புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்கு கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.
*
பொழுது விடிவதற்கு முன்னே புட்கள் ஒலிக்கின்றன. போதம் எழுவதற்கு முன்னர் ஆர்வங்கள் பொங்குகின்றன. ஆனால் கள்ளம் தவிரும்வரை மாயக்கள்வன் வருவதில்லை. நம்முடைய கள்ளம் என்ன? அவனுடையது இந்த ஆத்மா. இதை நம்முடையது என்று நாம் நினைத்ததுதான் ஆதி முதல் கள்ளம். அவன்தான் நம்மைக் காக்க முடியும். ஆனால் நாமே நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். அதுவே அடுத்து அடுத்து நாம் செய்யும் கள்ளம். கள்ளம் நம்முள்ளிலிருந்து முற்றும் அகன்றால் கண்ணன் என்றுமுளன், எங்குமுளன் என்ற உண்மை நமக்கு நிதர்சனம் ஆகும். என்றுமிருந்தும், எங்குமிருந்தும், இங்குமிருந்தும், நம்முளிருந்தும் ஆனபோதிலும் அவன் இல்லை என்று நாம் நினைக்கும்படியாக நிற்கிறானே அதுவே அவன் செய்யும் கள்ளம். உற்றவர்க்கு உணர்த்தியும், செற்றவர்க்கு ஒளித்தும் அவன் ஆடும் நாடகம்! அவனுக்காக ஏங்கும் ஏக்கம் அத்தனை உயர்ந்தது! அந்த ஏக்கம் நம்மைத் திருப்பாவையிலும், அதற்குத் தெள்ளமுதமான விளக்க உரைகள்பாலும் ஆழ்ந்து ஈடுபட வைக்கிறது. அப்பொழுது நம் நெஞ்சம் அவன் அருள்பாயும் பள்ளமடையாகிவிடுகிறது. அப்படி ஆக்கிவிடுகிறார்கள் பூர்வாசாரியர்கள். தேடி எங்கும் காணாத பரம்பொருள், திருப்பாவையிலும், அதன் உரைகளிலும் நாம் ஈடுபட்டு ஆழும்போது தானும் கூடவந்து நம்மோடு குளிர்ந்தாடுவது போன்ற உணர்வு நமக்கு உண்டாகிறது. ஆம் அதற்கான நேரம் வந்துவிட்டது. துள்ளியெழுந்து தோய்வோம் வாருங்கள் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment