பன்மைதான் நமக்குப் பழக்கப்பட்ட ஒன்று. வேறு, வேறு, வேறு விஷயங்களில் போய்க் கொண்டிருக்கும் மனம் உடைய பிராணிகள் நாம். இந்தப் பன்மையை ஆராய உட்கார்ந்தோமானால் எந்த ஒரு பொருளும் தன்னளவில் முடிந்த பொருளாக இல்லாமல் தான் ஏதோ ஒரு மூலப் பொருளின் தற்காலிக நிலையாகத்தான் நம் அனுபவத்திற்கு வருகிறது. உண்மையில் நிலைமாற்றங்களைத்தான் நாம் அனுபவிக்கும் பன்மையில் சந்திக்கிறோம். வெவ்வேறு பொருட்கள் என்று கருதி நடந்துகொள்வது நடைமுறைக்கும், நம் அனுபவத்திற்கும் பொருந்தி வருகிறது. இவ்வாறு பல பொருட்கள் என்று கருதி நடந்து கொள்வது பொய் என்று எந்தக் கணத்திலும் நம் அனுபவம் உடைப்பு விட்டுக் கொள்வதில்லை. ஒருவேளை நீண்ட அனுபவத்தினாலும், ஆழ்ந்த ஆராய்ச்சி உணர்வினாலும், தீவிரமான நுணுகி அவதானிக்கும் உண்மைத் தேட்டத்தினாலும் ஒரு சிலர்க்கு இந்த அனுபவச் சங்கிலி அறுபடும் கணங்கள் சாத்தியப்படலாம். அத்தகைய ஆத்ம சாதகர்களோ, அல்லது ஞானிகளோ தாங்கள் புரிந்துகொண்டதைப் பிறரும் அறியும்படியாகச் சொன்னதுதான் நமக்குப் படிக்கக் கிடைக்கும் அரிய அத்வைத வேதாந்த ஞான நூல்கள். இந்த விதத்தில் ஒரு தொடர்ச்சியான நூலகமே நமக்கு ஸ்ரீஆதிசங்கரரால் தரப்பட்டிருப்பது நாம் செய்த நல்வினையோ அல்லது அவருடைய காரணமற்ற கருணையோ!
அவர் நமக்கு ஈறுநிற்கும் உண்மையை, அறுதியான தத்துவத்தை எப்பொழுதும் தொடர்ந்து சிந்திக்கும் வழியைச் சொல்லித்தர வேண்டிப் பாடியதுதான் இந்தப் பிரம்ம அனுசிந்தனம். இப்படிச் சிந்திப்பதால் என்ன பயன்? என்றுதான் நம்முடைய வரவு செலவு மனம் எண்ணுகிறது. ஆனால் நம்முடைய உண்மையான இயல்பு இதுதான் என்பதால் வியாபாரம், வியவகாரம் எல்லாம் கடந்த பரம அர்த்தம் என்று இதைப் போதிக்கிறார் பகவத் பாதர்.
நம்முடைய சாதாரண உலக அனுபவத்திலேயே எதற்காக அதைச் சேமித்து வைத்தோம் என்றே ஆரம்பத்தில் புரியாமல் எதற்கும் இருக்கட்டும் என்று போட்டு வைத்த பொருள் ஒன்று பின்னால் மிக முக்கியமான தருணத்தில் நம் உயிரையே காக்கும் பொருளாக அமைந்தது என்பதும் சிலருக்கு நடந்த அனுபவமாக இருக்கக் கூடுமே! அதுபோல் இருக்கட்டும் என்று மனத்தில் போட்டு வைப்போம். வேறு எவரும் மெனக்கெட்டு நமக்கென்று இதைச் சொல்லப் போவதில்லை.
ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், ‘இருப்பது ஒரே பொருள்தான். அதுதான் ஒரே சத்யம். ஒரு பொருள்தான் இருக்கிறது. இரண்டாவதாக ஒன்று இல்லை. அதாவது ஜீவன் என்றோ, உலகம் என்றோ பிரம்மத்துக்கு அந்நியமாக ஒன்று கிடையாது. சரி அந்நியமாக இருக்க வேண்டாம். பிரம்மத்திற்குள்ளேயே ஓர் ஓரத்தில் ஜீவனும் இருக்கட்டும், ஜகத்தும் இருக்கட்டுமே என்றாலும் அப்படியும் இல்லை. தனக்கு உள்ளேயும் பிரம்மம் மட்டுமே இருக்கிறது. தனக்கு வெளியே என்று சொல்வதற்கே வழியில்லை.
அதாவது ஒன்றை விட்டு ஒன்று வேறு என்று சொல்வது மூன்று விதங்களில் இருக்கலாம். தன்னைப் போல் ஒன்று, தன்னை விட வேறான ஒன்று, தனக்குள்ளேயே வேறாக இருக்கும் ஒன்று - இப்படி மூன்று விதங்கள். இவற்றுக்கு ஸஜாதீயம், விஜாதீயம், ஸ்வகதம் என்று பெயர். தன்னைப் போல் ஒன்று - ஸஜாதீயம், தன்னை விட வேறான ஒன்று - விஜாதீயம், தனக்குள்ளேயே வேறான ஒன்று - ஸ்வகதம்.
நீங்கள் ஒரு மனிதனைப் பார்க்கிறீர்கள். நீங்களும் மனிதர். அவரும் மனிதர். இருவருமே மனிதர் என்ற வகையைச் சேர்ந்தவர்கள். ஆனால் வேறு வேறான நபர்கள். இது ஸஜாதீய பேதம். அங்கு ஒரு மரத்தை அல்லது விலங்கைப் பார்க்கிறீர்கள். நீங்கள் மனிதர், அது ஒரு மரம் அல்லது விலங்கு. ஆனால் வேறு. நீங்கள் மனித வகை. அதுவோ மரம் அல்லது விலங்கு வகை. எனவே விஜாதீய பேதம். உங்கள் உடம்பிலேயே பார்க்கிறீர்கள். கை, கால், தலை, தலைக்குள் கண், காது, மூக்கு என்று வேறு வேறு அவயவங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒருவருக்குள்ளேயே இவ்வளவு அவயவ பேதங்கள். இது ஸ்வகத பேதம். இந்த மூன்று விதமான வேறுபாடுகளும் இல்லாத, இருக்கின்ற ஒற்றை உண்மைப் பொருள் பிரம்மமே என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். வேறு எதுவும் இங்கு இல்லை என்று எதிர்மறையாகவும் சொல்லி ஃபைலைக் குளோஸ் செய்துவிடுகிறார்.
‘ஒன்றே இருக்கிறது;
இரண்டாவதாக எதுவும் இல்லை;
பிரம்மத்தைத் தவிர இங்கு வேறெதுவும் இல்லை.’
(ஏகமேவ அத்விதீயம் வை ப்ரஹ்மணோ நேஹ கிஞ்சந | )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
மிக மிக அருமை. சங்கரர் கூறிய தத்துவம் தங்கள் விளக்கம் மூலமாக சிறிது விளங்குவது போல் தோன்றுகிறது.
ReplyDeleteமிக மிக அருமை. புரிந்தது போல் தோணுகிறது. . இதே போல் பிற ஆசாரியர்களின் தத்துவங்களையும் விளக்கவும்.
ReplyDelete