பக்தியில் யார் பெரியர்? மகளா? தந்தையா? கண்டுபிடிப்பது கஷ்டம். கருமுகைப் பூ சூட்டவேண்டும் வா என்று குழந்தை கிருஷ்ணனைக் கூப்பிடுகிறார் யசோதையான பெரியாழ்வார். அந்த கிருஷ்ணன் யார் எங்கிருக்கிறான் என்று அவர் சொல்லும்பொழுது மொத்த வேதாந்தம் அனைத்தையும் சொல்லிவிடுகிறார். சொல்ல வேண்டும் என்பது அவர் குறிக்கோள் அன்று. அங்கு பக்திதான் பேசுகிறது. ஆனால் விவரம் வேதாந்தமாக ஆகிவிடுகிறது.
அண்டத்து அமரர்கள் சூழ
அத்தாணியுள் அங்கிருந்தாய்
(அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் - நம்மாழ்வார்) அத்தாணி - ஆஸ்தான மண்டபம். இருப்பதுதான் அங்கு. உறைவிடம் எது?
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
விண்ணகத்தே ஆஸ்தான மண்டபத்திலேயே நினைத்தால் இருப்பது, நினைத்தால் கிளம்புவது என்று இருக்கும் மன்னாதி மன்னன் தொண்டர்கள் நெஞ்சில் மட்டும் அப்படியே நிரந்தர இடமாகக் கொண்டு உறைவாரா? ஆம். பெரிய பிராட்டியாரின் அருளோடுதானே தொண்டர்கள் அவரை அணுகுவதே. திருமகள் எங்கோ அங்குதானே திருமால் உறைவிடம்.
தூமலராள் மணவாளா
மாயன் என்பது சரிதான். உலகு ஏழினையும் உண்டிட்டு உறங்குவது எங்கு எனில் ஓர் ஆலின் இலையின் மீது.
உண்டிட்டு உலகினையேழும் ஓராலிலையில் துயில்கொண்டாய்
இவ்வளவு எல்லாம் இருக்கின்றவர் சரி. ஆனால் இந்த உலகில் இந்தக் கண்காண வந்தால்தானே நாம் மகிழ்வது... மற்றது எல்லாம் செய்யத் தெரிஞ்ச பிள்ளை நம் கண்காண வருவதற்கு மட்டும் ஏன் இந்தப் பிகு பண்ணுகிறது?
கண்டு நான் உன்னையுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய் !
பிரபஞ்சத்தையே உருட்டி ஒரு பாட்டில் தகப்பனார் தந்துவிட்டாரா? உலகுமுண்ட பெருவாயன் - அவனையும் அவன் செயல்களையும் ஓர் பாட்டில் அடக்கும் மாமனார். அவருடைய மகள் எப்படி இருப்பாள்? பாவம் அந்தப் பிள்ளை. கொஞ்சம் அடங்கித்தான் போகவேண்டும்.
அண்டத்தமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினையேழும்
ஓராலிலையில் துயில்கொண்டாய்
கண்டுநான் உன்னையுகக்கக்
கருமுகைப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி 2 9)
*
அதாவது இந்தக் காட்சியை இப்படிப் பார்க்கவேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்குப் பூச்சூட்டவேண்டி வெளியில் வந்து நிற்கிறாள். - எங்கே போச்சு இது? ஏண்டியம்மா எங்காத்து குழந்தையைப் பார்த்தியா? உங்காத்துக்கு வந்தானா?
இல்லை மாமி. அங்க கடைவீதியில் நின்று கொண்டிருந்தது நண்பர்களுடன்.
அங்க ஏன் போச்சு?
இல்லை மாமி அங்க இல்லை. அந்த மாடியாத்துல விளையாடிண்டு இருக்கு.
ஏன் மாமி ஊரெல்லாம் தேடுறீங்க. கடைசியில் உள்ளயே எங்காவது ரூம்ல ஒளிஞ்சிண்டு இருக்கப் போறது
என்னமோடிம்மா... இது படுத்தற படுத்தல் தாங்கலை. சித்த இந்தப் பூவை வைச்சுண்டு போய் விளையாடட்டுமே... வேண்டாங்கலை... இதை அதனுடைய தலையில வைத்தால் என் கண்ணே பட்டுடும் அப்படியிருக்கும். அதைப் பார்க்கணும் எனக்கு. இது என்னடான்னா அகப்படவே மாட்டேன்னு போக்கு காட்றது.
இந்த மாமியாக பெரியாழ்வாரும், கண்ணனைத் தேடும் இடங்களாக விண்ணும், நெஞ்சும், திருமகள் மஞ்சமும் ஆகப் பொருத்திப் பார்த்தால்தான் என்ன பா4வம் என்று! அந்த இதய கனத்தை எப்படி வார்த்தையால் சொல்லிவிட முடியும்? பக்தியின் உலகமே அலாதியானது.
ஏதோ மாமி தன் குழந்தையைத் தேடும் அக்கப்பக்கத்து விஷயம் அன்று இது. விஷயம் அப்ராகிருதம். இயற்கையைக் கடந்த பரத்துவம். ஓர் ஆன்ம சாதகன் பக்தியில் முற்றி பகவானைச் சாத்திரங்களில், தத்துவ ஞானத்தில் தேடுகிறான். கொஞ்சம் புரிகிறது. யோகத்தில் முனைகிறான் நெஞ்சில் திகழ்வதை உணர முடிகிறது. பக்தியில் கதறுகிறான் திருமகள் கேள்வனாய் திருமால் தூய உள்ளத்தில் தோன்றி மறைகிறான். ஏன் அந்தக் காட்சி புறத்தில் தான் கட்டலாம்படி, தொடலாம்படிக் காணக் கிடைக்கக் கூடாதா? என்று ஆகாத வேகம் பொங்குகிறது. அந்த வேகத்தில் உள்ளே உயிரே உருவெளிப்பாட்டில் மாறுகிறது. மனித உறவுகளில் ஏதோ ஒன்றைச் சட்டையாய் மாட்டிக்கொண்டு புறப்படுகிறது. அகக்காட்சியைப் புறத்தே வென்றுவிட வேண்டும் என்று. இங்கே அது தாய் குழந்தை என்ற உறவில் தான் தாயாகத் தவிக்கிறது. எல்லாம் கடந்த பரம்பொருள் இந்தப் பக்திக்குக் கட்டுப்பட்டுக் குழந்தையாகி விளையாட்டு காட்டுகிறது.
என்று நமக்குப் புரியும் இதெல்லாம்?. இந்த பக்தி உலகத்தை முழுவதும் தொலைத்துவிட்டோம். அணாபைசா உலகத்தைக் கட்டி அழுகிறோம். நாம் இழந்ததைப் பற்றிய உணர்வு கூட நமக்கு இல்லை என்பது எவ்வளவு சோகமானது, துர்பாக்கியமானது!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment