Saturday, May 21, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 09

கிஞ்சைஷ க்த்யதியேந தேSநுகம்ப்ய

ஸ்தோதாபி து ஸ்துதிக்ருதேந பரிச்ரமேண

தத்ர ச்ரமஸ்து ஸுலபோ4 மம மந்த3பு3த்3தே4

இத்யுத்3யமோSயமுசிதோ மம சாப்3ஜநேத்ர || 



கடலுக்கடியில் இருப்பது என்னும் போது மலையாக இருந்தால் என்ன, அணுவாய் இருந்தால் என்ன என்று சதுர்முகாதிகளுக்கெல்லாம் ஒரு விதத்தில் நான் சமம்தான் என்பதால் உன்னுடைய இரக்கம், தயை என்று வரும்போது அப்படி என்னை அவர்களோடு சமமாக நீ நினைத்துவிடக் கூடாது. ஏனெனில், உன் தயைக்கு நான் தான் அதிக முன் உரிமை கோரும் நிலையில் இருப்பவன். ‘ஏன் சிறப்பான சக்தி வாய்க்கப் பெற்று அதன் மூலம் துதிப்பதில் வல்லமையைக் காட்டுவதால் நீர் இரக்கத்திற்கு, தயைக்கு உரியவரா?’ என்றால் அப்படியில்லை. அவர்கள் எல்லாம் மிக்க சக்திமான்கள். அவர்களுக்கு உன்னைத் துதிப்பது என்ற முயற்சியில் எந்தச் சிரமமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் உன்னைத் துதிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் காரணமாகக் கொண்டு, மற்றபடி அதற்கான சக்தியேதும் இல்லாதே இருக்கின்ற நான் உன்னைத் துதிப்பது என்ற சாதனையில் முனைந்து விரைவில் என் சக்தியின்மையினால் சரியாகத் துதிக்கவும் முடியாமல், முனைந்த முயற்சியினின்றும் பின் வாங்கவும் செய்யாமல் படும் அவஸ்தை இருக்கிறதே, நீயே பார்! எவ்வளவு இரக்கத்திற்கு உரிய செயல்! அதுவும் இந்தச் சிரமம் இருக்கிறதே என் விஷயத்தில் மிக சீக்கிரம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில் மந்தபுத்திக்காரன் அல்லவா நான்? எனவே உன்னுடைய இரக்கத்தை, தயையைச் சம்பாதிக்க வேண்டும், அதுவும் சீக்கிரமாக உடனே சம்பாதிக்க வேண்டும் என்பது இலட்சியமானால் நிச்சயம் இந்த வித முயற்சியில் நான் ஈடுபடுவதுதான் உசிதமானது. ஏனெனில் உன் கவனத்தை ஈர்த்து, ‘தனக்கு சக்தியில்லை என்பது தெரிந்தும், தன்னால் முடியவில்லை என்பது இருந்தும் விடாமல் முனைகின்றானே இவன்!’ என்று உன் திருக்கண்கள் ஆகிய தாமரை தயையினால் அகன்று விரிந்து இரக்கம் பொழிவனவாய் மிளிர்கின்றன அல்லவா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment