Sunday, February 9, 2020

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்

ஆனைச்சாத்தன் எங்கும் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! (அதை எங்கு பார்த்து வைத்தார்கள் இவர்கள்! விடியலுக்கு முன்னம் ஆனைச்சாத்தன் கூட்டிலிருந்து பிரியும்பொழுது பகல் முழுவதும் இனி சந்திக்க மாட்டோம். இரவுதான் இனி பார்ப்பது என்று ஏதோ தொட்டு தொட்டுப் பேசுவது போன்ற த்வனியில் பேசுமாம். அன்று பகல் முழுவதற்குமான பேச்சை இப்பொழுதே பேசிவிட்டுப் போகலாம் என்று) ரொம்ப நல்ல பெயர் சொல்லித்தான் விளிக்கிறார்கள் - பேய்ப்பெண்ணே! இரண்டு வரி தாண்டவில்லை. ’நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?’ உள்ளே உணர்வில் உறவுகொண்டோர் என்ன சொன்னாலும் பொருள் ஒன்றுதான் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.

ஓர் ஆய்ச்சி தன் பெண்ணிடம், ‘இந்தா மோர், தயிர், நெய்; விற்று வா’ என்று கொடுத்தால் அவள் சென்று விற்றாளாம் - ‘கோவிந்தனை வாங்கல்லியோ... கிருஷ்ணனை வாங்கல்லியோ.... ஸ்ரீயப்பதியை வாங்கல்லியோ...’ என்று. உள்ளே ஓடும் பா4வம் என்னவோ அதைத்தானே விற்க முடியும்?

நாராயணன் மூர்த்தி கேசவன் -

பெற்றவளைக் கண்டால் பிடிக்கவில்லை என்று கோபித்துக்கொண்டு சத்திரத்தில் போய்ப் படுத்தது பிள்ளை. விடமாட்டாத உறவால் தான் செய்த உணவையே சத்தரக்காரனை விட்டு ‘நான் செய்தது என்று சொல்லாதே. துப்பிவிடும். நீயாகக் கொடுத்தது என்று கொடு’ என்று சொல்லித் தாய் கொடுக்கிறாள். அப்படி உறவு முறையால் முகம் காட்டாமல் உள்நின்று காப்பவன் நாராயணன்.

ஜன்ம கர்ம ச மே திவ்யம் - என் பிறப்பும் செயலும் தெய்விகமானவை என்று தானே வியக்கும்படியாக வந்து தோன்றி அடியார் தன்னைக் காணலாம்படியும் பழகலாம்படியும் வந்து பிறக்கும் தயையின் உருவம் மூர்த்தி.

தன் அடியாருக்கு என்ன இன்னல் வந்தாலும் அதைத் தானேற்று முடிப்பவன் கேசி வதம் செய்த கேசவன்.

நாராயணனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

மூர்த்தியைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

எங்களுக்கு எல்லாம் இன்னதைச் செய் இன்னதைத் தவிர் என்னும் நாயகப் பெண்பிள்ளாய் அல்லவா நீ?
பகவானைப் பெற்று அதைத் தனி உணவாக நீ மட்டும் உண்பாயோ?

ஊரெல்லாம் தம் உயிராகிய பகவானை மறந்து பிணம் போல் மக்கள் கிடக்க, நாம் மட்டும் யோக முறையில் அவனைக் கிட்டி அனுபவிக்கும் மணம் புரிவது அழகா? பிணம் கிடக்க மணம் புணரலாமோ? என்று நாடு வாழ வழிவகை என்ன என்று முனைந்தவர்கள் அன்றோ நாதமுனிகளின் வழிவந்தோர்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment