Tuesday, February 4, 2020

பக்தி என்னும் வேதம் தொட்டுவரும் வரவாறு

ஹிந்துமத பாரம்பர்யத்தில் வேத காலமாகட்டும், பக்தி ப்ரபந்த காலமாகட்டும், பக்திக்கான மொழியாடலும், உள்ளக்கிடக்கைகளும், இதயம் பொசிந்து வெளிப்படும் ஊற்றுச் சொற்களும், ஒரே மாதிரியான ஆழத்துடனும், பொருள் ஆர்ப்புடனும் அமைந்திருக்கின்றன. இதை இன்னும் கவனமாகக் கூர்ந்து நோக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. என் பார்வையில், முறியாத தொடர் கோட்டில்தான் நமது ஹிந்து ஆன்மிக வரவாறு (சம்ப்ரதாயம்) அமைந்திருப்பதாகக் காண்கிறேன்.

உதாரணத்திற்கு ரிக்வேதத்தில் வாமதேவ கௌதமர் பாடுகின்ற இந்த ரிக் பரமாத்மாவிடம் ஒரே சமயம் எப்படி உயர்ந்த ஒழுங்கு எனப்படும் ருதம் என்பதே அழகின் உருவம் என்றபடியும் இருக்கிறது. பரமாத்மாவானது உயிர்களை ஆன்மிக ஒழுங்கில் நிலைநாட்டுவது என்பது தன்னுடைய அப்ராக்ருதமான ஆகர்ஷணத்தால்தான் என்று வாமதேவரின் அபிப்ராயம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் உரைப்பதும் அதுவேதான். முதல் நாமம் அது உரைப்பது விச்வம். பிறகு விஷ்ணு. மூன்றாவது நாமமே வஷட்கார: என்பது. அனைத்துமாகி, அனைத்தின் உள்ளுமாகி நிற்கும் பரம்பொருள் அனைத்தையும் நெறியில் நிறுத்துவதே தன் அழகால், அந்த அழகின் வசீகரத்தால் என்பது மிகவும் அபூர்வமான கருத்து அன்றோ!. அந்த அழகு என்பதுதான் அழகு. நாம் எதை அழகு என்று கருதுகிறோமோ அது நம் புத்தியின் பேதலிப்பு. உண்மை எதுவோ அதுவே அழகு என்பதைத்தான் எப்படியோ அந்தர்முகமான கணங்களில் பெரும் கவிஞர்களும் தம்மை மீறி உரைத்துவிடுகிறார்கள். கவிதையின் ஆக உயர்ந்த அதிமானத வடிவமான மந்த்ரம் என்பதைக் கைவந்த பரமரிஷிகளோ மிகவும் ஸ்வச்சமாக அதீந்திரியத்தைத் தர்சிக்கின்றனர். வாமதேவர் பாடுகிறார் -

ருதஸ்ய த்ருல்ஹா தருணாநி ஸந்தி
புரூணி சந்த்ரா வபுஷே வபூம்ஷி |
ருதேந தீர்க்கம் இஷணந்த ப்ருக்ஷ
ருதேந காவ ருதம் ஆ விவேச: ||

ருதம் என்பது நேர்ச்சி, ஒழுங்கு, முறை, சீர்மை, நிதானம், தர்மம், பிறழ்வின்மை ஆகிய பொருட்களைக் கொண்ட பதம். ஆனால் அது அழகின் வடிவம் என்பது ரிஷியின் தர்சனம். அந்த அழகோ மடியும், மறையும், மங்கும் பொருள் சார்ந்ததாய் இன்றி, அப்ராக்ருதம் நிலைத்த எழில். அந்த எழிலின் வடிவங்கள் ஒவ்வொன்றும் காண்போரைக் கரைசேர்க்க வல்லன. அந்த எழிலே நம் ஆன்மாவைப் போஷிக்கவும் வல்லது. அந்த போஷணையோ அந்தம் என்பதை அறியாதது. உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்பது சடஜித் ரிஷியின் வாக்கியம்.

இந்த மந்திரத்திற்கு உரையெழுதும் ஸாயணர் (இவரை யார் யாக்ஞிகர் என்று சொல்லி வைத்தது? என்ன பக்த உள்ளம் கொண்டவர் இவர்!)
கூறுகிறார்:

’ருதேந ருததேவஸ்ய ஸம்பந்தீநி த்ருல்ஹா த்ருடாநி தருணாநி தாரகாநி புரூணி பஹூநி சந்த்ரா சந்த்ராணி ஆஹ்லாதகாநி வபூம்ஷி ரூபாணி ஸந்தி..’

இது இப்படி என்றால். திருமழிசையாழ்வார் தமது திருச்சந்தவிருத்தத்தில் பாடும்பொழுது

’மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய்!
பொலன் கழல் விட்டு விள்விலாத போகம்
விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டெனும் கயிற்றினால்
மனம்தனைக் கட்டி
வீடிலாது வைத்த காதலின்பம்
ஆகுமே?’

இந்த இடத்தில் அவன் ஆகர்ஷணத்தில் ஈடுபட்டு இடைவீடின்றி தைலதாரை போல் கொள்ளும் பக்தியைக் கயிறு என்று உருவகமாகச் சொல்லும் அழகு வேதத்தின் அழகு. ’ருதஸ்ய த்ருல்ஹா தருணாநி ஸந்தி’. எப்படிப்பட்ட கயிறு? அதை பக்தி என்று எங்கே சொல்கிறார்? எட்டும் இரண்டும் ஆன கயிறு. எட்டும் இரண்டும் பத்து. பத்து உடை அடியவர்க்கு எளியவன். இந்தப் பத்து என்னும் என்னும் பக்தியை எண்ணிக்கை பத்தால் சுட்டி, அதையும் எட்டும் இரண்டும் என்று கூட்டிச் சொல்லும் அழகு ரஹஸ்ய த்ரய அழகு. அஷ்டாக்ஷரமும், த்வயமும் சேர்ந்த பக்தி. இவ்வாறு இடைவிடாத பக்தி இன்பமே தாரகம், போஷகம், போக்யம் என்று ஆனபிற்பாடு வீடு என்று சொல்வது அவ்வளவு ஆகுமே? என்று கேட்கிறார் ஆழ்வார். அனைத்தும் கண்ணன் என்றார் நம்மாழ்வார். நம்மாழ்வார் என்றால் அமுது என்றார் மதுரகவி. ஆதியில் ரிக்வேதத்தில் வாமதேவரின் உள்ளம் பொங்கி புறம்பொசிந்ததைத்தான் இடைவிடாமல் பக்த உள்ளங்கள் தம் அனுபவத்தால் கண்டு பாடுகின்றன. இருப்பது ஒரே காலம். பக்தியின் காலம். இதில் கால ஆராய்ச்சிகள் பாத்திகட்டுவதற்கும் உள்தொடர்ந்து வரும் மெய்மைக்கும் பொருந்தி வரவில்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment