அவர் பெண். ஆனால் பெண்ணியம் என்று வழமையான நிலைப்பாடுகளுக்கு எதிரானவர். ஆண்களின் ஆதிக்கம் என்பதை அர்த்தமற்றது என்று காண்பிப்பதில் தன்னிகரில்லாதவர். 'சுயநலம்' என்பதைத் தத்துவ ரீதியாக நிலைநாட்டியவர். ஆனால் சுய இச்சைகளின் கண்மூடித்தனத்தைக் கண்ட துண்டமாகக் கண்டித்து எறிந்தவர். Individuality என்பதைக் கோயில் கட்டி வைத்தவர். ஆனால் ஆங்காரத்தால் ஆடும் தன் மமதைக்குச் சிறிதும் இடமில்லை என்று காண்பித்தவர். கடவுள், மதம் என்பதை அதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்துடன் அடிவேர் மிச்சமின்றிக் கேள்விக்கு உள்ளாக்குபவர். ஆனால் அவருடைய தத்துவத் தெளிவில் ஆன்மிகத்தின் தனித்துவமான பொருள் ஒன்று துலங்கக் காணலாம். பிறர் நன்மைக்காகத் தன்னை அழித்துக் கொள்வது என்ற altruism என்பது எவ்வளவு பேதைமையும், புன்மையும் நிறைந்தது என்பதை விண்டு விளக்கியவர்.
காப்பிடலிஸம் என்பதைப் பெரும் தத்துவ சாஸ்திரமாக வளர்த்தெடுத்தவர். கம்யூனிஸம் என்பதைத் தத்துவ ரீதியாக எதிர்க்கும் லுட்விக் வான் மைஸஸ், ஹெயெக் போன்ற ஆஸ்த்ரியப் பொருளாதாரப் பள்ளிகளின் கருத்தியலுக்கு வலுசேர்ப்பவை அவருடைய எழுத்துகள். இப்படி இருக்கும் ஒருவரை எப்படி யார்தான் முழுமையாக ஏற்று ஒப்பிவிட முடியும்? இத்தனையையும் அவர் சாதித்தது ஒரே ஓர் அடிப்படைக் கருத்தை மட்டுமே முற்றிலும் அதன் தத்துவார்த்தக் கடைக்கோடிவரைப் பிசகாமல் கைக்கொண்டதனால் மட்டுமே எனலாம். அந்த அடிப்படைக் கருத்து - 'பகுத்தறிவு'. ஆனால் அவரை முதலில் எதிர்ப்பது பகுத்தறிவுவாதிகளே. காரணம் அவர் பகுத்தறிவு வாதத்தின் முழு வீச்சுவரை போகின்றார். பகுத்தறிவுவாதிகளுக்கோ பகுத்தறிவு என்பது தாம் கைக்கொண்ட ஒரு சித்தாந்தம் அல்லது மதம் என்பது மாதிரிதான். அதுவும் பிற சித்தாந்தங்களுக்கு எதிர் நிலையாக. அப்படிப் பார்த்தால் பகுத்தறிவு என்பதையே முற்ற முழுக்க ஒரு தரிசனம் என்ற வகையில் பூரணமாக வளர்த்தெடுத்தவர் அயின் ரேண்ட். ஆனால் அவர் பேரைச் சொன்னதும் அன்றிலிருந்து இன்றுவரை எங்குமே ஆக்ரோஷமான எதிர்ப்புகளும், பழிப்புகளும், சாடல்களும் விமரிசனங்கள் என்னும் பூச்சில் குவிக்கப்படும்.
கருத்துகளைப் பற்றி மிக ஆழமாகவும், உண்மையாகவும் அக்கறை கொண்டு தம் கருதுகோள்களைத் திறமையான முறையில் நாவல், கட்டுரைகள் என்ற இரு வடிவிலும் வடித்த சிறந்த தத்துவ அறிஞர் அயின் ரேண்ட். ஆனால் முறை சார்ந்த தத்துவ இயல் படிப்பு வளாகங்கள் அவரையும், அவர் தத்துவத்தையும் மிகவும் அலட்சியம் செய்ய முயன்று தோற்று, இப்பொழுது சிறுகச் சிறுகக் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். புன்மைக்காலம் என்பது திறமையற்றவர்கள் தாங்கள் திறமையற்றவர்கள் என்பதையே தங்களுடைய உரிமைக்கான சான்றாகக் காட்டிக் கையோங்குவதும், திறமையுள்ளவர்கள் தாங்கள் திறமையுள்ளவர்கள் என்ற உண்மையாலேயே திறமையற்றவர்களின் உரிமைகளை ஒப்பி மெய்ம்மையாக்க இடப்படும் பலிகளாய் ஆவதுமான சூழ்ச்சிக்காலம் என்பதை நன்கு புரிய வைத்தவரே அயின் ரேண்ட்தான்.
அயின் ரேண்ட் அவர்களின் தத்துவம் என்ன? அவர் அந்தத் தத்துவத்திற்கு அளித்த பெயர் Objectivist Philosophy. அப்ஜெக்டிவிஸ்ட் எபிஸ்டமாலஜி அதாவது அறியும் நெறி என்பது என்ன? அவர் கூறிய Rational Self-interest என்பது யாது? அவர் ஏன் Reason என்பதை மறுக்க இயலாத ஒரே அறிவு நெறியாகக் கருதினார்? The Objectivist Newsletter, August, 1962 இதழில் அவர் தம்முடைய தத்துவம் குறித்த சுருக்கமான அறிமுகமாகப் பத்தியளவில் எழுதியது ரத்தினச் சுருக்கமாக அவருடைய சித்தாந்தத்தின் அடிப்படைகளைத் தெரிவிக்கிறது.
