Tuesday, May 17, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 05

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ4தி

ஸர்வம் யதே3 நியமேந மத3ந்வயாநாம்

ஆத்3யஸ்ய : குலபதேர் வகுளாபி4ராமம் 

ஸ்ரீமத் தத3ங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா || 



தத்வங்களை உள்ளபடி விளக்கி உபகாரம் செய்தவர் பராசர மஹரிஷி என்றால், பிரபத்தி என்னும் பொன்னெறியை, அனைவருக்கும் உரிய உன்னத நெறியைத் தெளிவாகக் காட்டி உயர் தமிழ் வேதமே தந்தவர் வகுளாபரணர் என்றும், சடகோபர் என்றும், பராங்குசர் என்றும் சொல்லப்படும் நம்மாழ்வார். அவருடைய திருவடிகளில் தலைசாய்த்து எங்கள் பிரபன்ன குலத்தின் குலபதியே என்று வணங்குவோமாக. அவர் பிரபன்ன குலத்தின் தலைவர் மட்டுமா? எங்களின் தாய். வயிற்றுப் பிள்ளைக்குத் தாய் மருந்துண்பதைப் போலத் தாம் பெற்ற பேறு தம் திருவாய்மொழி கற்ற பிரபன்னர்கள் அனைவரும் பெற்றாராக உகந்து பேசியவர் அன்றோ! சுமந்து, பெற்று, வளர்க்கும் அத்தனையும் செய்தவர் அன்றோ திருவாய்மொழி ஒன்றின் மூலமாக! மாதா மட்டுமன்று. அன்பு செய்யும் தாயாக இருப்பதோடன்றி, நன்மை கருதி வழிநடத்தும் பிதாவுமாய் நம்மாழ்வாரே இருக்கிறார். பின் பேர் இன்பம் தரும் காதல் துணையாகவும் இருக்கிறார். ’ஆரா அமுதே!’ என்பதைப் பின் தொடர்ந்துதானே ஸ்ரீமந் நாதமுனிகள் அனைத்தையும் மீட்டதும்! வாழ்க்கைத் துணையாகி இன்பம் தருவது மட்டுமா? அன்பீன் குழவியாக அருள் வடிவாம் தநயராய் இருப்பதும் அவரே. பின் அருள் வாழ்க்கைக்கான பெருஞ் செல்வமும் அவரே. இப்படிச் சொன்ன உறவுகள் இன்னும் சொல்ல இருக்கின்ற அனைத்து உறவுகளாகவும், வாழ்முதலாகவும் ஒருவரே இருக்கின்றார் பிரபன்னர்களாகிய எங்களுக்கு. அவரே நம்மாழ்வார். நங்கள் பிரபன்ன குலத்திற்கான ஆதி குலபதி. வகுளமாலையால் அலங்கரிக்கப்பட்டவர். அவருடைய திருவடி மலர்கள் ஸ்ரீவைஷ்ணவத்துவம் என்னும் தேன் பெருகும் மலரடிகள். அவரது பதமலர்களில் என் தலையால் வணங்குகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment