Wednesday, December 21, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 04

ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்
ஆழ்பொருள் அத்தனையும் ஆசிலோர் தாம்வடித்தார்
ஊழிதோ றூழி யுளத்தில் பெயராமே
வாழி யுலகளந்த வண்ணத் திருமாலைப்
பாழில் பிறவி பயிலுமோர் நற்றுணையாய்
வாழ்த்தி மனத்திருத்தி வஞ்சமிலா வாழ்க்கையினில்
ஏழ்மைக்கும் ஈடாய் இயற்றுவோ மெம்பாவாய். 

‘இந்தப் பரமஞானத்தைக் காலம் கனியும் போது உனக்குள்ளேயே பெறுவாய்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன் பகவத் கீதையில். காலம் கனியும் போதே பக்குவமும் பிறக்கிறது. ஆனால் காலத்தை ஒருவர் கருத்தை நோக்கிச் சுழட்ட வேண்டியிருக்கிறது. காலமோ திருமாலில் கையில் சுழலும் ஆழி. காலம் பிறழாமல், தவறாமல் சுழட்டும் திருமால் அச்சுதன். அச்சுதன் என்றாலே தவறாதவர் என்று பொருள். ஆனால் பிரபஞ்சத்தையே சுழட்டும் அச்சுதனையும் சுழட்டும் இரகசியத்தைக் கண்டவள் ஆண்டாள். அவள் மண்ணின் மாவடிவம். ஆனாலும் விண்ணையும் வளைத்த கோதை. அந்த இரகசியமோ அன்பு. அனைத்துலக இரகசியமும் ஒற்றை வார்த்தையில் அடைந்து கிடக்கிறது. அருளைத் தேடி அலைகிறது உயிர். ஆனால் அந்த அருளோ ஒரு தாய் பெற்றெடுக்கும் குழந்தை என்பதைச் சொல்லுகிறார் திருவள்ளுவர். ‘அருள் என்னும் அன்பு ஈன் குழவி’. அன்பு என்னும் தாய் அருள் என்னும் குழந்தையைப் பெறுகிறது. காரணம் அன்பில் கட்டுண்டு போகிறது கடந்தும் கரந்தும் இலகும் கடவுள். அன்பின் உருவாய் ஆனவள் ஆண்டாள். அந்த வான்கோதை பேசிய பேச்சனைத்தும் பேசாப் பொருளைக் கர்ப்பம் தரித்தது. அவள் பேச்சின் ஆழத்தை உணர்ந்த ஆசிரியர்கள் குற்றமேயற்றவர்கள். என்ன குற்றம்? இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர், ஆண் பெண் என்று பிரிவினை பார்க்கும் குறையற்றவர்கள். ’எல்லோரும் போந்தாரோ’ என்று கேட்கும் ஆண்டாள், ‘வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வாருங்கள்’ என்று அழைக்கும் பெரியாழ்வாரின் மகள். ஆழ்வார்களின் தன்மையையும் விஞ்சி நிற்கும் பேரியல்பு உடையவள் ஆண்டாள். அவள் கூறிய ஆழ்பொருளை நல்லாசிரியர்கள் தம் விரிவுரைகளில் தேக்கி வைத்தார்கள். அந்த ஆழ்பொருளில் தோய்ந்தவர்கள் பின் எதற்காக ஊழியைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்கள்? ஊழிக்கு முன்பிருந்து ஊழிக்குப் பின் வரையில் உள்ளதனைத்தும் உலகளந்தானின் திருவடிகீழது என்னும் போது உத்தமனை விட்டு யார்தான் பிரிவது எப்போது? அவன் நினைவு விலகாமல் இருக்கும் போது பிறவியே பாழ் இல்லாத பிறவியாக ஆகிவிடுகிறது. அவனை மறந்தால் அந்த முத்தியும் பாழ் ஆக முடிகிறது. மாயக் கள்வன் மனத்தில் இருந்தால் வாழ்க்கையில் வஞ்சம் இருப்பதில்லை. நெஞ்ச நிறைவும் குறைவதில்லை. அலைபோன்று எழுவதே இயல்பாக இருக்கும் பிறவியை எழுமை என்றே சொல்லலாம். எத்தனை முறை எழுந்தாலும் அவன் பேர் வாயில் உண்டே! பின் என்ன இந்த உலகமே வைகுந்த நாடுதானே! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


1 comment:

  1. சுந்தரராமன் ப திருமெய்யம்December 22, 2022 at 1:21 PM

    ஆஹா, ஆஹா

    ReplyDelete