20 ஆம் நூற் தொடக்கம். 1903 அல்லது 1904 இருக்கலாம். நெபாளத்து ஜனக்பூர் என்பதைச் சேர்ந்த சகஜாநந்தர் என்னும் வேதாந்தியார் சென்னையில் தமது வாழ்வின் கடைசி ஆறு ஆண்டுகளைக் கழித்தார். அதுகால் சென்னைக்கு வந்த மருவூர் கணேச சாஸ்திரி என்பவர் அவரிடம் ஆழ்ந்து வேதாந்தம் பயின்றார். அப்பொழுதுதான் விவேகாநந்தர் மறைந்து பிற்றைய காலம்.
சென்னை, தமிழ்நாடு பிராந்தியங்களில் அதற்கு முந்தியே பல நூற்றாண்டுகளாக வேதாந்தப் பயிற்சி தமிழிலேயே சிறந்து விளங்கியதுண்டு. தத்துவராயர், ஸ்வரூபாநந்தர், சேஷாத்ரி சிவனார், கோவிலூர் மடத்துத் துறவியர், ஞானவாசிட்டத்தைப் பதிப்பித்த சுப்பையா அவர்கள் இன்னும் பல பெரிய மகான்கள் எல்லாம் தமிழில் வேதாந்தம் என்பதை நன்கு வளர்த்த புண்ணியர்கள். அந்த வழிவழி வேதாந்த ஊக்கத்தை 1910ல் தொடர்ந்த மகனீயர்களில் மருவூர் கணேச சாஸ்திரியாரும் ஒருவர்.
1910ல் அவருடைய மனஸ் தத்துவம் என்னும் நூல் வந்தது. ஹிந்துமத நூல்களில் தத்துவ நுட்பங்களை விளக்கியும், குறிப்பாக மனம் என்பதன் தத்துவச் செறிவுகளை விதந்து எடுத்துக் காட்டியும் எழுதிய நல்ல நூல். அதை நன்கு வரவேற்றனர் அன்றைய அறிஞர் பெருமக்களாகிய குப்புசாமி சாஸ்திரியார், டாக்டர் உ வே சாமிநாதய்யர், மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரி பிரின்ஸிபல் சந்திரசேகர சாஸ்த்ரியார் போன்றோர்.
1913ல் வேதசாஸ்திர தத்துவம் என்னும் ஹிந்துமத ஸார நிரூபணம் என்ற இன்னும் ஒரு நூல் வெளிவந்தது. அதுவும் ஹிந்துமதக் கருத்துகளை நன்கு தமிழில் எழுதிக் காட்டிய முயற்சியாகப் பலராலும் பாராட்டப் பெற்றது. கும்பகோணம் பேராசிரியர் சுந்தரராமன் நீண்ட ஆங்கில முன்னுரையே அளித்திருந்தார்.
ஹிந்துமதம் சிறப்புகள் அனைத்தும் கொண்டு பொலிய வேண்டும் என்று ஆசைப்படும் நம் போல்வார் இத்தகைய முன்னோர்களை நினைத்து நன்றியுணர்ச்சி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
*
No comments:
Post a Comment