நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்வி நம் எல்லோருக்குமே ஒவ்வொரு சமயம் எழக் கூடிய ஒரு கேள்விதான். புதிராக, விரக்தியாக, தோல்வியில் அல்லது மனத் தாழ்மை உணர்ச்சியில் இந்தக் கேள்வி பிறக்காத மனித மனம் இல்லை. இது ஜீவன் தன்னைத் தானே ஓர்மை கொண்டு விமரிசனப் பார்வை பார்ப்பதையும் குறிக்கும். ஒரு விதத்தில் இது நல்ல கேள்வியும் கூட எனலாம். ஏனெனில் சமயத்தில் நம் வாழ்வின் இலட்சியம் யாது என்னும் இலட்சியத் தெளிவையும் இது ஏற்படுத்தக் கூடும்.
ஒற்றை வரியில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றால், நாம் ஏன் பிறந்தோம், மனிதரின் வாழ்வு எதற்காக ஏற்படுகிறது என்றால், கடவுளைக் காண்பதுவே மனித வாழ்வின் இலட்சியம். ஒரு வேளை நமக்கு இது சிரிப்பைத் தரலாம். எழுதுபவர் ஏதோ பழங்காலத்திலிருந்து தப்பித் தவறி வந்து விட்டாரா என்றும் தோன்றலாம். ஆனால் இது உண்மையாகும். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. கடவுள் என்றால் என்ன? கடவுளைக் காணல் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் ஏன் அது இயல்பாக தன்னைப் போல் புரிவதில்லை போன்ற பல விஷயங்கள் இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவை. இதை நான் ஏதோ மதத்தைச் சார்ந்து சொல்கின்ற பதில் அன்று. மதம் என்பதையே நாம் ஏற்காமல் போனாலும் கூட இந்த விஷயம் உண்மையாக இருக்கும்.
அதாவது கடவுள் என்ற வாழ்வின் இலட்சியம் என்பது என்ன? இதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் கடவுள் என்ற கருத்தைப் பார்க்காமல் மனித வாழ்க்கையின் இயல்பைப் பார்ப்போம். கடவுள், மதம் என்ற சிந்தனைகளே அற்ற ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் பிறந்து, வளர்ந்து, பல அனுபவங்கள் பெற்று வாழ்வின் முதிர்ச்சியில் என்ன உணர்கிறார்? தம்முடைய வாழ்வின் தொடக்கத்தில் தாம் எப்படி இருந்தாரோ அந்த நிலையினின்று நெடுந்தூரம் தாம் மாறி, புரியாத பல விஷயங்கள் புரிந்து ஓரளவு தேற்றம் பெற்ற ஜீவனாய்த்தான் அவர் தம்மை உணரவேண்டும். இன்னும் புரியாத விஷயங்கள் பல இருக்கின்றன என்ற உணர்ச்சியே அவருக்கு ஓர் ஆழமான அமைதியை, பொறுமையைத் தருகின்றது என்று உணரக் கூடும். அது நியாயமே. ஏனெனில் வாழ்வு, உலகம் என்பதன் அமைப்பே பார்த்தால் புரியாமல் இருந்தவை புரிய வருகின்றன என்றபடிதான் அனுபவம் அமைகிறது. இதை பக்தர் உணர்ந்து வியக்கும் போது இவ்விதம் கூறுகிறார்: ‘அறியாதன அறிவித்த அத்தா’.
ஏன் அவ்வளவு அனுபவங்கள் அடைந்துதான் அந்தப் புரிதல், தேற்ற உணர்வு ஏற்பட வேண்டுமா? கஷ்டப் படாமலேயே ஏன் படிப்பினைகளை நாம் கற்க இயலாதா? என்று ஒருவித ஈஸிசேர் மனப்பான்மையில் நாம் விழையக் கூடும். ஆனாலும் வாழ்வின் தன்மையோ ஒரே படித்தாகத்தான் இருக்கிறது. நாம் எதை அனுபவிக்கிறோமோ அதைத்தான் நம்மால் திடமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அல்லது நம் மனம் நன்கு பக்குவம் அடைந்தால் பிறருடைய அனுபவங்கள் பற்றிய மொழிவைக் கொண்டு ஒத்து உணர்ந்து நாம் நம் அனுபவத்தைச் சிக்கனமாக ஆக்கிக் கொள்ளவும், படிப்பினைக்கான கால அவகாசத்தை ஓரளவு சுருக்கி அடுத்தகட்ட படிப்பினைகளை நோக்கி முன்னேற முடிகிறது. இந்த அறியாமையிலிருந்து அறிந்துகொள்வதற்குப் போகும் பயணமே கடவுளை நோக்கிய பயணம்தான். எனவே கடவுள் என்பவரை நாம் ஏதோ எங்கோ இருக்கின்ற பெரிய ஆள் என்று தொடக்க நிலைச் சித்திரங்களோடு நிற்காமல் சிறிது ஆழ்ந்து போனோம் என்றால் அறிவின் முதிர்ச்சியும் அறிவின் முழுமையுமே கடவுள் என்ற பெயரால் குறிக்கப் படுவது.
இதை வேறு விதத்தில் சொன்னால் ஆரம்ப நிலையில் அனுபவத்தைப் பொறுத்த மட்டில் இருட்டில் இருக்கும் ஜீவன் தன் வாழ்வின் முதிர்ச்சியில் இன்னும் அதிக ஒளியான நிலைக்குப் போயிருக்கிறது எனலாம். அறிவையும், ஒளியையும் பொறுத்தே அனுபவம், வாழ்க்கை என்பதன் குறுக்கம், பெருக்கம் என்பது அமைந்திருப்பதனால், வாழ்வின் நீட்சி என்பது கூடுதல் அறிவு, கூடுதல் விளக்கம் என்று பொருள்படுகிறது. எனவேதான் நான் ஏன் பிறந்தேன் என்பதன் பதிலாக அமைவது கூடுதல் அறிவிற்காகவும், கூடுதல் ஒளிவிளக்கத்திற்காகவும், கூடுதல் வாழ்வின் நீட்சிக்காகவும் என்பதுவே பதிலாக ஆகும். இந்த மூன்று வித தன்மைகளையும் ஒரு பெரும் நிலையாக நாம் புரிந்துகொண்டால் அதுவே கடவுள் என்பதாகும். கடவுள் என்பது பூரண ஞானம், பூரண ஜோதி, பூரணமான வாழ்வு ஆகும். நாம் கடவுளைக் காணவே பிறக்கிறோம் என்று சொல்லும் போது காண்பது என்றால் இந்த உயிரின் பயணத்தைக் குறிப்பதாகும். அறிவை நோக்கி; ஒளியை நோக்கி; நித்யமான வாழ்வை நோக்கி. இதையே உபநிஷதங்கள் சாந்தி மந்திரமாக நமக்குக் கற்பிக்கின்றன.
அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
இந்த மூன்றும் நிறைந்த நிலையான கடவுளுக்கு உரிய வடிவமும், பெயரும் ஆக இருப்பது பிரணவம் ஆகும். எனவே பிரணவத்தைச் சொல்லி அந்தக் கடவுளின் அருள் நம் வாக்கிலும், செயலிலும், உள்ளத்திலும் பூரண சாந்தியை விளைவிக்கட்டும் என்பதையே பிரார்த்தனையாகப் பல்லாயிரக் கணக்கான வருஷங்களாக ஹிந்துமதம் நமக்கு வைத்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment