Friday, May 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீ ஆளவந்தார்

சில இலக்கிய வகைகளுக்குச் சில நூல்கள் உதாரணம் ஆகிவிடும். கீதை என்றால் பகவத் கீதை, சகஸ்ரநாமம் என்றால் விஷ்ணுசகஸ்ர நாமம், பஜகோவிந்தம் என்றாலே ஸ்ரீஆதிசங்கரரின் பஜகோவிந்தம், குறள் என்றாலே திருக்குறள் என்றெல்லாம் சொல்வது போல் ஸ்தோத்ரம் என்றாலே வடமொழி காவிய நிபுணர்களிடம் யாமுனாசாரியர் என்னும் ஆளவந்தார் இயற்றிய ஸ்தோத்ரரத்நம் என்பதுதான் நினைவுக்கு வரும். ரஸகங்காதரம் இயற்றிய ஸ்ரீஜகந்நாத பண்டிதருக்கு ஸ்தோத்ரரத்நம் என்றால் பெரும் மயக்கம். தாமும் அதைப் போல் சில துதிகள் இயற்றிப் பார்த்தார். அன்று மட்டுமில்லை. நம் காலத்திலும் பல பெரியோர்களும் கொண்டாடும் அருமையான துதி நூல் ஸ்தோத்ரரத்நம். 

இளம் வயதில் யாமுனர் தாம் மஹாபாஷ்யபட்டர் என்பவரிடம் கற்கும் காலத்தில் ராஜபுரோஹிதனாய் இருந்த ஆக்கியாழ்வான் பெரும் வித்வானுமாய், மிக்க செருக்குடனும் இருந்தபடியால் வாதத்தில் அவரை ஜயித்து அரசரால் பாதி ராஜ்யம் தரப்பெற்று ஆட்சி நடத்தி வந்தார். அப்பொழுது நாதமுனிகள் கண்ட ஆழ்வார்களின் அருநெறியை, பிரபத்தி என்னும் சீரிய வழியை நடத்திவந்த மணக்கால்நம்பி ஸ்ரீநாதமுனிகளின் பேரனாரான யாமுனரை எப்படியாவது உணர்த்தி ஸ்ரீவைஷ்ணவத்திற்கு ஆக்க வேண்டும் என்று முயன்று அவரை ஆளவந்தாராக ஆக்கினார். 

தாம் இருந்த நிலை, தம்மை விடாமல் தொடர்ந்து தடுத்தாட்கொண்டு திருமால் நன்னெறியை, பிரபத்தி என்னும் பொன்னெறியை, ஆழ்வார்கள் தந்த அருந்தனத்தைத் தம்மிடம் வந்து சேருமாறும், தாம் அதற்கு உரியராக ஆகுமாறும் கருதி ஆவன செய்து போந்த தம் தந்தைதம் தந்தையான நாதமுனிகள்பால் மிகுந்த நன்றி பொங்கும் நெகிழ்வும், அனைத்திற்கும் ஆதிகாரணமாய்த் தம்மை உய்யக் கொண்ட அரங்கனின் பேரருளையும் நினைத்து நினைத்து நெஞ்சம் நீர்ப்பண்டமாய் ஆனார். அந்த இதயப் பெருக்குதான் இப்படித் துதி ரூபமாக வெளிப்பட்டது. தொடக்கத்தில் நாதமுனிகளைப் பற்றிய துதியும், முடிவிலும் அவ்வாறே நாதமுனிகளுக்காகவாவது தன்னைப் பகவான் காப்பாற்ற நினைக்க வேண்டும் என்று கெஞ்சுவதன் மூலமும் சொல்லிமாளாத் தன் நெஞ்சறியும் நன்றியை வெளிப்படுத்தினார். நடுவில் வரும் அத்தனை சுலோகங்களிலும் தாம் பெற்ற அருநிதியமான அர்த்தங்களை, பிரபத்தியென்னும் ஒண்ணெறியைக் குறிக்கும் பல பாக்களை இட்டு இந்த ஸ்தோத்ரரத்நம் இயற்றியுள்ளார். 

ஸ்ரீராமாநுஜர் தம் இளம் வயதில் இளையாழ்வார் அல்லது லக்ஷ்மணர் என்று இருந்த காலத்தில் யாதவப்ரகாசர் என்பவரிடம் அத்வைதம் என்பதை வேதாந்தமாகப் பயிலும் காலத்தில் அதில் பல பொருந்தாமைகளும், தம் நெஞ்சுக்கு உவப்பில்லாத பல கருத்துகளும் இருந்ததைக் கண்டு மனம் மிகவும் நொந்திருந்ததை அப்பொழுது நடந்த ஒரு சம்பவம், இந்த ஸ்தோத்ரரத்நத்தோடு தொடர்புடையது, காட்டும். இவர் மனம் அறிய வேண்டிப் பெரியநம்பிகளும் திருக்கச்சிநம்பிகளும் பிறரும் இவர் காதுபட ஸ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்நத்தைச் சேவித்துக் கொண்டிருக்க, அதைச் செவியுற்ற இவர், அந்தத் துதியில் வரும் 11ஆவது சுலோகத்தைக் குறித்து வினவி இதைச் செய்தார் யாவர்? என்று கேட்டார். அவர் ஸ்ரீஆளவந்தார் என்று அறிந்ததும், அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அன்றுதான் விதை விழுந்தது. அது முளைத்துப் பெருமரமாக ஆன கதை நாம் அறிந்தது. 

ஸ்ரீராமாநுஜரின் சிஷ்யரான கிடாம்பியாச்சான் ஒரு நாள் அழகர் சந்நிதியில் ஸ்தோத்ரரத்நத்தின் 22ஆவது சுலோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்க, அதில் ‘நான் கதியேதும் அற்றவன்’ என்று வருவதால், அழகர் அருளப்பாடாகி, ‘நீ ஸ்ரீராமாநுஜனை உடையை ஆக இருந்தும் கதியற்றவன் என்று சொல்வது கூடாது காண்’ என்று தெய்வ வாக்கு ஏற்பட்டது.  இந்த ஸ்தோத்ரரத்நம் எப்படி நெடுக அனைவர் உள்ளத்திலும் நிலவியது என்பதை நாம் உணர முடியும். ஸ்ரீராமாநுஜரை அகப்படுத்தியதும் இந்த ஸ்தோத்ரம். ஸ்ரீராமாநுஜரைக் குறித்து தெய்வ வாக்கை வெளிப்படுத்தியதும் இந்த ஸ்தோத்ரம். இதனை ஸ்தோத்ர ரத்நம் என்பது பொருத்தமேயன்றோ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 



No comments:

Post a Comment