Saturday, December 31, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 16

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய்.

வல்லவனான கண்ணன் நினைத்தால் உயிர்கள் அவனை நோக்கித் திரும்பி அவனிடமே ஈடுபாடு கொள்ளத்தான் வேண்டும். உலக உயிர்களுக்கெல்லாம் ஏக நாயகன் ஆன கண்ணனின் அழகிலும், ஆணையிலும், ஆதரவிலும் ஈடுபட்டுத் தரித்து நிற்கும் ஜீவர்கள் அனைவருமே அவனுக்கு உற்ற நங்கையர் போன்றவர்கள். உலக விஷயங்களில் பொதுவாக ஆண் என்பதற்கு முக்கியத்துவமும், முனைப்பும் தரப்படுகிறது. அது சரியா தவறா என்பதை விட வழிவழியாக வரும் ஒரு பழக்கச் சிந்தனை என்றும் சொல்லலாம். ஆனால் உண்மையான ஆன்மிகம் என்பது பெண்மையின் கண்களைக் கொண்டு உலகைக் காணப் பழகுதல். பெண்மை என்பதை உள்ளபடி நன்கு புரிந்து கொள்ளும் பொழுதே ஆண் என்பது பொருளுள்ளதாக ஆகிறது. பெண்மை என்றால் அலட்சியம், மென்மை, வலிமையின்மை, சார்ந்து இருக்கும் தன்மை என்றெல்லாம் சொல்லித் தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்ளும் போது ஆண் வெற்று மனப்பாரத்தில் மாட்டிக் கொள்ளும் ஜீவன். ஆனால் கடவுளே ஒரே நாயகன். அவனுக்கு உற்ற, அவனை என்றும் சார்ந்தே இருக்கும் தன்மை பெற்ற, அவனால் தன் நன்மையும், ஆனந்தமும், வாழ்ச்சியும் என்று, என்று இந்த ஜீவன் உணர்கிறதோ அன்றே தன் உள்ளார்ந்த இயல்பு ஆன சேஷத்வம் கடவுளை நோக்கப் பெண்மையாக உணரப் படுகிறது. அப்பொழுது இதுவரையில் தான் ஆட்சி செலுத்தும் பெண்மை என்பது மாறித் தனக்குப் போதிக்கும் குருவே பெண்மை என்ற போதம் எழுகிறது. அந்தப் போதம் எழுந்தால்தான் திருப்பாவையும் புரிகிறது. அந்தக் கண்ணனின் குழலோசையே வேறு வடிவில் திருப்பாவையாகி அனைவரையும் ஈர்க்கிறது. கடவுளை விட்டு விலகி ஓடும் ஜீவர்களை இப்படித் திருப்பாவை என்னும் குழலோசையால் ஒன்றுறப் பிணத்து ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனம் இன்றி அனைவருக்கும் மாதவனை விட்டுப் பிரிய மனம் இன்றி ஆக்குவதால் அவன் மாயனே! தூயவர்களின் நல்லுரைகளால் தெளிந்து அந்த மாயனின் கோயில் வாசலின் முன்னம் கூடி நிற்கும் திருப்பாவை கூட்டத்தார்க்கு ஒரு பொது நன்மை உண்டு. அவர்களுடைய மனமே அவர்களுக்கு உற்ற காவலனாகி விட்டது இப்பொழுது. தோயும் உளமே அவர்களுக்கு நந்தகோபனாக ஆகிவிட்டது. பகவத் விஷயத்தோடு நம்மைச் சேர்த்து வைப்பது எதுவோ அதுவே உண்மையில் நந்தகோபன். இந்த உயிர்கள் என்னும் பசுக்களைச் சிருட்டிக்கு ஆதியில் அவ்யக்தம் என்னும் கொட்டிலில் அடைக்கும் ஆயன் அவன். அவனே இந்தப் பிறப்பில் திறந்து விட்டு மேய்க்கின்றான். ஆதியிலேயே இந்த உயிர்களுக்கு இயல்பாக விதித்ததே சேஷத்வம் கொண்டு செய்யும் தொண்டே ஆகும். அந்த உயிர்த்தொண்டை நாம் உணர்வின் முதிர்வில்தான் புரிந்து கொள்ளவும் இயற்றவும் முடியும். அந்த உயிர்த்தொண்டு வாய்ந்து விட்டால் அதுவே உண்மையில் வாழ்ச்சி ஆகும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment:

  1. ஆதியிலேயே இந்த உயிர்களுக்கு இயல்பாக விதித்ததே சேஷத்வம் கொண்டு செய்யும் தொண்டே ஆகும். அந்த உயிர்த்தொண்டை நாம் உணர்வின் முதிர்வில்தான் புரிந்து கொள்ளவும் இயற்றவும் முடியும். அந்த உயிர்த்தொண்டு வாய்ந்து விட்டால் அதுவே உண்மையில் வாழ்ச்சி ஆகும். ..

    Excellent Swami. Adiyen Ramanuja Dasan

    ReplyDelete