Monday, March 2, 2020

ஸ்ரீப்ரஹ்மஸூத்ர சங்கர பாஷ்யத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

பொதுவாகப் பழைய நூல்கள் தமிழில் வந்துள்ளவற்றைக் காணுங்கால் மனம் கொஞ்சம் பதறும். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நம் நண்பர்களும், இளம் தலைமுறைகளும் இழக்கின்றனரே என்று. ஆனால் இந்த நூலைக் கண்டதும் மிகவும் வருத்தம் உண்டாகிறது. ஏனெனில் எவ்விதத் துணிச்சலுடன் இந்த மஹான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் என்பது கொஞ்சம் நம் அவசர உலகின் புத்தியை நிறுத்திப் பார்த்தால்தான் புரியும். நான் சொல்வது ப்ரஹ்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ர சங்கர பாஷ்யம் என்ற நூலைப் பற்றித்தான். ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் நான்கு அத்யாயங்கள் கொண்டது என்று பார்த்தோம். ஸமன்வய அத்யாயம், அவிரோத அத்யாயம், சாதன அத்யாயம், பல அத்யாயம் என்பவை அந்த நான்கு. இவற்றில் ஸமன்வய அத்யாயம் என்னும் முதல் அத்யாயத்திற்கான சங்கர பாஷ்யத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, பக்கங்களில் மேல் பகுதியில் சம்ஸ்க்ருதத்தில் சங்கர பாஷ்ய மூலமும், கீழே அந்தந்தப் பக்கத்தில் அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பும் கொடுத்து முதல் புத்தகமாக 1928 ஆம் ஆண்டு போட்டிருக்கிறார். இரண்டாவது அவிரோத அத்யாயம் 1931 ஆம் ஆண்டு வந்திருக்கிறது. மூன்று நான்காவது அத்யாயங்கள் 1932 ஆம் ஆண்டு வந்திருக்கிறது.

1928 முதல் 1938 வரை ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களின் காலம் தமிழில் என்று தோன்றுகிறது. ஏனெனில் முன்னரே பார்த்திருக்கிறோம், ஸ்ரீரங்கத்தில் ஓர் இராப்பத்து அன்று 1930 களில் பல பக்தர்களும் ஒருங்கு கூடி முடிவு பண்ணி ஸ்ரீபாஷ்ய தமிழ்மொழிபெயர்ப்பு சங்கம் என்று நிறுவி, ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்களில் முதல் நான்கு ஸூத்ரங்களுக்கு மட்டுமான ஸ்ரீபாஷ்யம், அதற்கான சுருதப்ரகாசிகை என்று சதுஸ்ஸூத்ரீ பகுதியை மட்டும் வெளிக்கொணர்ந்தனர் என்று. இங்கோ ஸ்ரீப்ரஹ்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் 1928லிருந்து 1932க்குள் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் முழுவதற்கும், அதாவது மொத்தம் 500க்கும் மேற்பட்ட ஸூத்ரங்களுக்குமான சங்கர பாஷ்யத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டுவிட்டார். இவர்கள் அனைவருக்கும் இருந்த தமிழ்க் காதல், தமிழை வளப்படுத்த வேண்டும் என்ற அக்கறை, வடமொழிப் பரிச்சயம் இல்லாதோரும் இழக்கக் கூடாது என்ற சமுதாயப் பொறுப்பு எண்ணி நன்றி பாராட்டப் பட வேண்டியதாகும்.

ஸ்ரீநடேச சாஸ்திரிகளோ தாம் கற்கும் போது ஸ்ரீபைங்கானாடு கணபதி சாஸ்திரிகளிடம் மிகக் கடுமையான நியமங்களை அனுசரித்துக் கற்றவர். அவருடைய குருவோ மஹாமஹோபாத்யாய ஸ்ரீராஜு சாஸ்திரிகள் ஸ்ரீஅப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்தவர். இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை வழுக்கள் களைந்து செப்பனிட்டுக் கொடுத்த ப்ரஹ்மஸ்ரீ கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் கூறும்பொழுது, ‘இம்மொழிபெயர்ப்பில் எமது பரமாசாரியர் அந்தரங்க அபிப்ராயம் ஐயமறத் துலங்குகிறது..’ என்று கூறுகிறார். ஸ்ரீசாஸ்திரிகளின் தமிழோ கஷ்டப்படுத்தாத தமிழ். கொஞ்சம் நாம் ஆர்வமும், முயற்சியும் காட்டினால் பிறகு வெகு எளிதில் பழகிவிடும். தமிழ்நாட்டில் ஹிந்துக்களின் கடமைகளில் இம்மாதிரியான நூல்களில் கவனம் செலுத்துவதும் ஒன்று என்பதில் சந்தேகம் உண்டோ!

ஸ்ரீசாஸ்திரிகள் இந்தச் சாதனையோடு நிறுத்தியவர் அல்லர். சாங்கிய சாஸ்திரம் யோக தர்சனம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்று பெரும் பெரும் நூல்களையெல்லாம் தமிழில் கொண்டுவந்த மகனீயர். இந்த நூல்களையெல்லாம் மறதிக்கும், அலட்சியத்திற்கும் இலக்காக்கும் துர்பாக்கியம் நமக்கு இல்லாமல் போக அரங்கனே அருளட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment