Saturday, February 8, 2020

ஓங்கி உலகளந்த திருப்பாவை

ஓங்கி உலகளந்ததே, ஒரு பொருளும், அது உயிருள் பொருளாக இருக்கட்டும் அல்லது உயிரில் பொருளாக இருக்கட்டும், அனைத்துப் பொருட்களுக்கும் தான் அந்தர்யாமியாக நிற்கின்றதை, அனைத்தும் தன் அதீனம் என்பதை முத்திரை குத்திய திருவிக்கிரம அவதாரம். அனைத்தும் அவனுடையதாய் இருக்க யார் வந்து அதை மறுத்துவிடப் போகிறார்கள்? யாரும் இல்லை. அவனை விட, அவனில் வேறாய் ஏதேனும் ஒரு தத்துவம் உண்டென்றால் அல்லவோ பேச்சே. அவ்வாறு பேசநின்ற ஒன்றும் இல்லை என்னும் போது ஏன் இந்த உரிமைக் காப்புப் பிரச்சனை? யார் அதை எதிர்க்கப் போகிறார்கள்? வேறு யார்? இந்த ஜீவன் இருக்கிறதே இதுதான். அதாவது நான், நீ, அவர், அவர்கள் ஆகிய நாம்தான் ஒரு காலத்தில் இல்லையென்றாலும் ஒரு காலத்தில் நமக்கும் அவனுக்கும் ஒட்டு இல்லை உறவு இல்லை என்று துணிந்து சொல்வோம். தாயாய், தந்தையாய், அனைத்து உறவுமாய், நிலைத்த நட்பாய், நிர்கதிக்கு வந்து கைகொடுக்கும் நிதியாய், வழிகாட்டும் பெரும் வித்யையாய் இருக்கும் அந்தத் திருமாலையே இல்லையென்போம். இருக்கு என்றால் எங்கே ப்ரூஃப் என்போம்? ஆனால் பேசும் நாம் தூக்கத்தில் எங்கே போகிறோம் தெரியாது? சிறுவயதில் இருந்த நாம் எங்கே போனோம் தெரியவில்லை. அதற்கெல்லாம் ப்ரூஃபா கேட்போம்? இல்லையே. இல்லாத விஷயம் எல்லாம் நமக்கு சர்வ நிச்சயம். சந்தேகமே வராது. ஆனால் என்றும் உளன் கண்ணன் என்ற சாச்வத தத்துவம் மட்டும் நமக்கு என்றுமே ஐயப்பாடுதான். தொண்டரடிப்பொடியாழ்வார் சொன்னார் - உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்தபின்னை ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் ஊர்’ எது? அரங்கம் அன்றே!

அவனும்தான் அளந்தான். ஆனால் நம் அகங்காரம் அடங்காமல் ஆடுகிறது. நம் அகங்காரத்தையும் சகித்துக்கொண்டு பக்குவப்படுத்தி ஒரு முப்பது பாட்டைச் சொல்லவைத்து நாளடைவில் ‘நான் திருமாலின் சொத்து’ என்று ஏங்கவைத்துவிடும் வல்லமை தெய்வத் தீந்தமிழ்க் கோதைக்கன்றோ கைவந்தது! நாம் ஏதோ அந்நியம் என்ற நினைவை ஒழித்து, திருமாலுக்கே சேஷம், திருமாலுக்கே தீர்ந்தவடிமை என்னும் தெளிவு பிறந்து, ஸ்ரீஆண்டாளுக்கே பாங்கியர் என்று சொல்லலாம்படியான பக்குவம் வந்து தெய்வத்தின் திட்டத்தில் பங்கெடுத்தால் என்ன என்ன நிலைகள் நமக்கே வாய்க்கின்றன! நம் உறவு யார் என்று புரிகிறது. உயிரின் உறவான உத்தமன் ஆதிமுதல் நம்மைக் காத்து நம் நற்கதிக்காக தான் உழைத்துவரும் தயாளு என்றும் புரிகிறது. அவனுக்கு உரியவராக நாம் ஆனோம் என்றால் பின்னர் தெய்வத்தில் தோயும் மனம் வாய்ந்த நட்புக்கு ஏங்கும் நிலையும் வருகிறது. நல்நட்புகள் திரளாக ஆகும் நிலையும் இந்த உலகிலேயே திருநாட்டைக் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. பொலிக பொலிக என்று வகுளமணம் எங்கும் பரவுகிறது. திருவாய்மொழியை நாடி உளம் ஏங்க, அதன் உட்பொருள் வளத்தை வாரி வழங்கும் வற்றா விரிவுரைகள் நம் காதுக்குத் தேனாய் இனிக்கின்றன. இத்தனைக்கும் வேண்டியது பாங்கான மனம். அதை மட்டும் எங்கே சம்பாதிப்பது? அதுதான் தெரியவில்லை என்று நாம் சோர்ந்து போகவேண்டாம். அந்த பாங்கான மனம், அதை அருள்வது என்பதுதான் ஸ்ரீஆண்டாளின் திருப்பாவை. பின் என்ன மிஞ்சும்? எங்கே அருள் எங்கே அருள் என்று நாம் திரிந்தது போக நீங்காத அருளே எங்கும் நிறைந்திருக்கும் எம்பாவாய் - என்று நம் மனத்தையே நலங்கெழு பாவையாக விளிக்கும் நிலையன்றோ ஓங்கி நிற்கிறது !

ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் !
(இரசனைத் திருப்பாவை, ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment