Wednesday, December 21, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 05

மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடி
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ
சேயன் எனினுமே சேவைக் கரியானோ
ஆயர் குலவிளக்காய் ஆரா வமுதானான்
வேயர் குலவிளக்கால் வாழ்வில் துணையானான்
நேயன் நிமலன் நமக்கென்றும் அண்ணித்தான்
மாயப் பிறவி மயக்கறுத்தே மாமதியால்
ஆய தனக்கே அறக்கொள்வா னெம்பாவாய். 

மாயன் என்றாலே ஆச்சரியமானவன் என்று பொருள். ஆம். அவனைப் பற்றி நினைக்காமல் இருக்க என்ன என்ன உண்டோ அத்தனையிலும் நாம் ஆழ்ந்துள்ளோம். ஆயினும் எப்படியோ அவன் நம் வாழ்வில் புகுந்து ஆட்கொண்டு விடுகிறான். அவனுடைய ஆச்சரியமான வழிகளே நமக்கு உய்வு தருவன. ‘வந்தாய்போலே வாராதாய். வாராதாய் போலே வருவானே’ என்கிறார் ஆழ்வார். அவன் நமக்காக இவ்வளவு முனைவதும், கனத்த நம் வினைகளைக் காணாதான் போலே நம்பால் அருள் பூப்பதும் எதனால்? அவன் மாதவன் என்பதனால். மா என்னும் திருமகள் நமக்காகப் பரிந்து புரியும் அருளால். அவனை நம் நோக்கங்களுக்காகச் சேவித்தல் என்பது இன்றி, அவனிடம் நம்மை முழுவதும் அர்ப்பணிக்கும் போது, நமக்காக என்பது இன்றி நம் உள்ளம் உரை செயல் எல்லாமே அவனுக்காக என்று ஆகும் போது அது தூய்மையாகச் சேவித்தல் ஆகிறது. அவன் அதற்காகத்தான் காத்திருக்கிறான். அவனுடைய ஆதி நோக்கத்தை நாம் பூர்த்தி செய்யும் அந்தக் கணத்தில் அவனுடைய குளிர்ந்த அருள் நம் மீது பாய்கிறது. அந்தப் பக்தி நம்மிடம் ஏற்படும்வரை அறிவினால் அறிய அரியவனாய் இருந்த அவனே பக்தியினால் சேவைக்கு எளியனாய் ஆகிறான். கண்ணனைப் பற்றி நினைத்தால் ஒவ்வொன்றும் ஆரா அமுதம்தான். ஆயர் குலவிளக்காய் உதித்தவன். ‘வேயர் பயந்த விளக்கான’ ஆண்டாளால் நம் வாழ்க்கையில் என்றும் துணையாக நிற்பவன். நேயம் என்னும் தூய சிநேகமே வடிவானவன். அவனை நினைக்கும்தொறும், சொல்லும் தொறும் நம்மை மலம் அகற்றித் தூய்மை ஆக்குபவன். நம் உயிருக்கும் உயிரானவன். எனவே நம்மை விட நமக்கு அண்மையானவன். அவித்தை என்னும் கர்மங்களால் கட்டுண்டு பிறவியிலிருந்து பிறவி என்னும் மாய மயக்கில் உருளும் நம்மை, மயக்கறுத்து, பூர்ண ஞானம் ஆன மாமதி தந்து, நமக்கு என்றும் ரக்ஷகன் ஆகிய தனக்கே முற்றிலும் ஆளாய்க் கொள்வான். ஏனெனில் ஆண்டாளின் பலம் நமக்கு உண்டு. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



1 comment:

  1. சுந்தரராமன் ப திருமெய்யம்December 22, 2022 at 1:23 PM

    ஆம். | ஆண்டாளின் பலம் நமக்கு உண்டு. |

    ReplyDelete