப்படும்; 

அவ்யயம் - குறைவே இல்லாதது, குறைவை நீக்குவது; 

எது? ‘பரம் ப்ரஹ்ம’ கடைசி சத்யமான பிரம்மம். 

நம்முடைய குறைவை அஃது எப்படி நீக்கும்? உண்மையில் நாம் அதுவாகத்தான் இருக்கிறோம். நம்மை அது அல்லாததாக நாம் நினைத்துப் புழங்குவது நம் அவித்யை காரணமாக, நம்முடைய பிரமை. தத்துவ விசாரத்தின் மூலம் நாம் உண்மையில் அதுதான் என்று உணரும் போது நம் குறைவு நீங்குகிறது. அது அதுவாகவே இருப்பதன் மூலமே நம் குறைவை நீக்குகிறது. நாம் அதுவாக அல்லாத ஒன்றாகப் பிரமிக்கிறோம். நம் பிரமை தத்துவ விசாரத்தால் கடைசியில் நீங்கும் போது நாம் அதுவாகத்தான் இருக்கிறோம், இருந்துகொண்டே இருக்கிறோம் என்று உணரும் போது நம் உண்மை நிலையை உணர்கிறோம். அது அதுவாகவே என்றும் எப்பொழுதும் இருப்பதன் மூலமே நமக்கு ‘இருப்பையும்’ தருகிறது; தன்னை உணரும் ஒளியையும், தானே அந்த ஒளியாகவும் ஆகிறது; நம் குறைவையும் நீக்கி நம்மைத் தானாகவே உணரும் நிலையில் குறைவற்ற நம்மையும் அளிக்கிறது. 

இவ்வாறு வாஸுதேவன் என்று சொல்லப்படும் இந்தப் பரப்பிரம்மமே நான் என்று உணர்பவர் முக்தர் ஆகிறார். முக்தி என்பது விடுதலை. மோக்ஷம். சுயநிலை உண்மையை உணர்தலே விடுதலை அதுவே மோக்ஷம். அவ்வாறு உணரும்வரை? பத்தர் அல்லது கட்டுண்டவராகவே இருக்கிறது இந்த ஜீவன். 

வாஸுதேவன் எனப்படும் பரப்பிரம்மமே நான் 

என்று நிச்சயமாய் உணர்ந்தவர் முத்தரே பிறர் பத்தரே

(அஹம் ஏவ பரம்ப்ரஹ்ம வாஸுதேவாக்யம் அவ்யயம் |

இதி ஸ்யாத் நிச்சிதோ முக்தோ பத்த ஏவ அந்யதா பவேத் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***