My philosophy, Objectivism, holds that:
Reality exists as an objective absolute – facts are facts, independent of man’s feelings, wishes, hopes or fears.
Reason (the faculty which identifies and integrates the material provided by man’s senses) is man’s only means of perceiving reality, his only source of knowledge, his only guide to action, and his basic means of survival.
Man – every man – is an end in himself, not the means to the ends of others. He must exist for his own sake, neither sacrificing himself to others nor sacrificing others to himself. The pursuit of his own rational self-interest and of his own happiness is the highest moral purpose of his life.
The ideal political-economic system is laissez-fare capitalism. It is a system where men deal with one another, not as victims and executioners, nor as masters and slaves, but as traders, by free, voluntary exchange to mutual benefit. It is a system where no man may obtain any values from others by resorting to physical force, and no man may initiate the use of physical force against others.
அவருடைய சித்தாந்தம் ‘புறப்பொருள் மெய்யியல்’ என்று கூறலாம். புறத்தில் பொருள்படு தன்மையாக அன்றி ஒருவருக்கு மட்டும் அவர் தமக்கு மட்டும் தெரியவருவதான, அறிவிற்கு அப்பாற்பட்ட, யாருக்கும் காட்டலாகா மெய்ம்மை என்பதை அயின்ரேண்ட் அவர்களுடைய அப்ஜெக்டிவிஸ சித்தாந்தம் ஒப்பவில்லை. ஒருவர், இருக்கின்ற ஒரே மெய்ம்மைக்குச் சற்றும் தொடர்பின்றி, தம் கருத்துகளை அறிவை நோக்கி முன் வைக்காமல் வெற்று உணர்ச்சிகளுக்கும், அறிவுக்குச் சம்பந்தமற்ற கேவலம் நம்பிக்கைக்கும் நோக்கி வைப்பாரானால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியன்று.
நிஜம் அல்லது உலக மெய்ம்மை என்பது மனிதருடைய உணர்ச்சிகளை நம்பி இல்லை. எதிர்பார்ப்புகளை நம்பி மாறுவதில்லை. விருப்பங்கள், பயங்கள் இவற்றைப் பொறுத்து இம்மியும் அசைவதில்லை. நிஜம் என்பது, இருக்கின்ற ஒரே மெய்ம்மை என்பது, புறப்படுத்திப் புரிந்து கொள்ளத்தக்க, மீற இயலாத முற்ற முழு ஒரே நிஜமாக இயன்று நிற்பது. அந்த நிஜத்தை, முழுச் சான்றுடன் நிற்கும் அந்த மெய்மையை அறிய ஒரே வழி அறிவுதான். மனிதரின் பகுத்தறிவுதான் மெய்ம்மையை நமக்கு மிகச்சரியாக அறிவிக்கும். பகுத்தறிவுதான் செயலுக்கான ஒரே வழிகாட்டி; வாழ்க்கையின் அடிப்படையான பிழைக்கும் உபாயம்.
மனிதர், ஒவ்வொரு மனிதரும், அவரவர் தம் தமக்கே தம்முடைய செயல்களுக்கான முழுச் சான்றுடைய ஒரே பயனாளியாக இருத்தற்குரியவர். தம்முடைய செயல்களுக்கான இலட்சியம் ஒருவருக்குத் தாமேயாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரும் இல்லை. வேறு யாருடைய பயனுக்கோ உதவும் ஒரு வழிக்கருவி இல்லை மனிதன் என்பவன். அவன் யாருடைய நோக்கங்களுக்குமான உபயோகப் படுத்திக் கொள்ளத்தக்க சௌகரியமான மார்க்கம் அன்று. அவன் கைக்கொள்ளும் செயல்களுக்கு அவனேதான் இலக்கு ஆகவும், நோக்கம் ஆகவும், பயன் ஆகவும் இருக்க வேண்டும். தனக்காகத்தான் மனிதன் வாழ வேண்டுமே அன்றிப் பிறருக்காகக் காவு கொடுக்கப்படும் பலியாக அன்று.
மனிதருடைய வாழ்க்கையின் மிக உயர்ந்த அறமே பகுத்தறிவு ரீதியான தம்முடைய சொந்த சுயநலத்திற்கு, தம்முடைய சொந்த சந்தோஷத்திற்கு என்று நோக்கம் கொண்டு அதைத் தம்முடைய அறிவு பூர்வமாக இயற்றிச் சாதித்தலே ஆகும். கவனம்! அவர் சொல்வது ஒவ்வொருவர் தம்முடைய பகுத்தறிவு ரீதியான சொந்த சுயநலத்திற்கே அன்றி, மற்றபடியான ஒவ்வொருவரின் சொந்த உணர்ச்சிகளுக்காகவோ அல்லது சுய விருப்பத்திற்காகவோ அல்ல. இந்த மாதிரியான பகுத்தறிவு ரீதியான சுயநலத்தையும், சுய சந்தோஷத்தையும் ஈட்டல் என்ற அறத்தின் வழிப்படு வாழ்க்கையை ஒருவர் முழுமையாகச் சாத்தியப்படுத்திக் கொள்ளத் தகுந்த ’அரசியல் – பொருளாதார அமைப்பு’ என்பது கட்டற்ற சுதந்திரம் இலகும் காப்பிடலிஸம் என்பதேயாகும்.
தனக்கென வாழாப் பிறக்குரியாளர் – இந்தச் சொற்றொடர் தெரிவிக்கும் கருத்து அல்ட்ரூயிஸம், சுயநலத்தைப் பிறர்க்காகப் பலிகொடுத்தல். ஆஹா என்ன உயர்ந்த லட்சியம் என்று ஒரு விதத்தில் தோன்றுகிறதா? ஆனால் இதுவே பகுத்தறிவு சார்ந்து அயின் ரேண்டின் விளக்கத்தின்படிப் பார்த்தால் ஒரு விதத்தில் ஒருவர் தாமே தமக்கு அநியாயமாகத் துரோகம் இழைத்துக்கொண்டு பலியாய் ஆக்கிக்கொள்ள வைக்கும் மோசமான கருத்து என்று புரியவரும். அயின் ரேண்ட் அதை விளக்குவதைப் பார்க்கலாம்.
What is the moral code of altruism? The basic principle of altruism is that man has no right to exist for his own sake, that service to others is the only justification of his existence, and that self-sacrifice is his highest moral duty, virtue and value.
Do not confuse altruism with kindness, good will or respect for the rights of others. These are not primaries, but consequences, which, in fact, altruism makes impossible. The irreducible primary of altruism, the basic absolute, is self-sacrifice – which means: self-immolation, self-abnegation, self-denial, self-destruction – which means: the self as a standard of evil, the selfless as a standard of the good. (Philosophy Who Needs It, Faith and Force)
பிறருக்கு உதவுவது, மற்றவர்களின் கஷ்டங்களில் தலையிட்டு அதைக் குறைக்க வழி தேடுவது என்பதெல்லாம் தவறா என்றால் அதுவன்று இங்கே அயின் ரேண்ட் கண்டிக்க வருவது. ஏனெனில் அவையெல்லாமும் தன்னுடைய உள்ளத்தின் நிம்மதி, சந்தோஷம் என்பதை முன்னிறுத்தி எழுவன. ஆனால் இங்கு அல்ட்ரூயிஸம் என்பது பிறருக்காகத் தான் அழிதல் என்னும் கொள்கை. ஒருவருடைய வாழ்க்கைக்கே நியாயம், தார்மிக அனுமதி என்பதே பிறருடைய சந்தோஷமும், நல்வாழ்க்கையும்தான் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தும் அல்ட்ரூயிஸம் என்பதைத்தான் மிகவும் தீயது என்று விமரிசனம் வைக்கிறார் அயின்ரேண்ட். இவ்வாறு, அல்ட்ரூயிசம் என்னும் கோட்பாட்டை மிகத்துல்லியமாக விமரிசனத்திற்கு இலக்காக்கியவர் அயின்ரேண்ட் மட்டுமே இதுவரையிலான மானிட தத்துவ வரலாற்றில் எனலாம்.
Capitalism என்றால் என்ன? யாரேனும் காபிடலிஸத் தத்துவம் என்பது என்ன என்று தத்துவார்த்தமாகச் சொல்லியிருக்கின்றனரா? என்று பார்த்தால் ஏமாற்றம்தான். காப்பிடலிஸத்தைத் திட்டுபவர்களின் வார்த்தையின் மூலம்தான் காப்பிடலிஸம் என்றால் என்ன என்ற அபிப்ராயம் பரப்பப் படுகிறது. ஆனால் நியாய பூர்வமாக நன்கு நிரூபிக்கப்பட்ட அறிவுநெறித் தத்துவத்தின் அடிப்படையில் காப்பிடலிஸம் என்றால் என்ன என்று அயின் ரேண்ட் ஓர் உரை ஆற்றியுள்ளார். அஃது அயின் ரேண்டின் ’காபிடலிஸம் த அன்நோன் ஐடியல்’ என்ற நூலின் முதல் அத்தியாயமாகத் திகழ்கிறது.
Capitalism is a social system based on the recognition of individual rights, including property rights, in which all property is privately owned.
The moral justification of capitalism does not lie in the altruist claim that it represents the best way to achieve “the common good”. It is true that capitalism does – if that catch-phrase has any meaning – but this is merely a secondary consequence. The moral justification of capitalism lies in the fact that it is the only system consonant with man’s rational nature, that it protects man’s survival qua man, and that its ruling principle is: justice. (What is Capitalism? Capitalism the Unknown Ideal)
மனிதனுடைய இயல்பு பகுத்தறியும் ஜீவன் என்பதற்கேற்ப, மனிதன் தன் வாழ்க்கையின் முழுமையை அடைய முடிவது என்பது காப்பிடலிஸம் அதுவும் அரசாங்கத்தின் தலையீடு சிறிதும் அற்ற இலட்சிய காப்பிடலிஸ அமைப்பில்தான் என்பது அவருடைய சித்தாந்தத்தின் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு.
