Tuesday, May 31, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 19

உபரி உபரி அப்3ஜபு4வோSபி பூருஷாந் 

ப்ரகல்ப்ய தே யே தமிதி அநுக்ரமாத்

கி3: த்வதே3கைக கு3ணாவதீ4ப்ஸயா 

ஸதா3 ஸ்தி2தா நோத்3யமதோSதிசேரதே || 



திருநாபிக்கமலத்திலே தோன்றின பிரம்மனை ஓர் அளவையாக வைத்து மேன்மேலும் இவ்வளவு நூறு மடங்கு இவ்வளவு நூறுமடங்கு என்று பிரம்மாக்களைக் கல்பித்து உன் ஒரு குணமான ஆநந்தத்தை எல்லைகாணும் விழைவால் முயன்ற வேத வாக்கானது என்ன ஆயிற்று? தொடங்கின தொடக்கத்திலேயே தொடர்ந்து நிற்கிறதே அன்றி அந்தத் தொடக்கத்தைத் தாண்டி மேலும் போக முடியவில்லையே! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, May 30, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 18

சீ வதா3ந்ய: கு3ணவாந் ருஜு: சுசி

ம்ருது3ர் 3யாளு: மது4: ஸ்தி2: ஸம: | 

க்ருதீ க்ருதஜ்ஞ: த்வமஸி ஸ்வபா4வத

ஸமஸ்தகல்யாண கு3ணாம்ருத உத3தி4: || 



ஸ்ரீஆளவந்தார் இங்கே ஒரு நாமாவளியே பாடுகிறார். ஆச்ரிதர்களுக்கு வசப்பட்டிருப்பவன் ஆகையாலே வசீ. தம்மை அடைந்தார்க்குத் தம்மையே நல்கும் வள்ளல் ஆகையாலே வதாந்ய:. ஸௌசீல்யம் என்னும் எளிவரும் இயல்பினன் ஆகையாலே குணவாந். அடியார்களுக்கு அருளும் போது அவர்கள் பக்குவத்திற்குத் தக்கபடியெல்லாம் தன்னை அமைத்துக் கொடுத்து அவர்களுக்குப் பக்குவத்தையும் உண்டாக்கி மேலும் மேலும் இலட்சியத்தை நோக்கி நடத்துபவன் ஆகையாலே ருஜு: அருள்வதற்கு அவர்களிடத்தில் ஏதேனும் காரணம் உண்டாக வேண்டும் என்று எதிர்பாராதே நிர்ஹேதுகமாக அருள்பவன் ஆகையாலே சுசி: அடியார்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாத ஸ்வபாவன் ஆகையாலே ம்ருது: அடியார்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தயையை உடையவன் ஆகையாலே தயாளு: ஒரு பேச்சுக்கு, அவன் தயையே இல்லாமல் இருந்தாலும் அவனை அடியார்களால் விடமுடியாத அளவிற்கு இனியவன் ஆகையாலே மதுர: அடியார்களைக் காக்கும் விஷயத்தில் எந்த மாற்றமோ சலனமோ இல்லாதவன் ஆகையாலே ஸ்திர: தன் அடியார்கள் இடத்தில் என்றும் எந்தப் பேதமும் இன்றிச் சமமான அக்கறை உடையவனாயிருக்கையாலே ஸம: அடியார்களின் காரியங்களைத் தன் காரியம் போல் நினைத்துச் செய்பவன் ஆகையாலே க்ருதீ, அடியார்கள் செய்த சிறிய நன்மைகளையும் பெரிதாய் நினைத்துப் போற்றுபவன் ஆகையாலே க்ருதஜ்ஞ: இப்படிப்பட்ட நீ இயல்பிலேயே அனைத்துக் கல்யாண குணங்களுக்கும் புகலிடமான அமுதப் பெருங்கடலாய் இருக்கிறாய் அன்றோ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, May 29, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 17

யத3ண்டம் அண்டா3ந்தரகோ3சரம் யத் 

3சோத்தராணி ஆவரணாநி யாநி

கு3ணா: ப்ரதா4நம் புருஷ: பரம் பத3ம் 

பராத்பரம் ப்3ரஹ்ம தே விபூ4தய: || 



அண்ட முழுமையும் எதுவோ, அண்டத்தினுள் இருக்கின்றவை எதுவோ, மேன்மேல் அடுக்கு அடுக்காக மூடியாய் அமைந்திருக்கும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற ஆவரணங்கள் எவையோ, மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என்பவையும், அவற்றை உள்ளடக்கிய பிரதானம் என்னும் பிரகிருதியும், ஸம்ஸாரத்தில் கட்டுண்டு சுழலும் ஜீவர்களின் மொத்தமும், அனைத்தினும் மேம்பட்ட ஸ்ரீவைகுண்டமும், அருள்வடிவாம் திவ்யமங்கள விக்ரகமும் எல்லாம் உன்னுடைய விபூதிகள், சரீரங்கள் அல்லவோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, May 28, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 16

உல்லங்கி4 த்ரிவித4ஸீம ஸமாதிசாயி 

ஸம்பா4வநம் தவ பரிப்3ரடி4மஸ்வபா4வம்

மாயாப3லேந 4வதாSபி நிகூ3ஹ்யமாநம் 

ச்யந்தி கேசித3நிம் த்வத3நந்யபா4வா: || 



(அசுரத் தன்மையால் சிலர் உன்னை அறிவதேயில்லை என்பது ஓரளவிற்கு உண்மையாயினும் அங்கும் அவர்களின் அசுரத் தன்மை எப்படி ஏற்படுகிறது? அவர்களும் ஜீவர்களில் ஒருவர்தானே? பிரகிருதியினாலும், அவர்கள் செய்த கர்மங்களின் பலன்களின் தொடர்ச்சியினாலும் அவர்களுக்கு அப்படிப்பட்ட தன்மை ஏற்படுகிறது? ஏன் அவர்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் இருக்கும் நீ அவர்களின் அசுரத் தன்மையை நீக்கி உணர்த்திவிட முடியாதா என்றால், அந்தப் பிரகிருதியே உன் ஆச்சரியமான விசித்ர மாயைதானே! அவர்களின் கர்மங்கள் கழிந்து அந்த ஜீவர்கள் பக்குவ நிலைக்கு வரவேண்டும் என்று நீயும் உன் உள்ளபடியான ஸ்வரூபத்தை உன்னுடைய ஆச்சரியமான மாயையால் மறைத்துவிடுகிறாய் அன்றோ!) 

உள்ளபடியான உன் ஸ்வரூபம் இருக்கிறதே அஃது எப்படிப் பட்டது? காலத்தால் அளவுபடுதல், இடத்தால் அளவுபடுதல், பொருளின் தன்மையால் அளவுபடுதல் என்னும் மூவித எல்லைகளையும் கடந்தது உன் ஸ்வரூபம். தனக்குச் சமமான ஒன்று, தனக்கு அதிகமான ஒன்று இருக்கலாம் என்னும் சாத்தியத்தையும் கடந்தது உன் பிரபுத்தன்மை மிக்க ஸ்வபாவம். உன்னாலேயேதான் உன் ஆச்சரியமான மாயையின் பலத்தினால் அந்த உன் நிஜமான ஸ்வபாவம் பொதுவாக ஜீவர்களின் பார்வைக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் சில ஞானிகள் இருக்கின்றார்கள், அவர்கள் உன்னையே உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று உன்னையன்றி வேறு இல்லாத தன்மையர்கள் ஆகையாலே உன் நிஜமான ஸ்வபாவத்தை உள்ளபடி எக்காலமும் இடைவிடாது பார்க்கின்றார்கள் அல்லவா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, May 27, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவாந்தார் - 15

த்வாம் சீலரூபசரிதை: பரமப்ரக்ருஷ்ட 

ஸத்த்வேந ஸாத்த்விகதயா ப்ரப3லைச் சாஸ்த்ரை: | 

ப்ரக்2யாத தை3 பரமார்த்த2விதா3ம் மதைச் 

நைவாஸுரப்ரக்ருதய: ப்ரப4வந்தி போ3த்3து4ம் || 



எளிவரும் இயல்பான உன்னுடைய சீலகுணத்தால் உன்னைச் சிலர் அறிந்துகொள்ளக் கூடும். (பழைய ராஜாக் கதை ஒன்று உண்டு. ஒரு குழந்தையைத் தன்னுடையது என்று பல பெண்கள் உரிமை கொண்டாடவும், ராஜா ஓர் உபாயத்தினால் அந்தக் குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்று கண்டு பிடித்தார் என்று வரும். பெண்களை வரிசையாக நிற்க வைத்து விட்டு முன்னால் சேறு தரையில் பரப்பி வைத்துக் குழந்தையை விளையாட விட்டுவிட்டார் என்றும், குழந்தை சேற்றில் போய் அளைய மற்ற பெண்கள் அதை ஒரு காட்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்க, பெற்ற தாயானவள் எல்லாவாற்றையும் மறந்து ஓடிச்சென்று தானும் சேற்றுள் புகுந்து குழந்தையைத் தூக்கிச் சுத்தப் படுத்தினாள். அதன் மூலம் அவள்தான் தாய் என்று ராஜா நிரூபித்தார் என்று கதை. அதைப் போல் இந்த ஜீவனின் துர்க்கதி கண்டு பொறுக்காமல் தானும் இவனோடு ஒக்க இந்த ஸம்ஸாரத்தில் குதித்துப் படாதன பட்டு ஜீவனை மீட்பது சீல குணம்.). வேதங்கள் யாரைச் செந்தாமரைக் கண்ணழகன் என்று புகழ்கின்றனவோ அதை வைத்து உன்னைத் தெரிந்து கொள்ளலாம். வேதங்களும், இதிகாசங்களும், பல புராணங்களும் சொல்லும் சரிதைகளை வைத்து ஒருவர் உன்னைத் தெரிந்து கொள்ளலாம். சுத்தஸத்வமயமான நித்ய விபூதி யாருக்கு உண்டு என்று ‘தத்விஷ்ணோ; பரமம் பதம்’ என்று வேதமும், பகவத் சாஸ்திரமாகிய ஆகமங்களும் சொல்கின்றனவோ அவற்றை வைத்து ஒருவர் உன்னைத் தெரிந்து கொள்ளலாம். ஸாத்விகமானவை என்று வித்வான்கள் மத்தியில் பிரபலமான சாஸ்திரங்களைக் கொண்டும் உன்னை ஒருவர் தெரிந்து கொள்ளலாம். பிரசித்தமான தெய்வத்தினுடைய பரம அர்த்தமான உயர்வற உயர்நலத்தை நுட்பமாகக் காணும் ஞானிகளின் சித்தாந்தங்களைக் கொண்டும் ஒருவர் உன்னைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படையாக ஒருவரிடம் அசுரத்தன்மை இல்லாமல் தெய்விகத் தன்மை இருந்தால் அல்லவோ அவ்விதங்களில் அனைத்தாலுமோ அல்லது ஒன்றினாலுமோ தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் சொந்த இயல்பே அசுரத்தன்மையாக இருந்தால் எப்படி அவர் எந்த விதத்தில்தான் உன்னைத் தெரிந்து கொள்ள முடியும்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, May 26, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 14

கஸ்யோத3ரே ஹரவிரிஞ்சிமுக2: ப்ரபஞ்ச

கோ ரக்ஷதீமமஜநிஷ்ட கஸ்ய நாபே4: | 

க்ராந்த்வா நிகீ3ர்ய புநருத்3கி3ரதி த்வத3ந்ய

: கேந வைஷ பரவாநிதி க்யங்க: || 



யாருடைய வயிற்றில் ஹரன், பிரம்மா முதலிய படைப்பு அனைத்தும் காப்புண்டிருந்தது? நாபியிலிருந்து உண்டான இந்தப் படைப்பை யாரோ காக்கின்றனர்? ஒரு பொருளும் மிச்சமின்றி அனைத்தையும் அளந்து தன் திருப்பாதம் சாத்தியும், உண்டாய பொருளை ஒரு காலத்தில் விழுங்கியும் பின் மீண்டும் வெளிநாடு காண உமிழ்ந்தும் போருகின்றவர் நின்னையன்றி வேறு யார்? வேறு யாரை இவ்வுலகிற்கு நாதன் என்று சந்தேகமாவது படமுடியும்? 

***

Wednesday, May 25, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 13

வேதா3பஹார கு3ருபாதக தை3த்யபீடாத்3 

யாபத்3 விமோசந மஹிஷ்ட்ட2 பலப்ரதா3நை: | 

கோSந்ய: ப்ரஜாபசுபதீ பரிபாதி கஸ்ய 

பாதோ33கேந சிவஸ் ஸ்வசிரோத்4ருதேந || 


வேதங்களை அசுரர் திருடிய போதும், குருபாதகச் செயல்களிலும், தைத்யர்களால் ஏற்பட்ட பல இன்னல்களிலிருந்தும் காப்பாற்றியதாலும், உயர்ந்த பலன்களை நீர் அளிப்பதனாலும் உம்மை விட்டால் பிரம்மா, பசுபதி முதலிய தேவர்களை வேறு யார் காத்தருள்கிறார்கள்? யாருடைய திருப்பாத கமலங்களினின்றும் பெருகிய கங்கையைத் தலையில் சடையில் தாங்கியமையால் ருத்ரன் சிவன் என்று சொல்லப்பட்டார்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, May 24, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 12

: ஸ்ரீ: ச்ரிய: பரமஸத்த்வஸமாச்ரய:

: புண்ட3ரீக நயந: புருஷோத்தம: : | 

கஸ்ய அயுதாயுத தைக கலாம்காம்சே 

விச்வம் விசித்ர சித3சித்ப்ரவிபா43வ்ருத்தம் || 



உலகில் சித் அசித் எதுவாயினும் திகழ வேண்டுமாயின், தன்னுருவு கொண்டு நிலவ வேண்டுமாயின் அஃது ஸ்ரீதேவியைச் சார்ந்து நடைபெறுவது. அந்த ஸ்ரீதேவியும் யாரைச் சார்ந்து திகழ்ச்சி, இருப்பு கொண்டு நிலவுகிறாரோ அவர் யார்? பரம ஸத்வம் ஆகிய சுத்த ஸத்வமான திருமேனியைக் கொண்டவர் யார்? தாமரைக்கண்ணர் என்று கொண்டாடப்படுபவர் யார்? புருஷோத்தமன் என்று வேதங்களிலும் தானே திருவாய் மலர்ந்த ஸ்ரீகீதையிலும் கொண்டாடப்படுவோன் யார்? யாருடைய பல்லாயிரம் கோடி பாகங்களில் ஒன்றாக இந்த விசித்ரமான சித அசித் என்னும் விபாகத்தைக் கொண்ட பிரபஞ்சம் அனைத்தும் இருக்கிறது? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, May 23, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 11

ஸ்வாபா4விக அநவதி4காதி சித்ருத்வம் 

நாராயண! த்வயி ம்ருஷ்யதி வைதி3: : | 

ப்3ரஹ்மா சிச்தமக2: பரம: ஸ்வராடி3த் 

யேதேSபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே || 



யார் வேதவேதாந்தங்களைப் பரம்பொருள் யார் என்று அறியவும், மோக்ஷத்திற்கான மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் உரிய சான்று நூலாகக் கொண்டு அதனைக் கற்று அதன் முடிவுகளை வைத்து ஒழுகுகின்றார்களோ அவர்கள் வைதிகர்கள். அந்த வைதிகர்களிடம் சென்று ‘நாராயணனே தன்னியல்பிலேயே எல்லையற்ற சிறப்பும் ஈச்வரத்தன்மையும் கொண்டு திகழும் பரம்பொருள்’ என்று சொன்னால் அவர்கள் தங்கள் வேதவேதாந்தங்கள் முடிவாகக் காட்டும் பரம்பொருளும் நாராயணனே என்பதால் அதற்கு இசையாமல் இருப்பார்களோ? இந்தக் கருத்தை நாராயணனிடமே கூறுவதாக அமைந்திருக்கிறது இந்தச் சுலோகம். 

நாராயணா! யாருடைய மஹிமையாகிய கடலில் துளிகள் போன்று பிரம்மாவும், சிவனும், இந்திரனும், என்றும் ஸம்ஸாரத்தில் நுழையாத நித்யமுக்தரும், இன்னும் இவரையொத்தோர் எல்லாம் இருக்கின்றனரோ அந்த உன்னுடைய இயல்பானதும், எல்லையற்ற சிறப்பும் ஈசுவரத்தன்மையும் உன்னிடமே பொருந்தியுள்ளது என்று சொன்னால் அதை இசையாமல் பிணங்கும் வைதிகர்கள் யார்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, May 22, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 10

நாவேக்ஷஸே யதி3 ததோ பு4வநாந்யமூநி 

நாலம் ப்ரபோ4 4விதுமேவ குத: ப்ரவ்ருத்தி: | 

ஏவம் நிஸர்க்க3ஸுஹ்ருதி3 த்வயி ஸர்வஜந்தோ

ஸ்வாமிந் சித்ரமித3மாச்ரித வத்ஸலத்வம் || 



வத்ஸம் என்று கன்றுக்குப் பெயர். தாய்ப்பசு தன் கன்றின்மீது கொள்ளும் இயற்கையான அக்கறையும், பாசமும் உதாரணமாக இலக்கியங்களில் எடுத்தாளப்படக் கூடியது. வாத்ஸல்யம் என்றே குணம் பெயரிடப்படுகிறது. ஆச்ரித வாத்ஸல்யம் அல்லது ஆச்ரித வத்ஸலத்வம் என்பது தம்மைப் புகலடைந்தாரிடத்தில் பகவான் கொள்ளும் மிகுந்த அன்பைக் குறிக்கிறது. தாய்ப்பசுவானது எப்படித் தன் கன்றின் மீதுள்ள அழுக்கையும் பொருட்படுத்தாது நாவால் நக்கியே அதைத் தூய்மைப் படுத்துகிறதோ அதைப் போல் பகவானும் தன் அடியாரிடத்தில் குற்றம் கண்டு விலக்காமல் அன்பால் அவர்களைத் துலக்குகிறான் என்னும் குறிப்பு உள்ளது இந்த வாத்ஸல்யம் அல்லது வத்ஸலத்வம் என்பது. 

உலகையெல்லாம் படைத்துக் காத்து நியமிக்கும் பிரபோ! இந்த உலகமெல்லாம் பிரளயத்தில் உருமாய்ந்த பின்னர் தாங்கள் அருளோடு, அசித்தோடு வேறுபடாது கலந்திருந்த சித்வர்க்கமான ஆன்மாக்களைப் பார்த்திராவிட்டால், இந்த ஜீவர்கள் தம் கர்மங்களைத் தீர்த்து முக்தியை நோக்கி முன்னேறத்தக்க அமைப்புகளான இந்தப் புவனங்கள் அனைத்தும் ஏற்பட்டிருக்கவே செய்யாதே! பின்னர் இவை எப்படிப் பிரவிருத்திகளில் முனைந்திருக்கும்? இவ்வாறு தாங்கள் அனைத்து ஜந்துக்களுக்கும் இயற்கையான ஸுஹ்ருத்து (நண்பன்) ஆகவே விளங்குகிறீர்கள் என்பதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமே இல்லையே ஸ்வாமீ! தங்களிடம் திகழும் இந்த ஆச்ரித வத்ஸலத்வம், அடியார்களிடம் காட்டும் அதீத அன்பு! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, May 21, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 09

கிஞ்சைஷ க்த்யதியேந தேSநுகம்ப்ய

ஸ்தோதாபி து ஸ்துதிக்ருதேந பரிச்ரமேண

தத்ர ச்ரமஸ்து ஸுலபோ4 மம மந்த3பு3த்3தே4

இத்யுத்3யமோSயமுசிதோ மம சாப்3ஜநேத்ர || 



கடலுக்கடியில் இருப்பது என்னும் போது மலையாக இருந்தால் என்ன, அணுவாய் இருந்தால் என்ன என்று சதுர்முகாதிகளுக்கெல்லாம் ஒரு விதத்தில் நான் சமம்தான் என்பதால் உன்னுடைய இரக்கம், தயை என்று வரும்போது அப்படி என்னை அவர்களோடு சமமாக நீ நினைத்துவிடக் கூடாது. ஏனெனில், உன் தயைக்கு நான் தான் அதிக முன் உரிமை கோரும் நிலையில் இருப்பவன். ‘ஏன் சிறப்பான சக்தி வாய்க்கப் பெற்று அதன் மூலம் துதிப்பதில் வல்லமையைக் காட்டுவதால் நீர் இரக்கத்திற்கு, தயைக்கு உரியவரா?’ என்றால் அப்படியில்லை. அவர்கள் எல்லாம் மிக்க சக்திமான்கள். அவர்களுக்கு உன்னைத் துதிப்பது என்ற முயற்சியில் எந்தச் சிரமமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் உன்னைத் துதிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் காரணமாகக் கொண்டு, மற்றபடி அதற்கான சக்தியேதும் இல்லாதே இருக்கின்ற நான் உன்னைத் துதிப்பது என்ற சாதனையில் முனைந்து விரைவில் என் சக்தியின்மையினால் சரியாகத் துதிக்கவும் முடியாமல், முனைந்த முயற்சியினின்றும் பின் வாங்கவும் செய்யாமல் படும் அவஸ்தை இருக்கிறதே, நீயே பார்! எவ்வளவு இரக்கத்திற்கு உரிய செயல்! அதுவும் இந்தச் சிரமம் இருக்கிறதே என் விஷயத்தில் மிக சீக்கிரம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில் மந்தபுத்திக்காரன் அல்லவா நான்? எனவே உன்னுடைய இரக்கத்தை, தயையைச் சம்பாதிக்க வேண்டும், அதுவும் சீக்கிரமாக உடனே சம்பாதிக்க வேண்டும் என்பது இலட்சியமானால் நிச்சயம் இந்த வித முயற்சியில் நான் ஈடுபடுவதுதான் உசிதமானது. ஏனெனில் உன் கவனத்தை ஈர்த்து, ‘தனக்கு சக்தியில்லை என்பது தெரிந்தும், தன்னால் முடியவில்லை என்பது இருந்தும் விடாமல் முனைகின்றானே இவன்!’ என்று உன் திருக்கண்கள் ஆகிய தாமரை தயையினால் அகன்று விரிந்து இரக்கம் பொழிவனவாய் மிளிர்கின்றன அல்லவா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, May 20, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 08

யத்3வா ச்ரமாவதி4 யதா2மதி வாப்யக்த

ஸ்தௌம்யேவமேவ 2லு தேபி ஸதா3 ஸ்துவந்த: | 

வேதா3: சதுர்முக2முகா2ச் மஹார்ணவாந்த

கோ மஜ்ஜதோ: அணுகுலாசலயோ: விசே: || 



கடலுக்கடியில் மூழ்கியவைகளைப் பார்த்தால் ஒரு கூழாங்கல் இருக்கிறது. அங்கு ஒரு பெரிய மலையும் இருக்கிறது. பெரிய மலை என்பதால் கொஞ்சமாகத்தான் முழுகியது. கூழாங்கல் என்பதால் முழுக்கவும் மூழ்கிவிட்டது என்று ஏதேனும் வித்யாசம் உண்டா? முழுகிப் போய் நீருக்கடியில் இருப்பவை என்பதில் எல்லாம் ஒன்றுபோல்தானே? என்னால் முடியாது என்று தெரிந்தாலும் என் ஞானம், என் சக்தி இவைகளுக்கேற்றபடிப் பகவானைத் துதிக்கின்றேன். ஞானத்தாலும், சக்தியாலும் மிக்க பெரியவர்களான சதுர்முகன், சநகாதிகள், எப்பொழுதும் துதிக்கவல்லதான வேதங்கள் இவர்கள் எல்லாம் கூட என்ன சொல்கிறார்கள்? தங்கள் சக்திக்கும், ஞானத்திற்கும் தக்கபடி மாத்திரமே பகவானைத் துதிக்க முயல்வதாகக் கூறுகின்றனர். வேதமோ முழுவதும் துதிக்க முயன்று மனத்துடன் கூட வாக்கும் திரும்பி வந்துவிட்டது என்றே சொல்கிறது. அசக்தன் நான் என்ன சொல்கிறேன். ஏதோ என் அறிவுக்கெட்டினவரையில் என்கிறேன். என்ன வித்யாசம்? கடலுக்கடியில் முழுகிப் போன மலைக்கும் அணுவுக்கும் இடையில் என்ன விசேஷம்? எல்லாம் முழுகிப் போய்க் கிடக்கிறது. அவ்வளவுதான். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, May 19, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 07

தத்வேந யஸ்ய மஹிமார்ணவசீகராணு

க்யோ மாதுமபி ர்வபிதாமஹாத்3யை: | 

கர்த்தும் ததீ3யமஹிமஸ்துதிம் உத்3யதாய 

மஹ்யம் நமோSஸ்து கவயே நிரபத்ரபாய || 



எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தது போல் ஒருவருக்கும் நமஸ்காரம் செய்துவிட வேண்டும். அஃது யாருக்கெனில் எனக்குத்தான். ஏனெனில் யாருடைய தத்வத்தை உள்ளபடி. யாருடைய பெருமையென்னும் கடலில் ஒரு துளியையேனும் இவ்வண்ணம் என்று அளந்து அறிந்து சொல்லிவிட சர்வன் என்னும் சிவனாலும், பிதாமஹர் என்னும் பிரம்ம தேவனாலும் முடியாதோ அந்தப் பகவானின் மஹிமையை அனைத்தும் போற்றிப் பாட முனைந்தேன் அல்லவா, கவி என்று பேர் வைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல்? நிச்சயம் எனக்கு ஒரு நமஸ்காரம். 
(உண்மையில் வடமொழி காவிய சாத்திர உலகில் ஸ்தோத்ரம் என்ற வகைக் கவிதைக்கு உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது இந்த ஸ்தோத்ர ரத்நம் ஆகும்) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, May 18, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 06

யந் மூர்த்4நி மே ச்ருதி சிரஸ்ஸு பா4தி 

யஸ்மிந் அஸ்மந் மநோரத2பதஸ் ஸகலஸ்ஸமேதி

ஸ்தோஷ்யாமீ : குலத4நம் குல2தை3வதம் தத் 

பாதா3ரவிந்த3மரவிந்த3விலோசநஸ்ய || 



யாருடைய திருவடிகள் ஒக்க என் தலையிலும், வேதங்களின் முடியிலும் (உபநிஷதங்களிலும்) விளங்கித் தோன்றுகிறதோ, எந்தத் திருவடிகளினிடத்தில் நம் மனோரதங்கள் (விருப்பங்கள்) எல்லாம் அனைத்தும் நிறைவு எய்துகின்றனவோ, உறவால் நமக்குக் கிடைக்கப் பெறுகின்ற குலதனமாய் இருப்பதும், நமது முந்தையர் வழிவழியாக வணங்கி வழிபட்டு நமக்குக் காட்டிய குலதெய்வமாக இருப்பதும் ஆன அந்த இணையடித் தாமரைகளைப் பாடுகின்றேன். (கதிரொளி கண்டு மலரும் தாமரை. ஆனால்) இந்த அரவிந்தமோ நாம் சென்று பணிந்தேத்த மலரும், சுடரும் அரவிந்த விலோசநம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, May 17, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 05

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ4தி

ஸர்வம் யதே3 நியமேந மத3ந்வயாநாம்

ஆத்3யஸ்ய : குலபதேர் வகுளாபி4ராமம் 

ஸ்ரீமத் தத3ங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா || 



தத்வங்களை உள்ளபடி விளக்கி உபகாரம் செய்தவர் பராசர மஹரிஷி என்றால், பிரபத்தி என்னும் பொன்னெறியை, அனைவருக்கும் உரிய உன்னத நெறியைத் தெளிவாகக் காட்டி உயர் தமிழ் வேதமே தந்தவர் வகுளாபரணர் என்றும், சடகோபர் என்றும், பராங்குசர் என்றும் சொல்லப்படும் நம்மாழ்வார். அவருடைய திருவடிகளில் தலைசாய்த்து எங்கள் பிரபன்ன குலத்தின் குலபதியே என்று வணங்குவோமாக. அவர் பிரபன்ன குலத்தின் தலைவர் மட்டுமா? எங்களின் தாய். வயிற்றுப் பிள்ளைக்குத் தாய் மருந்துண்பதைப் போலத் தாம் பெற்ற பேறு தம் திருவாய்மொழி கற்ற பிரபன்னர்கள் அனைவரும் பெற்றாராக உகந்து பேசியவர் அன்றோ! சுமந்து, பெற்று, வளர்க்கும் அத்தனையும் செய்தவர் அன்றோ திருவாய்மொழி ஒன்றின் மூலமாக! மாதா மட்டுமன்று. அன்பு செய்யும் தாயாக இருப்பதோடன்றி, நன்மை கருதி வழிநடத்தும் பிதாவுமாய் நம்மாழ்வாரே இருக்கிறார். பின் பேர் இன்பம் தரும் காதல் துணையாகவும் இருக்கிறார். ’ஆரா அமுதே!’ என்பதைப் பின் தொடர்ந்துதானே ஸ்ரீமந் நாதமுனிகள் அனைத்தையும் மீட்டதும்! வாழ்க்கைத் துணையாகி இன்பம் தருவது மட்டுமா? அன்பீன் குழவியாக அருள் வடிவாம் தநயராய் இருப்பதும் அவரே. பின் அருள் வாழ்க்கைக்கான பெருஞ் செல்வமும் அவரே. இப்படிச் சொன்ன உறவுகள் இன்னும் சொல்ல இருக்கின்ற அனைத்து உறவுகளாகவும், வாழ்முதலாகவும் ஒருவரே இருக்கின்றார் பிரபன்னர்களாகிய எங்களுக்கு. அவரே நம்மாழ்வார். நங்கள் பிரபன்ன குலத்திற்கான ஆதி குலபதி. வகுளமாலையால் அலங்கரிக்கப்பட்டவர். அவருடைய திருவடி மலர்கள் ஸ்ரீவைஷ்ணவத்துவம் என்னும் தேன் பெருகும் மலரடிகள். அவரது பதமலர்களில் என் தலையால் வணங்குகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, May 16, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 04

தத்வேந யச்சித3சிதீ3ச்வர தத்ஸ்வபா4

போ4கா3பவர்க்க3 தது3பாய 3தீ: உதா3: |

ஸந்த3ர்யந் நிரமிமீத புராணரத்நம்  

தஸ்மை நமோ முநிவராய பராராய ||



வெளிப்படையாகச் சொன்னவர் ஆகையாலே உதாரர். ஸ்ரீவிஷ்ணு புராணம் எழுதிய பராசரர் என்னும் முனிவர், முனிவர்கள் எல்லாம் தம்மை அண்டிக் கேட்க விளக்கம் தரவல்ல முனிவரர். சித், அசித், ஈச்வரன் (உயிர், உலகப் பொருள், கடவுள்) இவற்றின் உள்ளபடியான இயல்புகள், உலக வாழ்க்கையில் கர்மங்கள் கர்மபலன்களைத் துய்த்தல், மோக்ஷம் என்னும் வீட்டுலகின் நிலைமை, கர்மங்கள் கழன்று வீடுபேறு அடைவதற்கான உபாயம், அடையப்படும் பேற்றின் சிறப்புகள் இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடி விளக்கிக் காட்டிப் புராணங்களில் ரத்நம் என்று சொல்லத்தக்க ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றியருளிய அந்தப் பராசர முனிவரருக்கு நமஸ்காரம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, May 15, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 03

பூ4யோ நமோSபரிமித அச்யுத 4க்திதத்வ 

ஜ்ஞாநாம்ருதாப்3தி4 பரிவாஹசுபை4ர் வசோபி4: |  

லோகேSவதீர்ண பரமார்த்த2 ஸமக்3ரப4க்தி 

யோகா3 நாத2முநயே யமிநாம் வராய || 



மீண்டும் அவரையே வணங்கித் தொழுகிறேன். நம்மைக் காப்பதில் என்றும் நழுவாதவன், நம்மையும் என்றும் நழுவவிடாதவன் என்னும்படியான அச்யுதனிடம் கொள்ளும் தூய பக்தியென்ன, உள்ளபடியான தத்வஞானம் என்ன இவையிரண்டும் கடலும் கரையுமாய்ப் பொங்கி வழியும் அமுதவெள்ளம் ஆகிவிட்டது. கரையுடைத்த வெள்ளத்திற்குப் போக்குவீடு விட்டதுபோல் சுபம் நிறைந்த வாக்குகள் வெளிப்பட்டன. அந்த வாக்குகளால் உலகமே உய்வடைய அதற்காகவே அவதரித்த அந்த விசேஷமான பக்தி யோகமோ தானே தனக்குப் பெரும்பயன் என்று அமைந்தது. பிறிதொன்றை வேண்டாது தன்னிலேயே பூரணமானது. அந்த பரமார்த்த ஸமக்ர பக்தியோகத்தை உலக நன்மைக்காக அவதரிப்பித்தவர் யோகிகளில் தலைவராகிய நாதமுநிகள். அவரையே மீண்டும் வணங்குகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, May 14, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 02

தஸ்மை நமோ மது4ஜித3ங்க்4ரி ஸரோஜ தத்வ 

ஜ்ஞாந அநுராக3 மஹிமாதி அந்தஸீம்நே

நாதா2 நாத2முநயே S த்ர பரத்ர சாபி 

நித்யம் யதீ3யசரணௌ ரணம் மதீ3யம் ||


பகவானை நமக்குக் காட்டித்தரும் சாத்திரக் கண்ணாய் இருப்பது வேதம். அதை அழிக்க நினைத்த மது என்னும் அசுரனை அழித்தவர் திருமால். அவ்வாறு அழித்து நமக்கு அவரைக் காணும் கண்ணாகிய வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். அந்தப் பகவானின் திருவடித் தாமரைகளில் உண்மையான சிறந்த தத்வஞானமாவது அவருடைய அவதாரத்தைப் பற்றியும், அவதாரம் எடுத்து அவர் புரியும் லீலைகளைப் பற்றியும் உள்ளபடி அறிவதே ஆகும். அத்தகைய தத்வஞானமும், திருமாலின் திருவடித் தாமரைகளில் நிறைந்த தூய பக்தியும் தொடர்ந்து பெருகும் மிகுந்த அதிசயமான மகிமையின் எல்லை நிலம் ஆனவை நாதமுனிகளின் ஞானமும் பக்தியும். எங்களுக்கோ இந்த உலகில் ஆகட்டும் அன்றி அவ்வுலகில் ஆகட்டும் யாருடைய திருவடிகள் புகலாக இருக்கின்றனவோ அந்த எங்கள் நாதராகிய நாதமுனிகளுக்கு எங்கள் வணக்கங்கள். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, May 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - சுலோகம் 01

நமோSசிந்த்ய அத்3பு4 அக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்3 ராயே

நாதா2 முநயே S கா34 43வத்3 4க்தி ஸிந்த4வே ||  

என்னைத் தடுத்தாட்கொண்ட தலைவர், நாதர் அவர். 

அது மட்டுமா? ஆழ்வார்களின் திருமால்நெறி  வாழவேண்டும் என்றும், அதில் நான் ஈடுபட வேண்டும் என்றும், முன்னமே நன்கு மனன சீலராய் நன்கு கருதி அன்றோ மணக்கால் நம்பிகளைப் பணித்துவிட்டுப் போயிருக்கிறார். கண்ணில் பார்க்கும் உயிருக்கு மட்டுமன்றி, கண்காணாத இனித்தான் வரப்போகும் உயிர் என்னும்படியான என்னையொத்த எத்தனை உயிர்களுக்கு நன்மையைக் கருதிப் பாதுகாப்பு செய்துவிட்டுப் போயிருக்கிறார் அந்த நாதரும் முனிகளும் ஆன நாதமுனிகள்! நன்கு தீர ஆலோசித்து இனிவரப்போகும் நெடுங்காலத்திற்கு நன்மை கருதும் மனனசீலம் மிக்கவனை அன்றோ முனி என்பது! என்றால் அவர்தானே முனிகள்! நாதாய முநயே

அவருடைய ஞானம்தான் எத்தகைய அற்புதமானது! நம் சிந்தனைக்குச் சிறிதும் எட்டாத தளங்களில் எல்லாம் சிறகடித்துப் பறக்கவல்லது அவர்தம் ஞானம்! இத்தனைக்கும் அந்த ஞானத்திற்காக அவர் ஏதும் உபாசனம் எதுவும் செய்யவில்லை. கடவுளின் அருள் அவரிடம் அப்படி ஞானத்தை மலைமலையாகக் குவித்தது. ஆம் அவர் ஞானராசிகளுக்கு, ஞானமலைக்குவியலுக்குச் சொந்தக்காரர். ஞானம் மட்டுமா? ஞானம் மலை என்றால் அவருடைய வைராக்கியம் ஒரு பெருமலை அல்லவா? இல்லையேல் பேரரசன் பின் தொடர இருந்தவர் ஆழ்வார்களின் பத்துப் பாசுரங்களைப் பின் தொடர்ந்து அப்படி அலைபவராக ஆவரா? அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞானவைராக்கிய ராசயே !

ஞானம் ஒரு மலை. வைராக்கியமோ பெரிது என்றால் அவருடைய பக்தி! ஆழம் காண இயலாத பெருங்கடல் அன்றோ அவருடைய பக்தி! பெருவெள்ளமெடுத்த அந்தப் பக்தியில்தானே அவரும் வில்தாங்கிய இருவர் குரக்குடன் வந்தார் என்று பின் தொடர்ந்து போய்விட்டார்! அகாத பகவத் பக்திக் கடல், ஸிந்து என்றால் அவர்தான்! அவரை வணங்குகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***