சங்கராநந்தர் என்று ஒரு மகான். பஞ்சதசி அருளிய வித்யாரண்யரின் குரு. சங்கராநந்தர் அருளியது ஆத்மபுராணம் என்னும் நூல். 13 - 14 நூற். பெரும் யோகி. லம்பிகா யோகம் என்னும் முறையால் நெடுநாள் பூமிக்குள் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புராணங்கள் அனைத்தின் நோக்கமும் ஆத்ம ஞானம் என்னும் போது ஆத்ம புராணம் என்றே ஒரு கிரந்தம் எழுதியது சாலவும் சிறந்தது. நாமெல்லாம் ‘நான் புராணம்’ எழுதுவதில் வல்லவர்கள். எப்பொழுது பார்த்தாலும், எதைத் தொட்டாலும் ‘நான் அப்படி, நான் இப்படி’ என்று ஒரு கணமும் ஓய்வின்றி நாம் பாராயணம் செய்வது ‘நான் புராணமே’ அல்லவா! அதை மாற்றி ஆத்ம புராணம் என்று யோசிக்கக் கற்றால் அடைய வேண்டியது அடையப் பட்டதாகும் என்று நினைத்தாரோ என்னவோ!
இந்த ஆத்ம புராணத்தை ஒருவர் ஹிந்தியில் மொழிபெயர்த்தார் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர். அவர் எங்கு பிறந்தார் எப்பொழுது என்ற விவரங்கள் அகப்படவில்லை. அவர் பெயர் சுவாமி சித்கனானந்த கிரி என்பதாகும். சிந்து தேசத்தில் பிறந்தவர் என்று அத்தேசத்தவர்கள் சொல்லுகின்றனர். இவருடைய ப்ரஹ்மச்சர்ய ஆஸ்ரமத்தின் போது ஹரித்வாரில் இருக்கும் கனகல் என்னும் தீரத்தில் இருந்து நியாய வியாகரணங்கள் வாசித்துப் பின்னர் வேதாந்தம் பயில காசி க்ஷேத்ரம் சென்றடைந்தார் என்று தெரிகிறது. அங்கு ஸ்ரீபரமஹம்ஸ பரிவ்ராஜகாசாரியரான சுவாமி உத்தவாநந்த கிரி என்பவரிடம் சந்நியாச தீக்ஷை பெற்றார். பிறகு சில காலம் மனம் முற்றிலும் ஒடுங்கி நிர்விகற்ப சமாதியில் ஆழ்ந்திருந்தார். பின்னர் தம் பணி ஏதோ இருப்பது போன்று தெய்வ சங்கல்பத்தினால் தீர்த்த யாத்திரை என்று புறப்பட்டுப் பல கோவில்களைத் தரிசித்து, கத்தியவாட்டில் இருக்கும் பவநகர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு திவான்களாக இருந்த ஸ்ரீகௌரிசங்கர், விஜயசங்கர் என்னும் அதிபக்குவிகளான சாதகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அங்கேயே பதின்மூன்று ஆண்டுகாலம் இருந்து பல நூல்களை அருளினார். திவான்கள் வேண்டிக் கொண்டதற்கேற்ப ஹிந்தி பாஷையில் நான்கு முக்கியமான பெட்டகம் அனைய நூல்களைத் தந்தார். சங்கராநந்தரின் ஆத்ம புராணம், ஸ்ரீபகவத் கீதைக்குக் கூடார்த்த தீபிகை, ப்ரஹ்மஸூத்ரங்களின் அர்த்தங்கள் நிரம்பியதான தத்வாநுஸந்தானம், பல நியாய நூல்களின் கருத்துகளை ஒருங்குறத் தொகுத்துத் தந்ததான நியாயப் பிரகாசம் என்பவையே அந்நான்கு. கணாத தர்க்கம், கௌதம தர்க்கம் இரண்டையும் பயன்பாடு கருதி விளக்கம் சுருக்கமாகக் கூறிய நூல் நியாயப் பிரகாசம். நியாயம், வைசேஷிகம் என்னும் இரண்டு தர்சனங்களின் சாரம் எனலாம்.
இந்த நான்கு நூல்களையுமே தமிழில் கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகவும் அதிர்ச்சி அடையமாட்டீர்களே ! ஆம். ஆத்ம புராணம் கோவிலூர் மடாலயத்து ஸ்ரீவீரசுப்பைய சுவாமிகளால் நல்ல தமிழ் நடையில் ஆக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சித்கனானந்த கிரி அவர்கள் அருளிய ஸ்ரீபகவத் கீதையின் கூடார்த்த தீபிகை என்னும் நூலையும் ஸ்ரீவீர சுப்பைய சுவாமிகளே தமிழில் கொண்டு வந்துள்ளார். ப்ரஹ்மஸூத்ர அர்த்தங்களை ஒருங்குறத் தெளிவிக்கும் நூலான தத்வாநுஸந்தானம் என்னும் நூலை ஸ்ரீ கா அரங்கநாதம் பிள்ளை என்பவர் மொழிபெயர்த்துள்ளார். நியாயப் பிரகாசம் என்னும் பென்னம் பெரிய நூலினை ஸ்ரீசாது இரத்தின வேதாந்த விசாரணை சபையினருள் ஒருவராகிய ஸ்ரீநாகரத்தின நாயகர் மொழிபெயர்த்துள்ளார். அதனை வேதாந்த விசாரணைச் சபையில் ஒருவரும், தர்க்க வேதாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும் ஆகிய ஸ்ரீமுருகேச முதலியார் அவர்கள் நன்கு பரிசோதித்து வெளியிட்டுள்ளார். 1907 தொடங்கி இந்நான்கு நூல்களும் 1917க்குள் வந்து நிறைவேறியிருக்கின்றன. மொத்தம் 3500 சொச்சம் பக்கங்கள், மூன்று ஆயிரத்து ஐந்து நூறு, நுணுகிய பிரிண்டு. என்ன சாதனை இது! இதை உணரும்போது உங்களுக்கு மயிர்க்கூச்செறியவில்லையா? இதுவோ நடந்த சாதனைகளில் ஒரு பத்து சதவிகிதம் அவ்வளவே.
நம் முன்னோர்கள் அவர்கள் ஸ்ரீவீரசுப்பைய சுவாமிகளோ, ஸ்ரீகரபாத்திர சுவாமிகளோ, ஸ்ரீவடிவேலு செட்டியாரோ, ஸ்ரீமுருகேச முதலியாரோ, ஸ்ரீநாகரத்தின நாயகரோ, ஸ்ரீராமசந்திர ஐயரோ, ஸ்ரீசிவசுப்ரமண்ய ஐயரோ, ஸ்ரீராமசாமிப் பிள்ளையோ இன்னும் கணக்கில் அடங்காத பெரியோர்கள் அவர்கள் காலத்தில் ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்குற இயங்கி அளப்பரிய சாதனைகள் இயற்ற இயலும், ஆன்மிகச் செல்வம் எப்படிப் பாதுகாப்பது என்பதை நமக்கு ஒளிமிகுந்த வழிகாட்டிகளாக நின்று செய்து காட்டவில்லையா? அவர்களின் வழித்தோன்றல்கள் அன்றோ நாம்! வீண்கதை பேசி, வெற்று பிணக்கங்கள் கொண்டு, செய்ய வேண்டிய அருஞ்செயல்கள் அத்யாவசியப் பணிகள் எவ்வளவோ எஞ்சி இருக்க, வீணே இயலாமை பேசி இருப்போமா? ஒருகாலும் மாட்டோம். என்ன சுமார் ஒரு அரைநூற்றாண்டாக ஒரு நெடிய மறதி. ஒரு ஜெனெரேஷன் கேப் அவ்வளவே. விட்டுப் போனதைத் தொடரவும், முன்னிலும் பெரிய சாதனைகள் செய்யவும், பழங்காலத்தில் ஆக்கபூர்வமான அம்சங்களைக் கொண்டு, வேண்டாதனவற்றைக் கைவிட்டு முன்னேற, இத்தகைய ஒளிமிகுந்த முன்னோர்களின் உதாரணங்கள் நம்மைத் தூண்ட ஓய்வோமோ! அன்றைவிட இன்று ஹிந்து சமுதாயத்தில் படித்த பெருமக்கள் எவ்வளவு பெருக்கம்! அத்தனை பேரும் ஒரு மனத்தராய் நம் முன்னோர்களின் சீரிய நற்பணியைத் தொடர்வோமே.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Excellent narration
ReplyDelete