வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.
*
வையத்தில் வாழ்வது என்றால் திருமாலின் குணக்கடலில் ஆழ்வது என்பதுதானே! அவ்வாறு வாழ்ந்து போகாமல் எதில் மக்கள் நாளும் நாளும் ஆழ்ந்து மடிகின்றார்கள்? அந்தோ வெய்ய துயர்க் கடலிலா ஆழ்வது? சக்ரவர்த்தியாரின் மகவுகள் பிச்சையெடுத்தா பிழைப்பது? உலகமுண்ட பெருவாயனின் குடல்துடக்கு கொண்டவர்கள் குமையும் துயர்களிலா தம் நெஞ்சு வேவது? உபநிஷதம் ஓங்கி ஒலிக்கிறதே! - உத்திஷ்டத! ஜாக்ரத! ப்ராப்யவரான் நிபோதத! - எழுந்திடு! விழித்திடு! அடையவேண்டிய இலட்சியத்தை நினைத்துப் புறப்படு. இதைத்தானே முப்பது பாட்டிலும் உரைப்பதோடன்றி, ஒவ்வொருவர் வீட்டின் வாயிலிலும், உணர்ந்தவர்கள் ஒன்றுகூடி வந்து நின்று உறங்குவோரை எழுப்பியே தீருவது என்று ஆக்கியவர் ஸ்ரீஆண்டாள் அன்றோ! ஐயகோ! மனிதருக்குக் கன்றுகளை விடவா அறிவு குறைந்து போய்விட்டது? குன்றம் ஏந்திய கோவிந்தனின் கழல் நாடி கன்றுகள் சரண் புகுந்து நிற்பனவே! அந்தக் கன்றுகளுக்கு யார் போய் திருப்பாவை யாராவது சொன்னார்களா? ஆனால் மனிதருக்கு பூமிப்பிராட்டியே வந்து பிறந்து திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்று சொல்லி எழுப்பியும், திருமாலின் திருவருளில் யாம் தோய மாட்டோம், வெய்ய துயர்க்கவலைக்கே நாங்கள் விலைபோவோம் என்று கூறுவார் உண்டோ? ஆனால் மக்களுக்கு திருமாலின் நினைவு வரவேண்டும் என்றால் அதற்கு முதன்முன்னம் சத்வகுணம் தலைதூக்க வேண்டும். ஜநார்த்தனனின் திருக்கண்ணோக்கம் இன்றி சத்வகுணம் மனத்தில் தலைதூக்காது. எனவேதான் ஸ்ரீஆண்டாள் திருப்பாவையை அனைவரையும் அழைத்துக்கொண்டு போய் அரங்கநகரப்பனுக்கு எழுப்பி உரைக்கின்றாள். நாங்கள் எல்லாம் வந்துவிட்டோம். வரமாட்டேன் என்று அடமாகத் தூங்குவோரை எழுப்ப முதலில் உன் அருள் வேண்டும். அவர்கள் மனத்தில் சத்வம் தலைதூக்கியது என்றால் எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டு அவர்களே வந்து சேர்ந்துவிடுவார்கள்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment