Saturday, December 31, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 15

எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்

பகவத் விஷயத்தைப் பற்றி அனைவரும் அறிய வேண்டாமோ? நீரே உமக்குள்ளேயே திருப்பாவையைக் கற்று மகிழ்ந்தால்மட்டும் போதுமா? - என்று தனித்தவம் இயற்றும் ஒருவரை ஒதுங்கிப் போகவிடாமல் ஆண்டாள் கூட்டத்தார் அனைவரும் வந்து கூப்பிட, தனித்தவம் இயற்றும் அவரோ இவர்களுக்குப் பதில் சொல்வதாக அமைந்த பாட்டு இது. 

இளம் நெஞ்சத்தை உடையவரே! (இளம் என்பது அழகைக் குறிக்கும்) பகவத் விஷயத்தில் தோய்வதால் அழகான நெஞ்சத்தை உடையவரே! இன்னமும் ஏன் தயங்குகிறீர்? எப்படிச் சொல்வது என்று கவலைப் படுவானேன்? ஆன்றோரின் உரைகள்தாம் இருக்கின்றனவே! போதாததற்கு உம் கற்பனைவளமும் பெரியதன்றோ! வாலறிவன் நற்றாளை அறியக் கூடிய பெரும் அறிவையும் படைத்தவர் அன்றோ நீர்! 

நானா? சரிதான். உங்கள் பேச்சுதான் பெரும் வலிமையோடு இருக்கிறது. அதன் அழகில் நான்தான் ஆழ்ந்து போகிறேன். 

ஏன் இப்படிப் பதிலாடிக் கொண்டு காலம் கடத்துகிறீர்? இந்த உலகிற்கு ஓதாமல் ஒளித்து வைத்துக் கொள்ளப் போகிறீரா? உமக்குப் பெரும் அறிவும், பகவத் விஷயத்தில் இத்தனை ஈடுபாடும் உண்டாக்கி வைத்தது அனைவருக்கும் அளிக்க அல்லவா? 

என்ன சொல்லுகிறீர்கள்? பகவத் விஷயத்தைச் சொன்னால் யார் கேட்பார்கள்? திருப்பாவையின் மகிமையைச் சொன்னால் கேட்பதற்கு ஆள் எங்கே? முன்னால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோர் கூட இப்பொழுதெல்லாம் நான் மொபைலில் கூப்பிட்டால் எடுப்பதில்லை. வழியில் எங்கோ பார்க்க நேர்ந்தால் வந்த வழியே திரும்பி வேறு வழியில் போய்த் தப்பித்துக் கொள்கிறார்கள். இன்னும் பலரோ என்னுடைய செல் எண்ணை ப்ளாக்கே பண்ணி விட்டதாகத் தெரிய வருகிறது. வாட்ஸப்பில் கண்டு பிடித்துவிடுவேனோ என்று செட்டிங்ஸை மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். காரணம் ஒற்றைக் காரணம். இவரிடம் பேசினால் பகவத் விஷயத்தைப் பேசுகிறார் என்பது. 

அடடா! இப்படியா மனம் தளர்வது? ஆள் வைத்து அடிக்காமல் இருக்கிறார்களே, அதிலிருந்தே தெரியவில்லையா, அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது என்று? மேலும் ஓடுவோர் ஓடட்டும். ஓடிப் பிறகு அவர்களாகவே வந்து சேர்ந்து கொள்வார்கள். இப்பொழுது தோய்வாரும் இருக்கிறார்களே? 

எங்கே? 

வாரும் வெளியே! வந்து தோய்வார் யார் என்று கண்டறிய வந்து பார்ப்பீராக! 

எல்லாம், வல்லவன் வகுத்த வழி அல்லவா? அந்த வல்லவனை, ஆண்டாளுக்கு மிகவும் நல்லவனைப் பாடுவோம் வாரும்! அவன் மனம் வைத்தால் வேண்டாம் என்று ஓடுவோரும் விரும்பி வருவார்கள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment