நிமஜ்ஜதோSநந்த ப4வார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்3த4: |
த்வயாபி லப்3த4ம் ப4க3வந் இதா3நீம்
அநுத்தமம் பாத்ரம் இத3ம் த3யாயா: ||
*
ஜீவன் தன் உண்மை இயல்பு பற்றிய ஞானம் ஆகிய ஆத்ம ஞானத்தை இழந்து உலக வாழ்க்கையில் தோய்வதைப் பவம் என்ற சொல் குறிக்கும். பொதுவாகப் பிறப்பினால் உலகத்தில் வாழ்க்கை ஏற்படுகிறது என்னும் பொழுது கூடவே ஆத்ம ஞானமும் பிறந்த ஜீவனிடமிருந்து மறைந்து அல்லது மறந்து விடுகிறது. அங்கங்கள், அறிவின் இயக்கம் எல்லாம் ஏற்பட்ட பின்பு மீண்டும் இழந்த ஆத்ம ஞானத்தைப் பெற்றுக் கொள்வது ஒரு ஜீவனின் தலையாய வாழ்வுக் கடமையாகும். ஆனால் அதற்குள் வாழ்க்கையின் பல விஷயங்களில் அறிவும், அங்கங்களும் ஈடுபடத் தொடங்கி ஜீவனுக்கு ஆத்ம ஞானத்தைப் பற்றிய அக்கறையோ, நினைவோ கூட இல்லாமல் போய் விடுகிறது. மேலும் அறிவின் விகாரங்கள் ஆக பல வாதங்களும் ஜீவனை ஈர்க்கவே தன் சொந்த இயல்பைப் பற்றிய ஞானத்தை மீட்டுக் கொள்ளாமலேயே ஒரு ஜீவன் மரித்து விடுகிறது. மீண்டும் மீண்டும் பிறப்பு, வாழ்க்கை, அங்கங்கள், அறிவு, கவனச் சிதறல், இறப்பு என்று ஜீவனுக்குப் பவம் என்பது முடிவே இல்லாத பிறவிக் கடலாய்ப் பெருகுகிறது. எப்பொழுதேனும் கஷ்டங்களினால், தெய்வ அருளால் ஜீவனுக்கு உணர்வு தோன்றித் தன் சுய இயல்பை உணரும் போது இங்ஙனம் கடலில் தத்தளித்த தான் தெய்வ அருளால் கரையேறியதாய் உணர்ந்து நன்றியை உணர்கிறது. இதை நன்கு புரிந்து கொண்டால் இந்தச் சுலோகத்தின் சுவை புரியும்.
பவம் ஆகிய கரைகாணாக் கடலில் அழுந்தும் நான் நெடுங்காலம் கதியின்றி அலைந்தேன். காலம், தேசம், பொருள் பற்றிய எல்லைகள் எதுவும் அற்ற அநந்தா! நல்ல வேளையாகக் கலங்காக் கரையாக நீ தென்பட்டாய்! பிழைத்தேன். என்னுடைய தகுதி என்ன என்று பார்க்காதே! ஒன்றுண்டு என் தகுதி. உன்னுடைய தயை என்னும் உயர்ந்த குணத்திற்குச் சரியான ஆள் கிடைக்காமல் நீயும் தேடிக் கொண்டிருந்தாய் அல்லவா? என்னை விட்டால் அந்தத் தயைக்கு உரிய சரியான ஆள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். எனக்குக் கரை கிடைத்து விட்டது என்று நான் மகிழ்வது போல், உனக்கும் தயைக்கு ஆள் கிடைத்து விட்டது என்று நீயும் மகிழலாம் அல்லவா!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***