Wednesday, December 28, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 13

புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.

புள் என்பது கருடனைக் குறிக்கும். கருடன் என்பது வேதம் என்பதற்கான குறியீடாக வைணவம் உரைக்கிறது. வேதாத்மா விஹகேச்வர: - பறவைகளில் தலைவனான கருடன் முழுவதும் வேதவடிவமானவன் - என்று ஸ்ரீஆளவந்தாரின் சதுசுலோகீ கூறுகிறது. வேதம் என்பதே புலன்களுக்கெட்டாத பரம்பொருளைப் பற்றித் தெரிவிப்பதாகும். உலகத்தையெல்லாம் உள்ளே ஈச்வரன் உள்ளுயிராய் நின்று தாங்குகிறான் என்று உபநிஷதம் கூறுகிறது. ‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்’. வேத வாக்கியங்களைப் ’புள்ளின் வாய்க்கூற்று’ என்பது குறிக்கிறது. பாரை வெறுமனே ஊனக்கண் கொண்டு நோக்கினால் காலம், தேசம், வர்த்தமானம், பொருட்கள், ஜீவர்கள் என்று தெரிகின்றனர். ஆனால் வேத வாக்கியங்களாகிய சாத்திரக் கண் கொண்டு நோக்கினால் அதே உலகம் கடவுளின் விசுவ வடிவமாகக் காட்சி தருகிறது. இதையே திருமூலர், ‘மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில்  மறைந்தது மாமத யானை; பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’ என்று பாடுகிறார். உலகைக் கடவுளின் வடிவமாகக் கண்டு அதில் தான் ஓர் அங்கம் என்று உணர்வது உண்மையான உள்ளம். அதுவே உலகம் என்ற அகங்கார மயமாகக் கண்டு தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது உள்ளத்தின் கள்ளம். எனவே புள்ளின் வாய்க்கூற்றினில் பார்வண்ணம் காணும் பொழுது கள்ளம் தவிர்கிறது. உள்ளத்தில் உண்மை ஒளிர்கிறது. உள்ளத்தில் புலரும் பொழுது உயிர் உத்தமனை நாடியே தீரும். இவ்வாறெல்லாம் உயர்ந்த தத்துவங்களையும், அனுபவங்களையும் தன்னகத்தே கொண்டது நம்பிள்ளை போல்வார் அருளிய முப்பத்தாறாயிரப்படி போன்ற உரைகள். இவற்றில் எல்லாம் தோய்ந்து ஆழும் ஒருவரைக் குறித்து உலகின்பால் கவலை கொண்டவர் ஒருவர் சொல்வதாக அல்லது பாடுபவர் தாமே தம் நெஞ்சுக்கு உரைப்பதாக இங்கே நாடகப் பண்பு அமைந்திருக்கிறது. ‘இவற்றையெல்லாம் நீங்களே உங்களுக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டு அமைதியாகச் செல்ல முடியுமா? உலகம் வாழ வகை செய்ய வேண்டாமா? யாரும் கேட்க விரும்புவதில்லை என்று சொல்லித் தள்ளிவிட முடியுமா? ’பாருலகு உய்ய பகவத் விஷயம் அனைவரையும் கூட்டிச் சொல்ல வேண்டும்’ என்று ஸ்ரீஆண்டாள் இட்ட கட்டளையை மறக்கலாமா? உலகினர் நிச்சயம் இதில் ஈடுபடுவார்கள் என்று பொறுமை காத்து, மெல்லப் புகன்று அவர்களை வெற்றி கொள்ளுவதன்றோ ஆண்டாளுக்குச் செய்யும் தொண்டு? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment