கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய்.
*
திருப்பாவை என்ன செய்கிறது நம்முள்? கற்றவரே ஆயினும் கண்ணன் அருள் இல்லாது போனால் பிரபத்தி நெறியில் ஈடுபாடு தோன்றாது என்பதை இராமாநுசர் ஒரு வித்வானுக்கு உபதேசித்தும் அவர் தமக்கு அதில் ருசி தோன்றவில்லை என்று சொன்னார் என்று வியாக்கியானங்கள் தெரிவிப்பதில் பார்க்கிறோம். கல்வியினால் ஆய பலன் பிரபத்திதான் என்பதைக் கல்வெட்டாக ஆக்கிவைத்தார் திருவள்ளுவர். ‘கற்றதனால் ஆய பயன் என் கொல்? வாலறிவன் நல் தாள் தொழார் எனின்?’ அந்தத் துர்க்கதியெல்லாம் கற்றவர்க்கு ஏற்படாமல், அவர்கள் நெஞ்சத்தில் குடிகொண்டு காக்கிறது திருப்பாவை. கல்வியின் பயனை நாம் எய்தச் செய்கிறது நாரணர்க்கு ஆக்குவதன் மூலமாக. கல்வி என்பது அகங்காரத்தின் கையாளாக ஆகாமல் கடவுள் காதலுக்கு ஊற்றாக ஆகும் போது அங்குத் தொடர்ந்த பரவச அலைகள் எழுந்தவண்ணம் உள்ளன. அண்டபேரண்டத்திற்கெல்லாம் நாயகனான கோபாலனை ஈர்த்து நம்பால் கனிவுடன் கருத்துகொள்ளும் படியாகக் குனிக்கிறது ஆண்டாளின் அருள். குனித்தல் என்றால் வளைத்தல். நாம் முக்தி என்றவுடன் விட்டால் போதும் நம் வரையில் காரியம் ஆனால் போதும் என்று தனித்தவம் என்று முயலாமல் கண்ணன் அடியார் என்ற திரளாக்கி அந்த விண்ணும் விழைந்து நம்மோடு கலக்கும்படி ஆக்குவதும் திருப்பாவை. வினை செய்தால் அதன் பலன் என்பதே நாம் பழகிய நெறி. வினைப்பலன் சுமந்து, வினைப்பயம் விரட்ட வினையே ஈட்டும் வாடிக்கை நம்முடையது. அதை மாற்றி விண் நெறி காட்டும் திருப்பாவை. மாதவனோ நம் மனத்துக்கு இனியவன். மாதவன் கோதையான ஆண்டாளோ நம் மனத்துக்கு இனியவர். ஆண்டாள் அருளிய திருப்பாவையோ நம் மனத்தில் தங்கி நம்மை மாதவனுக்கும், மாதவன் கோதைக்கும் இனியவர் ஆக்கும் ரஸவாதம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment