Thursday, December 29, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 14

உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.

உடலின் உறவுகள் புழங்கும் போது பாசமும், உலகியல் பிணக்கங்களும், கோப தாபங்களும் தலைதூக்குகின்றன. ஆனால் ஆத்ம உறவுகளாக இருக்கக் கூடிய ஆண்டாளின் திருப்பாவைக் கூட்டத்தாரின் புழக்கத்தில், உள்ளத்தில் கோவிந்தனின் திங்கள் கதிர்முகம் எழுகிறது. தண்ணருள் பரவும் போது யாரையும் விட்டுப்போகாமல் கூட்டுகிறது. உலக விஷயம் ஆட்களைத் தனிமைப் படுத்துகிறது. ஆனால் பகவத் விஷயமோ ஆசையுடையோர்க்கெல்லாம் உரைமின், வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்று அனைவரையும் கூட்டுகிறது. ‘ஸங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்வோமனாம்ஸி ஜானதாம்’ - ஒன்றுறக் கூடுங்கள்; ஒன்றுற உரையாடுங்கள்; ஒன்றுறச் சிந்தியுங்கள்’ என்று ரிக்வேதம் கூறுகிறது. அனைவரையும் கூட்டும் தமிழ்மாலையான திருப்பாவை சங்கத் தமிழ்மாலை ஆகிறது. உலகப் பொருட்களில் ஆழும் போது மேலும் மேலும் கீழ்மை அடைகிறது மனம். ஆனால் பகவத் விஷயத்தில் ஆழும் போதோ மேலும் மேலும் உயர்வை எய்துகிறது. தூய்மையை அடைகிறது. துங்கம் எனில் உயர்வு, பெருமை, தூய்மை என்பன பொருளாம். அவ்வாறு ஆழ்ந்து தூயோரான பெரியோர்கள் பின்வருவோரும் தெளிய வேண்டி உரைத்தவைகள் தூயோர்தம் தெள்ளுரைகள் ஆகின்றன. பகவத் விஷயத்தைக் குறித்து ஆழ்ந்த தாத்பர்யம் என்ன என்று தேடும் போது நம்மைக் கண்ணனிடத்தில் அர்ப்பணித்து, அவன் கைங்கரியத்தில் ஈடுபடுவதே நமக்கு உற்ற இயல்பும், சிறப்பும் என்று தெளிதலே ஆகும். அவனுக்கு உற்ற கைங்கர்யம் என்பதுவே பறை என்னும் சொல்லால் குறியீட்டு முறையில் குறிப்பிடப்படுகிறது. அந்தக் கைங்கர்யத்தையும் அவனிடமிருந்தே பிரார்த்தித்துப் பெற வேண்டும் என்பதையே ஆண்டாள் திருப்பாவையில் ‘பறை’ என்பதை அவனிடம் வேண்டிப் பெறுவதாகப் பாடுகிறாள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது பறை என்பது வாத்தியம் என்பதைக் குறித்தாலும், அதன் உட்பொருள் கைங்கரியம் என்பதாகும். இந்த நுட்பங்கள் தெள்ளிய பேருரைகளை அனைவரும் ஆழ்ந்து ஈடுபட்டுக் கற்பதால் புரிய வருகின்றன. அவ்வாறு கற்கவே, தனிமைப் படுவோரையும் விடாமல் கூட்டிச் செல்ல விழைவதே ஆண்டாள் கற்பித்த நெறி. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment