த்வாம் சீலரூபசரிதை: பரமப்ரக்ருஷ்ட
ஸத்த்வேந ஸாத்த்விகதயா ப்ரப3லைச்ச சாஸ்த்ரை: |
ப்ரக்2யாத தை3வ பரமார்த்த2விதா3ம் மதைச்ச
நைவாஸுரப்ரக்ருதய: ப்ரப4வந்தி போ3த்3து4ம் ||
*
எளிவரும் இயல்பான உன்னுடைய சீலகுணத்தால் உன்னைச் சிலர் அறிந்துகொள்ளக் கூடும். (பழைய ராஜாக் கதை ஒன்று உண்டு. ஒரு குழந்தையைத் தன்னுடையது என்று பல பெண்கள் உரிமை கொண்டாடவும், ராஜா ஓர் உபாயத்தினால் அந்தக் குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்று கண்டு பிடித்தார் என்று வரும். பெண்களை வரிசையாக நிற்க வைத்து விட்டு முன்னால் சேறு தரையில் பரப்பி வைத்துக் குழந்தையை விளையாட விட்டுவிட்டார் என்றும், குழந்தை சேற்றில் போய் அளைய மற்ற பெண்கள் அதை ஒரு காட்சியாகப் பார்த்துக் கொண்டு நிற்க, பெற்ற தாயானவள் எல்லாவாற்றையும் மறந்து ஓடிச்சென்று தானும் சேற்றுள் புகுந்து குழந்தையைத் தூக்கிச் சுத்தப் படுத்தினாள். அதன் மூலம் அவள்தான் தாய் என்று ராஜா நிரூபித்தார் என்று கதை. அதைப் போல் இந்த ஜீவனின் துர்க்கதி கண்டு பொறுக்காமல் தானும் இவனோடு ஒக்க இந்த ஸம்ஸாரத்தில் குதித்துப் படாதன பட்டு ஜீவனை மீட்பது சீல குணம்.). வேதங்கள் யாரைச் செந்தாமரைக் கண்ணழகன் என்று புகழ்கின்றனவோ அதை வைத்து உன்னைத் தெரிந்து கொள்ளலாம். வேதங்களும், இதிகாசங்களும், பல புராணங்களும் சொல்லும் சரிதைகளை வைத்து ஒருவர் உன்னைத் தெரிந்து கொள்ளலாம். சுத்தஸத்வமயமான நித்ய விபூதி யாருக்கு உண்டு என்று ‘தத்விஷ்ணோ; பரமம் பதம்’ என்று வேதமும், பகவத் சாஸ்திரமாகிய ஆகமங்களும் சொல்கின்றனவோ அவற்றை வைத்து ஒருவர் உன்னைத் தெரிந்து கொள்ளலாம். ஸாத்விகமானவை என்று வித்வான்கள் மத்தியில் பிரபலமான சாஸ்திரங்களைக் கொண்டும் உன்னை ஒருவர் தெரிந்து கொள்ளலாம். பிரசித்தமான தெய்வத்தினுடைய பரம அர்த்தமான உயர்வற உயர்நலத்தை நுட்பமாகக் காணும் ஞானிகளின் சித்தாந்தங்களைக் கொண்டும் ஒருவர் உன்னைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படையாக ஒருவரிடம் அசுரத்தன்மை இல்லாமல் தெய்விகத் தன்மை இருந்தால் அல்லவோ அவ்விதங்களில் அனைத்தாலுமோ அல்லது ஒன்றினாலுமோ தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் சொந்த இயல்பே அசுரத்தன்மையாக இருந்தால் எப்படி அவர் எந்த விதத்தில்தான் உன்னைத் தெரிந்து கொள்ள முடியும்?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment