Tuesday, March 31, 2020

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் பற்றி

வேதாந்தம் என்றால் உபநிஷதம். வேதத்தின் அந்தம் என்றால் என்ன பொருள் என்றெல்லாம் முன்னர் பார்த்தோம். நீங்களும் படித்திருப்பீர்கள். அந்த உபநிஷதங்களின் கருத்துகளை யுக்தி பூர்வமாக மீமாம்ஸையின் நெறிப்படி நூற்பாக்களாக வடித்து, கிரமமான உரிய தர்க்கங்களுடன் சாத்திர வடிவமாக்கியது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்பதையும் முன்னர் எழுதியிருக்கிறேன். உபநிஷதக் கருத்துகளை, ஸ்ரீமத் பகவத் கீதையின் துணையுடன் ஸூத்ரங்களாக ஆக்கியதால் வேதாந்த ஸூத்ரங்கள் என்றே பெயர் பெற்றது ஸ்ரீப்ரஹ்ம ஸுத்ரங்கள் என்னும் ப்ரஸ்தான நூல். அந்த ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரத்தில் நான்கு அத்யாயங்கள், ஒவ்வொரு அத்யாயத்திற்கும் நான்கு பாதங்கள் என்று பார்த்தோம் அல்லவா? நான்கு அத்யாயங்களின் பெயர்கள் ஸமன்வயம், அவிரோதம், சாதனம், பலன் என்பவையாகும். இதற்கும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.

மூன்று ப்ரஸ்தான கிரந்தங்களான உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்பனவற்றிற்கு வியாக்கியானம் எழுதிய ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார் என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமங்களின் அமைப்பையும் பார்த்தால் ஸ்ரீபகவந் நாமங்களின் வரிசைத் தொகுப்பாகவும் மட்டுமில்லாமல் அந்த திவ்ய நாமங்களைத் தொகுப்பாக்கி, ஒத்த கருத்துடைய நாமங்களின் உள்தொகுப்புகள் என்றும் ஒரு கிரமத்தில் அமைத்துத் தந்திருக்கும் உட்கருத்து நமக்கு வியாக்கியானங்களின் வழியே நோக்கும்பொழுது புலப்படுகிறது. அஃது என்னவெனில் ப்ரஸ்தான த்ரயங்களின், அதாவது உபநிஷதங்கள், ஸ்ரீகீதை, ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் ஆகியவற்றின் கருத்துகளைச் செவ்வையாகக் கற்று மனம் கொள்ள முடியாமல் இருக்கும் நம் போல்வாருக்காகவே போலும் ஸஹஸ்ரநாமங்களின் அமைப்பிலும், உள்பகுப்பிலும் அமைத்த கருத்துகளிலேயே வேதாந்த நிச்சயங்களை மனனம் செய்து ஜபிப்பாருக்கு உள்ளம் கொள்ளும் விதத்தில் நமது ஹிந்துமத ஆசார்ய பெருமக்கள் தந்துள்ளனர்.

இதே கிரமத்தில் சாக்தத்தின் பெரும் நூலான ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களையும் அமைத்திருக்கின்றனர் என்பது நாம் அறியுங்கால் இன்பம் பயக்கவல்லது. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீபாஸ்கரராயர் என்பாருடைய விரிவான வியாக்கியானம் அமைந்திருக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் அமைந்த அரிய அந்த உரையை நல்ல தமிழில் ஆக்கி, கூடவே அரும் பெரும் ஆய்வுக் குறிப்புகளையும் சேர்த்து, பாஸ்கர ராயரின் வியாக்கியானத்திற்கு மேலும் பொலிவு கூட்டும் விதமாக வெளியிட்டவர் ப்ருஹ்மஸ்ரீ G V கணேசய்யர் அவர்கள். அதில் முன்னுரை எழுதியிருக்கும் ஸ்ரீஅருட்கவி ந ஸுப்ரஹ்மண்ய ஐயர் அவர்கள் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்கள் எப்படி வேதாந்த ரீதியாகப் பகுப்புகளைத் தன்னகத்தே கொண்டு துலங்குகிறது என்பதை எழுதிக் காட்டுகிறார். மிக அரிய கருத்து இது.

“இந்த ஸஹஸ்ரநாமாக்களின் ஆதிமுதல் அந்தம் வரையிலுள்ள தொடர்பைக் கூர்ந்து நோக்குவோமாயின், ஸமன்வயம், அவிரோதம், சாதனம், பலன் என நான்காக வகுக்கப்பட்டுள்ள பிரஹ்ம ஸூத்ரத்தின் அமைப்பு இதற்கும் ஏற்படுகின்றது.”

என்று எழுதும் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஐயர் நாமங்களின் அந்தப் பகுப்புகளையும் பிரித்துக் காட்டுகிறார்.

1, 2 , 3 நாமங்கள் - தடஸ்த லக்ஷணம்

4 - 131 நாமங்கள் - ஸமன்வயம்

132 - 256 நாமங்கள் - அவிரோதம்

257 - 274 நாமங்கள் - ஸாதனம்

275 - 999 நாமங்கள் - பலவித சாஸ்திர சித்தாந்தங்களைக் கொண்டும், யுக்திகளைக் கொண்டும் மனன நிதித்யாஸனங்களைச் செய்தல்

1000 நாமம் - அபரோக்ஷ சாக்ஷாத்கார வடிவ பலன்

என்று அவர் காட்டும் ரீதியில் அம்பிகையின் நாமங்களை நாம் அனுசந்தானம் செய்தால் நாமஜபம், கூடவே வேதாந்த ஜ்னானம், தியானம் அனைத்தும் நம்மை அறியாமலேயே ஏற்படும் விதத்தில் அமைத்து வைத்திருக்கும் பெரியோர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

’தடஸ்த லக்ஷணம்’ என்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று நாமங்களைக் குறிப்பிடுக்கிறார் அருட்கவி ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஐயர். தடஸ்த லக்ஷணம் என்றால் என்ன? வேதாந்தம் ஒரு வஸ்துவுக்கு இரண்டு லக்ஷணங்கள் கூறுகிறது. லக்ஷணம் என்னில் இயல்பு, கேரக்டரிஸ்டிக் என்று பொருள் கொள்ளலாம். என்ன இரண்டு லக்ஷணங்கள்? தடஸ்த லக்ஷணம், ஸ்வரூப லக்ஷணம் என்னும் இரண்டு.

ஒரு பொருள் இருக்கிறது. (பொருள் = வஸ்து) அஃது புறத்தில் சூழ்நிலையோடு இயக்கம் உறும்போது சில தன்மைகளை வெளிப்படுத்துகிறது. அந்த இயல்பை தடஸ்த லக்ஷணம் என்பர். ஆனால் அந்தப் பொருளே சூழ்நிலையோடும், புறத்தில் எதனோடும் இயக்கம் கொள்ளாதிருக்கும் பொழுதும் அதனுடைய இருத்தல் இயல்பாகச் சில தன்மைகள் இருக்கின்றன. அந்த இயல்பிற்குப் பெயர் ஸ்வரூப லக்ஷணம். ஒரு வஸ்துவின் தன்னளவிலான உரிய இயல்பு ஸ்வரூப லக்ஷணம். அதே வஸ்து வேறொன்றுடன் தன் சூழலில் கொள்ளும் தொடர்பில் வெளிப்படும் இயல்பு தடஸ்த லக்ஷணம் என்றும் சொல்லலாம். இந்த இரு லக்ஷணங்களைப் பற்றி ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் தமது சிவஞான மாபாடியத்தில் எழுதுங்கால் இங்ஙனம் உரைப்பார்:

“பெத்தத்தில் நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலில் பொதுவியல்பு என்றும், முத்தியில் நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலில் சிறப்பியல்பு என்றும் ஆயின...... பலபொருட்கும் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கே உரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவைநூலால் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு. தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொது இயல்பு, சிறப்பு இயல்பு வேறு எனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விருவேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க.”

(ஆகந்துகம் - பின்வந்துசேர்ந்தது; சகசம் - உடன்தோன்றியது)

வேதாந்தம் என்னும் உபநிஷதம் வழிசார்ந்த அணுகுமுறை ஹிந்துமத வழிபாட்டு நெறிகள் அனைத்திற்கும் பொதுமொழியாக அமைந்திருக்கிறது. பொதுமொழியின் தெளிவில், தம்தம் வழிபாட்டுச் சிறப்பு நுட்பங்களை ஆகமங்கள் என்ற வடிவில் ஒவ்வொரு வழிபாட்டு நெறியும் கைக்கொண்டு தம்தம் அளவில் சிறந்து விளங்கும் சம்ப்ரதாயங்களாகத் திகழ்வதுவே ஹிந்துமதத்தின் பொதுமை ஒருமையும், சிறப்புகளின் பன்மையும் ஒருங்கே மிளிரும் பான்மையாகும். இனி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில் தடஸ்த லக்ஷணம் என்று குறிக்கப்பட்ட முதல் மூன்று நாமங்களுக்கு வருவோம்.

முதல் மூன்று நாமங்கள் ஸ்ரீமாதா, ஸ்ரீமஹாராஜ்ஞீ, ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ என்பவை ஆகும். இந்த நாமங்களின் ரஹஸ்யப் பொருட்கள் நுணுகிக் கற்க வேண்டியவை ஆகும். ஸ்ரீபாஸ்கரராயரின் வியாக்கியானம் எத்துணை அருந்துணை என்பது நுணுகிக் கற்பாருக்கு விளங்கும். ஸ்ரீ என்னும் பொருளுக்கு எவ்வளவு அர்த்தங்கள் உண்டு, மாதா, அன்னை என்றே முதல் நாமம் தொடங்கும் காரணம் என்ன, மா என்பது அளத்தல் என்னும் பொருளும் கொண்டது. அதனால் அன்னையாக உலகை அவள் அளந்து இட்டருளிய கருணை பெறப்படும். இன்றைய விஞ்ஞானமும் பிரபஞ்சமே மொத்தம் 19 எண்கள் துல்யமான மதிப்பில் தவறாமல் இருப்பதுவே பிரபஞ்சம் என்ற ஒன்றே இருக்கக் காரணம் என்று சொல்லும் பொழுது இதன் ஒப்பீடு உணர்ந்து இன்புறத் தக்கதாம். ராஜ்ஞீ என்பதுவே ராணீ என்று ஆகும். உலகைக் காக்கும் கருணையைக் குறிக்கும் நாமம். ஸிம்ஹம் என்பது ஹிம்ஸை என்பதன் எழுத்து மாற்றாகக் கொண்டு ஆசனம் என்பது நீக்குவது என்னும் பொருளில் சம்ஹாரம் என்னும் பொருளும் மூன்றாவது திவ்ய நாமமான ஸ்ரீமத் ஸிம்ஹாசனேசவரீ என்பதற்குக் கூறுகிறார் ஸ்ரீபாஸ்கரராயர். ஸிம்ஹத்தை ஆஸனமாக உடையவள் என்னும் முதல் பொருளும் நுணுக்கமாகப் பார்க்குமிடத்து சம்ஹாரப் பொருளும் விளங்குவதை உரையின் உதவியால் அன்றி எப்படி உணர இயலும்?

ஆக முதல் மூன்று நாமங்களும் சிருஷ்டி, ஸ்திதி அல்லது பாலனம், சம்ஹாரம் என்னும் ஜகத் காரணப் பொருளாக அமைந்து விளங்குவன. இந்தப் படைப்பில் வந்துள்ள நமக்கோ உய்வு என்பதுவே பெரும் முக்கியமான, உடனடித் தேவை என்பதால் அன்னை, அதுவும் அவளே அத்தனை அன்னைத் தத்துவத்திற்கும் உருவமானவள் என்பதாலேயே முதல் நாமம் ஸ்ரீமாதா என்று தொடங்குகிறது என்னும் உரைநுட்பம் மிகவும் நம்மை உருக்கவல்லது. சூழ்நிலையில் இயக்கம் கொள்ளும் போது ஒரு வஸ்துவின் இலக்கணம்தான் தடஸ்த லக்ஷணம் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கேற்ப முதல் மூன்று நாமங்களையும் தடஸ்த லக்ஷணம் என்னும் பிரிவில் பகுத்துக் காணும் விளக்கம் எவ்வளவு அரிய பார்வை!

ஸ்ரீபாஸ்கர ராயர் தமது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வியாக்கியானத்தில் கூறும் அரிய கருத்துகளில் ஒன்று: ஸ்வர்க்கம் அடைய வேண்டும் என்னும் விருப்பம் உள்ளவன் தர்ச, பூர்ணமாஸ யாகங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது யக்ஞ சாஸ்திரங்களில். ஆனால் உடனே அடைகிறானோ என்ற கேள்வி எழலாம். உடனே அடையாவிட்டாலும் வாழ்க்கை முடிந்தவுடன் அவன் அதன் பலனான ஸ்வர்க்கத்தை அடைகிறான். அதுவரை அவனுடைய யாகம் செய்த பலன் அபூர்வம் என்ற வடிவில் சேமிக்கப்பட்டு இருக்கிறது. அப்பொழுது அவனுக்கு ஸ்வர்க்கம் பலனாகக் கிடைப்பது என்பது அபூர்வத்தின் வழியாக கிடைக்கிறது என்று யாக்ஞிகர்கள் சொல்லுகிறார்கள். அதேபோல் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் அம்பாளுடைய ப்ரீதி உடனே ஏற்பட்டு விடுகிறது. அவளுடைய ப்ரீதியினால் அநந்தமான பலன்கள் சொன்னவருக்குக் கிடைக்கப் பெறுகிறது. ’ஸ்ரீமாது: ப்ரீதயே தஸ்மாத் அனிசம் கீர்த்தயேத் இதம்’. ஆனால் எந்தப் பலனைக் காட்டிலும் மிக உயர்ந்த பலன், நிலைத்த பலன் அம்பாளின் ப்ரீதியே அன்றோ! என்று கூறுகிறார்.

தாம் தமது வியாக்கியானத்தை எந்தச் சான்று நூல்கள், எந்தச் சான்றான சம்ப்ரதாயங்கள் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு இயற்றுகிறோம் என்று அவர் கூறுவதைப் பார்க்கும் பொழுது மிகப் பழங்காலத்திலிருந்தே நமது ஹிந்துமதத்தில் இருந்துவரும் பிரஸ்தானங்களின் கிரமம் எத்தகையது என்பதை உணர்கிறோம்.

ச்ருதி ஸ்ம்ருதி நியாய புராண ஸூத்ர
கோசாகம ஸ்ரீகுரு ஸம்ப்ரதாயாத் |
நிச்சித்ய நிர்மத்ய க்ருதாபி டீகா
சோத்யைவ ஸத்பிர்மயி ஹார்தவத்பி: ||

’ச்ருதி, ஸ்ம்ருதி, நியாயம், புராணம், ஸூத்ர, கோச, ஆகமங்களிலிருந்தும், ஸ்ரீகுருவினுடைய ஸம்ப்ரதாயத்திலிருந்தும் நிச்சயம் பண்ணிக் கடைந்தெடுத்து இந்த பாஷ்யமானது பண்ணப்பட்டிருந்த போதிலும் அது என் மீது தயவோடு கூடிய ஸத்துக்களால் சரிபார்த்துத் திருத்தப் படுவதற்கு அர்ஹம்தான்’
சுற்றுப்புற உலகை அறியாமல் வெறுமனே விழித்த நிலை எவருக்கேனும் ஞாபகம் இருந்தால் ஒன்று புரியவரும். அதாவது கனத்து, புலனுகர்வுகளால் ஆன உலகம், அறிய அறிய என்ன ஆகிறது? அதன் நுட்பங்கள், அதன் அடிப்படைத் தத்துவங்கள், அதன் அர்த்தங்கள் மேலும் மேலும் விளங்கும்போது கட்டையாய்க் கல்லு போன்று இருந்த உலகம் காணாமல் போகிறது. அங்கு அறிவு என்னும் அக்கினி அந்த உலகம் ஆகிய விறகை, புலனுகர்வுகள் ஆகிய இந்தனத்தைப் பற்றி எரிந்து புரிதல் என்னும் சக்திமயமாக ஆக்கிவிடுகிறது. அந்த அறிந்து கொள்ளுதலின் அடிப்படை உட்குருத்து என்னவென்று பார்த்தால் அதுதான் ‘சித்’ என்பதாகும். ‘சித்’ என்பதை மட்டுமே தன்னந்தனியாக ஒருமித்துக் கண்டால் அதுவே ப்ரஹ்மம். அந்த ப்ரஹ்மமே சித் அக்கினியின் குண்டம். அந்த சித் அக்னி குண்டத்தில் எழுகின்ற அருளின் வடிவே அன்னை. சித் அக்னி குண்ட ஸம்பூதா. ப்ரஹ்மாண்ட புராணம் ஒரு செய்தியைச் சொல்லுகிறது. அசுரர்களின் பிடியிலிருந்து உலகை விடுவிக்க தேவர்கள் அன்னையை அழைக்க அமைத்தது சித் அக்னி குண்டம் என்று. ப்ரஹ்மமும், சக்தியும் ப்ரகாச ரூபமும், விமர்ச ரூபமும் ஆகும் ஒரே பாரமார்த்திகம். ப்ரஹ்மமும், காளியும் ஒன்றே. மண்டலமிட்டு அசையாமல் நிற்பதும், பேரியக்கமாக இயங்குவதும் இரு வேறு நிலைகள் என்பார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

அன்னையின் ஆவிர்பாவம் எந்த நோக்கத்திற்காக நடக்கிறது? அதாவது இந்த உலகம் வெறுமனே அலட்சியமான அறிவுமயம் இல்லை. இதன் உண்மையான உருவம் அருள்மயம். அந்த அருளிலிருந்து தன்னைப் புறத்தாக்கி, தான் தனது என்னும் பிடியில் தன்னைக் கொடுத்துத் தன் கேட்டிற்கு விரைந்து ஓடுகிறது மனிதர்களின் உலகம். அருளை விரும்பாத மனிதப் போக்கிற்கு அஸுரம் என்று பெயர். ஆனாலும் மனித உயிரின் உள் இயல்பே அருளைச் சார்ந்து இருப்பது. அஸுரத்தின் மயக்கில் ஆட்பட்ட மனிதமோ தன் இயல்பிற்கு விரோதமாய் ஓடுகிறது. ஆனாலும் அதன் இதயத்தில் தன் நிர்க்கதிக்கான தாபம் எழுகிறது. கணங்கள் கணங்களாய் அந்தத் தாபம் எழுவதுதான் தேவக் கூட்டம். தேவ கணங்கள் மனிதத்தை அஸுரத்தின் பீடையிலிருந்து மீட்க அயராது பாடுபடுகிறார்கள். பித்து பிடித்த நிலையில் குழந்தை தனக்கு மருந்து புகட்டும் அம்மாவின் கரங்களையே கடித்துவிட்டு ஓடுவதுபோல் மனித உயிர்கள் அழிவிலிருந்து காக்கும் தேவ கரங்களை வெறுத்து அஸுரப் பிடியை நோக்கி ஓடுகிறார்கள். ஒன்றுமில்லை. ஒரு கணம். மனித உயிர் சற்று நிதானித்து நின்று தன்னை முற்றிலும் தேவர்களின் காப்பில் ஒப்புக் கொடுத்து விட்டால் போதும். அஸுரம் நொறுங்கித் தெறித்து அழிந்துவிடும். மனித ஆத்மாவின் உள்திறனை உண்டு கொழுப்பது அஸுரம். எதனால் அவ்வாறு செய்ய வல்லதாகிறது? மனித உயிரின் அனுமதியால். அந்த அனுமதி மறுக்கப்பட்டால்? அடுத்த கணம் அஸுரம் மறையும். அந்த திவ்ய முகூர்த்தத்திற்காகவே தேவ கணங்கள் சதா சர்வகாலமும் தொழில் புரிகின்றன, உறக்கமின்றி. எனவேதான் தேவர்களை இமையாநாட்டத்தவர்கள் என்கிறோம். ஆத்மாவின் தற்காப்புப் படைகள் தேவர்கள். அந்தத் தேவர்கள் நம் நலனுக்காக, நம் உய்விற்காக ப்ரஹ்மத்தின் அருள்வடிவை ஆவிர்பாவம் கொள்ள இறைஞ்சுகிறார்கள். அந்த அருள்வடிவாம் அன்னையின் தோற்றம் தேவ கார்யத்திற்காக நலமுற எழுந்த வடிவம் என்று போற்ற நமக்குக் கற்றுத் தருகிறது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம். தேவகார்ய ஸமுத்யதா.

பதினேழாம் நூற் பிற்பகுதி தொடங்கி பதினெட்டாம் நூற் மத்திவரையிலும் ஞானப்பெருவாழ்வு வாழ்ந்தவர் ஸ்ரீபாஸ்கரராயர். அவருடைய காலத்தில் பாரதத்தில் அவர் போகாத ப்ரதேசம் இல்லை என்கின்றனர். பல ராஜாக்களுக்கும் தீக்ஷை அளித்து ஆன்மிக புனர் உயிர்ப்பு ஊட்டியவர் நம் பாரதத்திற்கு என்றால் இந்த மகான் எனலாம். யோசித்துப் பாருங்கள் என்ன என்ன கஷ்டங்கள் இருந்திருக்கும்! பெரும் தெய்விக சக்திகள் வாய்ந்தவர் என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? ஸ்ரீபாஸ்கரராயர் என்ன என்ன நூல்கள் இயற்றியுள்ளார் என்று பார்த்தால் பிரமிப்புதான் விஞ்சுகிறது. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம உரையான ஸௌபாக்ய பாஸ்கரம். ஸ்ரீகணபதி ஸஹஸ்ரநாம உரையான கத்யோதம். பாவநோபநிஷத் பாஷ்யம். கௌல உபநிஷத் பாஷ்யம், திரிபுரோபநிஷத் பாஷ்யம், துர்கா சப்தசதீயின் உரை குப்தவதீ, வாமகேசுவர தந்த்ர உரை ஸேது பந்தம், சிவாஷ்டோத்தர சதநாம உரை, வரிவஸ்யாரஹஸ்யமும் உரையும், சிவதண்டகம் முதலிய மந்த்ர தந்த்ர சாஸ்த்ர நூல்கள். வாதகுதூஹலம் என்னும் மீமாம்ஸா தர்சன நூல், வரதராஜரின் லகுசித்தாந்த கௌமுதீயின் உரை ரஸிகரஞ்ஜனி, நியாய மண்டனம் என்னும் நியாய சாஸ்திர நூல், சந்தோ பாஸ்கரம், சந்த: கௌஸ்துபம், விருத்த சந்த்ரோதயம் என்னும் பிங்கள ஸூத்ரத்தை ஒட்டிய சந்தஸ் சாஸ்த்ர நூல்கள். இவரின் வித்வத் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்கள் மூன்று. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் உரை, ஸ்ரீகணபதி ஸஹஸ்ரநாம உரை, ஸேது பந்தம் என்னும் மூன்று. வரிவஸ்யா ரஹஸ்யத்தில் சாக்த தந்த்ரத்தின் ஸ்ரீவித்யை உபாஸனையின் ரஹஸ்யங்களைப் பொதிந்து எழுதியுள்ளார். ’இதெல்லாம் நமக்குப் புரியாது சார்’ என்ற கீறல் விழுந்த கிராமஃபோன் ஒலி எப்பொழுது நம்மிடை இல்லாமல் ஆகுமோ!

தமது பாஷ்யம் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு அனைத்துப் பிரதேசங்களிலும் வதியும் வித்வத் சமூகத்திற்கு மிகுந்த உவப்பைத் தருவதாகுக என்று வேண்டுகிறார் ஸ்ரீபாஸ்கர ராயர். அவ்வாறு வேண்டும் பொழுதிலேயே அற்புதமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லுகிறார். என்னவெனில் பாரதம் முழுமையும், கிழக்கில் காமரூபம் வரையில், மேற்கில் ஸிந்துநதி பாயும் காந்தாரம், தெற்கில் ஸ்ரீராமனால் உண்டாக்கப்பட்ட (ரசித) ஸேதுவரையில், வடக்கில் கடும்பனியால் நுழைய அரிதான கேதாரம்வரையில் வித்வத் ஸமாஜங்கள் இருந்தன என்கிறார். வித்வத் ஸமாஜா ஸந்தி. அங்கிருக்கும் அனைத்து வித்வான்களுக்கும் இந்த இப்படிப்பட்ட யத்நமானது (முயற்சியானது) சுகத்தைத் தரட்டும். யே யே தாந் ஏஷ யத்ந: ஸுகயது. இதுவோ சாக்த சம்ப்ரதாய நூல். அதற்கு உரை எழுதுகிறவர் சாக்தர்களின் சம்மதி இருந்தால் போதும் என்று நினைப்பதுதானே. அவ்வாறில்லை.

(அங்குதான் ஹிந்துமத அமைப்பை நாம் உணரவேண்டும். பாரதத்தின் நான்கு திசை எல்லைவரையில் இருக்கும் வித்வான்களின் ஆமோதிப்பு என்பதுதான் எந்த ஒரு குறிப்பிட்ட ஸம்ப்ரதாய நூலாக இருந்தாலும் கூட மிகவும் அவசியம் என்று கருதப்பட்டது. பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரும் தமது அத்வைத சித்தாந்த ரீதியான பாஷ்யத்தை தம்மை ஏற்றுக்கொண்டு தம் பின்னால் வருகின்ற சிஷ்யர்கள் மட்டும் ஒப்புக்கொண்டால் போதும் என்று எண்ணவில்லை. அவரும் இந்த பாரத அனைத்து வித்வத் சமாஜங்களும் தமது பாஷ்யத்தைக் கண்ணுற்று கண்டனம் சொல்ல முடியாமல் இருந்தால்தான் தமது சித்தாந்தம் வித்வான்களால் கொண்டாடப்பட்டது என்னும் சிறப்பை அடையும் என்று எண்ணினார். பல நூற் கழித்து வந்த ஸ்ரீராமாநுஜரும் தமது ஸ்ரீபாஷ்யம் என்பது தம்மை ஒப்புக்கொண்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் மாத்திரம் படித்து ஏற்றுக்கொண்டால் போதும் என்று எண்ணவில்லை. அவரும் அனைத்து பாரத வித்வத் ஸமாஜங்கள் கண்ணுற்று ஏற்க வேண்டும் என்று கருதினார். தன்னைப் பின்பற்றுவோர் மட்டும் ஏற்றால் போதும் என்று அவரும் நினைக்கவில்லை. எந்த ஒரு சித்தாந்த ஸ்தாபகரும், ஸம்ப்ரதாயத்தினரும் இந்த விதமான ஹிந்துமதப் பொதுமையின் உயர்ந்த வித்வத் ஒருமையை நோக்கித்தான் தத்தம் கருத்துகளை முன்வைத்தனர்.)

கிழக்கில் காமரூபம், மேற்கில் காந்தாரம், தெற்கில் ஸேது பந்தம், வடக்கில் கேதாரம் என்ற எல்லைகளின் உள்பரப்பில் வதியும் எண்ணற்ற வித்வத் ஸமாஜங்கள் எல்லோரும் தம்தம் வழிபாட்டினால் வேறு வேறு ஆகமங்களைக் கைக்கொண்டு இருக்கலாம். ஆனால் அவர்களின் வித்வத் என்பது, அவர்களின் சாஸ்திர வித்யை என்பது பொதுவாக சதுர்தச வித்யா ஸ்தானங்கள் என்பதைக் கொண்டது. அங்குதான் ஹிந்துமதத்தின் பொதுமையின் ஒருமை என்பது இருக்கிறது. வழிபாடுகள் சிறப்பின் பன்மை என்றபடி வேறுபடும். இந்த அமைப்பு ரிக்வேத ரிஷிகளின் காலம் தொட்டு வந்துகொண்டிருப்பது. ‘பரம்பொருள் ஒன்றே. ஞானிகள் அந்தப் பரம்பொருளைப் (வழிபாட்டிற்காக) பலவாறு விவரிக்கின்றனர்’ - ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி - என்பது ரிக்வேத மந்திரம். பதினேழாம் நூற் ல் வதிந்த ஸ்ரீபாஸ்கரராயரும் சொல்வது இதையேதான்.

’ஆப்ராச: காமரூபாத்த்ருஹிண
ஸுதநத ப்லாவிதாதா ப்ரதீசோ
காந்தாராத் ஸிந்துஸார்த்ராத்
ரகுவர ரசிதாதா ச ஸேதோரவாச: |
ஆகேதாராத் உதீசஸ்துஹிநகஹநத:
ஸந்தி வித்வத் ஸமாஜா
யே யே தாநேஷ யத்ந: ஸுகயது
ஸமஜாந் கச்சமத் கர்துமீஷ்டே || ’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment