என்னுடைய பல ஆர்வங்களில் அவ்வப்பொழுது என் ஈடுபாடு செல்லும் துறை கூத்து. இதில் ஒரு பகுதி எனக்குத் தந்தை வழித் தகவாக, நாடகம் என்ற வகையில் வந்து சேர்ந்திருக்கிறது. அவர் (ஸ்ரீ ஆர் வேணுகோபால்) ஆர்வ முனைவோர் குழுவாக நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு 1960களில், 1970களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் திருச்சியில் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதியுடன் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார். இப்பொழுதுதான் அந்தப் பெரும் மனிதர் தந்தை என்ற கட்டத்துள் இருந்து வெளியில் வந்து எத்தகைய நுட்பம் செறிந்தவராக இருந்தார் என்பது புலனாகிறது. 'கை போன திசையில் கண் போக வேண்டும்' 'ஒரு அபிநயம் தொடுத்த பின்னர்தான் முதலில் எடுத்த அபிநயத்தை வாங்க வேண்டும்' என்றெல்லாம் அவர் நடிப்பின்போது தலையில் அடித்தாற்போல் கூறியது ஏன் என்று இப்பொழுதுதான் புரிந்துகொள்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர் வார்த்தைதான் சாத்திரம். இப்பொழுதுதான் அவர் எத்தகைய இயல்பெருக்கத்தின் வரவாற்றில் நின்று பேசினார் என்பது புரிகிறது. வாழ்வின் மூல ஆதாரங்களோடு சேர்ந்து முளைத்த அந்தக் கூத்தின் பைம்பூப்பு இப்பொழுதுதான் பரதரின் நாட்டிய சாத்திர வழியிலும், இளங்கோ அடிகள் தயவிலும், அடியார்க்கு நல்லார் தயவிலும், மேலை நாட்டுச் சான்றோர் தயவிலும், புரிய வருகிறது.
கூத்து என்றால் என்ன? குதி, குதித்தல் என்பதின் அடிப்படையாய் வந்தது கூத்து என்றும் சொல்கிறார்கள். தொலைக் காட்சியில் பாட்டு போட்டதும் சிறு குழந்தை தை தை என்று குதிக்கிறது. ஆனால் அதன் மொழியில் அது கூத்து. பாட்டு என்றவுடன் நமக்கு வாய், குரல், ஓசை, காது என்பதெல்லாம் மனத்தடத்தில் வந்து நிற்பது போன்று கூத்து என்றவுடன் உடல்தான் - கைகள், கால்கள், பாதங்கள், விரல்கள், முகம், கண், நடை இவையெல்லாம் வந்து மனத்தில் நிற்கின்றன. அன்றாட வாழ்விலும்தான் நாம் இந்த அவயவங்களை வைத்துக்கொண்டு செயல் புரிகிறோம். அப்பொழுது, செய்யும் செயல் எல்லாமே கூத்தா? இல்லை. கூத்து என்னும்பொழுது அதில் ஓர் உணர்ச்சி, ஒரு கருத்து, மனித குலத்தின் அனுபவங்களில் வந்து சேர்ந்த நிலைத்த விழுமங்களைப் பற்றிய ஒரு கருத்து அங்கு நிகழ்த்தப்படுகிறது. உடல் மொழியாகிறது. எலும்பு, நரம்பு, தசை, இரத்தம், வியர்வை இவற்றால் ஆகிய உடல் தன் குரம்பை என்ற தோற்றத்திலிருந்து மறைகிறது. நிகழ் பனுவல் ஒன்றிற்கு நேர்மொழியாக ஆக்கப்படுகிறது. பார்க்கவும், கேட்கவும், முகரவும், ருசிக்கவும், உற்றறியவும் பயன்பட்ட புலன்கள், பிடிக்கவும், நடக்கவும், அமரவும், செயல்புரியவும் பயன்பட்ட அங்கங்கள் மொத்தத்தில் உலகத்தில் உயிர் இயங்கப் பயன்பட்டவையெல்லாம் ஓர் உயிர் மற்றோர் உயிரின் உணர்விற்கு ஒரு கருத்தை, ஓர் உணர்ச்சியை, அந்த உணர்ச்சியின் கலைப்படிவத்தை உணர்த்த, அதிலிருந்து பல்வேறு உணர்வலைகள் கிளைக்க வாய்ப்பான மொழியாக ஆவதற்கு இயன்ற இயல் கூத்து. இங்கும் நான் கவிதைக்குச் சொல்வது போன்று ஒன்று மறைய வேண்டியிருக்கிறது. அந்த அற்ற இடத்தில் மற்ற பல வந்து பல்க வேண்டியிருக்கிறது. இதை கலைக்கே ஆன மூல சூத்திரமாக ஆக்கலாமோ என்ற எண்ணம் எனக்கு எழுவதுண்டு. அதாவது இயற்கையின் புறப்பொருள், புறவாய்ப்பு ஒன்று மறைய வேண்டும். அங்கு உணர்வு பலவகைகளில் இட்டு நிரப்ப வேண்டும். அப்பொழுது ஆங்கே கலை தோன்றும். இயற்கையின் பொருளோ வாய்ப்போ மறையாத வரையில் அங்கு தெரிவிக்கும் நிகழ்ச்சிதான் நடந்துகொண்டிருக்கும்.
Communication by its transcendent transformation or trans-deformation begets art.
'தெரிவிப்பு தான் அற்றுக் கடந்த புலத்தில் அமைக்கும் மீவடிவப் புணர்ப்பு கலையின் தோற்றுவாய்' என்று சொல்லிப் பார்க்கலாமோ?
'ஏன் கூத்து?' என்பது 'ஏன் படைப்பு?' என்பதைப் போன்றே முட்டின இடத்தில் முடங்கி நிற்கும் கேள்வி. புட்களிலும், விலங்குகளிலும் கூட அவை வியூகமிட்டுச் சமயத்தில் கூத்துபோல் நிகழ்த்தும் இயக்கங்கள் உயிரியல் ரீதியாகத் தேவையற்றது என்றுதான் விஞ்ஞானம் சொல்லமுடிகிறதே வொழிய ஏன் அவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு அறுதியான விடை இல்லை. உயிரின் பரிணாம அடிப்படையில் 'உள்ளது சிறக்கும்' என்ற விதிக்கேற்ப வந்து சேர்ந்த மனிதன் உயிரின் அடிப்படை இயல்பொன்றில் பங்கு கொள்கிறான் என்பது இப்பொழுதைக்கு நமக்கு வாய்த்த புழங்கு கருத்து. Human ethology போன்ற உணர்வொப்பியல்கள் மேலும் தெளிவு ஏற்படுத்திக்கொண்டே இருக்கட்டும். கூத்து என்பதற்கு இந்தப் புழங்கு கருத்தே இப்பொழுதைக்குப் போதும்.
பௌதிகம், உணர்வு என்ற இருமுனைகளுக்கு இடையில்தான் மனிதனின் பட்டுவாடா நடந்துகொண்டிருக்கிறது. பௌதிகத்தையே முற்ற முழுக்க உணர்வாக ஆக்கும் முயற்சியும், உணர்வை பௌதிகப்படுத்திப் பார்த்துவிடும் தீவிரமும் மனிதனால் தவிர்க்கவே முடியாத ஊசல். இதற்கிடையில்தான் மனித வாழ்வின் விகசிப்புகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. கூத்து இந்த இருமுனைகளுக்கிடையில் எங்கோதான் ஒற்றைக்கால் ஊன்றி நிலைக்கிறது. இளங்கோ அங்கிருந்துதான் பேசத் தொடங்குகிறார்:
"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலை"
(சிலப்பதிகாரம்: 1.3.12 - 17)
கூத்தில் இரண்டு வகை. அகக்கூத்து, புறக்கூத்து. இங்கும் அகம் புறமா? இல்லை இது வேறு அகம் புறம். அகச்சுவை பற்றி வருவது அகக்கூத்து. குணங்கள் பற்றி வருவது. குணங்கள், நல்லமைதியின் செறிவு (சத்வம்), பரபரப்பு, (ரஜஸ்), தொய்வின் இருட்டு (தமஸ்) என்பன. உள்ளத்தின் நிலையை உடலில் வாங்கிப் பேசும் கூத்து அகக்கூத்து எனலாம். அகச்சுவை இந்த மூன்று குணங்களைச் சுட்டும். இந்த அகக்கூத்தில் தேசி, வடுகு, சிங்களம் என்று மூன்று வகை. இதை மெய்க்கூத்து என்கிறது அடியார்க்குநல்லார் உரை. இந்த மெய்க்கூத்து மெய்யாகிய உடலின் பல தொழில்களை ஏற்படுத்துவது. பெரும்பாலும் வடுகு என்ற மார்க்கமும், தேசியும் சேர்ந்து அகக்கூத்து என்று சொல்லப்படும். இதைத் தவிர்த்து மற்றவை புறக்கூத்து என்பதில் அடங்கும். ஆனால் இருவகைக் கூத்து என்பதில் பலவகை 'இரண்டுகள்' உண்டு போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் சொல்கிற இருவகைக் கூத்து, அகக்கூத்தில் இருவகைக் கூத்து. 'இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து' (சிலப். 3.12) என்ற வரிக்கு அரும்பத உரையாசிரியர் தேசி, மார்க்கம் என்ற இரண்டு என்று கூறுகிறார். அடியார்க்குநல்லார் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என்ற இரண்டு என்கிறார். சாந்திக் கூத்தில் நான்கு வகை. சொக்கம், மெய், அவிநயம், நாடகம். சொக்கம் என்பது சுத்த நிருத்தம். 108 கரணங்களைக் கொண்டது. மெய் முன்னர் கூறியது போல் அகக்கூத்து. அவிநயம் மிடறு, கழுத்து, கை, சரீரம் என்ற நாலிலும் காட்டுவதற்கேற்ப நால்வகைப் படுவது. நாடகம் ஒரு கதைப் பொருளைத் தழுவி அதற்கேற்ப நடத்தப்படுவது. ஏன் சாந்திக் கூத்து என்று சொல்லப்பட்டது? நாயகன் சாந்தத்தோடு ஆடியதால் சாந்திக் கூத்து என்கிறார் உரைக்காரர். விநோதக் கூத்து என்பது குரவை கலிநடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோல்பாவை என்கிறார். அது என்ன விநோதம்? வென்றி வேந்தர் விநோதம் காணும் போது ஆடப்படுவது என்பது உரையாசிரியரின் கருத்து. அதாவது தீவிரமான கலை ஈடுபாட்டிற்கு 'சாந்தி'யும், பெருமித உணர்வுகள் நிலவும் போது பொழுதுபோக்கிற்கு 'விநோதமும்' கைக்கொண்டனர் போலும்.
புறக்கூத்து என்பது பதினொரு ஆடல், விலக்குறுப்பு பதினான்கு வகைப்பட நடத்தப்படும் நாடகங்கள். விலக்குறுப்பு பதினான்கு ஆவன: பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்பவை. பதினோரு ஆடல் என்பன: மாயவன் ஆடிய அல்லியம், விடையோன் ஆடிய கொடுகொட்டி, அறுமுகத்தோன் ஆடிய குடை, குன்றெடுத்தோன் ஆடிய குடக்கூத்து, முக்கண்ணான் ஆடிய பாண்டரங்கம், கண்ணன் ஆடிய மல்லாடல், வேல் முருகன் ஆடிய துடி, இந்திராணி ஆடிய கடையம், காமன் ஆடிய பேடு, கொற்றவை ஆடிய மரக்கால், கொல்லிப்பாவை வடிவாய் திருமகள் ஆடிய பாவை ஆகியன. சிலப். 3.158 - 159: "நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்துக் காட்டினள் ஆதலின்.." என்ற வரிக்கு உரையெழுதும் அடியார்க்குநல்லார், 'தாண்டவம், நிருத்தம், நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டினும் நாட்டியம் என்றது புறநடத்தையாகலின், அதனை நூல்களில் சொன்ன முறைமை வழுவாமல் அவிநயித்துப் பாவகம் தோன்ற விலக்குறுப்புப் பதினாலின் நெறி வழுவாமல் ஆடிக்காட்டினாள்' என்று எழுதுகிறார்.
ஆக, கூத்து என்பது மூன்று கூறுபாடு உடையது என்பது தேற்றம். அவற்றில் நாட்டியம் என்பது புறக்கூத்து என்பதும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் ஏகப்பட்ட குறிப்புகள் உரையில் விரவிக் கிடக்கின்றன.
'பரதார்ணவம்' என்ற நூலில் பார்த்தேன். எந்தை கூறிய கருத்தின் நூற்சான்று கிடைத்தது. அதாவது ஒரு சுலோகம் கூறுகிறது:
'அங்கேன ஆலம்பயேத் கீதம்,
ஹஸ்தேன அர்த்த ப்ரதர்சனம்,
சக்ஷுர்ப்யாம் பாவயேத பாவம்,
பாதாப்யாம் தாள நிர்ணய:'
'யதோ ஹஸ்த: ததோ த்ருஷ்டி:
யதோ த்ருஷ்டி: ததோ மன:
யதோ மன: ததோ பாவ:
யதோ பாவ: ததோ ரஸ:'
'அங்கங்களில் இசையட்டும் கீதம்
அம் கைகளில் இலகட்டும் பொருள்
கண்களில் தெரியட்டும் பாவம்
காலடியில் நிற்கட்டும் தாளம்'
'கையெங்குச் செல்கிறதோ
நோக்கு அங்குத் தொடர்கிறது
நோக்கு எங்கு நிற்கிறதோ
மனம் அங்கு நுழைகிறது.
மனமெங்குத் தங்கிடுமோ
பாவம் அங்குத் தழைக்கிறது
பாவம் எங்குத் திகழ்ந்திடுமோ
ரஸம் அங்கு மிளிர்கிறது'
(தமிழாக்கம் என்னுடையது)
என்பது அந்தச் செய்யுள். காலடி என்பது தாளம் காட்டுவதற்கு. பாவத்தைக் காட்ட கண்கள். பொருளைக் குறிக்க கைகள்; பாட்டின் அல்லது இசையின் அலைப்போக்குகளைக் காட்ட அங்க அசைவுகளின் தொகுப்புகள். கைகளில் காட்டும் அபிநயங்கள், முத்ரைகள் இவற்றின் வழி கூத்தரின் நோக்கு சென்றால்தான் பார்ப்பவரின் நோக்கும் அங்கு ஒத்திசைந்து மனத்தை இசைவிக்கும். கூத்தரின் மனமும், அதன்வழி அவருடைய பாவமும் எழுந்தால்தான் பார்ப்பவருடைய மனமும் இசைந்து அவர்களிடத்தில் ரஸ உணர்வைத் தோற்றுவிக்கும். அது என்ன பாவம்? ரஸம்? பாவம் என்றால் நிகழ்த்தப்படும் கருத்திற்குச் சேர உள்ளத்தின் நெகிழ்வைப் பொலியக் காட்டும் மெய்ப்பாடு. இது முக்கியமாகக் கண்களில் தெரியவரும். அப்பொழுது நோக்கு என்றால் என்ன? கண்களில் பார்வையின் வேறுபாடு. கோபப்பார்வை, குளிர்ந்த பார்வை, குரூரப் பார்வை, கம்பீரப் பார்வை, காதல் பார்வை இப்படிப் பலவிதம். இவையிற்றால் கூத்தர் பாவத்தை நிகழ்த்திக் காட்ட வாய்ப்பு ஏற்படுகிறது. நிகழ்த்துபவர் முனையில் எது பாவமாக நிற்கிறதோ அது பார்ப்பவர் முனையில் ரஸமாக உருவெடுக்கிறது. பாவம் வரையில், நிகழ்த்தும் கூத்தரின் கோணம்; ரஸம் ரசிப்பவரின் கோணம். இந்த ரஸத்தேர்ச்சி உள்ளவர்தான் ரசிகர்.
இந்த ரஸம் என்றால் என்ன? கூத்தர் முதன் முன்னம் ஒரு கூத்து நிகழ்த்துவதற்குமுன் தாம் உள்ளம் தோய்ந்த ஒரு கணத்தை, அந்தக் கணத்தில் தம்முள் விரவியெழுந்த உணர்வலைகளை வெளியில் ஒருவருக்குத் தன் உடலையே மொழியாக்கி உடல் நகர்வுகளை வாக்கியமாக்கி, கண், கை, அங்க அசைவுகள், காலடி வைப்புகள், மெய்யில் வடிவ வேறுபாடுகள் இவற்றால் ஆகிய இலக்கணத்தைக் கொண்டு அவரையும் அந்த நிலையை அடைந்து அதையொத்த உணர்வலைகளைப் பெறுவிக்க முனைகிறாரே அந்தத் தோய்வு, பெறுபவர் முனையில் எழும்போது, அந்தக் கலையுள்ளத்தின் நெகிழ்வு நிலையை ரஸம் என்ற சொல் குறிக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment