Friday, February 7, 2020

கூண்டுக் கிளி

நாமும்தான் ஏகப்பட்ட திறனாய்வு தியரிகள் எல்லாம் வைத்திருக்கிறோம். எனக்கும் அவற்றில் பெரும் மயக்கம்தான். ஆனால் இலக்கியம் என்று சொன்னால் என்னதான் சொன்னாலும் எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் ரசிப்பதற்கு என்றுதான் முதல் முக்கியத்துவம். மற்ற தியரிக்கள் எல்லாம் இதற்கு எவ்வளவு உபயோகம் என்றுதான் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் திவ்ய ப்ரபந்தங்களுக்கு வியாக்கியானங்கள் எழுதித் தந்திருக்கும் வைணவத்தின் முந்தைய ஆசிரியர்களின் கொடை அபாரம். அதுவும் அனைத்துக்கும் உரைப்பெருக்கு அளித்த ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையை நினைத்தால் மனம் நெகிழவே செய்கிறது. மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றித் தாம் அனுபவித்துப் போகாமல் நாடு வாழணும், நயம்நாடும் நெஞ்சங்களும் பயனுற வேண்டும் என்று கருதிய அந்தக் கருணை ஆசான் அளித்துள்ள பேருரைகள்தாம் எவ்வளவு பெரும் துணை! - பொழுதுபோக்க வேண்டும் என்றாலும் சரி அல்லது பரமநிலையின் படிக்கட்டுகளில் கொஞ்சமேனும் ஏறிப்பார்க்க வேண்டும் என்றாலும் சரி. பக்தி என்ற ஓர் உன்னதமான மனப்பான்மையில் எப்படிக் கடவுள் பற்றிய கவிதையை அணுகியிருக்கிறார்கள் என்று அறிய ஒரு நளினமான வழி. ஒன்றுமில்லை. இரண்டு வரிகள் - நாச்சியார் திருமொழியில் -

”கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும்;
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்;...”

இதற்கு என்ன நாம் பொருள் சொல்லிவிட முடியும்? கூடு இருக்கிறது. அதில் கிளி. அது கோவிந்தா கோவிந்தா என்று சொல்கிறது. உண்ணக் கொடுக்காமல் பட்டினி போட்டால் ‘உலகளந்தான்’ என்று குரல் உயர்த்திக் கூப்பாடு போடுகிறது - இதற்கு மேல் என்ன சொல்லிவிட முடியும்? ஆனால் பக்தி என்னும் அற்புதமான மனநிலை எப்படிப் பார்க்கிறது! வளர்த்த கிளி ஏன் கூட்டில் இருக்கப் போகிறது. அது சுதந்திரமாக வீட்டில், தலைவியின் அறையில் கட்டற்றுத் திரியப் போகிறதுதானே. எப்பொழுதும் கண்ணனின் பெயர்களையே சொல்லிக் குழறிக் குழறி ஸ்ரீஆண்டாளுக்கு முக மலர்ச்சியை விளைத்தவண்ணம் திரியும் கிளிக்குக் கூண்டு என்பது சும்மா பேருக்குத்தானே.

ஆனால் இன்று ஏன் நிலைமை மாறிவிட்டது? கூண்டில் அடைக்கும் தாழ்ப்பாள் ஆணியையெல்லாம் தேடி எடுத்துக் கிளியையும் கூண்டில் அடைத்தாயிற்று. ஆமாம். கண்ணனையோ காணவில்லை. அவனும் தரிசனம் கொடுத்தபாடில்லை. வீட்டில் உள்ளாரும் உளமறிந்து கடவுளிடம் கொண்டு சேர்ப்பாரும் இல்லை. இந்தக் கிளியோ சமயம் போது தெரியாமல் ஸ்ரீகிருஷ்ணன் நாமங்களையே எதிரும் முன்னும் பின்னுமாக வந்து சும்மா குழறி வெறுப்பேற்றுகிறது. போடு கூண்டில். அப்பொழுதாவது வெறுமனே இருக்கிறதா? எவ்வளவு நாமங்கள் இருக்கின்றன. ஏன் திருப்பாவையில் தானே அவ்வளவு நிச்சயமாகச் சொன்ன நாராயணன் என்ற நாமம் இல்லையா? அதைச் சொல்லலாம் அல்லவா? இந்தக் கிளிக்கு இருக்கும் கொழுப்பு இருக்கிறதே.... எந்த நாமத்தைச் சொன்னால் நாம் அதிகமாக ஏக்கம் அடைவோமோ அந்த நாமத்தையாகப் பார்த்துச் சொல்கிறது. நாராயண நாமத்தைச் சொன்னாலாவது - நாராயணனே நமக்கே பறை தருவான் என்று ஆறியிருக்கலாம். ஆனால் பரிதவிக்கும் தன்னை ஏங்கவிட்டுச் சிறிதும் லட்சியமின்றி கன்றுகாலிகளின் பின்னே போன கோவிந்த நாமத்தையா குழறுவது? இது வேண்டும் என்றே கொழுப்புக்குச் செய்வதுதானே? எல்லாம் நாம் வேளாவேளைக்கு ஊட்டிவிடவும் கொழுப்பு ஏறித்தான் கிடக்கிறது. பட்டினி போடு. அப்பொழுது பேச்சு எங்கிருந்து வரும்? ஊணொழித்தால் வீண் அடங்கும் என்று சொல்வார்கள்தானே.

ஆனால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அரங்கன் முன்னால் அருளிச்செயல் விண்ணப்பிக்கும் அரையர்கள் அன்று பாடிக்கட்டும் பகுதிகளை நன்கு உயர்ந்த உச்சத்தாயியில் பாடி அரங்கனை உகப்பிக்க வேண்டி, தமது குரலை நன்கு பதப்படுத்தி, பட்டினிவிட்டால்தான் குரல் பிசிறு இல்லாமல் ஓங்கி வரும் என்பதற்காக உபவாசம் இருந்து அரையர்சேவை சாதிப்பது போன்று இந்தக் கிளியும் பட்டினி போட்டவுடன் அழகாக உயர்ந்த உச்சத் தாயியில் ‘உலகளந்தான்’ என்று கூவத் தொடங்கிவிட்டது! ஐய்யோடா..... இதற்கு கோவிந்த நாமமே மேல்.... இந்த உலகை அளந்தான் என்றால் இதோ பார்க்கும், அத்தனை பொருட்களிலும் அவன் திருவடிகளின் தடயம் அல்லவா தெரிகிறது! எங்கும் ஒரு பொருள் மிச்சமின்றி அவன் நினைவை ஏற்படுத்திய வண்ணம் இந்தக் கிளியின் குரலும் எல்லாப் பொருளிலிருந்தும் கிளம்புவது போல் எங்கு திரும்பினாலும் இது என்ன தோற்றம்.....!

இந்த இரண்டு வரிகளில் ஒரு Opera வையே கண்டுபிடிக்க முடிகிறது ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையால்! அவர் கையைப் பிடித்துக்கொண்டே கூடுதலாக ஒரு பொருள் உரைத்துப் பார்ப்போமா? அந்தக் கிளியை வெறும் கிளி என்று எண்ணாமல் மனம் என்பதற்கான ஒரு குறியீடு என்று நினைத்துப் பாருங்கள். மனம் கண்டதையும் எண்ணும், பிதற்றும், பேசும், மாறும், திரியும். ஆனால் பக்தியில் ஆழ்ந்த மனமோ, கடவுள் நினைவில் தோய்ந்து பழகிய மனமோ என்னதான் அதன்போக்கில் சுதந்திரமாக விட்டாலும் வேறு எதையும் எண்ணாது பேசாது எங்கும் வெளியே திரியாது. நமக்கு, நம்மைச் சுற்றி, நம்மோடு கூடவே பகவானின் நினைவுகளை ஏற்படுத்திய வண்ணமே வளையவரும். இதுவே என்ன ஒரு நிலை! பெரும் தடையாக இருந்த ஒன்று நமக்கு அடங்கிய கிளியாய் அவன் பெயர்களையே குழறித்தரும் கிள்ளையாய் ஆகிவிடும் நிலை! ஸ்ரீராமகிருஷ்ணரின் பரவசநிலையில் அவர் மனம் உலக நினைவுக்கே வராமல் முரண்டு பிடிக்கும். அவர் தன் பின் தலையில் அடித்துக் கீழேவா கீழேவா நான் இவர்களோடு பேச வேண்டும்; இவர்களுக்குச் சில சொல்லவேண்டும் - என்று பெருமுயற்சி எடுத்து மனத்தை உலக நினைவுக்குக் கொண்டு வருவார். அதாவது கிளியைக் கூண்டில் அடைப்பார். ஆனால் யாரேனும் பகவானைப் பற்றிய கீதம் பாடவேண்டியதுதான் தாமதம், மறுபடியும் ஜிவ்வ்வ்வ்வ்... இந்த நிலையை அண்ணாந்து பார்க்கிறோம் அம்மாடி.. என்ன நிலை இது... என்று. ஆனால் உண்மை என்னவென்றால் நாமும் போக வேண்டிய நிலை இதுவே. நமக்கும் உரிமை உள்ள நிலையும் இதுவே. அப்படிப்பட்ட நாம்தான் இப்படிக் குப்பையில்.... சரி வேண்டாம் என்னத்துக்கு... எல்லாம் காலத்தில் நடந்தே தீரும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment