Friday, December 23, 2022

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 08

கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய
வாழ்ந்தோம் வரம்பெற்றோம் வையம் திருநாடாய்
ஏழ்மைக்கும் உய்ய இயன்றநல் ஈடாகித்
தாழ்ச்சி தவிர்ந்தோம் நமனுக்கிங் கென்கடவோம்
வாழ்ச்சி விழைந்தோம் விரிநீர் உலகெங்கும்
சூழ்ச்சி தவிர்ந்து சுடரும் மனத்துள்ளீர்
ஏழ்பாரு முய்ய இயம்பேலோ ரெம்பாவாய். 

கிழக்கில் வானில் ஒளியின் கோடுகள் படிந்து காட்டுவது வெள்வரைத்தல். விரைவில் புலர்ந்துவிடும் என்பதற்கான கட்டியம். புறத்தில் சூரியன் புலர்வதும் அகத்தில் போதம் எழுவதும் ஒன்றுதான். கதிரவனைக் கண்டதும் மலர்வது தாமரை. கடவுளின் போதத்தில் மலர்வது உணர்வு. ‘ஒண்டாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு’ என்கிறார் பொய்கையார். கீழ்வானம் வெள்வரைத்தவுடன் கோவிந்தன் வாசலில் கூடிவிடுவது இயற்கை. மறைகளை ஓதியவரும் அதன் உள்ளர்த்தத்தைத் தவறவிட்டனர். அத்தகைய அருமைப்பாடுடைய உட்பொருளை யாவரும் இழக்கவொண்ணாதபடி அருளியவள் ஆண்டாள். அதனால் வாழ்ந்தோம். அவனுக்கே உரியவராய் அனைத்து கைங்கர்யங்களும் இயற்றும் வரம் பெற்றோம். பிறகு என்ன? வையம் திருநாடு ஆகியது. உலகம் ஸ்ரீவைகுண்டமாக மாறியது. பிறவி என்பதே கைங்கர்யத்திற்கான வாய்ப்பாக மாறியது. அவனுக்குத் தந்தையாய், அவனுக்குத் தாயாய், அவனுக்குத் தோழனாய், அவனுக்குக் காதலியாய், அவனுக்குக் குழந்தையாய், அவனுக்குச் சீடனாய் எத்தனை முறை பிறந்தாலும் என்ன, அத்தனையும் அடிக்கழஞ்சு பெறும் அன்றோ! நாம் பெற்ற கைங்கர்ய வரத்தைக் காக்கும் கவசம் போல், ஈடு போல், ஈடு என்னும் வியாக்கியானம் நமக்கு இருக்க என்ன குறை? நமக்கு ஏது தாழ்ச்சி? நமனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லை. இந்த வாழ்ச்சியை உலக உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய விழைவு. கடைசி உயிர் இதைப் பெறும்வரை நாம் அவன் தொண்டில் பிறக்க ‘நாயந்தே’ என்று சித்தமாக  இருக்கிறோம். வாழ்ச்சி பெற, இதயம் திறந்தால் போதும். இழப்பதற்குத்தான் ஏகப்பட்ட சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியை எல்லாம் தவிர்ந்து உலகத்தில் உள்ளீர்! சொல்லுங்கள் திருப்பாவை! உணருங்கள் திருப்பாவை! உங்கள் வாழ்க்கை திருப்பாவை வாழ்க்கையாய் மலரட்டும்! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


1 comment:

  1. சுந்தரராமன் ப திருமெய்யம்December 23, 2022 at 1:50 PM

    நன்றி. அருமை.

    ReplyDelete