Friday, February 7, 2020

திருப்பாவைக்கு ரசனைப் பாடல் முப்பது - முதல் பகுதி

திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிப் பார்க்கும் பேராசை இந்த விபரீத முயற்சி. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வர வேண்டும் என்று சங்கல்பம்.

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய்.


வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.

*
ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் !

*
ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்
ஆழ்பொருள் அத்தனையும் ஆசிலோர் தாம்வடித்தார்
ஊழிதோ றூழி யுளத்தில் பெயராமே
வாழி யுலகளந்த வண்ணத் திருமாலைப்
பாழில் பிறவி பயிலுமோர் நற்றுணையாய்
வாழ்த்தி மனத்திருத்தி வஞ்சமிலா வாழ்க்கையினில்
ஏழ்மைக்கும் ஈடாய் இயற்றுவோ மெம்பாவாய்.

*
மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடி
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ
சேயன் எனினுமே சேவைக் கரியானோ
ஆயர் குலவிளக்காய் ஆரா வமுதானான்
வேயர் குலவிளக்கால் வாழ்வில் துணையானான்
நேயன் நிமலன் நமக்கென்றும் அண்ணித்தான்
மாயப் பிறவி மயக்கறுத்தே மாமதியால்
ஆய தனக்கே அறக்கொள்வா னெம்பாவாய்.

*
 புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்கு கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.

*
கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ
வாச நறுங்குழல் கேசவனும் நம்வாழ்வில்
தேசு பொலியவும் தீர்ந்தவன் சேவடிக்கே
ஆசு கடிந்தேநாம் ஆளாக ஆண்டாளும்
பேசும் திருவுளமும் திண்பொருளும் ஓர்ந்தனையோ
நாயகத் தென்மனமே! நாரா யணன்கீர்த்தி
வாசிக்க விண்ணும் விழைந்தேலோ ரெம்பாவாய்.

*
கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய
வாழ்ந்தோம் வரம்பெற்றோம் வையம் திருநாடாய்
ஏழ்மைக்கும் உய்ய இயன்றநல் ஈடாகித்
தாழ்ச்சி தவிர்ந்தோம் நமனுக்கிங் கென்கடவோம்
வாழ்ச்சி விழைந்தோம் விரிநீர் உலகெங்கும்
சூழ்ச்சி தவிர்ந்து சுடரும் மனத்துள்ளீர்
ஏழ்பாரு முய்ய இயம்பேலோ ரெம்பாவாய்.

*
தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே
நாமுணரச் சொன்ன திருப்பாவை நற்பொருளால்
ஊமையரோ முள்ள முணர்வெழுந்து உன்னதமாய்த்
தீமை யகன்று திறல்விளங்கு மன்பிற்குச்
சேமம் புகன்றிட்ட செய்யமறைப் பாவைக்கு
நாமம் நவின்று நலந்திகழ் கோதைக்கே
நாமென்றும் ஆளாய் நவின்றேலோ ரெம்பாவாய்.

*
நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்
ஆற்றப் படைத்தோம் அழிவுறோம் ஆண்டாளைப்
போற்றிப் புகலடைந்தோம் பூமன்னு மார்பனடி
ஏற்றும் தகவுடையோம் இவ்வுலகம் வாழ்ந்திடவே
ஆற்றும் பணிகற்றோம் அல்லல் அகன்றிடவே
ஊற்றுப் பெருக்காகி உள்ளம் புரந்திடவே
போற்றித் தொழுது புகன்றேலோ ரெம்பாவாய்.

*
கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்
பெற்ற பலபொருளும் பேணும் மறைமுடியாய்
உற்ற திருப்பாவை ஓதினாள் நற்பாவை
கற்ற மதியுடையோம் கண்ணன் கழலிணையே
உற்ற கதியுடையோம் ஊக்கத்தில் ஒன்றானோம்
எற்றைக்கும் யாம்கவலோம் எவ்வுலகும் சுற்றமென
உற்ற உணர்வில் உகந்தேலோ ரெம்பாவாய்.

*
கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய்.

*
புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.

*
உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.

*
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ -

இந்தப் பாட்டிற்கு விசேஷமாகத் 'திருப்பாவைப் பாட்டு' என்று பெயர் சூட்டுகிறார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது திருப்பாவையின் அர்த்தங்கள், நோக்கம் எல்லாம் துலங்க வெளிப்படும் பாட்டு இது என்று பொருள். பகவானைப் பற்றிய அனைத்து இயல்பு, சிறப்பு, குணங்கள், பெருமைகள் எல்லாம் சொல்லும் திருப்பாவை 29 ஆம் திருப்பாவையாம். 'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து'. அடியார்களின் சிறப்பையெல்லாம், பாகவத் விஷயத்தின் சிறப்பையெல்லாம் சொல்லும் திருப்பாவை இந்த 15ஆவது பாடல் என்று சிறப்பான குறிப்பு தருகிறார் ஸ்ரீநாயனார்.

'எல்லே இளங்கிளியே! இன்ன முறங்குதியோ?
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக
ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.' (15) 

*

இதற்கான ரசிகப் பாடல் - 

எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்

*

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*


No comments:

Post a Comment