நாவேக்ஷஸே யதி3 ததோ பு4வநாந்யமூநி
நாலம் ப்ரபோ4 ப4விதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க3ஸுஹ்ருதி3 த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் ந சித்ரமித3மாச்ரித வத்ஸலத்வம் ||
*
வத்ஸம் என்று கன்றுக்குப் பெயர். தாய்ப்பசு தன் கன்றின்மீது கொள்ளும் இயற்கையான அக்கறையும், பாசமும் உதாரணமாக இலக்கியங்களில் எடுத்தாளப்படக் கூடியது. வாத்ஸல்யம் என்றே குணம் பெயரிடப்படுகிறது. ஆச்ரித வாத்ஸல்யம் அல்லது ஆச்ரித வத்ஸலத்வம் என்பது தம்மைப் புகலடைந்தாரிடத்தில் பகவான் கொள்ளும் மிகுந்த அன்பைக் குறிக்கிறது. தாய்ப்பசுவானது எப்படித் தன் கன்றின் மீதுள்ள அழுக்கையும் பொருட்படுத்தாது நாவால் நக்கியே அதைத் தூய்மைப் படுத்துகிறதோ அதைப் போல் பகவானும் தன் அடியாரிடத்தில் குற்றம் கண்டு விலக்காமல் அன்பால் அவர்களைத் துலக்குகிறான் என்னும் குறிப்பு உள்ளது இந்த வாத்ஸல்யம் அல்லது வத்ஸலத்வம் என்பது.
உலகையெல்லாம் படைத்துக் காத்து நியமிக்கும் பிரபோ! இந்த உலகமெல்லாம் பிரளயத்தில் உருமாய்ந்த பின்னர் தாங்கள் அருளோடு, அசித்தோடு வேறுபடாது கலந்திருந்த சித்வர்க்கமான ஆன்மாக்களைப் பார்த்திராவிட்டால், இந்த ஜீவர்கள் தம் கர்மங்களைத் தீர்த்து முக்தியை நோக்கி முன்னேறத்தக்க அமைப்புகளான இந்தப் புவனங்கள் அனைத்தும் ஏற்பட்டிருக்கவே செய்யாதே! பின்னர் இவை எப்படிப் பிரவிருத்திகளில் முனைந்திருக்கும்? இவ்வாறு தாங்கள் அனைத்து ஜந்துக்களுக்கும் இயற்கையான ஸுஹ்ருத்து (நண்பன்) ஆகவே விளங்குகிறீர்கள் என்பதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமே இல்லையே ஸ்வாமீ! தங்களிடம் திகழும் இந்த ஆச்ரித வத்ஸலத்வம், அடியார்களிடம் காட்டும் அதீத அன்பு!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment