Wednesday, December 21, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 03

ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் ! 

ஓங்கி உலகளந்த உத்தமன் அத்தனை உயிருக்கும் பொதுவாய்த் தன் சேவடியைக் காப்பாக வைத்தான். ஆனால் அதை உயிர்கள் உணரவில்லை. கன்றுகள் உணர்ந்தாலும் கல்மன மனிதர்கள் உணரவில்லை. ஆனால் அப்படி விடமுடியாது ஸ்ரீஆண்டாளால். அவளோ பூமியின் அவதாரம். மனிதர்பால் பொறுமையும், கனிவும் கொண்டு அவர்களைத் தாங்கி நிற்பவள். அவர்களைத் தன்னுடையவர் ஆக்குகிறாள். தன்னுடைய தீந்தமிழில் ஈடுபடுத்துகிறாள். உணர மறுத்த மனிதரோ தம்மைப் போல் ஆண்டாளின் கோஷ்டியில் சேர்ந்துவிடுகின்றனர். ஆமாம். ஏன் அந்தத் திருமால், உத்தமன் மறுக்கின்ற உயிர்களையும், மறக்கின்ற உயிர்களையும் விடமாட்டாமல் இப்படித் துரத்தித் துரத்திக் காக்கின்றான்? காரணம் குடல் துடக்கு என்கின்றனர் உரைவரைந்த உத்தமர்கள். ஆம் அவன் பத்மநாபன் அல்லவா? அவனுடைய எழுகமலக் கொப்பூழில் பூத்ததுதானே இந்த உலகம்! அவனுடைய இந்தக் காரணமே அற்ற பேரருள் அன்றோ அவனுடைய பெரும் புகழ் ஆவது! அதை உணர்ந்த மறுகணம் வாய் அவனைப் பாடாமல் என்ன செய்யும்? உயிருக்கும், அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியா உறவு அன்றோ! மகிழ்ச்சி அடைந்தால் அடுத்தகணம் மறைவது உலக இயற்கை. ஆனால் மறையாமல் தேங்கி நிற்கும் மகிழ்ச்சி என்பது ஆண்டாளின் குரலுக்குச் செவிசாய்த்துச் சேரும் தெய்வத் திரளில்தான் பார்க்க முடியும். அனுபவிக்க அனுபவிக்கப் பெருகும் ஆனந்தம். கணம் கூட அந்தத் திரளைப் பிரிந்தால் முடியாது என்ற வாட்டம். அதுதான் பகவத் விஷயத்திற்கான சிறப்பு! ஆனால் காலம் கடந்து போனால், அந்தத் தெய்வத் திரளுமே மறைந்து போமோ? இல்லை. அந்த ஆனந்தத்தை என்றைக்குமாக நிலைத்து நிற்கச் செய்வன விரிவுரைகள். கற்பவரின் ஈடுபாடு ஆழம் ஆக ஆகப் பொருளும் வளம் மிகுந்துகொண்டே போகும் அதிசய உரைகள்! அதற்குரிய பாங்கை அடைந்த மனங்கள், தம் பக்குவத்தால் பகவத் விஷயத்தில் ஆழும் போது அங்கு அருளும் நீங்காமல் நிறைந்து விளங்குகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



2 comments:

  1. பகவத் விஷயத்தின் சிறப்பு ஈடு இணையற்றது.

    ReplyDelete
  2. | அதுதான் பகவத் விஷயத்திற்கான சிறப்பு! ஆனால் காலம் கடந்து போனால், அந்தத் தெய்வத் திரளுமே மறைந்து போமோ? இல்லை. அந்த ஆனந்தத்தை என்றைக்குமாக நிலைத்து நிற்கச் செய்வன விரிவுரைகள். கற்பவரின் ஈடுபாடு ஆழம் ஆக ஆகப் பொருளும் வளம் மிகுந்துகொண்டே போகும் அதிசய உரைகள்! | அருமை. நன்றி

    ReplyDelete