ஃபிப்ரவரி 19. 1926 கம்யூனிஸ ரஷ்யாவை விட்டு அமெரிக்கா வந்த ஆலிஸ் ரோஸென்பாம், அதாவது அயின் ரேண்ட் ந்யூயார்க்கில் இறங்கியதும் விண்முட்டும் கட்டிட வரிசையைக் கண்டு ஆனந்தத்தில் அழுதே விட்டார். ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சி அவரது தந்தையாரின் தொழிலை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டது. தனி மனிதர், அறிவின் இயக்கம், ஒவ்வொருவரும் தம் சொந்த சந்தோஷத்தை அடைவதற்கான உரிமை என்ற இவையனைத்தும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் எதிர்ப்பான விஷயங்கள் என்பதைத் தம் வாழ்வில் கண்கூடாகக் கண்டதையும், தம் வாழ்வில் தாக்குண்டதையும் வைத்து அவர் எழுதிய நாவல் We the Living.
அயின் ரேண்ட் தமது அப்ஜெக்டிவிஸ்ட் சித்தாந்தப்படியான இலட்சிய மனிதனைச் சித்திரித்து எழுதிய நாவல் Fountainhead. அதை எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒரு குறுநாவலையும் எழுதினார். எங்கோ எதிர்காலத்தில், மக்கள் சமுதாயம் தன்னுடைய அறிவுக்கான எதிர்ப்பிலும், தனி மனிதனை நோக்கிய எதிர்ப்பிலும், ஒவ்வொரு மனிதனுள்ளும் அல்ட்ரூயிஸத்திற்கே எதிர்க்குரலாக ஒலிக்கும் ‘நான்’ என்ற அகங்காரத்தைக் கண்டடைவது எத்தனை பெரிய சாதனையாக ஆகிவிட்டது என்பதை இரண்டு பாத்திர படைப்புகள் கொண்டு விளக்குகிறார் Anthem என்னும் அந்தக் குறுநாவலில்.
தத்துவ இயல் என்பது இருக்கின்ற ஒரே நிஜத்தைப் பற்றிப் பேசுவது; அதுவும் எந்தக் கலப்படமும் இல்லாத மனித அறிவுடைமையை மட்டும் வைத்துப் பேசுவதும், புரிந்து கொள்வதும் ஆகும் என்ற ஆணித்தரமான பார்வையைத் தமது நாவல்கள், மற்றும் கட்டுரைகளால் முன்னிறுத்தியவர் ருஷ்யாவில் பிறந்து அமெரிக்காவைத் தம் தாய்நாடாய் வரித்துக்கொண்ட ஆசிரியப் பெருந்தகையான அயின் ரேண்ட் அவர்கள். என்றோ கிரேக்க உலகத்தில் அரிஸ்டாடில் என்னும் அந்தப் பேரறிஞர் காட்டிய தெளிவுகளையே அவர் தமது பெரும் நாவலாக ஆக்கினார் என்றால் மிகையில்லை என்னும் அளவிற்கு அமைந்தது அவர்தம் ‘அட்லஸ் உதறிவிட்டான்’ என்று பொருள்படும் அட்லஸ் ஷ்ரக்டு என்னும் நாவல். என்றுமே இந்த அளவிற்குத் தத்துவக் கருத்துகள் புதின வடிவம் கொண்டதில்லை; புதினங்களும் தத்துவ உட்செறிவு கொண்டதாய் இருந்ததில்லை என்னும் படி அமைந்தது நவீன மனிதரின் மாபெரும் இதிகாசமான அவரது நூல்.
இந்தப் புதினத்தை மூன்று பாகங்களாய் அமெரிக்கக் கம்பெனியார்கள் சினிமா ஆக்கியிருந்தாலும், அவை நாவலின் அண்மையில் வருகிறதா என்று ஐயுற வேண்டியிருந்தாலும், ஆசிரியரின் மையச் செய்தியை இன்றைய தலைமுறைகளுக்கு அந்த முயற்சிகளும் கொண்டுதான் செல்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அவர் காலத்திலேயே சினிமா ஆக்கப்பட்ட அவரது முதல் நவீன மனித காவியமான ஃபௌண்டன்ஹெட் என்னும் ஊற்றுமுகம் என்பது ஓரளவிற்கு நாவலுடன் உறவாடும் பீடு கொண்டதாய் இருக்கிறது என்பது எத்தனை தூரம் அவர் அதில் தலையிட்டிருப்பார் என்பதைக் காட்டுகிறது. ஆனாலும் அதிலும் எனக்கு நாவலத்தனை அளவு சினிமா வடிவத்தில் திருப்தி இல்லை. ஆனால் அந்தச் சினிமா தொடங்கி Gary Cooper இன் ரசிகனாக ஆகிவிட்டேன். ஹோவர்டு ரோர்க் என்ற பாத்திரத்திற்காகச் செதுக்கப்பட்டவர் போன்று அவருடைய தோற்றமும் பேச்சும். நவீன வாழ்க்கையின் உன்னத கணங்களைத் தந்திருப்பவர் என் வணக்கத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான அயின் ரேண்ட். ஆயினும் அவரிடமும் எனக்கு விமரிசனங்கள் உண்டு. அதைப்பற்றிக் கடைசியில் கூறுகிறேன்.
உலகின் மிகப்பெரிய இதிகாசங்களில் நம் காலத்தில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அஃது Atlas Shrugged By Ayn Rand. சுதந்திரமான பகுத்தறிவு மனிதனை ஃபௌண்டன்ஹெட் சித்தரித்தது என்றால், அத்தகைய சுதந்திர மனிதர்களின் சாதனைகளில்தான் இந்த உலகம் இயங்குகிறது. அவர்கள்தாம் இந்த உலகைத் தாங்கும் அட்லஸ். அத்தகைய அட்லஸ் போன்றவர்கள், தாம் சமுதாயத்தின் அஸ்திவாரம் என்றும், மனித இயல்புக்கும், அறிவுக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும், சுயவாழ்வின் உரிமைக்கும் விரோதமான பொதுச் சமுதாயத்தின் சூழ்ச்சியான விதிமுறை அடக்கல்களுக்குப் பலியாகாமல் அப்படிப்பட்டவர்கள் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, அவர்களையே நம்பித் தம் வாழ்வைப் பெறும் சமுதாயம் தன்னுடைய சூழ்ச்சிக்குத் தானே பலியாவதையும் கதைக் கட்டங்களாக ஆக்கி நிற்கும் நாவல் அட்லஸ் ஷ்ரக்டு.
தங்களுடைய ஒளிவு மறைவற்ற சுதந்திரச் சிந்தனை திகழும் இயல்பால், சமுதாயம், நாடு என்ற அனைத்து கூட்டு வாழ்க்கைக்கும் அச்சாணி போன்றவர்கள் இத்தகைய உற்பத்தியாளர்களே. அவர்கள் அறிவுத் துறையாகட்டும், தொழில் முனைவோராக இருக்கட்டும், முனைந்து சென்று தம் திறனையெல்லாம் முதலிட்டு நல்வாழ்வுக்கான ஊற்றுக் கண்களைத் திறப்பவர்கள் இத்தகையோரே. இவர்கள் நல்வாழ்க்கையின் பாட்டைகளைப் போட்ட பிறகுதான் பிறர் அதிலிருந்து பலன் காண விழைகின்றனர். நல்வாழ்வுக்காகப் புதிய மார்க்கங்களைக் காணத் துணிந்து முனையும் இத்தகையோர்தாம் மனித வாழ்க்கையின் சுழல் கோளத்தைப் பிதிர்ந்து போய் விடாமல் தம் முதுகில் சுமந்து நிற்கின்றனர். அவ்வாறு சுமந்து நிற்கும்வரைதான் உலகம் சுழலும். அவர்களுக்குத் துரோகம் செய்யும் வகையில், அவர்களுக்குக் குந்தகம் விளைத்து, ’உண்டாக்கும்வரை நீ; உண்டாக்கியதும் ஒதுங்கி நில்’ என்று பிடுங்கிக் கொள்ள எந்த ஒரு சித்தாந்தமோ சமுதாயமோ யத்தனிக்குமானால் விளைவு என்ன ஆகும் என்பதை அட்லஸ் ஷ்ரக்டு நாவல் பேசுகிறது. அட்லஸ் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு நிலவும்வரைதான் உற்பத்தி என்னும் திருவின் ஆக்கம் திகழும். அவர்களிடமிருந்து அவர்களின் முனைப்பின், முயற்சியின் பலன்களைத் தட்டிப் பறிப்பதோ, அல்லது பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்வதோ செய்ய முயற்சி செய்தால் விளைவு என்ன என்றும் சொல்கிறது. அல்ட்ரூயிஸச் சூழ்ச்சிகள் புதைந்த, ‘உன் வாழ்வுக்கான நியாயம் நீ இல்லை; மற்றவர்களுக்கு உன் வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் உன் வாழ்க்கையின் நியாயம் அடங்கியிருக்கிறது’ என்பது போன்ற வாழ்க்கைக்கு முரணான தத்துவங்களுக்கு ஆட்பட்டுத் தாமாகவே, தம்மிடமிருந்து தம்முடைய நியாயமான, தமக்கே சொந்தமான தம்முடைய சாதனைகள் சமுதாயத்தால் பிடுங்கிக் கொள்ளப்படும் பொழுதும் ஊமைகளாகி நிற்கும் நிலையினின்றும் அட்லஸ் போன்றவர்கள் விழித்துக்கொண்டால் என்ன ஆகிறது என்பதையும் அயின் ரேண்டின் நாவலான அட்லஸ் ஷ்ரக்டு காட்டிவிடுகிறது. அவ்வாறு காட்டும் அந்தக் கணத்தில் தங்கள் உள்ளத்திற்கு உண்மையாகத் தங்கள் அறிவாலும், உழைப்பாலும் அரிதின் பெற்ற தங்கள் சாதனைகளைச் சக மனிதரின் சூழ்ச்சிகளுக்குப் பலிகொடுத்த எவரும் அயின் ரேண்ட் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
புதிய கருத்தை, புது தத்துவத்தை அளிப்பவர் தம் கருத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போனால் எவ்வளவோ உத்தமம் என்றுதான் தோன்றுகிறது. அதைச் சமுதாயத்தில் இயக்கமாக மாற்ற ஊக்கம் கொண்டால் மிகவும் நகைச்சுவையான முடிவுகள்தாம் மிஞ்சுகின்றன. அறிவு, சுதந்திரம், தனித்துவம், கட்டளைக் குரல்கள் எதற்கும் கீழ்ப்படியாமை என்று ஆரம்பித்துக் கருத்துலகில் முரண்பாடற்ற பெரும் அமைப்பாய் எழுபவை இயக்கமாக ஆகும் பொழுது என்ன முரண் நகையாகி நிற்கின்றன!. முரே ரோத்பேர்ட் என்னும் ஆசிரியர், லுட்விக் வான் மைஸஸ் கழகத்தின் அறிஞர் எழுதும் இந்தச் சமுதாய இயல் கட்டுரை அயின் ரேண்ட் கருத்துகளின்பால் எழும்பும் இயக்கம் பற்றிய முரண் நகையை அலசுகிறது.
“ … cults become particularly fascinating when the esoteric and exoteric creeds are not only different, but totally and glaringly in mutual contradiction. The havoc that this fundamental contradiction plays in the minds and lives of the disciples may readily be imagined…
”We conclude our analysis of the Rand cult with the observation that here was an extreme example of contradiction between the exoteric and the esoteric creed. That in the name of individuality, reason, and liberty, the Rand cult in effect preached something totally different. The Rand cult was concerned not with every man's individuality, but only with Rand's individuality, not with everyone's right reason but only with Rand's reason…”
https://www.lewrockwell.com/1970/01/murray-n-rothbard/understanding-ayn-randianism/
மனித வாழ்க்கை பலமுகப் பிரச்சனைகளால் ஆன நுணுக்கம் உடையது. அதை எந்த ஒரு சித்தாந்தமும் தங்கள் முடிவிற்கேற்ப விடைகண்டு தெளிவாக்கிவிட்டதாகப் புதினங்கள் மட்டுமே எழுத முடியும். நடைமுறையில் வரும் பொழுது சித்தாந்தத்தில் அடங்காத பல பிரச்சனைகளாகத்தான் வாழ்க்கை தொடர்கிறது. அப்பொழுது அநேகமாக அனைத்துச் சித்தாந்தங்களும் ஒரே விதத்தில்தான் எதிர்ப்பு காட்டுகின்றன. மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும், பொறுமையும் இழந்து ’சித்தாந்தம் என்னவோ சரியாகத்தான் இருக்கிறது, வாழ்க்கையைத் தான் சித்தாந்தத்திற்கு ஏற்பத் திருத்த வேண்டும்’ என்று முயற்சி செய்கின்றன.
அயின் ரேண்ட் அவர்களின் கருத்திலும் பகுத்தறிவின் அடிப்படையிலான கட்டமைப்பு புனைவின் வெளியில் இயற்ற முடிகிறது. ஆனால் அந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரோ ஒரு நாடோ தம் வாழ்வில் வரும்பொழுது உள்ளத்திற்கு மட்டுமே புலனாகும் வாழ்க்கையின் பல பிரச்சனைகள் எதிர்ப்படுகின்றன. நாடு என்று எடுத்துக்கொள்ளும் பொழுது ஏழ்மை, வறுமை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள், இயற்கையால், மனிதக் குழுக்களால், பணபலம், படைபலம் என்பன கொண்டு ஒடுக்கும் சக்திகளால் அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் நிலைமை என்றெல்லாம் வரும்பொழுது வெறுமனே அறிவு ரீதியாகக் கச்சிதமாக எழுதப்பட்ட சித்தாந்தம் என்பதன் போதாமையே வெளிப்படுகிறது. கருத்திற்குச் சரியாகப் படுவது களத்தின் மெய்ம்மைக்குப் போதாத போது தோல்வியை ஒப்புக்கொண்டு தன்னை அதற்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் பக்குவம் பொதுவாகச் சித்தாந்தம் எதற்குமே இருப்பதில்லை.
அயின் ரேண்டின் நிலைப்பாடு முற்றிலும் அறிவு என்பதில் நிலைகொண்டிருப்பது. நிரூபிக்கக் கூடிய வாஸ்தவம் என்பது அவர்களது அணுகுமுறையின் அடித்தளம். அயின் ரேண்ட் அவர்களின் நூல்களில் கருத்தியல் தெளிவு என்பது படிப்பவர்க்கு ஏற்படக் கூடிய ஒரு நன்மை. அயின் ரேண்டின் அப்ஜக்டிவிஸ்ட் தத்துவம் என்பது ரீஸன் என்ற ஒன்றுதான் அறிவுக்கான வழி. அறிவதற்கான மாற்று வழியோ, அறியப்பட வேண்டிய மாற்று மெய்ம்மைகளோ இல்லை என்பது அவருடைய திடமான வாதம். அறிவுக்கு அப்பாற்பட்ட, மெய்ம்மையைக் கடந்த கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை மிக அழுத்தமாகக் காட்டுகிறார். பன்னெடுங்காலப் பாரம்பரியக் கருத்துகளின் நேரெதிரானது அவர் வாதம். அதில் சிறிதும் இப்படி அப்படி விட்டுத்தரும் அவசியம் அவருக்கு இல்லை.
ஆனால் வேதாந்தம் என்பது ரீஸனுக்கு உரிய முழு இடத்தையும் அங்கீகரித்து, கடவுள் என்ற ஒற்றை விஷயத்திற்கு மட்டும் சுருதி என்னும் ரெவலேஷன் என்பதை அடிப்படையாகக் கொள்ளும் உபநிடத தத்துவ அணுகுமுறை. அதாவது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வரம்பு மீறாத பாத்தி கட்டி வைத்து அணுகும் முறை. வேதாந்தத்தோடு ஒப்பிட வேண்டுமெனில் செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் அவர்களின் தியாலஜிகல் அணுகுமுறைகளைச் சொல்லலாம். ரீஸனுக்கானப் பிரதேசத்தில் நம்பிக்கை ஊடு நுழையக் கூடாது என்ற கருத்தினர் அக்வினாஸ். 12 ஆம் நூற் (?). அயின் ரேண்ட் தமக்குப் பிடித்த கருத்தியல்களில் அக்வினாஸின் தியாலஜி துறைப் பங்களிப்புகளைக் குறிப்பிட்டக் காரணமே இதுதான். For the greatness of his contributions towards epistemological clearance.
அயின் ரேண்டை ஒவ்வொருவர் படிக்க அறிமுகமான தருணம் குறித்துப் பேசுவது ஒரு சுவையான நினைவுப் போதை. என்னுடைய அறிமுகம் மிகவும் எதேச்சையானது. ஸ்ரீரங்கத்தில் ரயில்வே டாக்டராக இருந்த (1981 களில்) வி காசிவிச்வநாதன் அவர்களது மேஜையின் மீது Atlas Shrugged அட்லஸ் ஷ்ரக்டு என்னும் நூல் இருந்தது. நூலைப் புரட்டிப் பார்த்தால் பின்னட்டைப் பிளர்ப்பில் a metaphysical novel என்று போட்டிருந்தது. முன்னரே பேராசிரியர் திரு சி எஸ் கமலாபதி அவர்களின் உள இயல் உரைகளில், திருச்சியில், அயின் ரேண்டின் The Virtue of Selfishness பற்றிக் கேட்ட நினைவு. சரி இந்த ஆசிரியர் அப்படி என்ன எழுதியிருக்கிறார் என்று அறிய ஆவல். உட்கார்ந்து இராப்பகலாகப் படித்து முடித்தேன். உடனே பழம் புத்தகக் கடையில் சென்று ஒரு பிரதியும் வாங்கிவிட்டேன்.
அயின் ரேண்ட் சம்பந்தமான மூடிய குழுமனப்பாங்கு என்று பொருள்படும் கல்டிஸம் என்ற விமரிசனத்தைத் தம் கட்டுரையில் முர்ரே ரோத்பார்ட் வைக்கின்றார். அஃது என் அனுபவத்தின்படியும் உண்மை என்றுதான் படுகிறது. அயின் ரேண்டின் கருத்துகள் மனத்தில் பதிந்த அந்தக் காலத்தில் எதையுமே அவருடைய பார்வைகளை வைத்தே அளந்து பார்ப்பது என்பது எண்ணப் பழக்கமாக ஆயிற்று. அதற்கு முன்னரும் பல சித்தாந்தங்களின் வயப்பட்டு எண்ணம் கொள்ளும் பழக்கம் இருந்ததினால் பொதுவாகவே சித்தாந்தங்கள் நம்முடைய மனத்தை எப்படி ஆக்கிரமிக்கின்றன என்னும் ஓர்மையும் வளர்ந்திருந்த காரணத்தால் ஒன்றின் வயப்பட்டு எண்ணுவதும், அதற்குப் புறமாகி அதை விமரிசித்துப் பார்க்கும் பழக்கமும் கூடவே ஏற்பட்டது. அதனால்தான் முர்ரே ரோத்பேர்ட் தமது விமரிசனத்தில் கூறும் சில அவதானிப்புகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. குறிப்பாக அவர் ஒரு கருத்தைக் கூறுகிறார். அது என்னவென்றால் அயின் ரேண்ட் கல்ட் என்பதில் ஆட்பட்டவர்கள் பொதுவாக அயின் ரேண்ட் எதை, எந்த ஆசிரியர்களை, எந்த நூல்களைக் கண்டித்தாரோ, அப்ஜக்டிவிஸ்ட் சித்தாந்தத்திற்குக் குந்தகம் என்று குற்றம் சாட்டுகிறாரோ அந்த நூலை, அந்த ஆசிரியரை அயின் ரேண்ட் அபிமானிகள் படிக்க விரும்ப மாட்டார்கள். உதாரணத்திற்கு, அப்பொழுது புத்தகக் கடையில் ஒரு முறை ப்ளேட்டோவின் முழுநூல் தொகுதியைக் கண்டும் அதை வாங்காமலே வந்திருக்கிறேன் என்றால் உள்ளே என்னுள் இருந்த அந்த கல்ட் மனப்பான்மையும் ஒரு காரணம். பிறகு அதை எப்படியோ வாங்கிவிட்டேன் என்பது வேறு. கல்ட் மனப்பான்மை என்பது எப்படி ஆழமாகச் செயல்படுகிறது என்பதற்காகக் கூறினேன். முர்ரே ரோத்பேர்ட் எழுதுகிறார்:
“Reading the Enemy (which, with a few carefully selected exceptions, meant all non- or anti-Randians) meant “giving him your moral sanction,” which was strictly forbidden as irrational. In a few selected cases, limited exceptions were made for leading cult members who could prove that they had to read certain Enemy works in order to refute them…”
ஏற்கனவே வேதாந்தப் படிப்புகளின் மூலம் இது தெரியவந்த ஒன்றுதான். மாற்றாருடைய கருத்துகளைப் பூர்வபக்ஷம் அல்லது பரபக்கம் என்னும் கோணத்தில்தான் ஒரு சித்தாந்தி படிக்க முடியும். அதாவது அதை எடுத்துக் கண்டிப்பதற்காக மட்டும் அந்த நூல்களைப் படிக்கலாம். சாதாரண அபிமானிகள் கூடிய மட்டும் அப்படியான எதிராளிகளின் நூல்களைப் படிக்காமல் இருப்பதுதான் நல்லது. ’மிகச் சிறந்தது என்பதை வாழ்வில் வந்து அடைந்தபின் ஏன் மற்றவற்றைப் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டும்’ என்ற எண்ணமே தோற்றுவிக்கப்படும். ஆனால் ப்ளேட்டோவோ, காரல் மார்க்ஸோ அல்லது உலகில் இன்னும் பல துறைகளோ அவற்றையும் படிக்கும் போது அதில் பல நன்மைகள் கிடைப்பதைக் கல்ட் மனப்பான்மையைக் கடந்து சென்றால்தான் புரியும். அதே நேரத்தில், அந்தந்தச் சித்தாந்தங்களில் தீவிரமாக ஆழ்ந்து போவோருக்கும் இதேபோல்தான் பிரச்சனைகள் இருக்கின்றன. எனக்கு அந்தப் பிரச்சனை இல்லாமல் போன காரணம் அறிதல் என்னும் நிலையான நிகழ்காலச் செய்கைக்கு எந்தவித வரம்புகளும் கூடாது என்ற தெளிவு ஏற்பட்டமையேயாகும். அதனால் யாரையும் அவர்களைக் கண்டிப்பவர்களின் பார்வையில் நின்றுகொண்டு ஒரு நாளும் படிக்கக் கூடாது என்னும் நிச்சயம் ஏற்பட்டது.
மேலும் அயின் ரேண்ட் நாவல்களைப் படித்து அதன் தாக்கத்தில் இருந்த நாட்களில் கல்டிஸத்தின் மற்றும் ஒரு பழக்கமும் ஏற்படுவதைக் கண்டேன். அதாவது நம்மை அந்த நாவல்களில் வரும் ஏதாவது உன்னத பாத்திரங்களில் ஒன்றாக ஐக்கியப்படுத்திக் கொள்வது; நாம் சந்திக்க நேரும் அல்லது நம்மோடு மோத நேரும் யாரையும் மிகச்சுலபமாக நாவல்களில் வரும் கதைக்கட்டங்களை நினைவில் கொண்டு அதற்குத்தக ஒரு பாத்திரத்தோடு ஐக்கியப்படுத்தி விடுவது. அதாவது ‘நான் சரி / நீ சரியில்லை’ என்னும் எதிர் இரட்டை நிலை. இந்தப் பழக்கம் வெகு சுலபமாகக் கருத்துகள் ரீதியான பார்வையை நீக்கிவிட்டு அங்கு பழக்கப்பட்ட சித்திரங்களைக் கொண்டுவந்து வைத்துவிடும் அபாயத்தைத் தோற்றுவித்துவிடும். ஆனால் சித்தாந்தங்களுக்கும் மனத்திற்குமான ஊடாட்டத்தை நான் முன்னரே ஓர்மையில் கொண்டிருந்த காரணத்தால் இதிலிருந்தெல்லாம் எளிதாக வெளிவர முடிந்தது. இந்தப் பிரச்சனைகள் அயின் ரேண்ட் குறித்த ஈடுபாட்டில் மட்டுமன்று. மற்ற சித்தாந்தங்களில் ஈடுபட்டோரும் அவரவர் தம் தம் அளவில் இந்தச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு இருந்ததை நெடுகப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் சிலர் அங்கங்கிருந்து வெளிப்படவும் இயன்றிருக்கலாம். ஆனால் கல்டிஸம் என்னும் மூடிய மனப்பாங்கு உலகெங்கணும், காலம் நெடுக வந்து கொண்டிருக்கும் அறிவு போன்ற அறியாமை என்பதை வளரும் சமுதாயம் முதலிலேயே கவனம் கொள்வது நல்லது.
ஆனால் ஒன்று நிச்சயம். சமுதாய வாழ்க்கையில், அன்றாடம் பழகும் சூழ்நிலைகளில் தவறான எண்ணம் கொண்டவர்கள், தங்களுக்கு மட்டுமே சௌகரியமான விதத்தில் ஒப்பந்தம் போட்டு அது நியாயமானது என்றும் நம்மையே பல உணர்ச்சி பூர்வமான உரைவீச்சுகளால் சாய்த்து, நமக்கு ஒவ்வாததை நம்மைக் கொண்டே வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்க நினைப்பவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் கனத்துச் செயல்படும் தருணங்களில் எல்லாம் நமக்குப் பெரும் உதவியாய் இருப்பது அயின் ரேண்ட் தமது நாவல்களில் காட்டிய அறிவு ரீதியான விவகாரத் தெளிவு என்பது இன்றும் அனுபவபூர்வமான உண்மைதான்.
***
No comments:
Post a Comment