Wednesday, December 21, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 01

திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிப் பார்க்கும் பேராசை இந்த விபரீத முயற்சி. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வர வேண்டும் என்று சங்கல்பம். 

*

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய். 

ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பாவை என்பது உபநிஷத்ஸாரம் என்பது சம்ப்ரதாயப் பெரியோர்களின் ஏகோபித்த கருத்து. சுருதிசதசிரஸ் சித்தம் அத்யாபயந்தி - மறைமுடி திகழும் ஒள்ளிய நுண்பொருளை மனிசர்க்கும், மாதவர்க்கும் ஒருங்கே எடுத்துரைக்கும் தலைவி ஸ்ரீஆண்டாள். கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் - என்றார் தந்தையார். திருமகளாருக்கு, புவிமாது வந்து நம்மை உயர்த்தப் பிறந்த பெருமாட்டியாம் ஸ்ரீஆண்டாளுக்கு யாரும் விலக்கில்லை, எதுவும் விலக்கில்லை. ‘உனக்கென்ன வேறுடையை?’ என்று ஒதுங்கிப் போவோரையும் தலைமுடி பிடித்து வந்து தாமோதரனார்க்கு ஆட்படுத்தும் தண்ணருளே உருவாய் வந்த சுடர்க்கொடி. ஸ்ரீராமாநுஜர் எப்பொழுதும் வாய்வெருவும் பாசுரமாகத் திருப்பாவையைக் கொண்டார் என்பதும், ஸ்ரீராமாநுஜரைக் கோயில் அண்ணரே என்று ஸ்ரீஆண்டாள் அருளப்பாடு விளித்தாள் என்பதும் அபிமானத்தால் மட்டுமன்றி ஆழ்பொருள் கொண்டவை.

ஸ்ரீஆண்டாளின் திருக்கழல் ஆர் கழல். பிரிவினை, வேறுபாடு ஒன்றும் இன்றி அனைத்து உயிர்களும் சென்று சூழும் கழல் ஆர் கழல். யார் எவர் எவ்வுயிர் என்று நோக்காமல் அனைத்தையும் சென்று அருளால் சூழ்ந்து வளைத்து உய்விற்குத் திருப்பும் கழல் ஆர் கழல். அந்த ஆர்கழலைச் சிந்தித்து, அவள் அருள் தரும் தெம்பில் திருப்பாவையைத் தோய்ந்து இரசிக்கும் பொழுது, அந்தத் தமிழ்வேத உபநிடதப் பெருநூலுக்கு வாய்த்த பொன்னுரைகள், அந்த உரைகளில் குறையாமல் பெருகும் பொருள் வளங்கள், இவற்றை யாரோடு உரைப்பது? யாருக்கு அதில் ஈடுபாடு? ஈடுபாடு இருக்கும். ஆனால் உள்ளே குதித்து முழுக ஓர் உளப்பாங்கு வேண்டுமே? யாரைக் குறை சொல்ல முடியும்? அவரவர் கவலை ஆயிரம். அதில் அவரவர் நியாயமும் ஆயிரம். உலகத்தாருக்கு எது பகலோ அது யோகிக்கு இரவு. யோகிக்குப் பகல் உலகத்தாருக்கு இரவு என்று ஸ்ரீகீதை புகன்றாலும், அதையும் மீறியல்லவா ஸ்ரீஆண்டாள் உலகத்தவர், யோகிகள் என்ற பிரிவு இல்லாமல் எல்லாருக்கும் ஒரே பகலாகக் காலத்தை ஆக்கிவிட்டாள் அல்லவா?

நள்ளிரவு யாமம் கடக்கின்றது. வெளியில் எங்கும் இருள். இருளா? எந்தப் பொருளும், எந்தக் காலப் பிரிவும் அதன் சொந்த இயல்பு கிடையாதே! அனைத்துமே திருமாலுக்கு ஏங்கி, அவன் நினைவில் அன்றோ தோய்ந்து கிடப்பன! எனவே இது இருள் இல்லை. இது யாமமும் இல்லை. கரிய மேனிப் பிரானின் வண்ணத்தைச் சுமந்து இந்தத் திருவரங்கத்தில் உலவும் யாரோ நித்ய சூரிதான் இந்த யாமமும், இருளும். ஆம். இந்த யாமத்தை நிறுத்தி உன் பெயர் என்னவென்று கேட்டால் ‘நிறத்தைப் பார்த்தால் தெரியவில்லை? கிருஷ்ணன்.’ என்று சொல்லிப் போகின்றனவே! ஆம் இருள் உண்மையில் அறிவில் அன்றோ இருக்கிறது. அறிவின் இருள் அகன்றால் பின்னர் நித்யம் பகல் அன்றோ! புந்தியில் புலரி எழுவதற்கு அருள் ஸ்ரீஆண்டாள் அன்றோ செய்ய வேண்டும்! ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


***

No comments:

Post a Comment