ஒல்லை நீ போதாய்
உனக்கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோ?
போந்தார் போந்தெண்ணிக்கொள்.
முழு திருப்பாவையின் பா4வகனம் புரிய வேண்டும் என்றால் இந்த வரிகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அத்தனை பேரும் கடைத்தேற வேண்டும். ஒருவர் இழக்கக் கூடாது. எண்ணு. தலையை எண்ணு. யாரு மிஸ்ஸிங் பாரு? - என்ன மனநிலை இது! இது முடியுமா? எல்லாருக்கும் திறந்து வைத்திருக்கும் பொதுச்சொத்தா? பக்குவம், தகுதி ஒன்றும் இல்லையா? என்னென்னவோ கேட்கலாம்? ஆனால் அதெல்லாம் அந்த ஸ்ரீஆண்டாளின் கோஷ்டிக்குக் காதிலேயே விழாது. ஓர் உயிரும் இழக்கவே கூடாது. மொத்த பூர்வாசாரியர்களின் குழாமும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. அது என்ன? ஆழ்வார்கள், நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீஸ்ரீமணவாளமாமுனிகள் பர்யந்தம் இதே மனப்பான்மையா? அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி என்று ஸ்ரீஆண்டாளை ஏன் கொண்டாடமாட்டார்கள்?
நஞ்சீயரை ஒருவர் கேட்டார். ‘ஒருவருக்கு வைஷ்ணவத்தன்மை உண்டு என்று எப்படி அறிவது?’
தெருவில் ஒருவர் போகிறார். அவர் காலில் ஏதோ குத்துகிறது. அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறவருக்கு ‘ஐய்யோ’ என்று வலித்ததாகில் அவருக்கு பகவத் சம்பந்தம் இருக்கிறது என்று பொருள். ...அப்படியில்லாமல் ‘வேண்டும் நன்னா படணும்.......’ என்று தோன்றுமேயானால் அந்தப் பேர்வழிக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று அறியலாம்.
நாராயணன் என்ற ஒற்றை நாமத்தில் உலகை எழுதி வாங்கிவிட்டவர்களிடம் என்ன பேசுவது?
*
கென்னத் கோச் என்னும் கவிஞர் சொல்கிறார் - 'வார்த்தை ஒவ்வொன்றுக்கும் இசை இருக்கிறது. கவிஞர்கள் அதைக் கச்சிதமாக அமைப்பில் வைக்கும் போது சொல்லின் இசையைக் கேட்க முடிகிறது'. காலம், ஞாலம், உயிர்கள், கடவுள், நாம் என்று எல்லாவற்றையும் ஒரே அள்ளலில் விழுங்கும் சாமர்த்தியம் கவிதைக்கில்லாமல் வேறு எதற்கு உண்டு? இதில் பல்கால் குயிலினங்கள் கூவினால் என்ன? மாதவிப் பந்தலில் ஊசலாடுவது நம் மனங்கள் அனைத்தும் என்று முடிவான பின்பு, தத்துவமாவது தகவாவது? இதெல்லாம் தெரிந்துதானே அந்தச் சரியான கள்ளன், எல்லாவற்றையும் தாண்டி, அண்டம் கடந்து, மனம் வாக்கு எட்டா சேய்மையனாய்ப் போய் ஒளிவது நம் உள்ளத்துள் என்றால் பக்தியின் ஜ்யோமெட்ரியும் வேறு. பாவனையின் டோபோக்ரஃபியும் வேறுதானே! இதில் வெயிலில் காயவைத்த வடாம் போன்ற நம் வார்த்தைக் குப்பைகளைக் கிளறி என்ன செய்யப் போகிறோம்?
*
இது என்ன மனோபாவம்! அவதார புருஷர்களான ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றோரின் வாழ்விலும் பார்க்கிறோம். அவர்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்றதுமே அவர்களைக் கருவாய்த்த பேறுடைய பெற்றோருக்கு பல திவ்ய காட்சிகளும், தேவதா உருவங்களும் கண்ணுக்குத் தெரிவதும், பெரும்பாலும் அன்னார் அயிர்த்துப் போவதும் பின் தேறுவதுமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் ஆய்ச்சியர் மத்தியில் ஸ்ரீகிருஷ்ணன் வளரும்காலத்து அத்தனை தேவர்களும் வந்துபோன வண்ணம் இருந்திருக்கின்றனர். இது நன்றாக ஆய்ச்சியர் கண்ணுக்கு இலக்காக நடந்திருக்கிறது. ஆனால் சிறிதாவது அலட்டிக் கொள்ள வேண்டுமே! கேட்டால் என்ன சொல்லியிருப்பார்கள்? - ஆமாம்.. இவங்களுக்கு என்ன வேறு வேலை.... நம்ம கண்ணனைக் கொஞ்ச நேரமும் ஓய்வு எடுக்க விடுவதில்லை. எல்லாம் தங்கள் சுயகாரியம். முடிஞ்சுதோ அப்புறம் அதற்குச் சிறிதும் நன்றியே இன்றி கண்ணனுடனேயே எதிர்த்து நிற்பது... இதெல்லாம் என்ன ஆட்கள்? இந்த மனப்பான்மையில் இருக்கும் ஆய்ச்சியர்களின் கவலை எல்லாம் என்னவென்றால் கண்ணனைக் காணவேண்டும், அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும், அவனை ரசிக்க வேண்டும், அவன் புகழ், அவன் நடையழகு, அவன் சொல்லழகு, அவன் பார்க்கும் பார்வை, அவன் உறக்கம் கலைந்து எழும் அழகு, தூங்கும் போதைய சௌந்தர்யம் - இதையெல்லாம் பார்த்துப் பார்த்துக் களிப்பில் பொங்குவது....
ஜகந்நாதன், லோக நாயகன், மோக்ஷம் தரவல்ல முகுந்தன்.... அவனே... முதன்முறையாக தனது நித்திய வாழ்வில் இப்பொழுதுதான் தன்னையே புதிய முறையில் தான் பார்க்கப் படுவதையும், தான் புத்தம் புது இதுவரை இல்லாத நூதனமான முறையில் நடத்தப்படுவதையும் கண்டு அசந்துபோய்... ஆனாலும் இந்த இயல்பான விதமான சூழ்நிலை தனக்குப் பெரும் ஆசுவாசமாக இருப்பதைக் கண்டு நிம்மதியுடன் பூரித்து நிற்கிறான். படைப்பு என்னும் பெரும் ப்ராஜக்டை என்ன அலட்சியமாகத் தூக்கிக் கடாசுகிறார்கள் இந்த ஆயர் பெண்கள்! முப்பத்துமூவர் அமரராம் - அவர்கள் முகம் தெரிந்தவுடனேயே ஓடிப்போய் முன்சென்று அவர்களுடைய நடுக்கம், கப்பம் என்னும் கம்பம் நீக்குகிறாயே.... கொஞ்சம் தான் விடேன்... படட்டும்... மெதுவாகப் போய் அவங்க காரியம் செய்யக் கூடாதா.... எல்லாம் சுயகாரியவாதிகள், காரியம் முடிஞ்சதும் எதிர்க்கும் நல்லவர்கள்.... ஏதோ முகாந்தரத்துக்காக வந்தவங்க கிட்ட அப்படி ஓடி ஓடி செய்யற.... நாங்க உன் முகத்திற்காகவே வந்து நிற்கிறோம், உன் துயிலெழும் போது அந்தக் கண் அழகைக் காணவே வந்து நிற்கிறோம்... எங்க கிட்ட என்னடான்னா... ம் யாரு எங்க வந்தீங்க.... அது இதுன்னு ஆயிரத்தெட்டு ஃபார்மாலிடி பார்த்துக்கிட்டு... என்ன இது... கிச்சுனா? யம்மா நப்பின்னாய்! நீதான் சரி இவனுக்கு. கொஞ்சம் கவனி.... உன்னாலத்தான் எங்கள் மனோரதம் நிறைவேறும்.
உலகத்தில் இருக்கும் கடவுள் கருத்து, பக்தி பூஜை எல்லாம் ஒரு தட்டு. ஆய்ச்சியரின் மனப்பாங்கு ஒரு தட்டு. மற்றவற்றில் நாம்தான் கையேந்தி நிற்போம். கடவுள் முன்பு. ஆய்ச்சியரின் வழியில் அவன் கையேந்தி. இதெல்லாம் எழுத முடியாது சார்! நமது குப்பை உலகத்தில் இதற்கான வார்த்தைகள் இல்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment