Tuesday, March 31, 2020

கந்தரலங்காரம் சிந்தனைகள்

கந்தரலங்காரத்தைப் படிக்கப் போனால் கந்தன் கவியைப் படிக்க ஏன் இவ்வளவு காலம் கடத்தினீர்? என்று கேட்டாலும் என்ன பதில் சொல்வது? தலையைக் கவிழ்ப்பதல்லால்?. பதிலையும் அவரே சொல்லித் தருகிறார். அதுதான் சிறப்பு.

”சளத்தில் பிணிபட்டு அசட்டுக்
க்ரியைக்குள் தவிக்குமென்றன்
உளத்தில் பிரமத்தைத் தவிர்ப்பாய்
அவுணர் உரத்து உதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக்
களித்துக் குடித்துவெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட
வேல்தொட்ட காவலனே.”

ஆறுமுக தேசிகனார் செய்யும் ஓர் அரிய உபதேசம்! மிகத் தெளிவாக விளக்குகிறார். எதை? அநாதியிலே வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத் தெளிவாக விளக்கும் குரு. அவருடைய தெளிவான உபதேசத்திற்குப் பின்னர் புரியவருகிறது. அஃது அருளில் விளைந்த ஆனந்தத் தேன் என்று. அதுவும் ஒளியில் விளைந்த உயர்ஞானத்து பூதரத்தின் உச்சியின் மேல் இருக்கும் அருளில் விளைந்த ஆனந்தத் தேன் என்று.

“ஒளியில் விளைந்த உயர்ஞான
பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததொர் ஆனந்தத்
தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்
பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுகம்
ஆறுடைத் தேசிகனே.”

வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை. சரி சரீரத்துடன் உள்ளதா? அல்லது சரீரம் இல்லாததா? முடியாது. என்ன சொல்லியும் அவன் சொன்ன உபதேசத்தைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நானும் சொல்ல வேண்டும் என்றுதான் பார்க்கிறேன். என்னவென்று எதைச் சொல்லிப் புரிய வைப்பது?

“தேனென்று பாகென்று உவமிக்கொணா
மொழித் தெய்வவள்ளி
கோனன் றெனக்குப தேசித்தது
ஒன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று
நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி
யன்று சரீரியன்றே.”

இவ்வாறு ஒன்றும் சொல்ல முடியாமல் ஒரு நிலைக்கு என்னை ஆட்படுத்திச் சும்மா இருக்கும் நிலைக்குள் எனைப் புகவிட்டவன் அவன்.

”சொல்லுகைக் கில்லையென் றெல்லாம்
இழந்துசும் மாஇருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்ட
வாஇகல் வேலன்நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக்
கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத்
தோளண்ணல் வல்லபமே.”

சரவண பவகுஹ சரணம் சரணம்
சண்முக நாதா சரணம் சரணம்

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

மாவலிபால் அன்று மூவடி கேட்டு அளந்த திருமால் மூதண்ட கூட முகடு முட்டத் தம் சேவடியை நீட்டினார். அந்த மாலின் மருகனான குமரனின் அழகிய இளம் பாதங்களோ மூன்று இடங்களில் பட்டவண்ணம் இருக்கின்றன. எங்கு எங்கு? போர்க்களத்தில் மயிலின் மீதும், தேவர்களின் தலைகள் மீதும், என்னுடைய பாக்களை வடித்த ஏட்டிலும் தொட்டவண்ணம் இருக்கின்றன குமரனின் பாதங்கள் என்கிறார் ஸ்ரீஅருணகிரிநாதர்.

”தாவடி ஓட்டு மயிலும்
தேவர் தலையிலுமென்
பாவடி ஏட்டிலும் பட்டதன்
றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட
கூட முகட்டுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்
மருகன்தன் சிற்றடியே.”

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஒரு பாட்டு. ஒரு வேளை அவருக்கு அப்பொழுதே தெரிந்திருக்குமோ!

ஸ்ரீஅருணகிரிநாதர் சொல்கிறார்: ‘மனத்தைப் பொறிகளின் வழியே போகாமல் தடுப்பீர்களாக!. வெகுளியாகிய கோபத்தை விட்டுவிடுங்கள்; தானம் என்றும் கொடுப்பீர்களாக! (வெளியே போகலாமா?) அதெல்லாம் இருந்தபடியே ஓரிடத்தில் இருங்கள்.’

என்ன சொல்றீங்க? ஏகப்பட்ட பிரச்சனை.

‘அப்படியா? ஏழுபாரும் உய்வடையும் படியாக, சூரனையும், குன்றத்தையும் ஒருங்கே திறக்கும் சக்தி வாய்ந்ததான, துளைத்துப் பொடியாக்கும் வல்லமை மிக்க அந்த சக்தி வாய்ந்த வேலை விடும் கோனாகிய முருகனின் அருள் வந்து தானே உங்களுக்கு வெளிப்படும். கவலைப் படாதீர்கள்.’

ஸ்ரீஅருணகிரிநாதப் பெருமான் பாடிய பாட்டு. கந்தரலங்காரம்:

“ தடுங்கோள் மனத்தை விடுங்கோள்
வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோள் இருந்த படியிருங்
கோள்எழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம்
திறக்கத் துளைக்க வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.”
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***
ஓரலை ஓய்ந்தால் ஓரலை எழும் கடல் போன்றது பிறவிக் கடல். அந்தக் கடலில் விழமாட்டார்கள். எவ்வளவு சிறப்பு இருந்தாலும் அனைத்தையும் கெடுக்கும் வறுமை. அந்த வறுமையால் வாட மாட்டார்கள். இரண்டும் உறுதி ஆகிவிட்டதா? என்ன இரண்டும்? ஆன்மிக நன்மை, வாழ்வின் வளம் என்பதான இகபரம் எனப்படும் நிச்ரேயஸம், அப்யுதயம் என்ற இணைந்த இலட்சியங்களை ஹிந்துமதம் நமக்குக் காட்டுகிறது என்று முன்னர் பார்த்தோம் அல்லவா? அந்த இரண்டு இலட்சியங்களும் பூர்த்தியாகிவிடும். யாருக்கு? ஸ்ரீஅருணகிரிநாதரிடம் கேட்போம்:

“முடியாப் பிறவிக் கடலில்
புகார்முழு தும்கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்
படார்வெற்றி வேல்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு
நாமம் புகல்பவரே.”

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment