Tuesday, February 4, 2020

சர்க்கரை போடாத தேநீர்

சர்க்கரை போடாத தேநீர் நன்றாகத்தான் இருக்கிறது.
ஏதோ அதன் புண்ணியத்தில் ஓர் எண்ணம் நிச்சயப்பட்டு எழுந்தது.

நாம் உண்மையில் வாழவில்லை.
இது வாழ்க்கையில்லை.
பிணத்தைக் குதிரையேறிச் சவாரி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த உடலையே நாம் என்று எண்ணித் தூக்கிச் சுமக்கிறோம்.
இடுகாட்டிற்குச் சற்று நேரம் முன்வரையில்.
என்று பிணத்தை நாமாக மயங்கிய இந்தச் சவாரியை நிறுத்துகிறோமோ
குறைந்தபட்சம் இந்த உடல் இது நாம் இல்லை
என்றாவது ரோசம் வந்து மனத்தால் இதனோடு படுத்துப் புரள்வதை
வெட்டிவிடுகிறோமோ அன்றுதான்
நாம் நம் உண்மை இயல்பு என்ன என்று உணரத் தொடங்குகிறோம்
அன்றே உண்மையான நித்திய வாழ்க்கையும் ஆரம்பம்.

பிணத்தொடு கூடிப் பிணக்கென வாடி
இணங்கும் இதுவோ இயல்பு - சுணக்கறத்
தேகம்நான் என்ற நசையறத் தானுணர்தல்
ஏகவாழ் வாகும் இயல்.

ஆனால் யதார்த்தமான உண்மை இதுவாக இருக்கிறது. சுறுசுறுப்பான வாழ்கதியில் இருப்போர்க்கு இது என்ன சோம்பேறி தத்துவம் என்றும் படுகிறது. ஆர்வம் கொண்டு முனைவோருக்கு எளிதோ என்றால் பிடிகொடுக்காமல் படுத்துகிறது.

வந்தவழியே போ - என்கிறார் ஸ்ரீரமணர். அதைவிட எளிமையுற உரைக்க முடியாது. ஆனாலும் வாரிச்சுருட்டிக்கொண்டு வந்த ஒன்று ரிவர்ஸில் போவது என்றால் நடக்கிற காரியமா... முன்வைத்த காலை பின் வைக்கலாமோ என்று வாசனைகள் ஓவர்டைம் போடுகின்றன. என்னதான் வழி என்றால் அருணை வள்ளல் ஏற்கனவே கீதையுரைத்த வழி என்கிறார். அப்பியாசம், வைராக்கியம். இதில் சோர்ந்து போவது ஆச்சரியமே அன்று. ஆனாலும் தொடர்கிறோமே அங்குதான் நாம் நிற்கிறோம்.

ஆனால் மாறும் உலகம், மறையும் வாழ்க்கை, பிணி பசி மூப்பு இறப்பு கொண்ட உடல் இன்பம் துன்பம் என்ற குப்பைமேடு போல் இருக்கும் உலகவாழ்வில் ‘நாம் உண்மையில் அறிவே சொரூபமான ஆன்மா. உடல் எனக் கருதி மயங்கி நிற்கிறோம்.’ என்று நினைப்பதைப் போல உபயோகமான செயலே வெறொன்று இல்லை, தனக்கோ, உலகிற்கோ. இந்த நிச்சயம் சொந்த அனுபவம். மற்றபடி என்ன மனக்கஷ்டங்கள் வந்தால் என்ன போனால் என்ன என்றுதான் ஒருவித அசிரத்தை வந்துவிட்டது.

’அநித்யம் அசுகம் லோகம்
இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்’.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment