Friday, February 7, 2020

நம்பிக்கையும் அவநம்பிக்கையும்

நம்பிக்கைகளின் முறிவுபோல் கொடிய வியாதி எதுவும் இல்லை. பழங்கால மனிதருக்கு வசதிகள் இல்லை; அறிவின் பெருக்கங்கள் இல்லை; இன்னும் பல இல்லைகள் இருந்திருக்கும். சரிதான். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கைகளின் தெம்பு இருந்தது. ஓராயிரம் இன்னல்களைச் சமாளிக்கும் ஆற்றலை நம்பிக்கை தரும். ஆனால் அனைத்தும் வெற்றாகிப் போன பாழின் குமைச்சலை நம்பிக்கையின் முறிவு தரும் போது தாங்கும் ஆற்றல் உயிருக்கு இல்லை. காரணம் உயிர் நம்பிக்கையில் பிறந்தது.

பிறந்த குழந்தை அழுதால் பெற்றவரும் மற்றவரும் மகிழ்ச்சியில் சிரிக்கின்றார்கள். அது ஏன் அழுகிறது? என்ன நம்பிக்கை! தன் அழுகைக்கு அங்கே அணைத்து ஊட்டும் கரம் காத்திருக்கும் என்று ஏதாவது புரோநோட்டிலா கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்து பிறந்தது? தகப்பன் குழந்தையை தலைக்கு மேல் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான். குழந்தை சிரிக்கிறது. ஊக்கி மேல ஊக்கி மேல... என்று மீண்டும் மீண்டும் ஒன்ஸ் மோர் கேட்கிறது. என்ன உத்திரவாதம்? குழந்தை நம்பவில்லை. நம்பிக்கையாகவே இருக்கிறது. வளர வளர குழந்தையின் உலகம் சிதைகிறது. நம்பக் கூடாது, நிர்ணயம் செய்துகொள், நிரூபணம் கேள். உத்திரவாதம் இருந்தால் அடியெடுத்து வை. ஆம் அவநம்பிக்கைதான் அறிவின் தொடக்கம். தன்னைப் போல் மனித உயிர் காக்கப் படுவதில்லை. தன்னைக் காத்துக்கொள்ள அதுதான் கற்க வேண்டும். அவநம்பிக்கை என்னும் கடினமான பாடத்தை அது திறம்பட கற்கவேண்டும். அவநம்பிக்கையையே நம்பிக்கையாகவும் ஆக்கிக் கொள்ள முடியாது. தத்தக்கா பித்தக்கா என்று நடந்து அது எங்கு வந்து சேர வேண்டும்? தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கைக்கு வந்து சேர வேண்டும். சேருமா தெரியாது.


நம்பிக்கையின் ஒற்றை எழுத்து ‘ஏ’. ஏகாரம் சர்வநிச்சயமான நம்பிக்கையைக் குறிக்கிறது. 

தெய்வக் குழந்தை ஸ்ரீஆண்டாள் எவ்வளவு ஏகாரம் போட்டுச் சொல்கிறாள்! நாராயணன் + ஏ; நமக்கு + ஏ. பறை தருவான். 

நாராயணனே தருவான். 

நமக்கே தருவான். 

பறை - வாழ்க்கை தெய்விகமாக ஆவதற்கான ஒரு குறியீடு. நம் வாழ்க்கையை தெய்விகமாகவே ஆக்கியே தீருவான். எத்தனை ஏகாரம் எத்தனை ஏகாரம்.! அவநம்பிக்கை நம்மைத் தயார் செய்யட்டும். அவள் நம்பிக்கை நம்மை வழிநடத்தட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment