உலகத்தில் கடவுள், பக்தி, மறுமை அல்லது தீர்ப்பு நாள் என்று மனிதர்கள் கதியைப் பற்றிப் போதிக்கும் நூல்கள் பல உண்டு. ஆனால் மனிதர் உண்மையில் இந்தமாதிரித் தோன்றி வளர்ந்து அலைந்து முதுமை எய்திப் பின் மாயும் ஸம்ஸாரியான பிராணி இல்லை. அறிவே வடிவானதும், என்றும் உளதன்மையும், உணர்வே ஆனந்த வடிவமான அந்த ஒரே உன்னதமான பிரம்மமேதான். இப்படி ஸம்ஸாரிகள் போல் வியவாகாரிக (நடைமுறை நடவடிக்கைச் செயல் நிலை) நிலையில் ஏற்படும் அனுபவமும், காட்சியும் தன் சொந்த இயல்பைப் பற்றிய ஆத்ம ஞானம் உதயம் ஆகும் போது வெறும் மித்யை என்று தெரியும். தான் என்றுமே அந்த சத் சித் ஆனந்த பிரம்மமாகவே இருக்கின்றோம் என்பது நிதர்சனமான சத்யமான, மறையாத அனுபவமாகக் கிடைக்கும் என்ற சிறந்த கருத்து எந்த நூலிலும் எந்தக் காலத்தும் வேறு எங்கும் இல்லை.
உலகத்தின் நல்ல காலம், நம் பாரதத்தில் வேதாந்தம் என்று சேமிக்கப்பட்டு இன்றுவரை பெரும் வாய்ப்பை நல்கும் அன்னபூரணியாக இருக்கிறது. நினைத்துப் பாருங்கள். இதே வேதாந்தம் உலகில் வேறு எங்குத் தோன்றியிருந்தாலும் என்றோ மறைந்து போயிருக்கும். இது ஒரு கருத்தா என்று அன்றைய உலகம் ஒதுக்கிவிட்டுப் போயிருக்கும். இங்கோ அதற்கே வாழ்க்கையை மாறி மாறி அர்ப்பணித்த ரிஷிகள், மகான்கள், யோகிகள், ஆண்களில், பெண்களில், இளையோரில், முதியவர்களில் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம், கிராமப்புறப் பாடல்களில், யாத்ரா நாடகங்களில், பலவேறு ரூபங்களில் இந்தியாவே காதலித்த ஒற்றைக் கருத்தாக இந்த அத்வைத வேதாந்தம் பரவி தழைத்து வந்திருக்கிறதே... இதை நினைத்தால் நமக்கே பெரும் வியப்பும், ஆயாசமும் ஒருங்கே தோன்றுகிறது.
இந்த அரும்பெரும் உலகளாவிய மூலதனத்தின் சுரங்கமாக நம் பண்பாடு திகழ்வதற்குப் பெரும் காரணம் அந்த ஒற்றை இளைஞர், நாற்பது வயது எட்டவில்லை, அதற்குள் அளப்பரிய பணிகள் - ஆம் ஆதிசங்கரர்தான். சங்கரர் லோக சங்கரர் என்பது எவ்வளவு சத்ய வாக்கு!
அவர்
போட்ட விதை என்ன விளைவு! சங்கராநந்தர்
என்று ஒரு மகான். பஞ்சதசி அருளிய வித்யாரண்யரின் குரு. சங்கராநந்தர் அருளியது ஆத்ம
புராணம் என்னும் நூல். 13 - 14 நூற். பெரும்யோகி. லம்பிகாயோகம் என்னும் முறையால்
நெடுநாள் பூமிக்குள் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புராணங்கள் அனைத்தின்
நோக்கமும் ஆத்மஞானம் என்னும் போது ஆத்மபுராணம் என்றே ஒரு கிரந்தம் எழுதியது
சாலவும் சிறந்தது. நாமெல்லாம் ‘நான்புராணம்’ எழுதுவதில் வல்லவர்கள். எப்பொழுது
பார்த்தாலும், எதைத் தொட்டாலும் ‘நான் அப்படி, நான் இப்படி’ என்று ஒரு கணமும்
ஓய்வின்றி நாம் பாராயணம் செய்வது ‘நான் புராணமே’ அல்லவா! அதை மாற்றி ஆத்ம புராணம்
என்று யோசிக்கக் கற்றால் அடையவேண்டியது அடையப்பட்டதாகும் என்று நினைத்தாரோ என்னவோ!
இந்த ஆத்ம புராணத்தை ஒருவர் ஹிந்தியில் மொழிபெயர்த்தார் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு
முன்னர். அவர் எங்குப் பிறந்தார் எப்பொழுது என்ற விவரங்கள் அகப்படவில்லை. அவர்
பெயர் சுவாமி சித்கனானந்தகிரி என்பதாகும். சிந்துதேசத்தில் பிறந்தவர் என்று
அத்தேசத்தவர்கள் சொல்லுகின்றனர். இவருடைய ப்ரஹ்மச்சர்ய ஆஸ்ரமத்தின் போது
ஹரித்வாரில் இருக்கும் கனகல் என்னும் தீரத்தில் இருந்து நியாய வியாகரணங்கள்
வாசித்துப் பின்னர் வேதாந்தம் பயிலக் காசிக்ஷேத்ரம் சென்றடைந்தார் என்று
தெரிகிறது. அங்கு ஸ்ரீபரமஹம்ஸ பரிவ்ராஜகாசாரியரான சுவாமி உத்தவாநந்தகிரி
என்பவரிடம் சந்நியாச தீக்ஷை பெற்றார். பிறகு சிலகாலம் மனம் முற்றிலும் ஒடுங்கி
நிர்விகற்பசமாதியில் ஆழ்ந்திருந்தார். பின்னர்த் தம் பணி ஏதோ இருப்பது போன்று
தெய்வசங்கல்பத்தினால் தீர்த்த யாத்திரை என்று புறப்பட்டுப் பலகோவில்களைத்
தரிசித்து, கத்தியவாட்டில் இருக்கும் பவநகர் என்னும் இடத்திற்குச் சென்றார்.
அங்குத் திவான்களாக இருந்த ஸ்ரீகௌரிசங்கர், விஜயசங்கர் என்னும்
அதிபக்குவிகளான சாதகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அங்கேயே பதின்மூன்று ஆண்டுகாலம்
இருந்து பலநூல்களை அருளினார். திவான்கள் வேண்டிக்கொண்டதற்கேற்ப ஹிந்திபாஷையில்
நான்கு முக்கியமான பெட்டகம் அனைய நூல்களைத் தந்தார். சங்கராநந்தரின் ஆத்மபுராணம்,
ஸ்ரீபகவத்கீதைக்குக் கூடார்த்ததீபிகை, ப்ரஹ்ம ஸூத்ரங்களின் அர்த்தங்கள் நிரம்பியதான தத்வாநுஸந்தானம், பல நியாயநூல்களின் கருத்துகளை ஒருங்குறத் தொகுத்துத் தந்ததான
நியாயப்பிரகாசம் என்பவையே அந்நான்கு. கணாத தர்க்கம், கௌதம தர்க்கம் இரண்டையும்
பயன்பாடு கருதி விளக்கம் சுருக்கமாகக் கூறிய நூல் நியாயப் பிரகாசம். நியாயம்,
வைசேஷிகம் என்னும் இரண்டு தர்சனங்களின் சாரம் எனலாம்.
இந்தநான்கு நூல்களையுமே தமிழில் கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகவும் அதிர்ச்சி
அடையமாட்டீர்களே ! ஆம். ஆத்மபுராணம் கோவிலூர் மடாலயத்து ஸ்ரீ வீரசுப்பைய
சுவாமிகளால் நல்ல தமிழ்நடையில் ஆக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சித்கனானந்த கிரி
அவர்கள் அருளிய ஸ்ரீ பகவத் கீதையின் கூடார்த்ததீபிகை என்னும் நூலையும்
ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளே தமிழில் கொண்டு வந்துள்ளார். ப்ரஹ்ம ஸூத்ர அர்த்தங்களை
ஒருங்குறத் தெளிவிக்கும் நூலான தத்வாநுஸந்தானம் என்னும் நூலை ஸ்ரீ கா. அரங்கநாதம்
பிள்ளை என்பவர் மொழி பெயர்த்துள்ளார். நியாயப்பிரகாசம் என்னும் பென்னம் பெரிய
நூலினை ஸ்ரீ சாது இரத்தின வேதாந்த விசாரணை சபையினருள் ஒருவராகிய ஸ்ரீ நாகரத்தின
நாயகர் மொழிபெயர்த்துள்ளார். அதனை வேதாந்த விசாரணைச் சபையில் ஒருவரும், தர்க்க
வேதாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும் ஆகிய ஸ்ரீ முருகேச முதலியார் அவர்கள் நன்கு
பரிசோதித்து வெளியிட்டுள்ளார். 1907 தொடங்கி இந்நான்கு நூல்களும் 1917க்குள் வந்து
நிறைவேறியிருக்கின்றன. மொத்தம் 3500 சொச்சம் பக்கங்கள், மூன்று ஆயிரத்து
ஐந்துநூறு, நுணுகிய பிரிண்டு. என்ன சாதனை இது! இதை உணரும் போது உங்களுக்கு
மயிர்க்கூச்செறியவில்லையா? இதுவோ நடந்த சாதனைகளில் ஒரு பத்துச் சதவிகிதம் அவ்வளவே.
நம்முன்னோர்கள் அவர்கள் ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளோ, ஸ்ரீ கரபாத்திர சுவாமிகளோ,
ஸ்ரீ வடிவேலு செட்டியாரோ, ஸ்ரீ முருகேச முதலியாரோ, ஸ்ரீ நாகரத்தின நாயகரோ,
ஸ்ரீ ராமசந்திர ஐயரோ, ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஐயரோ, ஸ்ரீ ராமசாமிப் பிள்ளையோ இன்னும்
கணக்கில் அடங்காத பெரியோர்கள் அவர்கள் காலத்தில் ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்குற
இயங்கி அளப்பரிய சாதனைகள் இயற்ற இயலும், ஆன்மிகச் செல்வத்தை எப்படிப் பாதுகாப்பது
என்பதை நமக்கு ஒளிமிகுந்த வழிகாட்டிகளாக நின்று செய்து காட்டவில்லையா? இத்தனைக்கும் வித்திட்டது அந்த ஒற்றை இளைஞர் அல்லவா?
ஸ்ரீ ஆதிசங்கரர் பாடுவது சரிதானே? என்ன ஆதாரம் என்றால் வேதாந்தம், ஞானிகள், உன்னுடைய, என்னுடைய, அவரவருடைய சொந்த அனுபவமே சாட்சி சான்று. மேலும் பாடுகிறார்:
‘பிரம்மமே தான் நான். (பிறந்து வளர்ந்து மறையும்) ஸம்ஸாரி அன்று;
பிரம்மத்தைக் காட்டிலும் பிறிது எதுவும் இல்லை நான்;
நான் இந்தத் தேகம் இல்லை;
இந்தத் தேஹம் என்னுடையதும் இல்லை;
நான் என்றும் உளனான ஸநாதனமேதான்’
(ப்ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரி ந சாஹம் ப்ரஹ்மண: ப்ருதக் |
நாஹம் தேஹோ ந மே தேஹ: கேவலோSஹம் ஸநாதந: ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
🙏
ReplyDelete