ஹிந்துமதத்தின் அடிப்படை நூல்கள் மூன்று என்று பார்த்தோம். அதை ப்ரஸ்தான த்ரயம் என்று அழைப்பது வழக்கம். உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்பவை அந்த மூன்று. ப்ரஸ்தானம் என்றாலே கிரமம், அணிவகுப்பு, முறை, அமைப்பு என்ற பொருள்கள் உண்டு. ஹிந்துசமுதாயத்தில் கல்வி முறை, குருகுலம், பயிற்றுவிக்கும் பனுவல் ஆமைப்பு என்ற நெறிகள் தோன்றிய காலம் தொட்டே இந்த ப்ரஸ்தானம் என்னும் கருத்து வந்துகொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த ப்ரஸ்தான த்ரயம் என்ற சான்று நூல்களின் கிரமத்திலும் மூன்று தனித்தனி நூல்களை நாம் பிரமாணம் என்று கருதுகிறோமா? அல்லது ஒன்று பிரமாணம் தன்னிலேயே எதையும் சாராமல். மற்றவை அந்த ஒன்றை நன்கு விளக்கவும், முறைப்படுத்தி பயன்பாட்டிற்கு அளிக்கவும் தோன்றிய துணை நூல்களும், விளக்க நூல்களும் ஆகுமா என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது ஆழ்ந்து நோக்காமல் ஓரளவிற்குத் தெளிவுடன் பார்க்கும் பொழுது ஆம், உபநிஷதங்கள் ஒரு சான்று நூல், ஸ்ரீமத் பகவத் கீதை ஒரு சான்று நூல், ஸ்ரீப்ருஹ்ம சூத்திரம் ஒரு சான்று நூல். ஆக சான்று நூல்கள் மூன்று சரிதானே என்று தோன்றும். இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.
ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்ன செய்கின்றன? உபநிஷதங்களில் விரவியிருக்கும் கருத்துகளை ஒருங்குற க்ரமமாக அமைத்து ஸிஸ்டமடைஸ் செய்திருக்கிறது. உபநிஷதக் கருத்துகளை மீமாம்ஸை அமைப்பில் ஒருங்குற அமைத்திருக்கிறது. ஆக அடிப்படை நூல் என்னவோ உபநிஷதங்கள்தாம். உபநிஷதங்களின் கருத்துகளை ஓர் நெறிப்பட நாம் வேதாந்த சூத்திரங்கள் என்னும் ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்களில் காண்கிறோம். இந்த வேதாந்த சூத்திரங்கள் என்னும் வார்த்தைக் கோவையே மிகவும் பொருள் நிறைந்தது. வேதாந்தம் என்பது பார்க்கப் போனால் உபநிஷதங்கள். ஏன் உபநிஷதங்களை வேதாந்தம் என்கிறோம்? வேதத்தின் அந்தம் என்றால் என்ன? அந்தம் என்ற பதம் பல பொருள் உடையது. நிச்சயம், நிர்ணயம், பர்யவஸானம் என்னும் பொருள்கள் இங்கு தொடர்புடையன. வேதத்தின் நிச்சயம், வேதத்தின் நிர்ணயம், வேதத்தின் பர்யவஸானம் என்று நாம் கருதும் போது என்ன புரிந்துகொள்கிறோம்? அன்றாடம் தோன்றி மறையும் வாழ்க்கையில் எதை நிலைத்த, நித்தியமான தத்துவங்களாய் வேதம் நிச்சயம் என்று அறுதியிட்டுக் காட்டுகின்றன என்று பார்த்தால் அந்தத் தீர்மானமான, நிர்ணயமான கருத்துகளை வேதம் உரைக்கும் பகுதி வேதாந்தம் ஆகும். பல படித்தரங்களில் வேதம் விளக்குவதற்காகச் சொல்லிக் கொண்டு போந்து இறுதியில் எதில் அனைத்தும் நிறைவு அடைகிறது என்ற ஈறுநிற்கும் தத்துவங்களைக் காட்டும் போது அது வேதாந்தம் ஆகும். அவ்வாறு வேதம் தன் அறுதியான தத்துவ நிச்சயங்களைப் பொதிந்து காட்டும் பகுதிகளே உபநிஷதங்கள் என்று அழைக்கப்படும். இது ஏதோ ஒரு நூலில் கடைசி பக்கங்கள் என்றபடிப் புரிந்துகொள்ளுவது பொருந்தாததும், தவறானதும் ஆகும்.
உதாரணம் ஒன்றை நோக்குவோம். ஒருவருக்கு நீங்கள் ஒரு விஷயத்தை விளக்கத் தொடங்குகிறீர்கள். முதலில் மிகவும் உயிரான பகுதியை, மையமான பகுதியை எடுத்ததும் சொல்லிவிட மாட்டீர்கள். கேட்பவரின் மனப்பான்மைக்கு ஏற்ப படிநிலையாக விளக்கிக்கொண்டு போய் அவர் நன்கு புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார் என்றதும் நீங்கள் ஆரம்பிக்கும் பொழுது மனத்தில் கருதியிருந்த முக்கியமான கருத்தை வெளிப்படையாகச் சொல்லி நிறுவுவீர்கள் அல்லவா? நீங்கள் விளக்குவதைக் கேட்ட ஒருவர் முதலில் நீங்கள் சொல்ல ஆரம்பித்ததுதான் உங்களுடைய மனத்தில் முதலிலேயே இருந்தது என்றும், கடைசியில் சொல்லப்பட்டது காலப் போக்கில் பின்னால் சேர்க்கப் பட்டது என்றும் வாதம் செய்வாரானால் எவ்வளவு பேதைமையானது ஆகும் நினைத்துப் பாருங்கள்.! இப்படித்தான் நாம் வேதாந்தம் என்றால் வேதப் பகுதிக்குக் கடைசியில் சேர்க்கப்ப்பட்டது என்று ஏதோ நாம் கருதியபடியெல்லாம் சொல்லுகிறோம். அஃது அவ்வண்ணம் இல்லை என்பதை முதலிலேயே நன்கு புரிந்து கொள்வது தெளிவுக்கு வழிவகுக்கும்.
எனவே வேதாந்தம் என்பது வேதம் என்ன சொல்ல ஆரம்பித்ததோ அந்த மையமான, மூலக் கருத்து. அஃது நிச்சயமான வடிவில் பல விளக்கங்கள், புரிந்துகொள்ளும் துணைக் கருத்துகளுக்குப் பிற்பாடு பக்குவம் கருதிச் சொல்லப்படுகிறது. வேதத்தின் நிச்சயம் என்ற பொருளிலும், வேதத்தின் நிர்ணயமான பகுதி என்பதாலும், வேதம் எதைச் சொல்ல வந்ததோ அந்த பாரமார்த்திகக் கருத்து நிறைவுக்கு வந்துசேரும் பகுதி என்பதாலும் உபநிஷதங்களுக்கு வேத அந்தம், வேதாந்தம் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த வேதாந்தத்தின் கருத்துகளை தந்த்ரமாக (தந்த்ரம் என்றால் நூல் அல்லது சூத்திரம்) தர்சனமாக, மீமாம்ஸையால் ஆக்கி அளிக்கப் பட்டதால் வேதாந்த சூத்திரங்கள் என்ற பெயர் ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்களுக்கு ஏற்பட்டது. ஆக உபநிஷதக் கருத்துகளை நூல்வடிவம் ஆக்கப்பட்டதே வேதாந்த சூத்திரங்கள். இப்பொழுது சொல்லுங்கள் உபநிஷதங்கள் ஒரு தனி நூல், வேதாந்த சூத்திரங்கள் ஒரு தனி நூல் என்று இப்பொழுது சொல்வோமா? இவ்வண்ணம் ஆழ்ந்து புரிந்துகொண்ட பின்பு நமக்கே இயல்பாகத் தோன்றும் உபநிஷதங்களே மூலமான சான்று என்று.
அடுத்து ஸ்ரீமத்பகவத் கீதைக்கு வருவோம். கீதை என்பது உபநிஷதங்களின் சாரம் என்பதை கீதையின் த்யான சுலோகமே சொல்கிறது. இன்னும் சித்திரமாகவும் சொல்கிறது. உபநிஷதங்கள்தாம் பசுக்கள். அந்தப் பசுக்களின் பால்தான் கீதை என்கிறது அந்த சுலோகம்.
எனவே நம் ஹிந்துமதத்திற்கு மூலநூல் என்பது உபநிஷதங்கள். அந்த உபநிஷதக் கருத்துகளை மீமாம்ஸை என்னும் பனுவல்தர்க்க நெறிப்படி வாதப்ரதிவாதம் சித்தாந்தம் என்னும் அமைப்பில் வழங்குவது வேதாந்த சூத்திரங்கள். உபநிஷதங்களின் கருத்துகளைச் சாரமாகத் திரட்டி பக்தி தோய்ந்த பாக்களாகத் தந்திருப்பது ஸ்ரீகீதை.
உபநிஷதங்கள் என்னும் வேத அந்தத்தை, வேதாந்தத்தை அனைத்து வழிபாட்டு நெறிகளும் ஏற்கின்றன. எனவேதான் சுவாமி விவேகாநந்தர் கூறுகையில் நமது ஹிந்துமதத்தை இன்னும் ஒரு பெயரால் அழைக்க வேண்டுமெனில் வேதாந்த மதம் என்று அழைக்கலாம் என்றார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment