தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே நாமென்றும் ஆளாய் நவின்றேலோ ரெம்பாவாய்.
*
பகவானின் சுத்தசத்வமயமான விக்ரஹத்தை, ஐந்துமறைப் பொருளில் துலங்கும் பஞ்சோபநிஷன்மயமான விக்ரஹத்தைத் தூமணி மாடம் என்கிறது ஸ்வாபதேச உரை. ’துவளில் மணிமாடம்’ என்று திருவாய்மொழி சொல்வதற்கும் இங்குத் தூமணிமாடம் என்று சொல்வதற்கும் வேறுபடும் நயம் சொல்கின்றன உரைகள். ஜீவனுக்கும் தூய இயல்புதான், அதுவும் நித்யம்தான். ஆயினும் ஜீவனின் இயல்பு மலினத்திற்கு ஆளாகிப் பின்னர் அந்த மலினமே பின்னாட்டாதபடித் தூய்மை துலங்கத் திகழ்வது. ஆனால் பகவானின் தூய்மையோ எல்லா மலினத்திற்கும் என்றும் எதிர்த்தட்டானது. ஜீவனின் இயல்புக்குத் துவளில் மணிமாடம் குறியீடு என்றால் பகவானின் இயல்பிற்குத் தூமணிமாடம் குறியீடாகிறது. இவ்வாறு பல ஆழ்பொருள்களை நாம் கற்றுத் தேர்ந்து, தெளிந்து தாமோதரனார்க்கு ஆட்பட்டிருத்தலே தக்க நெறி என்று நாமுணரச் சொன்னது திருப்பாவை. ஒருவர் தாம் அடைந்திருப்பதோ அல்லது என்றும் உலகில் கலவாது உயர்விண்ணகத்தே நிலைத்து இருப்பதோ, அதைவிடவும் மண்ணில் உழலும் மாந்தரைக் கடைத்தேற்ற, அனைவரையும் ஒரு கூட்டத்துள் ஆக்கி உத்தமனுக்கு ஆட்படுத்த விழைவதுதான் திருப்பாவை. நமக்கு எது நன்மை என்று கேட்டால் நாம் அந்த விஷயத்தில் ஊமையாகி நிற்போம். நமக்கு இருக்கும் பெருங்குறை என்ன என்று கேட்டால் கடவுளைப் பற்றிய ஞானம் என்று சொல்ல வாய் எழாது ஊமையாய் நிற்போம். கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லிப் பிரார்த்திக்கச் சொன்னால் ஏதாவது சொப்பு, பொம்மை, மிட்டாய்களைக் கேட்டு வாயடைத்து நிற்போம். நல்லூழ் காரணமாக, அவனுடைய அருளால் அவனே தன்னை நமக்குக் காட்டிக்கொடுத்தால் அப்பொழுதும் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்போம். வாய்படைத்த ஜீவன் என்று நமக்குப் பெயர். ஆனால் எல்லாவற்றுக்கும் ஊமையாவதும் நாம்தான். திருப்பாவை நம்மைப் பேச வைக்கிறது. பரமனைப் பற்றிப் புகழ்ந்து, பராவிப் பேச வைக்கிறது. தானாக அவனைப் பற்றிச் சொல்வேன் என்று கிளம்பிய வேதம் ஒன்றும் சொல்ல முடியாமல் மனத்தோடு வாக்கும் சேர்ந்து திரும்ப வந்தது. ஆனால் அவன் உள்ளே நின்று மாயக் கவியாய் தன்னைத் தான் பாடிய திருவாய்மொழி காலம்தோறும் பேசி பேசி வாய்வெருவும் வியாக்கியானங்களைத் தந்தவண்ணம் உள்ளது. கடவுள் பேச்சில்தான் உணர்வு எழும். எழுந்த உணர்வு ஒண்டாமரையாள் கேள்வனை நோக்கும். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா பக்தி பெருகும். அது அத்தனைக்கும் சேமம் செய்த பெட்டகமே திருப்பாவை. அவன் நம்மை, நம்மிலிருந்து மீட்பது ஆச்சரியம். அவன் மாமாயன். அவன் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நம்மை அவன் கிருபைக்கு ஆளாக்குவது அன்னையாகிய திருமகள். அவன் மாதவன். இதை உணர்ந்தால் அந்தக் கணமே இருப்பிடம் வைகுந்தம். அவன் வைகுந்தன். ‘மாமாயன் மாதவன் வைகுந்தன்’ என்று என்று நம்மை அவன் நாமம் பலவும் புகல வைக்கிறாள் ஆண்டாள். நம்மைத் தெய்விகத்தின்பால் ரஸவாதம் செய்கிறது திருப்பாவை. அந்த நலம் திகழ் கோதைக்கே நாம் என்றும் ஆளாய் ஆவோமாக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
அருமையான விளக்கவுரை
ReplyDelete