நாம் உபநிஷதங்களைப் படிப்பது என்பது வேறு. அதுவே வேதாந்திகள் உபநிஷதங்களைப் படிக்கும் முறை என்பது வேறு. நாம் ஏதோ கண்ணில் பட்டதை அப்படி அப்படியே மேற்கோள் என்ற கணக்கில் படிப்போம். சில இடங்கள் நமக்குக் கதையம்சங்கள் உள்ளதுபோல் தோன்றும். அதற்கு மேல் நமக்கு அதனுடைய ஆழமோ, தத்துவப் புலச்செறிவோ மனம் கொள்ள முடியாததாய் இருக்கும். சிலசமயம் நம்முடைய இயலாமையை ஒப்புக்கொள்ள மனமின்றி, ஏதோ அதெல்லாம் அந்தக் காலத்து வழிவழியாக வந்த நூல்கள் என்று மேம்போக்காக விமரிசனம் பூசிப் பேசுவோம். ஆனால் அந்தத் துறைக்கு என்று முற்றிலும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள் எப்படி அதை அணுகுகிறார்கள், எந்த விதத்தில் உபநிஷத வாக்கியங்களைப் புரிந்துகொள்கிறார்கள் என்று கவனம் கொண்டு பார்த்தோமானால் அஃது ஒரு பெரும் கண்திறப்பாக இருக்கும்.
உபநிஷதங்களை எப்படிப் படிக்க வேண்டும், எப்படி உபநிஷத வாக்கியங்களை உள்ளர்த்தங்களைத் தவறவிடாமல் கற்க வேண்டும் என்ற வித்யைத்தான் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் கற்றுக் கொடுக்கின்றன. நியாயம், வியாகரணம், பூர்வ மீமாம்ஸை என்னும் இயல்களில் எந்த எந்தப் பொதுவிதிகள் கைக்கொள்ளப் படுகின்றனவோ, நிரூபிக்கப்பட்ட அணுகுமுறைக் கோட்பாடுகள் என்ன உண்டோ அவையெல்லாம் பொருத்தம் கருதி உபநிஷதங்களை ஊன்றிக் கற்பது என்னும் துறையான வேதாந்தம் என்பதிலும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரங்கள் காட்டுகின்றன. ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரங்கள் என்பவை பெரும் துறையின் சாரமான கருத்துகளைச் சிமிழ்ப்புறச் சுருக்கமான எழுத்துகள் அமைந்த நூற்பாக்களால் தந்த வடிவம். அதுவே பெரும் துறையான பெருக்கத்திற்கும் அடிப்படைக் குறிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன.
உபநிஷத வாக்கியம் ஒன்றை நாம் படித்தால் பொதுவாக ஏதோ ஒரு வாக்கியம் என்றுதான் படிப்போம். ஆனால் ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரங்கள் அதையே எப்படிப் படிக்க வேண்டும் என்று கற்றுத் தரும் போது என்ன சொல்கின்றன. வாக்கியத்தின் தாத்பர்யம் என்ன என்று பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அவ்வாறு தாத்பர்யம் என்ன என்று பார்க்கும் பொழுது ஆறு அடையாளங்களைக் கொண்டு இன்னதுதான் தாத்பர்யம் என்று நிர்ணயிக்கலாம் என்றும் சொல்கிறது. அதற்கு ஷட்வித தாத்பர்ய விங்கங்கள் என்று பெயர்.
ஷட்வித - ஆறுவிதமான; விங்கம் - அடையாளம்.
என்ன என்ன அவை? உபக்கிரம உபஸம்ஹாரங்கள். ஒரு கருத்து உபநிஷதம் சொல்லும் பொழுது தொடக்கமும் முடிவும் எப்படி அமைந்திருக்கிறது என்று பார். அதைப் பார்த்தாலே என்ன தாத்பர்யத்தில் சொல்ல வந்தது என்பது புரியும்.
அடுத்து, அப்யாஸம். ஒரு கருத்து மீண்டும் மீண்டும் ஒரு பகுதியில் அப்யாஸமாக, மீட்டு மொழிதலாகச் சொல்லப்படுமானால் அதன் மூலமும் தாத்பர்யம் என்ன என்று உணர முடியும்.
அபூர்வதை - ஒரு பகுதியில் ஒரு கருத்து முன் எப்பொழுதும் சொல்லப்படாமல் புதியதாகச் சொல்லப்படுமேயானால் அப்பொழுது தெரிந்து கொள்ளலாம் அந்தப் புதிய கருத்தைச் சொல்வதன் தாத்பர்யத்தை.
பலன் - ஒரு கருத்தைச் சொல்லிய பின்பு அதன் பலன், அந்தக் கருத்தால் ஆகும் பயன் உரைக்கப்படுமானால் அதுவும் தாத்பர்யம் உணர வழியாகும்.
அர்த்தவாதம் - ஒரு விஷயத்தை மிகவும் பாராட்டி உபநிஷதப் பகுதி உரைக்குமானால் அப்பொழுதும் நாம் அதன் தாத்பர்யம் அதுதான் என்பதை உணர முடியும்.
உபபத்தி - ஒரு விஷயத்தை உரைத்து அதன் பொருத்தம் பொருந்தாமைகளையும், அதற்கான யுக்திகளையும் விரிவாக விளக்குமேயானால் அப்பொழுதும் நாம் தாத்பர்யம் என்ன என்பதை உணர முடியும்.
எனவே உபக்கிரம உபஸம்ஹாரங்கள், அப்யாஸம், அபூர்வதை, பலன், அர்த்தவாதம், உபபத்தி அல்லது யுக்தி என்னும் இவையே ஆறுவிதமான தாத்பர்ய அடையாளங்கள். (ஷட்வித தாத்பர்ய லிங்கங்கள்)
இதைப் போல் அணுகுமுறை நெறிக் கருத்துகள் இன்னும் பல உண்டு ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரங்கள் சார்ந்த படிப்பில். இந்த வழியில் நன்கு பயிற்றப்பட்ட பின்னர்தான் உபநிஷதங்களே நன்கு புரியவரும் என்பது வேதாந்தம் போதிக்கும் பாடம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment